காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-1)

Share this:

“மக்கா மற்றும் மதினாவை அழிக்க வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கூறியதை சத்தியமார்க்கம்.காம் செய்தியாக பதித்திருந்ததை அனைவரும் அறிவோம். அச்செய்தியின் பின்னூட்டங்களில் வாசகர்களிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக சகோதரர் அபூமுஹை அவர்கள் முன்வந்து சத்தியமார்க்கம்.காமை தொடர்பு கொண்டு அளித்திருந்த அவரது விளக்கத்தைக் காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? என்ற தலைப்பில் தொடராக வெளியிட்டுள்ளோம். அழகிய விளக்கத்தினை அளித்த சகோதரர் அபூமுஹை அவர்களுக்கு நன்றி!

காபா எனும் இறையில்லம் மனிதர்களுக்காக முதன் முதலாகக் கட்டப்பட்ட ஆலயம் என்று இஸ்லாம் மார்க்கத்தின் திருமறையான, திருக்குர்ஆன் கூறுகிறது.

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன், 003:096)

மக்காவில் அமைந்த காபா, மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையில்லம். காபாவின் வரலாறு மிகத் தொன்மையானது. இது பற்றிய வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டம்:

ஹிஜாஸ் எனத் தற்போது அழைக்கப்படும் பகுதியைக் குறிப்பிடும்போது, ”அது பூர்வீக மக்களால் பெரிதும் கெளரவிக்கப்பட்ட பகுதி என்றும் அங்கு கல்லான ஒரு பலி பீடம் இருந்தது. அது மிகத் தொன்மையானது. சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் அதனை தரிசிக்க எல்லாத் திசைகளிலிருந்தும் வந்தனர்” என்று டியோடரஸ் ஸிகுலஸ் குறிப்பிடுகிறார். – (சி.எம். ஓல்ட் ஃபாதர் என்பவரின் மொழிபெயர்ப்பு லண்டன் 1935 வால்யூம் 2 பக்கம் 211)

”காபா மிகப் பழமையானது. யாத்திரிகர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கு வந்தனர். இப்படி இவர்கள் வருவது எப்போது தொடங்கியது என்பதே தெரிய முடியாத அளவுக்கு வெகு காலத்திற்கு முன்பே காபா இருக்கிறது”. என்று இஸ்லாத்தின் எதிரியான ஸர் வில்லியம் முயீர் கூறுகிறார். அவரே எழுதிய, Life of Mohammed – 1923, பக்கம் 103.

காபாவின் பழமை பற்றி, வராலாற்று ஆய்வுக்கு எட்டாத மிகத் தொன்மையானத் திருத்தலம் என்பதை வரலாற்று ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தப் பழமையான இறை ஆலயம் எத்தனை முறை புதுப்பித்துக் கட்டப்பட்டது என்பதற்கான சரியான வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் காபா சிதிலமடைந்து இருந்தது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இப்படி சிதிலமடைந்து கிடந்தது என்பதற்கும் இஸ்லாத்தில் சரியான குறிப்புகள் இல்லை!

எந்த மக்களும் குடியிருக்காத மக்கா எனும் அந்த இடத்தில் காபா சிதிலமடைந்து கிடந்தது. இறைவன் தனது நபி இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு மீண்டும் புதுப்பிக்கும்படி பணிக்கிறான். இது தொடர்பாக இஸ்லாத்தின் சான்றுகள் இருக்கின்றன. இங்கிருந்தே காபாவின் வரலாறு மீண்டும் துவங்குகிறது. வெறும் அடித்தளம் மட்டுமே இருந்த மிகத் தொன்மையான காபாவை, இறைவனால் அடையாளம் காட்டப்பட்டு நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களும் புதுப்பித்துக் கட்டுகிறார்கள். கட்டி முடித்து, இறைவனிடம் பிரார்த்தனையும் செய்கிறார்கள். (பார்க்க: அல்குர்ஆன், 002:125-130)

மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலாக அமைக்கப்பட்ட காபா எனும் இறையில்லம் மிகச் சரியாக, ஏற்கெனவே இருந்த அதே அடித்தளத்தில் மீண்டும் கட்டி எழுப்பப்படுகிறது. (காபாவின் மீள் துவக்க வரலாறு பற்றி இன்னும் விரிவாக திருமறை வசனங்களும், பல நபிமொழிகளும் கூறுகிறது. காபா அதன் சரியான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அலசுவது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம் என்பதால் மேற்கொண்டு செல்வோம்)

ஒரு வரலாறு:

நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்விற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்:

நபித்துவ வாழ்விற்கு முந்திய கால கட்டத்தில் ரோமானியப் பேரரசு யமன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும், யமன் நாடு அபிசீனியாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது யமனில் அபிசீனியாவின் ஆளுநராக இருந்த அப்ரஹா என்பவன், அபிசீனியா மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை எழுப்பியிருந்தான். புனித மக்காவில் இருந்த காபா ஆலயத்திற்குச் செல்லாதவாறு, அரபியர்களை அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக அதில் பல்வேறு வகையான பகட்டான அலங்காரங்களையெல்லாம் செய்திருந்தான்.

அரபு தீபகற்பத்தின் மத்திய பாகத்திலும், அதன் வடபுலங்களிலும் வாழ்ந்திருந்த அரபியர்கள், அப்ராஹாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யமன் நாட்டு மக்கள் அனைவரும் புனித காபா ஆலயத்தின் பக்கமே தங்களின் கவனத்தைத் திருப்பியவர்களாகவும், அதன்பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தமது இந்த எண்ணத்தை அபிசீனிய மன்னருக்கு எழுதித் தெரிவித்தான்.

