இஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 5)

Share this:

இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் தீய சக்தியாக உருவகப்படுத்த இரு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவை:-

1. இஸ்லாம் – சகிப்புத்தன்மையற்ற, வன்முறையைத் தூண்டக்கூடிய, மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிரான அணுகுமுறை கொண்ட மதம். எனவே அமெரிக்க அரசியலமைப்பிற்குள் எக்காரணம் கொண்டும் அதனை அனுமதிக்கப்படக்கூடாது. அதேவேளை உலகில் எந்த ஒரு நாட்டின் அரசியலமைப்பிற்குள்ளும் எவ்வகையிலும் அதிகாரம் செலுத்துவதையும் அனுமதித்து விடக்கூடாது.

2. பொதுவான முஸ்லிம்களைவிட இஸ்லாத்தை உறுதியாகப் பின்பற்றும் “அடிப்படைவாத” முஸ்லிம்களே முதன்முதலில் “கவனிக்கத்”தக்கவர்களும் கண்டிக்கத்தக்கவர்களும் ஆவர்.

இவ்விரு திட்டங்களின் அடிப்படையில் கடந்த சில வருடங்களில் ஏகாதிபத்திய சக்திகள் செய்த காரியங்கள் பலவாகும். அமெரிக்க நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் நுழைந்து விடாமல் கவனித்துக் கொள்வதிலிருந்து, இன்று முஸ்லிம் நாடுகள் என அறியப்படும் நாடுகளின் மீது அழுத்தம் கொடுத்து அங்கு நிலுவையில் இருக்கும் இஸ்லாமிய சட்டங்கள், இஸ்லாமிய பழக்கவழக்கங்களை ஒவ்வொன்றாக எடுத்து மாற்றுவதற்குத் தங்களின் கைக்கூலிகளை வைத்து காய்கள் நகர்த்தியது வரை பல காரியங்களை செய்து முடித்துள்ளனர்.

செப்டம்பர் 11, 2001-ல் நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் அதனை காரணமாக வைத்து இஸ்லாத்தையும் இஸ்லாமிய அடிப்படையில் வாழமுயலும் நாடுகளையும் அழித்தொழிக்கத் திட்டங்கள் தீட்டி நடைமுறைப் படுத்தப்பட்டது உலகம் அறியும். அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராக இருந்த ரம்ஸ்ஃபெல்டு இவ்விரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா உடனடியாக யுத்தம் செய்து அழிக்க வேண்டிய நாடுகளாக பட்டியல் இட்டு பரிந்துரைத்த நாடுகள் இவை: ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, இரான், சூடான். 100 விழுக்காடு சியோனிஸ ஆதரவு நிலைபாடு கொண்ட ரம்ஸ்ஃபெல்டின் பரிந்துரையில் உள்ள இரு நாடுகள் தேர்வு செய்யப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக அழிக்கப்பட்டதும் அடுத்து இரானையும் சிரியாவையும் தற்பொழுது அமெரிக்கா குறிவைத்துள்ளதையும் இணைத்துப் பார்த்தால் மேற்கண்ட இரு திட்டங்களை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முயல்வதன் தீவிரம் புரியும்.

சில முஸ்லிம் நாடுகளில், அரசு அவைகளின் வேலை துவக்கத்தில் இஸ்லாமிய வழிகாட்டுதலான “பிஸ்மில்லாஹ்” இறைவனின் திருநாமத்தில் துவங்குகின்றோம் என்பதைக் கூறித் துவங்குவது நடைமுறையாகும். இந்த நடைமுறையை கத்தர் நாடாளுமன்ற நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்து எடுத்து மாற்ற வேண்டும் என அமெரிக்கா ஓரிரு வருடங்களுக்கு முன்பு நேரடியாகவே அறிக்கை வெளியிட்டதும் இதனோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதே.

இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுபவர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துவதும் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கும் விதத்தில் தங்களின் உறுதியான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தும் இமாம்கள் போன்றோரை சிறைகளில் அடைப்பதும் இத்திட்டங்களின் உட்பட்டதே. இவற்றிற்கு மிகப்பலமான உதாரணமாக, அமெரிக்காவில் தனது தீவிர இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மூலம் தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவிற்கு உயர்த்தும் இரு கண்களும் இழந்த இமாம் யூசுஃப் அப்துல் ரஹ்மான் அவர்களை முறையான எவ்வித குற்றச்சாட்டுகளும் பதியாமல் விசாரணை ஏதுமின்றி பல வருடங்களாகச் சிறையில் அடைத்து வைத்திருப்பதும் உலக முஸ்லிம் அறிஞர்கள் ஒன்று கூடி 21-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞராகத் தேர்ந்தெடுத்த சிறப்பிற்குரிய இமாம் யூசுஃப் அல் கர்ளாவி அவர்களை அமெரிக்காவில் நுழைய விடாமல் அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்து வைத்திருப்பதையும் கூறலாம்.

