ராம் – பாம் என்று மீடியாக்கள் ஏன் தலைப்பிட வில்லை?

Share this:

இந்நேரம்.காம் இணைய இதழில் இன்று (08-05-2014) ஊடக விபச்சாரம் என்ற பெயரில் கட்டுரை ஒன்றை வாசிக்க நேரிட்டது.

ஒரு முசுலிம் தனது வீட்டில் பேட்டரி, ஒயர் போன்றவற்றை வைத்திருந்தார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவரும் கணத்தில் சிக்கியவர் பெயருக்கு முன் தீவிரவாதி என்ற அடைமொழி கொடுத்தும் மேற்கூறிய “படு பயங்கர” ஆயுதங்களை வைத்திருந்தார் என்றும் தலைப்பிட்டு எழுதும் தமிழக செய்தி ஊடகங்கள், எங்கள் ஊரான சிதம்பரத்தில் வெடிகுண்டு தயாரிக்கும்போது கை தவறுதலாக வெடித்து, வசமாக சிக்கிவிட்ட மோகன்ராம் மற்றும் அருள் போன்றவர்களை வெறும் “ரவுடி” என்று குறிப்பிட்டு எழுதும் இரட்டை நிலை ஏன்?

வெடிகுண்டுகளுடன் சிக்கியவன் ராம் என்ற பெயரில் இருந்ததால் வெறும் ரவுடியாகி விட்டானா? இதே ரஹீம் என்ற பெயருள்ளவர் சிக்கியிருந்தார் இன்று ஊடகங்கள் அவரது குலம் கோத்திரத்தையே சின்னாபின்னப் படுத்தியிருக்காதா?

செண்ட்ரல் குண்டு வெடிப்பில் ஜாகீர் என்பவரை வைத்து மலிவு அரசியல் செய்த கருணாநிதிக்கு, சிதம்பரத்தில் அருள் என்ற பயங்கரவாதியைப் பார்த்தவுடன் செலக்ட்டிவ் அம்னீஷியா வந்தது ஏன்? எங்களூர் சிதம்பரம் என்றால் கருணாநிதிக்கு இளப்பமா?

சென்னையில் குண்டுவெடித்ததற்கு ஜாகீர் – பகீர் என்று தலைப்பிட்டு கவர் ஸ்டோரியிலிருந்து கவிதை எல்லாம் வெளியிட்டு உணர்ச்சியை தூண்டி காசு பார்த்த விகடன் போன்ற இதழ்கள், சிதம்பரத்தில் சிக்கி தென் மாவட்டங்களையே அதிர வைத்த மோகன்ராம் பற்றியோ – அவனுக்கும் சென்னை வெடிகுண்டுக்கும் தொடர்பு படுத்தியோ கேள்வி கேட்காதது ஏன்? ராம் – பாம் என்று ஏன் தலைப்பிடவில்லை?

என்னுடைய பார்வையில் பட்ட ஓரிரு செய்திகளை இங்கே அளித்துள்ளேன். இதனை பதித்து ஆவணப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக மோகன் ராம் என்ற பயங்கரவாதியின் வாழ்க்கை வரலாற்றை, இந்திய தேசத்தியாகி எனும் அளவுக்கு “ர்” போட்டு மரியாதை செலுத்தும் தினத் தந்தியை மறக்காமல் இணைக்கவும்.

பல்வேறு பயங்கரவாதச் செயல்களை முசுலிம்கள் செய்ததாக தலைப்பிட்டு இன்று காசு பார்க்கும் தமிழக ஊடங்கள், பல்வேறு கட்ட தீவிர விசாரணைகளுக்குப் பின் பயங்கரவாதச் செயல்களைச் செய்தது ஹிந்துத்துவா கரங்களே என தெரிய வரும்போது, அச்செய்தி வெட்கத்துடன் உள்பக்கத்தில் ஒரு பெட்டிக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொள்ளும். எனவே, இவற்றை ஆவணப்படுத்துங்கள்.

நன்றி.

ஆரோக்கியம், 13, மாரியப்பா நகர், சிதம்பரம்.


மாலை மலர் (04-05-2014)

திண்டுக்கல், மே.4–

சிதம்பரத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் பலத்த காயம் அடைந்தான். அவன் மீது 10 கொலை வழக்குகள் உள்ளன. விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:–

ரவுடி மோகன்ராம் திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவன். சிறு வயதிலேயே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தான்.

