
என் உறவினர் ஒருவர், நான் சிறப்பானவை என நம்புகின்ற சில பண்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் ஒன்று, எப்பொழுது உரையாடினாலும் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, நம்மிடம் உள்ள ஏதாவது ஒரு நல்ல பண்பை, குணத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டிவிடுவார்.
புகழாரம் இருக்காது, நம்மைக் குளிர்வித்து அதில் அவருக்கு ஆதாயம் தேடும் எந்த நோக்கமும் இருக்காது. பிரதியுபகாரம் எதுவும் எதிர்பாராத நாலு நல்ல வார்த்தைகள். அவ்வளவுதான்.
அவர் குறிப்பிடுவதைக் கேட்கும்போதுதான் நமக்கே அந்தக் குணம் தெரிய வந்திருக்கும். அல்லது, ‘பரவாயில்லையே! நம்மிடம் உள்ள இந்த நல்ல விஷயத்தையும் உலகம் கவனிக்கிறதே’ என்று மனத்தின் ஒரு மூலையில் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இந்த நாலு நல்ல வார்த்தைகளை உதிர்த்ததால் அவருக்கு என்ன குறைந்துவிட்டது, நஷ்டம் ஏற்பட்டுவிட்டது? ஒன்றுமில்லை! மாறாக நமது மனக் கஜானாவுக்குத்தான் வரவு.
இன்றைய மின் வேக சமூக வலை ஊடகங்களில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க முடியும். எல்லோரும் எல்லோரையும் ஏதாவது எதிர்மறை விமர்சனம் செய்கின்றார்கள்; திட்டுகின்றார்கள்; அலுக்காமல் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு? நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிந்திருந்த வினாவில் விடை உள்ளது. “நம் மக்கள் ஏன் எப்பொழுதும் கொதி நிலையிலேயே இருக்கின்றார்கள்?”
புரிகிறது. ஊரும் நாடும் உலகமும் அக்கிரமக்காரர்களால் சூழப்பட்டு, எதேச்சாதிகாரமும் அநீதியும் கொடுங்கோலுமே உலக இயல்பாக மாறியுள்ள சூழ்நிலையில் மனமெல்லாம் பிரஷர் குக்கராய் பொங்குவதில் ஆச்சரியமில்லைதான். இரவில் போர்த்தித் தூங்கினாலும் நிம்மதி மட்டும் பகற் கனவாய் நீடிக்கும்போது ஏற்படும் விரக்தி நியாயம்தான். ஆனால் –
தனி மனிதர்களான நாம் இலவச சோஷியல் மீடியாவின் உதவியால் போராளிகளாக உருவெடுத்துவிட்டோம் என்பதற்காக ஒருவரையொருவர் மட்டந்தட்டுவதும் காலை வாரிவிடுவதுமே வேலையாக இருந்தால் அது அறம் வளர்க்கப்போவதில்லை. குட்டையில் விழுந்த மட்டையாய் மற்றோர் அரசியல்வாதியைப் போலத்தான் நம்மை அவை மாற்றும். என்ன செய்யலாம்? சுருக்கமாக ஒரு விதியை நிர்ணயித்துக் குறித்து வைத்துக்கொள்ளலாம்.
நாம் உதிர்க்க விரும்புவது பாராட்டு ரகம் என்றால் கஞ்சத்தனமோ மறுயோசனையோ ஏதும் இன்றி உடனே செயல்பட்டுவிடுவது. எதிர்மறைக் கருத்து, விமர்சனம், அவதூறு, திட்டு ரகமென்றால் உடனே அதற்கு, ‘பரிசீலனை’ எனும் முட்டுக்கட்டை போட்டுவிடுவது. அந்த முட்டுக்கட்டையை நீக்குவதில்தான் கஞ்சத்தனமும் மறுயோசனையும் உலகில் உள்ள அத்தனை காரணங்களும் நமக்குத் தேவைப்பட வேண்டும்.
எளிய உதாரணமாக இதைச் சிந்தித்துப் பாருங்கள். சமைத்துப் போடும் மனைவியின் சமையலில் உப்பு, காரம், பக்குவம் சரியில்லை என்று குறை சொல்வதைவிட நிறைவாக இருக்கும் ஒரே ஒரு விஷயத்தைப் பாராட்டிவிட்டுப் போகலாமே! பாராட்டுவதற்குத் திறக்காத வாய், கொட்டாவிக்கும் குற்றம் குறை சொல்வதற்கும் மட்டுமே திறக்குமென்றால், அது அற்பத்தனம்.
‘அதெல்லாம் சரி. கருத்தும் வம்பும் தும்பும் இல்லாமல் பிறகென்ன தகவல் பரிமாற்றம். அப்புறம் எதற்கு சோஷியல் மீடியா? இது உலக மகா சிரமம்’ என்று கை நமைக்கும். மண்டைக்குள் கம்பளிப்பூச்சி ஊறும். சிரமம்தான். நியாயம்தான். என்ன செய்யலாம்?