இஸ்லாத்தின் மீதான அதீத அச்சத்திற்கு தாங்கள் உட்பட்டது மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவரையும் அந்த வரையறைக்குள் கொண்டு வர இத்திட்டங்களின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை ஏகாதிபத்திய சக்திகள் எடுத்து வருகின்றன. இத்தகைய இஸ்லாத்தின் மீதான அச்சத்தை மக்களிடையே பரப்புவதற்காகவும் தேர்ந்த ஊடக குழுக்களையும் இவர்கள் உருவாக்கி விட்டுள்ளனர்.

சாயம் வெளுக்கும் முழுநேர இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்தாளர்கள்

முழு நேர இஸ்லாமிய எதிர்ப்பு ஆக்கங்களை எழுதுபவரான எழுத்தாளர் பால் பெர்ரி, தனது நூலில் (Infiltration: How Muslim Spies and Subversives have Penetrated Washington), குர் ஆனை முழுமையாக வாசித்து இஸ்லாத்தின் அடிப்படைகளை நன்கு புரிந்து கொள்ளவும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை வாசித்து அறிந்து கொள்ளவும் பெண்டகனின் நுண்ணறிவு செயலாண்மை நிர்வாகம், அதாவது Counterintelligence Field Activity (CIFA) வகுத்த செயல்முறைத் திட்டத்தையும் பற்றிப் பேசுகிறார்.

“இப்படியே விட்டால் இஸ்லாம் உலகை ஆளும் என்ற மிரட்டலையும், ஜக்காத் பணம் என்பது போருக்கான தயாரிப்புகளுக்கு பயன்படும் தர்மம்” (zakat, an asymmetrical war-fighting funding mechanism) என்று மேற்குலகைத் திசை திருப்பும் விதமாக பால் பெர்ரி குறிப்பிட்டிருப்பது அவரின் வெளிப்படையான துவேஷப் பார்வைக்கு ஓர் உதாரணம் எனலாம். இவரைப் போன்றே தர்க்க ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் எழுதக்கூடியவர்கள் என்று பெயர் பெற்ற பல இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்தாளர்கள், அடிப்படையை விளங்கவியலா உளவியல் தன்மையில் சிக்கியிருப்பதைக் காணமுடிகின்றது.

ஆன்லைன் புத்தக விற்பனையில் முதலிடம் வகிக்கும் அமேசான்.காம் தளத்தின் அதிகம் விற்கும் பிரதிகளில் இஸ்லாம் பற்றிய புத்தகங்களே முதல் 30 இடங்களைப் பிடித்துள்ளன. இஸ்லாத்தைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் குர்ஆனை வாங்கிப்படிக்க பலர் வருமிடத்தில் நடுநிலையாளர்களின் இஸ்லாம் பற்றிய ஆய்வு நூல்களுடன் காழ்ப்புணர்வை குரோதத்துடன் தெளிக்கும் ராபர்ட் ஸ்பென்ஸர், டேவிட் ஹாரோவிட்ஜ், டோனி ப்ளாங்க்லே, ஸ்டீவன் எமர்ஸன் போன்றோரின் நூல்களும் காணப்படும். அவற்றில் தூவப் பட்டிருக்கும் துவேஷ வித்துகளை, நடுநிலை நோக்குடன் அணுகும் எவரும் அவை அமெரிக்கத் தலைமையைக் குளிர்விக்க இவர்கள் செய்த (விஷப்)பனித்தூவிய விவசாயம் என மிக எளிதில் கண்டுகொள்ள இயலும்.

இஸ்லாமின் மேலுள்ள ஆழமான வெறுப்பின் மூலம் எழுத முன்வரும் இத்தகைய நியமிக்கப்பட்ட எழுத்தாளர்கள், பல நேரங்களில் இஸ்லாமிய அடிப்படைகளைக்கூட அறிந்து வைத்திருக்கவில்லை என்பதைப் பல்வேறு இடங்களில் கண்கூடாக காண முடியும். பண்பற்ற முறையில் மனிதத்தன்மையை இழந்து மனிதர்களிடையே வெறுப்பை வளர்த்து பகைமையை ஊட்ட எந்த அளவு சேவை செய்ய இயலுமோ அந்தளவு இஸ்லாமைப் பற்றித் தவறாகத் திரித்துக்கூறுவதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கும் இத்தகைய பெருச்சாளிகளின் சாயங்கள் பலமுறை வெளுத்திருந்தாலும் அவ்வப்போது புதிய நிறங்களைப் பூசிக் கொண்டு இவர்கள் உலா வருவதைத் தடுக்க இயலவில்லை என்பதுதான் யதார்த்தம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களுக்கும் விமர்சனங்களுக்குத் தக்க விளக்கங்கள் கொடுக்கப்படும்போது பதிலளிக்கத் திராணியின்றி அடுத்த விமர்சனத்திற்குத் தாவி விடும் சாமார்த்தியம் இவர்களுக்குக் கைவந்த கலையாகும்.

அப்படியே இந்தியாவிற்கு வந்தால் பிரபல தினசரிகளில் கட்டுரைகள் என்ற பெயரில் பொய்கள், அவதூறுகள், திரித்தல்கள், உளறல்களின் மூலம் தன் மனதினுள் உறைந்து விட்ட இஸ்லாத்தின் மீதான அதீத அச்சத்தைக் கொட்டித்தீர்க்கும் அருண்ஷோரியிலிருந்து தென்னகத்தில் தங்கி விட்ட பார்ப்பன சோ வரை பட்டியல் மிக நீண்டு கொண்டு செல்லும்.

தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தை முன்வைக்கும் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் சொந்தச் சரக்கில் எழுதுவதில்லை. பெரும்பாலான இவர்களது ஆக்கங்கள் மேற்கத்திய எழுத்தாளர்களின் படைப்புக்களின் மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ இருப்பதைப் பார்க்க முடிகிறது. மேற்கத்திய உலகிற்குக் கடும் சவால் விடுவதாகவும் இஸ்லாம் வன்முறையைத் தூண்டுவதாகக் கூறும் இலக்கியத்தரத்தில் எழுதுவதில் வல்லவரான ராபர்ட் ஸ்பென்ஸர் கூட, போரையும் அமைதியையும் பற்றிப் பேசும் நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களில் தம் வாதங்களுக்கு ஏற்றவற்றை மட்டும் தேர்வு செய்து திரிப்பதை வழக்கமாகக் கொண்டவர். குர்ஆனிலுள்ள வாசகங்களையும் (texual) வரலாற்றுப் பின்னணி(context) களையும் மாற்றிப்போட்டு விளையாடுவது இவருக்குக் கை வந்த கலை. அவதூறுகள் மற்றும் துன்புறுத்தல் மூலமாக வலிந்து போரைத் துவக்கும் எதிரிகளைச் சமாதானப்படுத்த முயன்றும் பலனில்லாமல் போகும் போது வேறு வழியின்றி எடுக்கப்படும் இறுதியான முடிவாக ஐயப்பாடுகளுக்கு இடமின்றி குர்ஆனில் கூறப்படும் போர் பற்றிய (9.1) வசனங்களை முஸ்லிம் அல்லாதவர்களைக் கண்டால் முஸ்லிம்கள் செய்யவேண்டிய கடமை போன்று திரித்து சித்தரிப்பதும் இவர் கையாளும் யுக்தியாகும்.

மதினா நகரத்தில் இஸ்லாம் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தினைத் தாங்க முடியாத மத நம்பிக்கையற்றவர்கள், முஸ்லிம்களுக்கெதிராகச் செய்த சதித்திட்டங்களையும் அவர்கள் கொடுத்த துன்பங்களையும் வஞ்சகத்தோடு செய்த துரோகங்களையும் அவர்கள் முஸ்லிம்களோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளை முறித்த காரணத்தினாலும் துவங்கப்பட்ட அந்தப் போரைப்பற்றி குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனை இஸ்லாமிய நிகழ்வுகள் பற்றிய சிறு அளவிற்கு அறிவுள்ள எவரும் புரிந்து கொள்ள இயலும்.(9.13) போரிடச் சொல்வதற்கு முன்னும் பின்னுமுள்ள (2.190-193) வசனங்களை நயவஞ்சக எண்ணத்துடன் மறைக்கும் வித்தையை அருண் ஷோரியைப் பின்பற்றி தமிழக எழுத்தாளருக்கு கற்றுக்கொடுத்ததும் ராபர்ட் போன்ற மேற்கத்திய எழுத்தாளர்கள்தாம் எனலாம்.

பயங்கரவாதச் செயல்கள் எங்கு நடந்தாலும் அதில் இடம் பெற்ற குற்றவாளிகள் முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் அல்லது சந்தேகத்தின் பெயரில் ஏதாவது முஸ்லிம் பெயர் கொண்டவர் அகப்பட்டு விட்டால் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளைப் பரப்புவதிலும், நடைபெறும் தீவிரவாதச் செயல்களை முஸ்லிம் அமைப்பு மற்றும் இயக்கங்களுடன் தொடர்பு படுத்தி இஸ்லாம் பற்றிய பயத்தினை அமெரிக்க மற்றும் பிரிட்டன் மக்களின் மனதில் விதைக்க பெரும் முயற்சிகள் நடைபெற்றன. முஸ்லிம் பெயர் கொண்டு ஒருவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் தலைப்புச் செய்தியாக்குவதும் பின்பு அவர் நிரபராதி என்று அறிய வரும்போது அதை வெட்கப்பட்டு ஐந்தாம் பக்கத்து கடைசி பத்தியில் சுருக்கி வெளியிடும் தமிழகச் செய்தி ஊடகங்களுக்கு முன்னோடிகள் மேற்கத்திய ஊடங்கள்தாம். இஸ்லாமிய அறிவைப் போதிக்கும் மதரஸாக்கள், பள்ளிவாசல்கள்தாம் முஸ்லிம்களின் சிந்தனாசக்தியைத் தூண்டுமிடம் என்பதை தாமதமாக அறிந்து எந்த ஒரு பயங்கரவாத செயலுக்கும் முடிச்சுப்போடும் வழக்கத்தை மக்கள் நம்பும் ஊடகங்களை வைத்து நீட்டி முழக்கி வெளிக்கொணர்ந்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஆக்கம்: அபூஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.