அணுக்கத் தோழர் அபூபக்ருஸ் ஸித்தீக் – 3

மாந்திரீகம் எனும் தந்திர வித்தைகள் மிகைத்து, படைத்த இறைவனை மறந்து, இஸ்ராயீலின் மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில் மூஸா நபியைத் தவ்ராத்தோடு முஅஜிஸாத்துகளுடன் அல்லாஹ் அனுப்பினான்; ‘நானே மிகைத்தவன்; என் வல்லமையே மிகைத்தது’ என்று நிறுவி அம்மக்களை அடக்கினான்.

‘மருத்துவம் கற்றவர்களே மகத்துவம் பெற்றவர்கள்’ என்று ஆணவம் கொண்டு வாழ்ந்தவர்களின் காலகட்டத்தில் ஈஸா நபியை இஞ்சீல் வேதத்தோடு சில முஅஜிஸாத்துகளை வழங்கி அவர்களையும் தோல்வியுறச் செய்தான் அல்லாஹ்.

மொழி வெறி மிகைத்தவர்களான அறியாமைக் காலத்து அரபு மக்களுக்கு, “இதைப் போல் ஓர் அத்தியாயமேனும் இயற்றிக் கொண்டு வரமுடியுமா?” எனும் அறைகூவலோடு வெல்ல முடியாத பேரிலக்கியமான அல்-குர்ஆனை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கி, செம்மாந்து திரிந்த அரபு மொழி வெறியர்களைச் சிரம் குனியச் செய்தான்.

அதுவரைக்கும் அறியாமைக் காலத்து அரபு மக்களுள் செல்வாக்கு மிக்கச் செழிப்பான குடும்பத்தினரிடம் ஒரு பழக்கம் இருந்தது. மகன் ஓரளவு எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் அடுத்ததாக அவனைக் கவிதைகள் யாப்பதற்குப் பழக்குவார்கள்.

இந்தக் காலத்துச் சின்னத் திரையில் தோன்றி ஆடிப் பாடி, தம் மகன்/மகள் ‘ஜூனியர் சிங்கர் நம்பர் ஒன்’ என்று பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக அந்தச் சிறுவர் சிறுமியரின் கல்வி, விளையாட்டு, ஓய்வு, குடும்ப உறவாடல் போன்ற இயல்பான தேவைகள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, சினிமாப் பாட்டுப் பயிற்சிக்கு முதலிடம் கொடுக்கும் பெற்றோரைப் போல் கவிதைப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தம் பிள்ளைகளை வளர்த்தனர் அரபுப் பெற்றோர்.

‘கவிஞர்’ அபூபக்ரு என்றதும் ஜிப்பா-பைஜாமா, தோளில் தொங்கும் ஒரு ஜோல்னா பை, சோடா புட்டிக் கண்ணாடி, கலைந்த தலை, முகத்தில் பத்து நாள் மீசை-தாடி, குழி விழுந்த கண்கள் போன்ற நம் சமகாலத்தில் ‘கவிஞர்’ என்று சொல்லிக்கொள்பவர்களைக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.

எழுதப் படிக்கத் தெரியாத சிலர்கூட சட்டெனக் கவிதைகள் யாத்துவிடும் திறன் பெற்றிருந்த அரபு மக்களிடையே, எழுதப் படிக்கக் கற்றுக்கொண்ட சிறுவர் அபூபக்ருக்கும் கவிதை பாடும் ஆற்றலும் ஆசையும் எழுந்ததில் வியப்பில்லை. தம் மகன் கவிபாடும் திறன் பெற்றுவிட்டான் என்பதை அறிந்த அபூகுஹாஃபா, பேருவகை அடைந்து, மகனை உக்காழ் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றார்.

அரங்கேற்றத்திற்கு முன்னர், கஅபாவுக்கு அழைத்துச் சென்று ‘அஸ்ஸாம்’ எனும் சிலைக்கு எதிரே நின்றுகொண்டு, “இதுதான் நம் குலதெய்வம். உனக்கு வேண்டியதைக் கேட்டுக்கொள்” எனக் கூறி மகனைத் தனியே விட்டுச் சென்றார் உத்மான் அபூகுஹாஃபா. தம் பண்டைய குலதெய்வத்தோடு நடந்த உரையாடலைப் பிற்காலத்தில் அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) எடுத்துக் கூறினார்:
“தனியே விடப்பட்ட நான் அந்தச் சிலைக்கு அருகே சென்றேன். ‘எனக்குப் பசியாக இருக்கிறது உண்ணுவதற்கு ஏதேனும் கொடு’ எனக் கேட்டேன். அது எதையும் தரவில்லை; ‘எனக்குப் புதிய ஆடை ஒன்றைக் கொடு’ என்று கேட்டேன். அதற்கும் அந்தச் சிலை பதிலேதும் சொல்லவில்லை. குனிந்து பார்த்தேன். சிறு கற்கள் கிடந்தன. ஒரு கல்லை எடுத்து அந்தச் சிலையின் முகத்தை நோக்கி வீசி எறிந்தேன்” (அல் அஷரத்துல் முபஷ்ஷரூன்). கவிதைகளுக்கும் அன்றோடு முழுக்குப் போட்டார் அபூபக்ரு.

