பயனற்றக் கொண்டாட்டங்கள் தேவைதானா?

ரு திரைப்படத்தில் “Loveன்னா என்ன?” ன்னு விவேக் கேட்கும்போது துணை நடிகர் “ரூம் போடுறது” என்று சொல்வதுபோல ஒரு காட்சி இருக்கும்.

நேற்று நான் பார்த்த ஒரு குறும்படத்தில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவி கர்ப்பமாகக் காரணமான ஒரு சிறுவன், மாணவியின் தாயிடம்,”தெரியாமப் பண்ணிட்டோம், இதான் லவ்வுன்னு நெனச்சுட்டோம்” என்று சொல்லிக் கதறி அழுவான்..!

ஆண்-பெண் காதலைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உண்மையில் காதல் என்பதை இன்றைய விடலைகள் எப்படிப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதைவிட, எப்படிப் புரிந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்த்தவே மேலே உள்ளதை எழுதியிருக்கிறேன். இறைவன் இயற்கையிலேயே ஆண்-பெண்ணிற்கிடையே ஒருவித ஈர்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளான். ஆண்களும் பெண்களும் திருமணம் என்ற வரையறைக்குள் இணைந்து மனித இனம் பல்கிப் பெருக வேண்டும் என்பதே அந்த எதிர்பால் ஈர்ப்புணர்வின் மூலகாரணமாக உள்ளது. அந்த ஈர்ப்புணர்வையே இன்று காதல் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றனர்.

Love என்கிற ஆங்கில வார்த்தைக்கு அன்பு என்பதே சரியான தமிழ்ப்பதம். உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் ஒன்று மற்றதன் மீது பரிமாறிக் கொள்ளும் ஒருவகை உன்னத உணர்வே அன்பு. பெற்றோர் பிள்ளைகள் மீது, நண்பர்களுக்கிடையே உள்ள பிணைப்பு, மனிதர்கள் மற்ற உயிரினங்கள் மீது காட்டும் பரிவு என்று அன்பிற்கு பரந்து விரிந்த பொருள் உள்ளது. வயதான தனது பெற்றோர்களைத் தனது தோள்களில் சுமந்து நடந்தது, நேரில் காணாமலே நட்பு கொண்டு நண்பனுக்காக வடக்கிருந்து உயிர் நீத்தது இவை அனைத்துமே அத்தகைய ஈடு இணையற்ற அன்பின் வெளிப்பாடுகள்தாமே?. எல்லையில்லாத அன்பினை ஒரு குறுகிய எல்லைக்குள் போட்டு அடக்கியதன் விளைவே அன்பு என்னும் அழகிய வார்த்தை, காதல் என்று கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மையாகக் காதலிப்பவர்கள், இன்று காதல் என்ற பெயரில் அரங்கேறும் காமுகத் தன்மைகளை அங்கீகரிக்க மாட்டார்கள். போதாக்குறைக்கு சினிமா, பத்திரிகைகள் போன்ற நமது ஊடகங்களும் காமுகர்களது தரகர்களாகச் செயல்பட்டுக் காதலை வியாபாரமாக்கின. அரைகுறை ஆடைகளில் காதலர்களை வலம்வரச் செய்து, அறையில் நடக்க வேண்டியவற்றைத் திரையில் காண்பித்து அதுதான் காதல் என்று வரைறுக்கும் கிறுக்குத்தனத்தை இன்றைய ஊடகங்கள் இன்றும் செய்து வருகின்றன. இவற்றைப் பார்த்து, ‘காதல் இல்லையேல் சாதல்’ என்ற மனநிலையை இன்றைய இளையர்கள் மேற்கொண்டு, கட்டுப்பாடற்றுத் திரிவதால் தனிமனித ஒழுக்கம் என்பதே கேள்விக்குறியாகிவிட்டுள்ளது.

நம் வாழ்நாளில் எத்தனையோ சிறப்பு மிக்க நாட்கள் உள்ளன. அவற்றை எல்லாம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரையும் ஒன்றிணைத்து வெகுவிமரிசையாகக் கொண்டாடித் தீர்க்கின்றோம். ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், பரிசுகளை வழங்கி அகமகிழ்கின்றோம்! பிறந்த நாள், புதுமனை புகுவிழா, திருமணம் என்று அவை அனைத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இன்னும் அவற்றின் மூலம் நாம் பெறும் பலன்களும் அதிகம். புதிய உறவுகள் தோன்றுதல், உள்ள உறவுகள் வலுப்படுதல் என்று பல்வேறு நன்மைகளும் அடங்கியிருக்கின்றன. ஆனால் சமீபகாலமாக ஏன், எதற்காக? என்று உள்நோக்கமோ, அர்த்தமோ இல்லாமல் தேவையற்ற, அநாகரிகமான கொண்டாட்டங்கள் பெருகிவருகின்றன. புத்தாண்டு, நண்பர்கள் தினம், காதலர் தினம் என்று இத்தகைய கொண்டாட்டங்கள் இன்றைய சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம், ஏராளம்..!

இதை வாசித்தீர்களா? :   ஊன தினம்!

பலன்களே இல்லாத, பாதிப்புகளோடு ஆற்றல், பணம், நேரம், சில நேரங்களில் உயிர் வரை இழப்புகளையே அதிகம் ஏற்படுத்துகின்ற, இன்னும் பெற்றவர்கள், பெரியவர்களது வயிற்றெரிச்சலையும், சாபத்தையும் பரிசாக பெற்றுத் தருகின்ற இத்தகைய கொண்டாட்டங்களில் பிரதான இடம் பிடிப்பது பிப்ரவரி-14. காதலர் தினம் நாளை உலகை ஆளப் போகும் யுவ, யுவதிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் நாள்.

இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் தேவைதானா? என்கிற கேள்வியை நம் மனத்திற்குள் எழுப்பி, அதற்கு விடைகாண முயல்வோம். பிறப்பு முதல் இறப்பு வரை இருக்க வேண்டிய இந்த உணர்வை வருடத்தின் ஒரே ஒரு நாள் மட்டுமே கொண்டாடுவதாய், அதுவும் காதலர்கள் மட்டுமே கொண்டாட வேண்டும் என்ற நிலை உருவானது ஏன்? அங்குதான் மேற்கத்தியக் கலாச்சார பூதம் தனது கோரப்பற்களை காட்டி சிரித்துக் கொண்டிருக்கின்றது.

கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்தியாவில் காதலர் தினம், ஆங்கிலப் புத்தாண்டு போன்ற இந்தக் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இந்தியா உலக நாடுகளின் வர்த்தக சந்தையாக மாறிய பிறகு தாய்-மகன் உறவையும்கூட வணிக நோக்கோடு அணுகும் மேற்குலகம், காதலை மையப்படுத்தி தனது கடைகளை விரிக்க ஆரம்பித்தது. காதலர் தினம் மட்டுமல்லாது ஆங்கிலப் புத்தாண்டு, நண்பர்கள் தினம் என்று இந்தியக் கலாச்சாரம் இதுவரை கண்டிராத, கேட்டிராத தினங்கள் எல்லாம் தினம், தினம் புற்றீசல் போல படையெடுக்க ஆரம்பித்தன. வாழ்த்து அட்டைகள், செயற்கை மலர்க்கொத்துகள், காதலை அடையாளப்படுத்தும் பொம்மைகள் என்று மேற்குலகம் தனது கல்லாவை நிரப்பிக் கொள்ள இந்திய விடலைகளைப் பகடையாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.

ஒவ்வொரு வருடமும் இத்தகைய தினங்களுக்காகப் பல கோடிக்கணக்கான ரூபாய் வணிகம் இந்தியாவில் நடைபெறுகிறது. அசோசம் அமைப்பு இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் 1500 கோடி) வியாபாரம் நடைபெறுவதாக கணிக்கப்பட்டுள்ளது. வேலை செய்பவர்கள், மாணவர்கள் என்ற பாகுபாடின்றி எல்லாரும் காதலர் தினத்திற்காகச் செலவு செய்வதாகவும், பெண்களைவிடவும் ஆண்கள் அதிகம் செலவு செய்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. வேலைக்குச் செல்பவர்கள் 1000-50,000 வரையும், மாணவர்கள் 500-10,0000 வரையும் செலவு செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் வியாபாரம் 20% வரை அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. வாழ்த்து அட்டைகள், பூக்கள், நகைகள் பிரதானமான விற்பனைப் பொருள்களாக உள்ளன. கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் காதலர் தினம் இந்தியாவின் அதிகமான வியாபார விழாவாக மாறியுள்ளதாக அசோசம் அமைப்பின் பொதுச் செயலாளர் ராவத் சொல்கிறார்.

இதில்லாமல் மது விருந்துகளும், இரவு முழுவதும் நீளும் கேளிக்கைகளும் வரம்பு மீறுதல்களும் அன்றைய தினத்தில் அரங்கேறி வருகின்றன. நட்சத்திர விடுதிகள் அவற்றிற்கு பேக்கேஜ் போட்டுக் கொடுத்துப் படுக்கையை வியாபாரமாக்குவதும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.

இதை வாசித்தீர்களா? :   கலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்...

வணிகமயமாகி வரும் உலகில் மனிதர்களிடையே உறவுகளை மேம்படுத்த இறைவன் வழங்கிய அருட்கொடையான அன்பு என்ற அருமையான உணர்வை, காதல் என்ற பெயரில் வியாபாரமாக்கும் இந்த காதலர் தினக் கொண்டாட்டங்கள் தேவைதானா.?

இளைஞர்களின் பணம், ஆற்றல் போன்றவற்றுடன் இந்தியாவின் எதிர்காலத்தையும் ஏற்றுமதி செய்யும் இந்த அர்த்தமற்ற கொண்டாட்டங்கள் தேவைதானா.?

குடும்பம், கல்வி, நாட்டில் நிலவும் பிரச்சினைகள் என்று இளைய சமுதாயம் கவலைப்படவும், மெனக்கெடவும் ஏராளமான விசயங்கள் இருக்கும்போது ஒரு நாள் கூத்துக்கு மீசையை மழிக்கும், ஒன்றுக்கும் உதவாத இந்த வீண் கொண்டாட்டங்கள் தேவைதானா..?

இளைய சமுதாயம்தான் முடிவெடுக்க வேண்டும். !

R அபுல் ஹசன்
9597739200

தொடர்புடைய பிற ஆக்கங்கள்:

பிப்ரவரி 14 – ஆபாசதினம்!
https://www.satyamargam.com/articles/common/february-14/ ‎

ஊன தினம்!
https://www.satyamargam.com/articles/story-poetry/poetry/disability/ ‎

கலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்!
https://www.satyamargam.com/articles/story-poetry/poetry/say-no-to-valentine-day/ ‎