இதனை தொடர்ந்து நாகராஜன் என்பவர் மூலம் பிரபல ரவுடி மெட்ராஸ் பாண்டியின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது.

அதன்பின் மெட்ராஸ் பாண்டியின் நெருங்கிய கூட்டாளியாக மாறி அவரது வலது கரம்போல் செயல்பட்டார். மெட்ராஸ் பாண்டிக்கு எதிராக கரடிமணி கோஷ்டியினர் செயல்பட்டு வந்தனர். இந்த இரு கோஷ்டிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

1998–ம் ஆண்டு கரடி மணியின் கூட்டாளி சிசர்மணி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதமாக மெட்ராஸ் பாண்டியின் தம்பி நாகராஜன், கரடிமணி கோஷ்டியால் திண்டுக்கல் கோர்ட்டு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த மோகன்ராமுக்கு காயம் ஏற்பட்டபோதும் மயிரிழையில் உயிர் தப்பினார்.

இதன்பின் 1999–ம் ஆண்டு கரடிமணி கோஷ்டியை சேர்ந்த சீட்டிங் ஆனந்த், சித்தர் ஆகியோரையும் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் மோகன்ராம் முக்கிய குற்றவாளியாவார்.

அதே ஆண்டில் கோர்ட்டு வளாகத்தில் கடை வைத்திருந்த குமார் கொலை வழக்கிலும் மோகன்ராம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட இந்த பழிவாங்கும் கொலை சம்பவம் தொடர்ந்து கொண்டே வந்தது.

கடைசியாக 2004–ம் ஆண்டு திண்டுக்கல் கல்லூரி பேராசிரியை புனிதா ஏகாம்பரத்தின் மகன் விஜயசண்முகம் என்பவர் கொலை வழக்கிலும் மோகன்ராம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னை மதுரவாயல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி முட்டை ரவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்காகவும் மோகன்ராம் சில கொலைகளை செய்தார்.

இதேபோல மோகன்ராம் மீது கொலை, கொள்ளை, கடத்தல், சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கல் போன்ற 52 வழக்குகள் உள்ளன. இதில் 10 கொலை வழக்குகள், 12 ஆள் கடத்தல் வழக்குகள் ஆகியவை அடங்கும். இந்த குற்ற சம்பவங்களுக்காக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

2007–ம் ஆண்டுக்கு பிறகு மோகன்ராம் போலீசாரிடம் சிக்கவே இல்லை. மெட்ராஸ் பாண்டி கொலை செய்யப்பட்ட பிறகு அந்த கோஷ்டிக்கு மோகன்ராம் தலைவர் ஆனார். 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றியதாக திண்டுக்கல் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்த மோகன்ராம் எங்கே இருக்கிறார்? என தெரியாமலேயே போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். தற்போது வெடி விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மோகன்ராம் உயிர் பிழைத்தால்தான் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.


சிதம்பரம் வெடிகுண்டு சம்பவம்: தேடப்பட்டு வந்த மேலும் இருவர் கைது (தினமணி 07-05-2014)

