இஸ்லாமோ ஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 6)

ஹிஜாப் அணிந்துள்ள அன்னை தெரஸாவும் பிரதிபா பட்டேலும்

இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகள்:

 

சுருக்கமாகச் சொல்வதென்றால் இஸ்லாத்தினை எதிர்ப்பவர்களின் குறி, முஸ்லிம்களை உடல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், இழித்துப் பேசுவதும் திட்டமிட்டு அவர்களின் பொருளாதாரத்தை அழிப்பதுமாகும். அதில் மிகவும் குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படைகளைப் போதிக்கும் பள்ளிவாயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை மற்றும் அவற்றின் மீதான அவதூறு பரப்புவதுமான இஸ்லாமோஃபோபியா என்பதன் அடிப்படையைச் சென்ற தொடரில் பார்த்தோம்.

முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அநியாயமான முறையில் வேலை வாய்ப்புகளிலும் அரசியலிலும் உயர் பதவிகள் திட்டமிட்டே மறுக்கப்படுகின்றன. இஸ்லாமோஃபோபியா என்பது விஷமப் பாகுபாட்டைச் சமுதாயத்தில் விதைக்கும் அநீதிமிக்க ஊடகங்களாலும் எழுத்துக்களாலும் இஸ்லாத்திற்கு எதிராக திட்டமிட்டுப் பரிமாறப்படும் வன்முறைகளையும் சில உதாரணங்கள் மூலம் விளக்கலாம்.

உலக முஸ்லிம்களின் இறுதி இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை கேலியாக்கி சித்தரித்து பன்னிரண்டு கேலிச்சித்திரங்களை டென்மார்க்கின் அதிக சர்க்குலேஷன் கொண்ட யில்லன்ஸ்-போஸ்ட்டன் கடந்த செப்டம்பர் 30, 2005 இல் வெளியிட்டது. அதில் ஒரு சித்திரத்தில் தலைப்பாகையில் வெடிகுண்டை வைத்திருப்பதாகக் காட்டி தன் அடிமன வக்கிரத்தை தீர்த்துக்கொண்டது…

வெள்ளிக்கிழமை ஜூன் 3, 2005 அன்று கியூபாவின் குவாண்டனாமோ சிறை வளாகத்தில் புனிதக் குர்ஆனின் பிரதிகளை அமெரிக்கச் சிறைச்சாலை நிர்வாகிகளே அழித்து சிதைத்ததைச் சிறைச்சாலையின் கமாண்டரான பிரிகேடியர் ஜெனரல் ஜே ஹூட் ஒப்புக்கொண்டது…

இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைகளை ஆதாரமின்றியும் துவேஷப்பார்வையுடன் விமர்சித்த, உலக முஸ்லிம்களின் மனதை ஒரு சேரக் காயப்படுத்திய 59 வயதான சல்மான் ருஷ்டிக்கு, பிரிட்டனின் இரண்டாவது எலிசபெத் விருது வழங்கி கெளரவப்படுத்தியது….

பொது இடங்களில் ஊடகங்கள் பார்வையில் குர்ஆன் பிரதிகள் எரித்து, கிழித்தெறியப்பட்டது….

துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கான Target க்கிற்காக குர் ஆனைப் பயன்படுத்தியது…

அப்பாவியான டாக்டர் ஹனீஃபை இலண்டன் விமானநிலைய குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்திக் கைது செய்தது…

பெண் என்றும் பாராமல் டாக்டர் ஆஃபியாவைக் கைது செய்து தற்பொழுதும் கொடூரமாகக் கொடுமைப்படுத்தி வருவது…

இஸ்லாம் என்பதைப் பெயரில் கொண்டமைக்காகத் தனது தொலைகாட்சித் தொடரிலிருந்து 9 வயது சிறுவனை வெளியேற்றியமை…

தாடி வைத்தவர்கள் பயங்கரவாதிகள் தான் என்ற முன்முடிவோடு லாஸ் ஏஞ்சல்ஸ், ஆம்ஸ்டர்டாம், லண்டன், பாரிஸ் போன்ற விமானநிலையங்களில் முஸ்லிம் பயணிகளை அதீதமாக ஆராய்ந்தது…

