பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 5

மெரிக்க முக்கிய ஊடகங்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆட்டை ஓநாயாக ஆக்கியதோடு திருப்தி அடைபவர்களல்லர். ஓநாயை ஆடாக மாற்றுவதற்கும் அவர்கள் பெருமளவு முனைபவர்கள். தொடர்ந்து வரும் ஜெரூசலேமில் டெம்பிள் மவுண்டினைக் குறித்த ஜெரால்டு ஸ்டீனின் விபரங்கள் இதற்கு ஏற்ற விதத்தில்தான் அமைந்துள்ளன. தொடர்ந்து டெம்பிள் மவுண்டினைக் குறித்து அவர் கூறும் சில செய்திகளின் உண்மைத் தன்மையினை காண்போம். “1967 யுத்தத்திற்குப் பின் டெம்பிள் மவுண்ட் இஸ்ரேலின் கைகளில் வந்தது. அதற்கு முன் அது ஜோர்டானின் பராமரிப்பில் இருந்து வந்தது. CE 70 –ல் ரோமானியர்கள் அதனைக் கைப்பற்றி நாசமாக்கியதற்குப் பின் யூதர்கள் அங்கு பிரார்த்தனை நடத்தியிருக்கவில்லை” என ஸ்டீன் கூறுகிறார். 1967 யுத்தத்திற்குப் பின் (ஜூன் 7, 1967) இஸ்ரேலைப் பொறுத்தவரை வெற்றியின் நாளாக இருந்ததாம்.

ஸ்டீன் மேலும் கூறுவதை கவனியுங்கள்: “ஒரு இஸ்ரேலிய பாரசூட்காரன் குன்றின் மேல் இஸ்ரேல் கொடியை நாட்டினான். எதிர்கட்சி அமைச்சர் மோசெதயான் குன்றிற்கு வந்து அதனை எடுத்து மாற்றுவதற்கு கற்பித்தார். அன்று முதல் முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் இருக்கும் மேல் பாகமும் இஸ்ரேலியருக்கு புராதன தேவாலயத்தின் சுவடுகள் அடங்கிய கீழ்பாகமும் பராமரிக்கலாம் என்று இஸ்ரேலிய அரசியல்-மத தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர். டெம்பிள்மவுண்டினைக் குறித்து விரைவில் வரவிருக்கும் ‘End Of Days’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் கெர்ஷோம் கோரன்பர்க் ‘இது ஓர் எதிர்பாராத வெற்றியாக இருந்தது’ என அபிப்பிராயப்படுகிறார்.

முன்பு ஜெருசலத்தைக் கைப்பற்றியவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டவர்களுடைய புண்ணியத்தலங்களை நாசப்படுத்தியிருந்தனர்” என்று கூறுகிறார். இச்செய்தியில் அவர் மூன்று விஷயங்களை முன்னிறுத்துகிறார்.

1. இஸ்ரேலியர்கள் கருணையுடையவர்கள்; சமாதானவாதிகள்; அவர்கள் தாங்கள் வெற்றி கொண்ட தங்களின் புண்ணியத்தலத்தில் பாதியை முஸ்லிம்களுக்கும் விட்டுக் கொடுத்தனர்.

2. CE 1967 க்கு முன் ரோமர்கள் ஜெரூசலத்தைக் கைப்பற்றிய ஆண்டான CE 70 க்குப் பிறகு யூதர்களுக்கு அங்கு பிரார்த்திக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

3. ஜெரூசலத்தைக் கைப்பற்றிய யூதர்கள் அல்லாத மற்ற அனைவரும் அங்கிருந்த மற்றவர்களின் புண்ணியத்தலங்களை நாசப்படுத்தியிருக்கின்றனர். யூதர்களைத் தவிர மற்ற எவரும் அங்கு கருணையையும் சமாதானத்தையும் கடைப்பிடித்திருக்கவில்லை.

