​அணுக்கத் தோழர் அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) – 1

Share this:

ண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, ‘நான் வந்து தங்களைக் காண(முடிய)வில்லை என்றால்…?’ என்று  கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல்” என்று பதில் கூறினார்கள் (புகாரீ 3659).

தமக்குப் பின்னர் தம் சமகால முஸ்லிம் சமுதாயத்தை வழிநடத்துவதற்குத் தகுதியானவர், தம் அணுக்கத் தோழர் அபூபக்ருஸ் ஸித்தீக் என்று அண்ணல் நபி (ஸல்) அறிவித்ததற்கு ஏறத்தாழ அறுபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்கப் போகிறோம்.

oOo

மக்கா …

பார்வைக்கெட்டிய தூரம்வரை பாலை மணல் நிறைந்திருக்க, பாரான் பள்ளத்தாக்கில் மட்டும் ஸம்ஸம்.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை இறைவனால் ஏற்கப்பட்டு, அவர்தம் மகனார் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பொருட்டு ‘ஸம்ஸம்’ எனும் வற்றா நீரூற்றுப் பொங்கி வந்ததால், அங்கு வந்துக் குடியேறியவர்கள் பெருகப் பெருக, மக்க நகர், ‘மக்க மாநகர்’ ஆயிற்று.

யானை ஆண்டு …
கி பி 573 …

மக்காவின் அப்போதைய உயர்ந்த குலம் என அறியப்பட்ட ‘முர்ரா’ எனும் பரம்பரையில் ஒரு செல்வச் செழிப்பான வீடு …

மக்காவில் ‘அபூகுஹாஃபா’  என நன்கு அறியப்பட்ட உஸ்மான், தம் மனைவியான ‘உம்முல் கைர்’ என்ற சல்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியைக் கொண்டாடி மகிழ்கிறார்!

‘அப்துல் கஅபா – கஅபாவின் அடிமை’ எனப் பெயரிட்டு மகிழ்கிறார்! ஏராளமான ஒட்டகங்களுக்குச் சொந்தக்காரரான உஸ்மான், தம் மகனை மக்காவின் பாரம்பரியத்துடன் கம்பீரமாக வளர்க்கிறார் …

சிறுவன் எந்நேரமும் தனது தந்தையின் ஒட்டக மந்தைகளுடனே தனது விளையாட்டுகளை அமைத்துக் கொண்டார். நாட்கள் செல்லத் தொடங்கின…

‘ஒட்டகம்’ என்று ஒற்றைச் சொல்லில் நாம் தமிழில் வழங்கும் பாலைவனக் கப்பலுக்கு அதன் பாலினம், வயது, நிறம், உயரம் ஆகியவற்றைப் பிரித்துக் காட்டுவதற்கு நூறுவகையான தனித்தனிப் பெயர்கள் அரபு மொழியில் உண்டாம்.

ஒரு வயது ஒட்டகக் குட்டியைக் குறிக்கும் அரபுச் சொல் ‘பக்ரு’

எந்நேரமும் ஒட்டகக் குட்டிகளுடன் சிறுவனைக் காணும் மக்கத்துப் பெரிசுகள் தங்களது வழக்கப்படி ஒரு பட்டப் பெயரை அவருக்குச் சூட்டுகிறார்கள்.

‘அபூபக்ரு’

தமது 10ஆவது வயதில் தம் தந்தையுடன் சிரியாவிற்கு வணிகப் பயணம் புறப்படுகிறார் அபூபக்ரு. தமது 18ஆவது வயதிலேயே மக்காவின் மிகச் சிறந்த வணிகர்களுள் ஒருவராகவும் மக்காவின் பத்துப் பெரும்புள்ளிகளுள் ஒருவராகவும் அவர் உயர்ந்து நின்றார்.

அல்லாஹ், தன் தூதருக்கு அணுக்கத் தோழராக அபூபக்ரை ஆக்குவதற்கான முன்னோடி நிகழ்வுகள் சில அவரது ஆளுமைகளை மெருகேற்றியதாகவே உள்ளன.

அவற்றுள் ஒன்று …

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.