விமான நிலையத்தில் தொழுதவர்கள் எல்லாம் நிச்சயம் பயங்கரவாதியே என்று அவர்களைக் கைது செய்து லண்டன் விமானத்தில் உளவியல், உடலியல் ரீதியிலான சித்திரவதைகள் செய்தது…

பட்டியலில் நீளும் இவை எல்லாமே இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகள் என்பதை ஓரளவு விஷயமறிந்தவர்கள் தெரிந்து கொண்டாலும் இடைவிடாத ஊடகப் பொய்ப்பிரச்சாரம் சாமானியர்களையும் நம்ப வைத்துள்ளது.

இஸ்லாமோஃபோபியா எனப்படும் அதீத அச்சம் கலந்த உணர்வினால் உத்வேகப்படுத்தப்பட்டவர்கள் மனதாலும் உடலாலும் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் சேதங்களின் சதவீதம் ஃப்ரான்ஸ், டென்மார்க், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் அதிகம் கூறப்பட்டாலும் ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஸ்ரீலங்காவில் நடக்கும் நிகழ்வுகளையும் வைத்துப் பார்க்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் எல்லா இடங்களிலும் இஸ்லாமோஃபோபியா தலைவிரித்து ஆடுவதைக் கண்கூடாகக் காண இயலும்.

முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகையத் தாக்குதல்கள் பற்றிய வெகு சமீபத்தில் வளர்ந்த நாடுகளின் பட்டியலையும், அங்கே நடக்கும் நிகழ்வுகளையும் ஆராயும்போது அதில் சமீபமாக இடம் பெறுபவை ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, இத்தாலி, நெதர்லாந்த் மற்றும் ஸ்பெயின் என்பதையும் அறிய முடிகிறது.

இதை வாசித்தீர்களா? :   இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 5)

ஆக, சர்வதேச அளவில் இஸ்லாமோஃபோபியா எனப்படும் மனநோயை, வெற்றிகரமாக முஸ்லிம் அல்லாதவர்களிடம் திட்டமிட்டு பரப்பும் எண்ணம் கொண்டவர்களின் காரியத்தில் அவர்கள் எண்ணியபடி பலன் கிட்டியுள்ளது என்று கூறலாம்.

சரி இதனால் என்ன பலன்? என்ன அழுத்தமாகப் பதிய வைக்கப்படுகிறது?

1. வெள்ளைச் சருமம் கொண்ட முஸ்லிமல்லாதோர் அனைவரும் நல்லவர்.

2. முஸ்லிம்களில் வழிபாடுகளைச் சரிவரச் செய்வோர் (Practicing Muslims) அனைவரும் பயங்கரவாதிகள்.

3. இஸ்ரேல் தற்காப்பு மட்டுமே புரிகிறது.

4. இஸ்ரேலுக்கு உதவி தேவை.

5. இஸ்ரேலின் பாதுகாப்புக்குப் பெயரளவிலும் அச்சுறுத்தல் கூடாது.

6. பாலஸ்தீன விடுதலை என்று எவர் பேசினாலும் அவர் பயங்கரவாதி.

7. உலகின் கோலோச்சத் தகுதி உடையவர் வெள்ளைச் சருமம் கொண்டோரே!

குடியரசின் பிறப்பிடமாகத் தன்னைப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா இது போன்ற நிறவெறிக் கொள்கையை நிலை நிறுத்தப் போராடுகிறதா? அமெரிக்க வெறுப்பு தான் இக்கட்டுரையில் தெரிவதாக இதைப் படிக்கும் வாசகர்களில் சிலருக்கு எண்ணம் தோன்றக்கூடும்.

கறுப்பர் ஒருவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற முனையும் இந்நேரத்தில் அவருக்கு எதிரானப் பிரச்சாரங்களில் மெல்லிய கறுப்பின வெறுப்பு இழையோடுவதை கவனித்திருக்கலாம்.

