காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-3)

Share this:

கல் இது கல், இது கருப்புக்கல்.

காபா எனும் எனும் புனித ஆலயம் சதுர வடிவில் அமைக்கப்பட்ட கட்டடம் ஆகும். அதன் நான்கு மூலைகளுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. காபாவின் தலைவாயிலை ஒட்டியுள்ள வடகிழக்கு மூலைக்கு ‘ஹஜருல் அஸ்வத் மூலை’ -(ருக்னுல் அஸ்வத்)- கருப்புக்கல் மூலை என்று பெயர். அந்த மூலையில்தான் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மூலைக்கு ‘யமன் மூலை’ (ருக்னுல் யமானீ) என்று பெயர். இவ்விரு மூலைகளையும் சேர்த்து யமனிய மூலைகள் என்பர். காபாவை தவாஃப் – சுற்றி வரும்போது கருப்புக்கல் மூலையை தொட்டு முத்தமிடுவதும், யமன் மூலையைத் தொடுவதும் நபிவழி ஆகும்.

கருப்புக் கல் மூலைக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. 1. இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எழுப்பிய அஸ்திவாரத்தில் அமைந்திருப்பது. 2. ஹஜருல் அஸ்வத் – கருப்புக் கல் பதிக்கப்பட்டிருப்பது. ஆனால் யமன் மூலைக்கு இச்சிறப்புகளில் முதலாவது மட்டுமே உண்டு.

அடுத்து தென்மேற்கு மூலைக்கு ‘ஷாம் (சிரியா) மூலை’ – ருக்னுஷ் ஷாம் என்றும், வடமேற்கு மூலைக்கு ‘இராக்கிய மூலை’ (ருக்னுல் இராகீ) என்றும் பெயர். இவ்விரு முனைகளுக்கும் சேர்த்து ‘ஷாமிய மூலைகள் என்பர். காபாவைத் தவாஃபு செய்யும்போது இவ்விரு முனைகளையும் தொடுவதோ, முத்தமிடுவதோ கிடையாது என்பதே பெரும்பாலனோரின் கருத்து. (அல்மின்ஹாஜ், ஃபத்ஹுல் பாரீ)

அஸ்வத் மூலையில் பதிக்கப்பட்டுள்ள கருப்புக் கல் சரித்திரம் வாய்ந்த ஒரு கல். இந்தக் கல்லைப் பற்றி விமர்சிக்கும் பிற மதத்தவர்கள் அவர்களின் கடவுளாகிய சிவனின் கற்சிலை வடிவங்களில் ஒன்றான சிவலிங்கத்தோடு ஒப்பிட்டு, காபாவில் பதிக்கப்பட்டுள்ள கருப்புக் கல்லும் முஸ்லிம்களால் வணங்கப்படும் ஒரு சிலையாகச் சித்தரிக்கிறார்கள். 

இதில் என்ன வேடிக்கை என்றால், இஸ்லாத்தை விமர்சிக்கும் இவர்களின் கோர முகத்தை வெளிக்காட்ட வெட்கப்பட்டுத்தானோ என்னவோ இவர்கள் முஸ்லிம்களின் பெயர்களை முகமூடியாக பயன்படுத்தி மறைத்துக் கொண்டு, ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக் கல்லை சோதனை செய்ய வேண்டும் என்று உளறுகிறார்கள். சோதனையை அவர்களின் கற்சிலை சிவலிங்கத்தோடு நிறுத்திக் கொள்ளட்டும்.

சிவனைக் கல்லில் செதுக்கிய சிலையாக வடித்து. அதைக் கடவுள் என்று நம்பிக்கைகொண்டு வணங்கும் இவர்களுக்கு, இது கல், கருப்புக் கல் என்று கல்லைக் கல்லென்று சொல்லும் முஸ்லிம்களை விமர்சிக்க இவர்களுக்கென்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை! இவர்களைப் போல் முஸ்லிம்கள் கல்லைக் கடவுளாக்கவில்லை. செதுக்கிய கல்லை சிவலிங்கம் என்று இவர்கள் நம்புவது போல், முஸ்லிம்கள் கருப்புக் கல்லைக் கடவுளாக ஒருபோதும் நம்புவதில்லை!