அவன் எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டும், அரபிகளை அவர்களின் புனித ஆலயமான காபாவை விட்டுத் திருப்பிவிட முடியவில்லை. அப்போது அப்ரஹா காபா ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு மக்களின் கவனத்தை, தான் எழுப்பிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பால் திருப்பிவிடும் எண்ணத்தில் பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டான். அதில் ஏராளமான யானைகளும் இருந்தன. மிகப் பெரும் பட்டத்து யானை அவற்றிற்கெல்லாம் முன்னணியில் சென்றது.
 
இதற்கிடையே அவன் இந்த நோக்கத்துடன் புறப்பட்டு விட்ட செய்தி அரபு நாடு முழுவதும் பரவியது. தமது புனித ஆலயத்தைத் தமது கண் முன்பே இடித்துத் தகர்த்துவிட அவன் வந்து கொண்டிருக்கும் செய்தி அரபிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.

இதன் காரணமாக அரபுகள் ஒவ்வொரு குலத்தாரும் அணிதிரளும்படி வேண்டியபின் படை திரட்டிக்கொண்டு அப்ரஹாவை மக்காவிற்கு சென்று விடாமல் வழியிலேயே தடுக்க, அவன் படையுடன் போர் செய்தார்கள். எனினும் அவர்கள் தோல்வி கண்டார்கள். அப்ரஹா, தம்முடன் போர் செய்து தோல்வியடைந்தவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, காபா ஆலயத்தை இடித்துத் தகர்க்க தொடர்ந்து இராணுவத்துடன் முன்னேறி வந்தான்.

காபாவை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை இறைவன் என்ன செய்தான் என்பதை திருக்குர்ஆன், அல்ஃபீல் – யானை – 105வது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.
 
(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன், 105:001-005)

இயந்திரங்கள் இல்லாத அந்தக் காலத்தில் பலம் பொருந்திய யானைகளைக் கொண்டு காபாவை உடனடியாக இடித்துத் தகர்த்து விட முடியும். மேலும், நவீன போர் கருவிகள் இல்லாத அக்காலத்தில் இரும்பினால் செய்யப்பட்ட வெறும் ஈட்டி, வாள், கத்தி இவைகளைக் கொண்டு மனிதர்களிடையே போரிட்டுத் தாக்கிக் கொள்ள முடியுமே தவிர, யானைப் படையுடன் போர் செய்ய அந்தக் கருவிகள் உதவாது. யானைப் படையை எதிர்க்க பலமில்லாமல் இருந்த மக்காவின் குறைஷிகள், மற்றுமுள்ள குலத்தார்கள், இது இறைவனின் வீடு அதை அவனே பாதுகாத்துக்கொள்வான் என்று அப்ரஹாவின் யானைப் படையுடன் போர் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்கள்.

அப்ரஹாவின் யானைப்படை மக்காவை நோக்கி வந்தது. முன்னணியில் வந்து கொண்டிருந்த பட்டத்து யானை மக்காவிற்குள் நுழைய மறுத்து மக்காவிற்கு வெளியேலேயே படுத்துவிட்டது. அதைக் கிளப்புவதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்தும் முடியவில்லை.

நபித்துவ வாழ்வில், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட நாளில் மக்காவிற்குள் நுழைய மறுத்து, நபி (ஸல்) அவர்களின் கஸ்வா எனும் ஒட்டகம் மக்காவிற்கு வெளியிலேயே படுத்துக்கொண்டது. நபித்தோழர்கள், ”கஸ்வா இடக்குப் பண்ணுகிறது” என்றார்கள். ”கஸ்வா இடக்குப் பண்ணவில்லை! அது சண்டித்தனம் செய்யும் இயல்புடையதுமில்லை! ஆயினும் அன்று அப்ரஹாவின் யானையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்தவனே இப்போது இதனையும் தடுத்து விட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அப்ரஹாவின் யானைப்படை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய இறைவன், பறவைக் கூட்டங்களை அனுப்பி, அவர்கள் மீது சுடப்பட்ட கற்களை எறிய வைத்து, மென்று தின்னப்பட்ட வைக்கோல் போல யானைப் படையும், அப்ரஹாவும் அழிக்கப்பட்டார்கள்.

நபித்துவ வாழ்வில், மக்கா வெற்றி கொண்ட நாளில்

”நிச்சயமாக அல்லாஹ்தான் அன்று யானைப் படையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினான். அவனே இன்று அவனது தூதரையும், நம்பிக்கையாளர்களையும் மக்காவின் மீது ஆதிக்கம் பெற வைத்திருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

காபாவை இடித்துத் தகர்க்க வந்த அப்ரஹாவும் யானைப் படையையும் மக்காவிற்குள் நுழையக்கூட முடியாமல், அழித்தொழிக்கப்பட்டார்கள். என்பதை திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் கூறுகிறது. காபா எனும் இறை ஆலயத்தைக் காத்துக்கொள்வதற்கு மனிதர்கள் சக்தி பெறவில்லையெனில் காபாவை இறைவன் காப்பாற்றிக் கொள்வான்.

(மீண்டும் அடுத்த பகுதியில்… இறைவன் நாடட்டும்)

ஆக்கம்: அபூமுஹை

பகுதி 2 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.