இதை வாசித்தீர்களா? :   திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்! (பகுதி-3)

இணைவைப்பு எனும் பெரிய பாவத்திலிருந்து அல்லாஹ் அபூபக்ரை மீட்டு எடுக்கச் செய்த இந்த நேரத்தில் அவருக்குத் தனது கோரிக்கையை செவிமடுக்காத சிலைகள் மேல் வெறுப்பு கொண்டு வேகமாய் வெளியேறினார். அதன் பின் இஸ்லாத்தை ஏற்ற பின்னரே மீண்டும் அங்கே பிரவேசித்தார். மக்காவின் அன்றைய செல்வச் சீமான்களை மதீப்பீடு செய்ய, அவர்தம் வீட்டில் மதுப் பீப்பாய்களின் எண்ணிக்கையே அளவுகோளாக இருந்தன.  ஆனால் மிகப்பெரும் வசதி இருந்தும் ஒருமுறைகூட மதுவை அருந்தாமல் இஸ்லாத்திற்கு முன்பும் மதுவை வெறுத்து வாழ்ந்தார் அபூபக்ரு. “ஜாஹிலிய்யா காலத்தில் நீங்கள் மது அருந்தியதில்லையா?” என்று பிற்காலத்தில் ஒருவர் கேட்டபோது, “ஆம்! நான் ஜாஹிலிய்யா காலத்திலுங்கூட ஒருமுறையேனும் மது அருந்தியதில்லை. மதுவானது மனிதனின் மானத்தை இழக்கச் செய்வதைக் கண்டிருக்கிறேன். எனவே அதை வெறுத்துவிட்டேன்” என்று பதிலளித்தார் அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி).

தம் முன்னோர்களைப் பற்றிய அறிவிலும் அபூபக்ரு மிகத் தெளிந்த அறிவினைப் பெற்றிருந்தார். மேலும், தமது குடும்பப் பாரம்பரியத்தை, தமது நாட்டின் முந்தைய நிகழ்வுகளை ஆழமாகத் தெரிந்து வைத்திருந்தார். GENEALOGY எனும் மரபு வழிமுறையை நன்கு அறிந்தவராதலால் தமது குடும்பத்தின் முன்னோர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லும் நினைவாற்றலையும் பெற்றிருந்தார் அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி).

ஒரு முறை ஒரு வணிகத்தில் ஈடுபட்டிருந்தபோது “உமது பெயர் என்ன?” எனக் கேட்டவரிடம், “அப்துல்லாஹ் இப்னு உத்மான் பின் ஆமிர் பின் அம்ரு பின் கஅப் பின் ஸஅத் பின் தையிம் பின் முர்ராஹ் பின் கஅப் பின் லுஐ பின் காலிப் பின் ஃபிஹ்ர் அல் குறைஷி” எனச் சொன்னார் அபூபக்ரு. வந்தவர் வாயடைத்து போனார்.

அல்லாஹ் குறைஷிகளுக்கென ஒரு தனி அருளைப் புரிந்திருந்தான். அது, அவர்களுக்குப் பயணம் செய்வதில் இருந்த ஆர்வம். பாலைவனத்தில் பிரயாணம் என்பது மிகுந்த சோதனைகளையும் வேதனைகளையும் உள்ளடக்கியது. ஆனாலும் குறைஷிகள் கோடைகாலத்தில் ஷாம் (சிரியா) பகுதிக்கும், குளிர்காலத்தில் எமன் தேசத்திற்கும் பயணிப்பது அவர்களது வழக்கமாக இருந்தது (அல்-குர்ஆன் 106:1-4). அவ்வாறு 18ஆவது வயதிலேயே மிகப்பெரும் வணிகத்திற்காக எமனுக்குச் சென்றார் அபூபக்ரு. தம் மகன் தலைமையேற்று வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்து வந்ததைக் கண்டு மகிழ்வடைந்த அபூகுஹாஃபா, மகனுக்குத் திருமண ஏற்பாடுகளை ஆரம்பிக்கலானார்.

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ்!