உமர் (ரலி) அவர்கள் (இந்தக்) கருப்புக் கல் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ”நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன், நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்றார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முஅத்தா, தாரிமி)

கருப்புக் கல்லுக்கு எவ்வித சக்தியும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் கருப்புக் கல்லை முத்தமிட்டார்கள் என்பதைத் தவிர அதற்கு எந்த சிறப்பும் இல்லை. என்பதை நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள் இங்கே நிறுவுகிறார்கள். 

கருப்புக் கல்  

பிறகு முஸ்லிம்கள் கருப்புக் கல்லை என்னவாகக் கருதுகிறார்கள்?

ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருப்பாக்கி விட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதீ, நஸயீ, அஹமத்)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கல்லை ஒரு கருப்புக் கல் என்றுதான் அடையாளப்படுத்துகிறார்கள். அதற்கு இறைத்தன்மை இருப்பதாகவோ, இந்த சமூகம் அதை வணங்க வேண்டும் என்றோ சொல்லவில்லை. அந்தக் கல்லின் அசல் நிறம் பாலை விட வெண்மையானதாக இருந்து மனிதர்களின் பாவக்கரங்கள் பட்டு அது கருப்பாகி விட்டது என்று – கருப்புக் கல் எதனால் கருப்பானது என்ற வரலாற்றையும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

”ஆதமுடைய மக்களின் பாவங்களை கல் வாங்கிக்கொண்டதால் அது கருப்பாகி விட்டது” என்று சொல்லவில்லை என்பதை கருப்புக் கல்லை சிவலிங்கமாகக் கருதும் சிவபக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு மனிதருடைய பாவத்தை இன்னொரு மனிதரே ஏற்க இயலாது என்ற நிலை இஸ்லாத்தில் இருக்கும் போது, ஒரு கல் பாவங்களை வாங்கிக் கொண்டதால் கருப்பானது என்று கருதுவது நகைப்புக்குரியது. கருப்புக் கல் சுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கல், இந்த பூமியில் சுவனத்தின் பொருளாக கருப்புக் கல் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைத் தொட்டார்கள், முத்தமிட்டார்கள். நபியவர்கள் அதை முத்தமிட்டதால், அதைப் பின்பற்றி இந்த சமூகம் அதை முத்தமிடுவதையும், தொடுவதையும் சிறப்பாகக் கருதுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்யும்போது, கருப்புக் கல்லை மட்டும் தொடவில்லை. காபா ஆலயத்தின்  யமன் மூலைகள் – ருக்னுல் யமானீ என்று சொல்லப்படும் வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆகிய இரு மூலைகளையும் தொட்டிருக்கிறார்கள்.

”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கருப்புக் கல், ருக்னுல் யமனி ஆகிய) இரு யமனிய மூலைகளைத் தவிர இறையில்லம் காபாவில் வேறு எந்த இடத்தையும் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை” (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத், ஹாகிம்)

நபி (ஸல்) அவர்கள் கருப்புக் கல் மூலையை மட்டும் சிறப்பிக்கவில்லை. யமனிய மூலைகள் இரண்டையும் சிறப்பித்திருக்கிறார்கள். கருப்புக் கல்லைத் தொட்டார்கள், முத்தமிட்டார்கள் என்று அறிவிப்புகள் இருப்பது போல் அதை கம்பாலும் தொட்டிருக்கிறார்கள், அதை நோக்கி சைகையும் செய்திருக்கிறார்கள்.

‘நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃபு செய்தார்கள். கருப்புக் கல்லின் பக்கம் வரும்போதேல்லாம் தம்மிடமிருந்த விளைந்த கம்பால் கருப்புக் கல்லைத் தொட்டார்கள்” (புகாரி, முஸ்லிம்)

‘நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து காபாவை தவாஃப் செய்வார்கள். கருப்புக் கல்லின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள்” (புகாரி, முஸ்லிம்)

மேலும்,

ஹஜ். உம்ரா, தவாஃபு என காபாவைச் சுற்றி வலம் வரத் துவங்கும்போது, முதல் சுற்றை இந்த கருப்புக்கல் மூலையிலிருந்தே துவங்க வேண்டும். துவங்கி, சுற்றி மீண்டும் கருப்புக் கல் மூலைக்கு வந்தால் ஒரு சுற்று நிறைவடையும்.