என்ன செய்யலாம் என்பதைவிட, நமது சொல்லிலும் எழுத்திலும் என்ன செய்யக்கூடாது என்பது முக்கியம். ஆகாத கருமங்கள், கூடாத விஷயங்கள் சிலவற்றை நெட்டுரு செய்து வைத்துக்கொள்வது நலம்.
1. குற்றம் காண்பதும் சிறுமைப்படுத்துவதும் கூடாது. நியாயமான விஷயமே என்றாலும் ஒருவரை முகத்தில் அடித்தாற்போல் குறை சொல்வதும் இகழ்வதும் சிறுமைப்படுத்துவதும் தகவல் பரிமாற்றத்தின் எதிரி. ஒருவரது கன்னத்தில் கொசு அமர்ந்திருக்கிறது என்பதற்காக பளாரென்று அறைய முடியுமோ? குற்றம் சொல்வதும் இகழ்வாய்ப் பேசுவதும் அவரது மனத்தை ஆழமாகப் புண்படுத்திவிடும். அவரை முகம் குப்புறத் தள்ளிவிட்டுவிடும். அதன் பிறகு அவரிடம் வெற்றிகரமான தகவல் தொடர்பு என்பது நமக்கு எப்படி சாத்தியமாகும்? நாம் சொல்வதை அவர் என்ன கேட்பார்? எப்படி தம்மைத் திருத்திக் கொள்வார்? அல்லது நமக்கு எதைத்தான் அவர் நிறைவேற்றுவார்?
2. பழித்தல் கூடாது. ‘உன்னால்தான் இப்படி’, ‘ஒரு காரியம் உருப்படியாச் செய்யத் துப்பில்லை’, ‘ஆமா! நீ அப்படியே செஞ்சு கிழிச்சுட்டாலும் …’ ரக வாக்கியங்கள் நமது அன்றாட வாழ்வில் நாம் கேட்பவை, அல்லது உதிர்ப்பவை. பழித்துச் சொல்லும்போது அவரது தன்மானம் அடிபட்டுவிடுகிறது; நம் வார்த்தைகள் நவீன மருத்துவம் கண்டுபிடித்துள்ள லேசரை எல்லாம்விட கூர்மையான கத்தியாச்சே – அவரது சட்டையைக் கிழித்து ஊடுருவி அவரது இதயத்திற்குள் சிறு பகுதியையும் கிழித்துவிடுகிறது. பிறகென்ன? பாதிக்கப்பட்டவர் ‘மூன்றாம் மனிதனாக’ இருந்தால் ‘சர்த்தான் போடா’ என்று நம்மை உதறிவிடுவார். சொந்தம், நட்பு, வாழ்க்கைத் துணை என்றால் நம்மிடமிருந்து உணர்ச்சியால் விலகி விடுவார். அன்பும் பாசமும் அடிபட்டுப்போய் பிறகு எல்லாமும் ஏனோ, தானோ தான்.
3. அநாகரிக வார்த்தைகள் கூடாது – ஆபாச வார்த்தைகளாலும் பண்பாடற்ற வார்த்தைகளாலும் திட்டுவதும் பேசுவதும் அநாகரிகம். ‘ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றேனாக்கும்’ என்று பெயருக்குப் பின்னால் பட்டம் இட்டுக்கொண்டு பேச்சுக்குப் பேச்சு “பொர்க்கி” என்று எழுதினால் அது யாருக்கு இழுக்கு? நாகரிகம் என்பது உடையிலும் உணவிலும் மட்டும் பேணப்படுவதா என்ன? நாவுக்கல்லவா அது மிக முக்கியம். நவீன சோஷியல் மீடியா காலத்தில் அது எழுத்தில் வேண்டாமோ? ஆனால் இன்று நம் பலரின் ஃபேஸ்புக் பதிவுகள்?
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று உண்டு:அழகுறப் பேசுதல் இறைநம்பிக்கையைச் சார்ந்ததாகும். இறைநம்பிக்கை, சொர்க்கத்துக்கு வழி காட்டும். ஆபாசப் பேச்சுகள் இறைமறுப்பைச் சார்ந்ததாகும். இறைமறுப்பு, நரகத்துக்கு வழி காட்டும் (ஸஹீஹ் இபுனு ஹிப்பான் 609இன் கருத்து).
மற்றும் சில கூடாதவை தொடரும். அதுவரை, ஆழமான அறிவுரை அடங்கியுள்ள இந்த நபிமொழியைச் சிந்திப்போம்.
oOo
(தொடரும்)
-நூருத்தீன்