சிதம்பரம் மாரியப்பா நகரில் வீடு ஒன்றில் கடந்த மே.3-ம் தேதி வெடிகுண்டு வெடித்த வழக்கில் தலைறைவாக அருந்த இருவரை அண்ணாமலைநகர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் மாரியப்பாநகர் 2-வது தெற்கு குறுக்குத்தெருவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளது. இந்த வீட்டை தற்போது வாடகைக்கு விட்டு, விட்டு அருகே உள்ள ஆட்டா நகரில் வசித்து வருகிறார். மாரியப்பாநகர் வீட்டில் தரைதளத்தில் உள்ள இடதுபுறத்தில் உள்ள பகுதியை அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரியும் அருள்பிரசாத் (34) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (மே.3) காலை 10.40 மணிக்கு அருள் வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல் நாகல்நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் (34) படுகாயமுற்றார். அப்போது அவரை மற்ற இருவரும் ஆட்டோவில் கொண்டு சென்று சிதம்பரம் மாரியம்மன்கோயில்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். மேலும் அந்த வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, யுஎஸ்ஏ முத்திரை பதித்த 6 எம்எம் துப்பாக்கி, சீனா செல்போன், அரிவாள்கள் மற்றும் டைரி, சிம்கார்டுகள், பான்கார்டுகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன. படுகாயம் அடைந்து சிதம்பரம் ராஜா முத்துயா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன்ராம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்காக மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம்,  அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருள்பிரசாத் தனது மனைவி ஊரில் இருக்கும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களை தவிர மற்ற நாட்களில் அவரது நண்பர்களான சிதம்பரம் கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேந்திரன் (33), சீர்காழியைச் சேர்ந்த சந்தோஷ் (25), சிதம்பரம் அண்ணாமலைநகர் திருவக்குளத்தில் கறிக்கடை வைத்துள்ள பட்டாபி (25), திண்டுக்கல் நாகல்நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் (39) ஆகிய 4 பேரும் வீட்டிற்கு வந்து மதுஅருந்துவார்கள். சனிக்கிழமை காலை வெடிகுண்டு வெடித்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என அருள்பிரசாத் தெரிவித்துள்ளார்.

பின்னர் போலீஸார் பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத்திடம் விசாரணை நடத்தியதில் சரியான தகவல் கிடைக்கவில்லை என்பதால், பல்கலை ஊழியர் அருள்பிரசாத் தான் வாடகைக்கு எடுத்த வீட்டை பல்வேறு நபர்களை தங்க வைத்து வெடிகுண்டு சம்பவத்திற்கு உடந்தையாத இருந்ததாக அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த அண்ணாமலைநகர் திருவக்குளத்தைச் சேர்ந்த பட்டாபி (25). சீர்காழியைச் சேர்ந்த சந்தோஷ் (25) ஆகிய இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்: 7 கொலை வழக்குகளில் தொடர்புடையவர் ரவுடி மோகன்ராம் (தினத்தந்தி, மே-4 2014)

திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் போலீசாரால் 7 கொலை உள்பட 13 வழக்குகளில் தேடப்பட்ட பிரபல ரவுடி மோகன்ராம் ஆவார்.

மெட்ராஸ் பாண்டி கூட்டாளி

திண்டுக்கல் நாகல்நகர் மெங்கில்ஸ்ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராம் (வயது35). பிரபல ரவுடி. மோகன்ராமுக்கு, பள்ளி பருவத்தில் படிப்பின் மீது நாட்டம் இல்லை. இதனால் 10–ம் வகுப்புடன் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

அதன்பின்னர் சில நண்பர்களின் பழக்கம் மோகன்ராமை தவறான பாதைக்கு அழைத்து சென்று விட்டது. இதன் விளைவாக அடிக்கடி சிறு, சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட தொடங்கினார்.

இதற்கிடையே திண்டுக்கல்லை சேர்ந்த நாகராஜன் என்பவர் மூலம், பிரபல ரவுடி மெட்ராஸ் பாண்டி என்ற திண்டுக்கல் பாண்டியனின் அறிமுகம் மோகன்ராமுக்கு கிடைத்தது. இதையடுத்து மெட்ராஸ் பாண்டியின் நெருங்கிய கூட்டாளியாக மோகன்ராம் மாறினார். அவரது வலதுகரம் போல செயல்பட்டார்.

உயிர் தப்பிய மோகன்ராம்

திண்டுக்கல்லில் 1996–1997–ல் மெட்ராஸ் பாண்டி, கரடிமணி ஆகியோரின் தலைமையில் தனித்தனி ரவுடி கோஷ்டிகள் செயல்பட்டன. இந்த 2 கோஷ்டிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு தொடர் கொலைகள் நடந்தன.

கடந்த 1998–ம் ஆண்டில் ரவுடி கரடிமணியின் கூட்டாளி சிசர்மணி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் வகையில் மெட்ராஸ் பாண்டியின் சகோதரர் நாகராஜன் திண்டுக்கல் கோர்ட்டு அருகே கரடிமணி கோஷ்டியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவருடன் இருந்த மோகன்ராமுக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. இருப்பினும் அவர் உயிர் தப்பிவிட்டார்.