‘நபி (ஸல்) அவர்கள் கருப்புக் கல்லிலிருந்து, கருப்புக் கல் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும், நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்” (திர்மிதீ)

கருப்புக் கல் மூலையிலிருந்து தவாஃப் சுற்றைத் தொடங்கி, ஏழு சுற்றுக்களில் ஒவ்வொரு சுற்றிலும் கருப்புக் கல் மூலைக்கு வந்து, அந்த மூலையை நோக்கி சைகை செய்தால் அந்தச் சுற்று முழுமை பெற்று அடுத்தச் சுற்றுத் துவங்கும். தவாஃப் கிரியைகளில் கருப்புக் கல்லை முத்தமிடுவது, முத்தமிடாமல் அதை நோக்கி சைகை செய்வது இவ்விரண்டும் நபிவழிகள் ஆகும். இதை வசதிக்கேற்றவாறு முஸ்லிம்கள் கடைபிடித்து நிறைவேற்றிக்கொள்ளலாம். இதில் கட்டாயம் என்று எதுவுமில்லை.

கருப்புக் கல்லும், சிலைகளும்

கருப்புக் கல்லை, சிலைகளுக்கொப்பாகக் கருதி, கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குகிறார்கள் என்று விமர்சிக்கும் சில கிணற்றுத் தவளைகள், வேண்டுமானால் முஸ்லிம் பெயர்களில் பாஸ்போர்ட் எடுத்து – அவர்கள் உள்ளத்தால் இஸ்லாத்தை நம்பிக்கை கொள்ளா விட்டாலும் பரவாயில்லை – வந்து காபாவை ஒருமுறை நேரில் பார்த்துவிட்டுப் பின்னர் விமர்சிக்கலாம்.

மக்கா வெற்றியின்போது, நபி (ஸல்) அவர்கள் காபாவில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை அப்புறப்படுத்தும்படி கட்டளையிட்டார்கள். அந்த சிலைகளில், நபி இப்ராஹீம் (அலை) நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சிலைகளும் இருந்தன. அம்பு மூலம் குறி சொல்வது சிலையாகச் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கண்ணியமிக்க இறைவனின் நண்பராகத் திகழ்ந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சிலையையும் அப்புறப்படுத்தினார்கள் என்றால் அதை விட மற்ற சிலைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. சிலைகள் வணங்கப்படுபவைகளாக இருந்தன. நபி இப்ராஹீம்  (அலை) நபி இஸ்மாயீல் (அலை) இருவரின் சிலைகளும் வணங்கப்பட்டு வந்தன.

வணங்கப்படும் எந்த சிலைகளும், பொருள்களும் புனித ஆலயமான காபாவில் இருக்கக்கூடாது என இறைவனுக்கு இணையாக வணங்கப்படுவைகளை அகற்றினார்கள். கருப்புக் கல் காபாவின் கட்டடத்தின் கற்களில் ஒரு கல்லாக காபாவோடு இருந்தது. சிலைகள் மற்றும் எவரையும், எதையும் வணங்காத நபி இப்ராஹீம் (அலை) நபி இஸ்மாயீல் (அலை) இருவரும் காபாவை அதன் அஸ்திவாரத்திலிருந்து எழுப்பிபோது கருப்புக் கல்லை அதனிடத்தில் பதித்துக் கட்டடம் எழுப்பினார்கள். குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டும்போது அதனாலேயே கருப்புக் கல்லுக்கு முக்கியத்துவம் வழங்கி, குறைஷியரில் எல்லாக் கோத்திரத்தினரும் தமது கையால் கருப்புக் கல்லை அதனிடத்தில் தூக்கி வைக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டு சர்ச்சை செய்து கொண்டனர்.

மீண்டும்,

கல் அது கல், அது கருப்புக் கல் என்று கூறி முஸ்லிம்கள் எவரும் அந்தக் கருப்புக் கல்லை வணங்கவும், வழிபடவுமில்லை. ஒரு கல்லை கல்லென்று சொல்வது வணக்கமாக ஆகாது நன்றி!

(மீண்டும் அடுத்த பகுதியில், இறை நாட்டப்படி)

ஆக்கம்: அபூ முஹை.

< பகுதி 2 | பகுதி 4 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.