நிறவெறி ஒழிக்கப்பட்டுவிட்டதாக முழங்கப்படும் இன்று “வெள்ளையர்கள் அமெரிக்காவின் சிறுபான்மையினர் ஆகப் போகின்றனர்” என்ற பெரும் ஊடகங்களின் அலறல் எதைக் காட்டுகிறது? வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்தப் பிறந்தவர்கள் என்ற அவர்களின் மன நினையைத் தானே?

படைத்தவன் முன்னிலையில் மனித இனம் முழுவதும் சமமே! எந்த இனமோ, கோத்திரமோ, மொழியோ ஒன்றை விட ஒன்று தாழ்ந்ததுமில்லை; உயர்ந்ததுமில்லை என உரக்க மனித அடிப்படை உரிமை முழக்கமிடும் இஸ்லாம் எல்லாவித ஆதிக்கத்துக்கும் சாவுமணி அடித்துவிடும் என்ற அதீத அச்சத்தில் தான் இஸ்லாமிய எதிர்ப்பும் பரப்பப்படுகிறது. இந்தியாவில் மேல்சாதியினர் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் பிரிவினரின் ஆதிக்கத்தை ஒழித்து விடும் என்ற அச்சத்தில் தான் இஸ்லாத்தின் மீதான காழ்ப்புப் பொய்கள் கட்டவிழ்த்துவிடப் படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள அதிக நுண்ணறிவு தேவையில்லை.

திட்டமிட்டு குறிவைக்கப்படும் இஸ்லாமிய அடையாளங்கள்:

இஸ்லாம் உலகை ஆண்டுவிடக் கூடாது என்ற எண்ணமே இஸ்லாமோஃபோபியாவின் அடிப்படை காரணம். ஒன்றின் மீதான திட்டமிட்டப் பொய்பிரச்சாரம் அதனை மக்கள் மத்தியில் வேகமாகப் பரவ வைக்கின்றது என்பதற்கு இஸ்லாத்தின் மீதான திட்டமிட்டப் பொய் பிரச்சாரமும் அதனை அநாயசமாக எதிர்கொண்டு மக்களிடையே வேகமாக வளரும் இஸ்லாமுமே சாட்சி.

தீவிர பொய்பிரச்சாரங்களையும் எதிர்கொண்டு மக்களிடயே இஸ்லாம் வளர்வதற்கான மற்றொரு காரணம், இஸ்லாமிய அடையாளங்கள் வெளியே தெரியும் விதத்தில் முஸ்லிம்கள் தங்களின் நடை,உடை, பாவனைகளை அமைத்துக் கொள்வதும் ஆகும்.

பரவலாக முஸ்லிம் ஆண்கள் வைத்துக் கொள்ளும் தாடி, கரண்டை காலுக்கு மேலே அணியும் உடை, பெண்கள் தங்களின் உடலை மறைத்து அணியும் ஆடை(ஹிஜாப்/பர்தா) போன்ற இன்னபிற இஸ்லாமிய அடையாளங்கள் கூட ஒரு வகையில் மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்ட வழிவகுக்கின்றன.

இதை வாசித்தீர்களா? :   இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை! (பகுதி 1)

இத்தகைய அடையாளங்களைப் பயங்கரவாதத்தோடும் தீவிரவாதத்தோடும் தொடர்பு படுத்த இயைந்து விட்டால், இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையை அணைபோட்டுத் தடுத்து விடலாம் என்ற மனப்பாலே, இஸ்லாமிய அடையாளங்களின் மீதான திட்டமிட்ட தாக்குதலுக்கு அடைப்படைக் காரணமாகும்.

அந்த வகையில் இன்று உலகில், இஸ்லாமிய பெண்டிர் அணியும் பர்தா அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்குமான அடையாளமாக வலிந்து உருவாக்கப்படுகிறது.

இஸ்லாமோஃபோபியாவின் தற்போதைய இலக்கு – ஹிஜாப்!