இஸ்ரேலியர்கள் சமாதானவாதிகளா என்பதில் உள்ள உண்மையையும் பொய்யையும் ஆராய்வது இருக்கட்டும். CE 70 ல் ரோமானியர்கள் ஜெரூசலேமை வெற்றி கொண்ட பின் CE 1967 ல் இஸ்ரேலியர்கள் ஜெரூசலத்தை கைப்பற்றியதற்கு இடையில் வேறு யாரும் அதனை கீழ்ப்படுத்தியிருக்கவில்லை என்பது போன்று சித்தரிப்பதும், இந்த இடைப்பட்ட காலத்தில் யூதர்களுக்கு அங்கு பிரார்த்திக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது என்றும் இஸ்ரேலியர்களைத் தவிர மற்ற யாரும் ஜெருசலேமில் கருணை காட்டியிருக்கவில்லை என்றும் மற்றவர்களின் புண்ணியத்தலங்களை நாசமாக்கவே செய்திருக்கின்றனர் என்றும் கூறியது வரலாற்று உண்மைகளுக்கு எதிரான அப்பட்டமான பொய்களாகும்.

இதை வாசித்தீர்களா? :   தமிழகம் ஃபாஸிசத்தின் குறி!

இஸ்ரேலியர்களை சமாதானவாதிகள் என்றும் கருணை உள்ளம் படைத்தவர்கள் என்றும் நிறுவுவதற்கு இது போன்ற கேடுகெட்ட தந்திரங்கள் கையாள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது கண்கூடு. CE 70 ல் ரோமானியர்கள் ஜெரூசலத்தை வெற்றி கொண்ட பிறகு அங்கு யூதர்களுக்கும் யாதொரு உரிமையும் இல்லாதிருந்தது என்பது உண்மை தான். ஆனால் பின்னர் அங்கு உரிமை கிடைத்தது 1967 ல் என்பது பச்சைப்பொய்யாகும். வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்க்கலாம். இஸ்ரேல் முதன் முதலாக முஸ்லிம்களின் பராமரிப்பில் ஆனது கலீஃபா உமரின் காலத்தில் ஆகும். CE 636 ல் பைஸாந்தியர்களைத் தோற்கடித்துக் கொண்டு அங்கு அவர் வந்து சேர்ந்தார்.

அந்நேரம் டெம்பிள்மவுண்ட் – அங்குப் பிரார்த்திப்பதற்கு ரோமானியர்கள் தடை விதித்திருந்ததால் – தூசிபடிந்து உபயோகப்படுத்தப்படாமல் கவனிப்பாரற்று கிடந்தது. அதனை சுத்தப்படுத்த ஆணையிட்டது மட்டுமல்லாமல் CE 70 முதல் யூதர்களை வழிபாடுகளில் இருந்து தடுத்துக் கொண்டு அங்கு நிலுவையில் இருந்த சட்டத்தை நீக்கவும் செய்தார் கலீஃபா உமர் அவர்கள். அதாவது CE 70 க்குப் பிறகு யூதர்களுக்கு முதன் முதலாக ஜெருசலேமில் வழிபாடு சுதந்திரம் கிடைத்தது முஸ்லிம்கள் ஆட்சி காலத்திலாகும்.

சரித்திர ஆசிரியர்களின் ஏகோபித்த கருத்துள்ள இந்த விஷயத்தை மூடி மறைத்துக் கொண்டு CE 70 க்குப் பின் யூதர்களுக்கு ஜெரூசலேமில் வழிபாட்டுச் சுதந்திரம் கிடைத்தது அதனை அவர்கள் கையகப்படுத்திய CE 1967 ல் தான் என மிகப்பெரிய வரலாற்று மோசடி செய்து புரொ. ஸ்டீன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?. காரணம் அனைவரும் அறிந்தது தான். இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகில் நிலுவையில் வந்த அந்நிய தேச ஆக்ரமிப்புக்கு எதிரான ஜெனீவா உடன்படிக்கையை மீறி CE 1967 ல் ஜெரூசலேமை ஆக்ரமித்த இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறலை மூடி மறைப்பதும் அவர்களின் செயலை நியாயப்படுத்துவதுமேயாகும்.

