ஓர் இலங்கை வாழ் முஸ்லிமின் உள்ளக் குமுறல்!

Share this:

டந்த மார்ச் 11, 2013 இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஓர் முக்கிய நாள். தமது சமூக / அரசியல் தலைவர்களின் மீது பாரிய நம்பிக்கை வைத்த நாள். நம் தலைவர்கள் எப்படியாவது இலங்கை உணவுகளில் எது ஹலால் / எது ஹராம் என தரம் பிரித்து அறியும் வாய்ப்பினைப் பெற்றுத் தருவார்கள் என்று பெரும் நம்பிக்கை வைத்த நாள். இந்த சிங்கள அரசாங்கத்தை கடந்த ஜெனிவாவில் நாங்கள் மன்றாடியதனால் எங்கள் அரபு சகோதர நாடுகள் ஆதரித்தமைக்கு ஒரு நன்றிக் கடனாகவாவது எங்களுக்கு இந்த அரசாங்கம் ஹலால் உணவைக் கண்டு கொள்ள வழி செய்வர் என்று நம்பி இருந்த நாள் அது!

துபாய் நகரில் கண் விழித்தது முதல் காலை ஏழு மணிக்கு பணியிடம் சென்ற எனக்கு ஒவ்வொரு நிமிடமும் ஹலால் பற்றிய தீர்மானம் என்னவாயிற்று என்பதை நினைத்து கொண்டே பதட்டத்துடன் நாள் சென்றது. ஒரு வழியாக வேலையை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக எனது அறைக்கு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக எனது மடிக் கணணியை தட்டினேன். என் தலையில் பெரும் இடி விழுந்தது போன்றதொரு உணர்வு ஆட்கொண்டு பித்துப் பிடித்தது. ஆம்! ஹலால் என்பது இனி இலங்கையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்களுக்கு மட்டுமே! உள் நாட்டில் ஹலால் குறியீடு என்பது இனி இல்லையாம். இல்லவே இல்லையாம்!

இச் செய்தியைப் பார்த்தவுடன் என் இதய துடிப்பு ஒரு கணம் நின்று விட்டது. இனிமேல் எனக்கு, என் குடும்பத்தினருக்கு உன் உம்மத்திற்கு ஹலாலான உணவு கிடைக்காதே? ஹலால் உணவை எங்குத் தேடுவது?, சந்தையில் விற்கும் பொருட்களில் ஹலாலுக்கும் ஹராமுக்கும் எப்படி வித்தியாசம் காண்பது? என்ற கேள்விகள் ஓடினது தவிர இந்த தீர்மானத்திற்குரிய காரணகர்த்தா யார்? நமது சமுக, அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என்ற அவசியமற்ற கேள்விகளை கேட்க எண்ணவில்லை. ஏனெனில் கேட்டும் பயனில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தேன்.

இருவாரங்கள் முன்பு வரை “நான் ஒரு ஸ்ரீலங்கன், நான் ஒரு லயன்” என்று என் Face Book இல் பெருமையாக வித்தியாசமான வரிகளைக் கொண்டு நிரப்பியிருந்தேன். இப்போது “நான் ஒரு ஸ்ரீலங்கன்” என்று நினைக்கக் கூட என் உள் மனசு கூசுகிறது. இந்த அவல நிலைக்கு என்னை தள்ளியவர்கள் யார்? சிங்கள இனவாதிகளே! எதற்காக இந்தச் சதி வலையை எங்களை நோக்கி பின்னுகிறீர்கள்?  நீங்கள் இன்னும் இன்னும் தோண்ட நினைக்கும் படுகுழியின் ஆழம் என்ன? இறுதி இலங்கை முஸ்லிம் வரை அனைவரையும் அதில் தள்ளிப் புதைக்கும் வரை அந்த குழி தோண்டும் செயலை நிறுத்த முடியாதோ உங்களுக்கு? ஆனால் ஒன்றைக் காதில் போட்டுக் கொள்ளுங்கள்! நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போன்று அது லேசான காரியமல்ல! எங்கள் தலைவர்கள் வேண்டுமானால் உங்கள் சுகபோகங்களுக்கு விலை போயிருக்கலாம். நாங்கள் போராளிகள்! அல்லாஹ்வின் போராளிகள்; போராடியே தீருவோம்!

ஆனாலும் புரியவில்லை… அமைதி விரும்பிகளான இலங்கை முஸ்லிம்களை நோக்கிய சதித் திட்டங்கள் ஒவ்வொன்றாக தீட்டப்படுவது எதற்கு?