பள்ளியில் பயிலும் முஸ்லிம் பெண்கள் தலை முடியை மறைத்து அணியும் ஸ்கார்ஃப் கிளப்பிய உறுத்தலின் காரணத்தாலேயே செக்யூலரிஸம் பேசும் ஃபிரான்ஸில் இஸ்லாமோஃபோபிக் சட்டம் (Law 2004-228 of March 15, 2004) இயற்றப்பட்டது. மத ரீதியிலான குறியீடுகளை பகிரங்கமாக காண்பிக்கக்கூடாது(?) என்பதே இச்சட்டத்தின் உட்கருத்தாகும். பல்சமயக்கலாச்சாரத்தை (MultiCultural Paradigm for co-existence) உட்கொண்ட நாடு என்று பெருமை பேசும் ஃபிரான்ஸ் தனது இயலாமையை இவ்வாறே வெளிப்படுத்தி சிறுமைப்பட்டது.

கிறிஸ்துவர்கள் அணியும் சிலுவையையோ, யூதர்கள் அணியும் தொப்பியையோ குறை சொல்லி இழிவு செய்ய முனையாத ஒருவர் ஒரு முஸ்லிம் பெண் ஹிஜாப் அணிவதை மறுக்கிறார் எனில் அவருக்கு இஸ்லாமோஃபோபியா எனும் மனநோய் தொற்றி விட்டதாக அர்த்தப்படுத்தலாம்.

இஸ்லாமோஃபோபிக் செயல்முறை கொள்கைகளின் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது ஹிஜாப் பற்றியதே. இதை இஸ்லாமிய எதிர்ப்புப் பணியாளர்கள் இஸ்லாமிய சின்னம் என்று காழ்ப்புணர்ச்சியுடன் வர்ணிப்பதுண்டு. ஜெர்மனியில் ஹிஜாப் அணிவதற்கான தடையுத்தரவு ஆகஸ்ட் 2006 இல் பிறப்பிக்கப்பட்ட போது மத அடிப்படையிலான ஹிஜாப் அணியும் கலாச்சாரத்தின் மூலம், பள்ளி வளாகத்தில் பிற மதத்தினருக்கு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. எனவேதான் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று ஜெர்மனின் பள்ளிகளுக்கான அமைச்சர் பார்பரா ஸோம்மர் கூறியிருந்தார்.

தெற்காசிய நாடுகளைச் சிறிது கவனித்தால் அங்குள்ள நிலைமைகளையும் உணரலாம். ஸ்ரீலங்காவின் வடகிழக்கு மாகாணமான பதுல்லவில் உள்ள ஓர் அரசாங்கப் பள்ளியில் இரு முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். அத்தோடு நில்லாமல் – பர்தா விஷயத்தில் பதைத்துப்போன – தமிழ்ப் பள்ளிகளுக்கான அமைச்சரான S. சச்சிதானந்தன், குறிப்பிட்ட அந்த அரசாங்கப் பள்ளியை ‘இந்துப் பெண்கள் பள்ளி’ என்று பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட்டார். இந்துக்களும் பெளத்தர்களும் பெரும்பான்மையினராகக் கல்வி பயிலும் அப்பள்ளியில் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் முஸ்லிகள் என்பதே அப்பதைபதைப்பிற்குக் காரணம்: (http://www.muslimedia.com/archives/world99/sri-hijab.htm)

இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவதால் உலகில் இஸ்லாமோஃபோபியாவினால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளுக்கு ஏற்படும் மனப்பிரளயமும் இத்தகையவர்கள் மூலம் ஹிஜாப் அணிபவர்கள் அடையும் கொடுமைகளும் சொல்லி மாளாது.

ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியாக சமூக சேவை புரிந்து உலக மக்கள் மனதில் இடம் பெற்ற அன்னை தெரஸா மற்றும் நம் குடியரசுத் தலைவர் திருமதி. பிரதிபா பட்டேல் அணியும் இஸ்லாம் கூறும் ஹிஜாப் படத்தையும் இவ்விடத்தில் இணைப்பது பொருத்தமாக இருக்கும். இவர்கள் ஹிஜாப் அணிந்துள்ளார்கள் என்பதையோ, இதைக் கடுமையாகச் சாட வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியோ So Called பெண்ணியவாதி(!)களுக்குத் தோன்றாததற்குக் காரணம் இவர் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதே!

ஆக்கம்: அபூ ஸாலிஹா

< பகுதி 5 பகுதி 7 இன்ஷா அல்லாஹ் விரைவில்