கூகுளுக்கு வழிகாட்டுவோம் வாரீகளா?

Share this:

நீங்கள் ஸ்மார்ட் போன் பயனரா? எனில் உங்கள் போனிலுள்ள பிரபலமான கூகுள் மேப்ஸ் ஆப் பற்றிப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை.  நாம் வசிப்பது நகரமோ சிறு கிராமமோ, இரண்டு தெரு தள்ளியிருக்கும் கடைக்குச் செல்வதாக இருந்தாலும் எந்த ரூட் சிறந்தது? எதில் ட்ராஃபிக் குறைவாய் இருக்கும்? போன்ற தகவல்களுடன் கையைப் பிடித்துக் கொண்டு உதவிக்குரல் கொடுத்து, செல்ல விரும்பிய கடை வாசல்வரை பத்திரமாய்க் கொண்டு சேர்த்துவிடும் கூகுள் மேப்ஸ் ஆப்.

தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது தடுத்து நிறுத்தி வழிகேட்கும் ஒருவருக்கு வழிசொல்லி, அவர் தெளிவு பெற்று நன்றி கூறி விடைபெறும்போது மனம் நிறைவு கொள்பவரா நீங்கள்? எனில் தொடர்ந்து வாசியுங்கள். உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்.

இப்படித்தான் சமீபத்தில் ஒருநாள் அலுவலகம் முடிந்து மதிய உணவு இடைவேளைக்கு வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமாகும் போது வீட்டிலிருந்து போன் ஒலித்தது. “வாட்ஸ் அப்பில் ஒரு சிறிய பட்டியல் அனுப்பியுள்ளேன், வரும் வழியில் வாங்கி வந்து விடுங்கள்!” என்ற கட்டளை. வழியிலுள்ள லூலூ செண்டரில்தான் அவை கிடைக்கும்.   சரி, தினமும் போகும் வழிதானே… சாவகாசமாக வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் விடலாம் என்று நிதானமாய்க் கிளம்பினேன்.  எதேச்சையாக ஸ்மார்ட் போனில் பரிசோதித்த என் முதுகுத்தண்டை சில்லிட வைத்தது அந்தத் தகவல். “உன்னுடைய சாவகாசம், வீட்டில் சகவாசத்தையே கெடுத்து விடும், பரவாயில்லையா?” என்று தலையில் கொட்டியது கூகுள் மேப்ஸ். சரசரவென்று கூகுள் காட்டிய, டிராஃபிக் குறைந்த மாற்று வழியில் பயணித்து, சரியான நேரத்தில் பொருட்களை வாங்கிக் கொண்டேன். வீட்டில் மதிய உணவும் கிடைத்தது.

சரி, இவை எல்லாம் எப்படி சாத்தியமாகின்றன என்று யோசித்ததுண்டா? கூகுள் நிறுவனம், ஒவ்வொரு இடத்திலும் தன் ஊழியர்களை அமர்த்தி இத்தகவல்களை உள்ளீடு (entry) செய்வதில்லை. எனில் யார்தான் செய்கின்றார்கள்?  மேலே சொன்ன லூலூ செண்டர் எனும் கடையின் விபரங்களை எப்போதோ இணையத்தில் நானே உள்ளீடு செய்திருந்தேன். சரியான நேரத்தில் அது எனக்கே மதியச்சோறு போட்டு நன்றிக்கடன் ஆற்றியது.

என்னைப் போன்றே நீங்களும் உங்கள் பகுதியில் நீங்கள் காணும் தொழில் நிறுவனங்கள், வியாபார ஸ்தலங்கள், உணவகங்கள், இறை இல்லங்கள்,  வங்கி, மருத்துவமனைகள், ஏன் உங்கள் வீடு(கள்) போன்ற எவற்றையும் கூகுளில் இணைக்க ஆர்வமா? நிறுவனங்களின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், பணி நேரங்கள் இவற்றை இணைப்பது எப்படி என்று அறிந்துகொள்வதோடு, இப்பணிகளைச் செய்யும் தன்னார்வலர்களுக்கு கூகுள் தரும் ஊக்கப்பரிசுகளையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்…)

அடுத்த பகுதி: http://www.satyamargam.com/articles/sci-tech/google-local-guide-in-tamil/

– அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.