புரொ. ஜெரால்டு ஸ்டீன் மறைப்பதற்கு முயற்சி செய்த சரித்திர உண்மையை தெளிவிக்க பிரபல சரித்திர எழுத்தாளரான காரன் ஆம்ஸ்ட்ரோ ஸ்கின் அவர்களின் வார்த்தைகளை காண்போம்: “ஒரு வேளை தாவீது ராஜாவை தவிர்த்து ஜெரூசலம் கீழடக்கிய வேறு எந்த முன் ஆட்சியாளர்ளை விடவும் அதி உன்னதமான கருணையினை உமர் அங்கு காட்டினார் என்று கூறலாம். வேதனையும் பரிதாபகரமுமான வரலாற்றையும் தான் அந்த நகரம் அதிகமாக கண்டுள்ளது. ஆனால் அவற்றிற்கெல்லாம் நேர்மாறான மிகவும் சமாதானபூர்வமும் இரத்தம் சிந்தாத விதத்தில் உள்ள முன்னேற்றத்தைத் தான் கலீஃபா உமர் நடத்தினார்.

அங்கு அவர் கிறீஸ்தவர்களை கீழடக்கிய பிறகு ஒரு கொலை கூட நடந்திருக்கவில்லை. மற்ற மதத்தவர்களின் வழிபாட்டுச் சின்னங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கவில்லை. யாரும் வெளியேற்றப்படவும் இல்லை. கைதியாக்கப்பட்டிருக்கவும் இல்லை. அங்கிருந்த மற்ற மதத்தவர்களை இஸ்லாத்திலாக்குவதற்கு யாதொரு நிர்பந்தமும் நடந்திருக்கவில்லை.”(Karen Amstrong, Jerusalem: One City, Three Faiths – Knopf:NY, 1996, P.228). 

இதை வாசித்தீர்களா? :   பெண்ணைப் பொன்னில் பொதிந்தது யார்? (புதிய தொடர்) பாகம்-1

தொடர்ந்து அதே புத்தகம் 230 ஆம் பக்கத்தில் டெம்பிள் மவுண்டை முஸ்லிம்களும், யூதர்களும் சேர்ந்து சுத்தம் செய்தனர் என்று காரன் ஆம்ஸ்ட்ராங்க் குறிப்பிடுகிறார்.(Karen Amstrong, Jerusalem: One City, Three Faiths – Knopf:NY, 1996, P.230). இவ்வளவு மகத்தான மத சகிப்புத்தன்மையை வரலாற்றில் யார் நடப்பாக்கியிருக்கின்றனர்?

ஜெரூசலேமில் முஸ்லிம்களின் முன்னுதாரணம் இவ்வாறு தான் இருந்தது. இவ்வளவு அதி உன்னதமான ஓர் வரலாற்று உண்மையினை மூடி மறைத்துக் கொண்டு யூதர்களை கருணையுடையவர்களாகவும் முஸ்லிம்களுக்கு அவர்கள் உரிமைகளை வழங்கினர் என்றும் கூற வருவது, முஸ்லிம்களிடம் அந்த இடம் இருந்தால் அங்கு சமாதானம் இருக்காது என்றும் முஸ்லிம்களை கருணையுள்ளவர்கள் சமாதானபிரியர்கள் என்ற எண்ணம் உலக மக்களின் மனதில் வந்து விடக் கூடாது என்ற வக்கிர எண்ணம் மனதில் ஊறிப் போனதன் வெளிப்பாடல்லாமல் வேறேது?

புரொ. ஜெரால்டு ஸ்டீன் பெர்க்கினைப் போன்ற பிரபலமான ஒரு ஆராய்சியாளனின் சிந்தனை இது எனில் சாதாரண பத்திரிக்கை நிருபர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் கருணையற்றவர்களாகவும் சித்தரிக்க வரிந்து கட்டி எழுதிக் கொண்டிருக்கும் இந்த மேற்கத்திய ஊடகங்களின் முன்னோர் இதே ஜெரூசலேமில் என்ன செய்தனர் என்பதை வரும் தொடரில் காணலாம்.

— அபூசுமையா