ஆறாம் ஜனாதிபதி மகிந்தா ராஜப்கசா-வை ஐ.நா தண்டனையிலிருந்து விடுவிக்க அரசு எடுத்த புதிய திட்டமா இது? அமெரிக்காவின் மறு பெயரான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தி கொள்வதுடன் அதனுடாக அமெரிக்காவிற்கு அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலம் தன்னை தப்பித்து கொள்வதற்காகவா? இஸ்ரேலுடன் ஒரு ஆழமான உறவை உண்டாக்குவதற்காகவே, இலங்கை முஸ்லிம்கள் பலி கிடாக்கள் ஆக்கப் படுகிறார்களா? இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பல்வேறு வகையில் அழுத்தங்களைக் கொடுத்தால் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு கொண்டாட்டம் அடையச் செய்யும் முயற்சியா? இவை என் கற்பனைக் கேள்விகள் அல்ல! கடந்தகால அமைச்சர் பீரிசின் இஸ்ரேல் வருகையும் இஸ்ரேல் பிரதமரின் அரவணைப்பு அறிக்கையும் என் கேள்விகளுக்குச் சான்று பகரும்.

அதற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளா இவை? இல்லை, முஸ்லிம்களின் தூய்மை நிலை மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியா இது? எங்கள் சொத்துகளின் மீது கொண்டுள்ள ஆசையா இது? முழுதாய் இன்னமும் புரியவில்லை; எதற்கான இந்த சதி வேலை திட்டம், இலங்கை நாட்டிற்காக முஸ்லிம்கள் என்னதான் செய்யவில்லை? நாட்டின் சுதந்திரத்தில் பங்கெடுக்க வில்லையா? நாட்டின் அடித்து ஓய்ந்து போன முப்பது வருட கால யுத்தத்தில் பங்களிக்க வில்லையா? எங்கள் நிலம், வீடு மற்றும் சொத்துக்களை இழந்தோம்; விரட்டியடிக்கப் பட்டோம், வெட்டுண்டோம், கொலையுண்டோம், இன்னும் எத்தனை எத்தனை துயரங்களை இந்த முப்பதாண்டு கால யுத்தத்தில் சந்தித்திருப்போம்? இவற்றையெல்லாம் எதற்காக புலிகள் எங்களுக்கு செய்தார்கள் என்று வேறு சொல்ல வேண்டுமா? உங்களை நாங்கள் ஆதரித்தோம்; நான் ஒரு முஸ்லிம் – நான் ஒரு ஸ்ரீலங்கன் என்ற எங்கள் அந்த தாரக மந்திரத்தைச் சொன்னதால்தான்.

இன்னமும் எங்களிடம் என்னதான் எதிர் பார்க்கிறீர்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் உங்களைக் கையடுத்து கும்பிட வேண்டுமா? இல்லை காலில் விழுந்து வணங்க வேண்டுமா? நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்! எங்களின் ஏக இறைவன் அல்லாஹ்வை தவிர யாருக்கும் நாங்கள் சிரம் பணிந்து வணங்கியதில்லை. பல நாடுகளில் முஸ்லிம்களை ஆயுதம் ஏந்தி போராட நிர்பந்திக்கும் ஏகாதிபத்திய அரசுகளின் விளையாட்டை நீங்களும் ஓரக் கண்ணால் கண்டு, இலங்கை முஸ்லிம்கள் மட்டும் நிம்மதியாக இருக்கிறார்களே, அவர்களும் ஆயுதம் ஏந்தி போராடினால் எப்படி இருக்கும் என்று விளையாடிப் பார்க்க ஆசைப் படுகிறீர்களா என் நாட்டு இனவாதிகளே! நீங்கள் தாங்க மாட்டீர்கள்! இறைவன் மீது சத்தியமாக சொல்கிறோம்! தாங்க மாட்டீர்கள்… உங்களின் இந்த இனவாத விளையாட்டு, அமைதியை விரும்பும் முஸ்லிம்களான எங்களிடம் வேண்டாம்.

அதைத் தான் நீங்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளீர்கள் என்றால் அதற்கு நாங்களும் தயாராகத் தான் இருக்கிறோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம். ஆனால் அது எங்களின் நாட்டம் இல்லை.

கடந்த முப்பது வருடமாக நீண்ட அவல நிலை ஒரு வழியாக முடிந்து விட்டது என்று நினைத்தால், இன்னொரு வடிவத்தில் அதை சிங்கள இனவாதிகள் தொடர்கிறீர்கள். ஆனால் ஓன்று மட்டும் புரிகிறது. அது, முஸ்லிம்கள் மீதான இப் போர் “ஹலால் இனி இல்லை” என்ற பதத்தோடு மட்டும் முடிந்து விடப்போவது இல்லை. அதனால் நாம் உலமா சபையை நோகடித்து ஒன்றுமே நடக்க போவதில்லை, ஒரு சதவீதத்திற்கும் கூட பெறுமதி இல்லாத அரசியல்வாதிகளை குறைசொல்லியும் பயனில்லை.

உங்கள் அடுத்த நடவடிக்கையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். அது மீண்டும் எங்களைச் சீண்டுவதாக அமைந்தால், எங்கள் பதில் வேறு விதமாக இருக்கும். அதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் இல்லை.


இப்படிக்கு,

இறைவன் அனுமதித்த ஹலால் உணவுகளை மட்டும் உண்ண துடிக்கும்,

முஹம்மத் ஹனீஸ் (துபை)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.