இதைத்தொடர்ந்து 1999–ல் கரடிமணி கோஷ்டியை சேர்ந்த சீட்டிங் ஆனந்த் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் மோகன்ராம் முக்கிய குற்றவாளி ஆவார். அதே ஆண்டில், கரடிமணியின் கோஷ்டிக்கு உதவி செய்த சித்தர் என்பவரை மோகன்ராம் தலைமையிலான கும்பல் கொலை செய்தது.

கோர்ட்டு வளாகத்தில் கொலை

இதேபோல் அதே ஆண்டில் கோர்ட்டு வளாகத்தில் கடை வைத்திருந்த குமார் கொலை வழக்கிலும், மோகன்ராம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால் மெட்ராஸ் பாண்டி, மோகன்ராம் ஆகியோர் மீது கரடிமணி கோஷ்டியினர் குறி வைக்க தொடங்கினர்.

எனவே, கரடிமணி கோஷ்டியிடம் இருந்து தப்பிக்க மோகன்ராம் சென்னைக்கு சென்று விட்டார். அங்கேயும் தனது ரவுடித்தனத்தை அரங்கேற்றினார். இதன் மூலம் மோகன்ராம் பிரபலம் ஆனார். அவருக்கு பின்னால், ஒரு பெரிய ரவுடி கோஷ்டியே வலம் வந்தது.

சென்னையில் பரத் மார்வாடியை கடத்திய வழக்கில் மோகன்ராமை சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறையில் இருந்த போது மதுரையை சேர்ந்த நரைமுடி கணேசன் என்பவருடன் மோகன்ராமுக்கு தொடர்பு ஏற்பட்டது. 2 பேரும் சேர்ந்து மதுரை சுருளி என்பவரை கொலை செய்தனர்.

பேராசிரியை மகன் கொலை

அதன்பின்னர் கல்லூரி பேராசிரியையும், பேச்சாளருமான புனிதா ஏகாம்பரத்தின் மகன் விஜயசண்முகம் 2004–ல் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதிலும் மோகன்ராம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

அதே ஆண்டு சென்னையில் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக சென்னை திருவேற்காடு போலீசார் மோகன்ராமை கைது செய்தனர். மேலும், துப்பாக்கி வைத்திருந்ததாக அவரை, சென்னை மதுரவாயல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி முட்டை ரவியுடன், மோகன்ராமுக்கு நட்பு ஏற்பட்டது. ஏற்கனவே முட்டை ரவிக்கும், மணல்மேடு சங்கருக்கும் முன்பகை இருந்தது. எனவே, முட்டை ரவியின் நட்புக்காக, அவருடைய எதிரியான சங்கரின் கூட்டாளி சிவாவை திருப்பூரில் வைத்து மோகன்ராம் கோஷ்டியினர் கொலை செய்தனர்.

13 வழக்குகள்

இதேபோல் கொலை, கூட்டு கொள்ளை, கடத்தல், சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்குதல் என ரவுடி மோகன்ராம் மீது மொத்தம் 13 வழக்குகள் உள்ளன. இதில் கொலை வழக்குகள் மட்டும் 7 ஆகும். தமிழகத்தையே கலக்கிய ரவுடி மோகன்ராம் தன்னிடம் நட்பு வைத்திருந்த பிற ரவுடிகளுக்காகவும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

எனவே, தமிழகத்தில் பிரபலமான நபர்கள் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வந்தனர். திண்டுக்கல்லில் மட்டும் இவர் மீது 4 கொலை வழக்குகள் இருக்கின்றன. இந்த வழக்குகளில் அவரை கைது செய்வதற்காக போலீசார் தேடி வந்தனர். ஆனால், அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

அதேநேரம் தலைமறைவு வாழ்க்கை நடத்தினாலும் கூலிப்படை தலைவனாக இருந்து கொண்டு குற்ற சம்பவங்களில் அவ்வப்போது ஈடுபட்டார். நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளிலும் அவர் ஆஜராக வருவதில்லை.

இதனால் அவர் மீது பிடிவாரண்டு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு இருந்தன. எனினும், கடந்த 2007–ம் ஆண்டுக்கு பின்னர் மோகன்ராம் போலீசிடம் சிக்கவில்லை.

ரவுடி கும்பல் தலைவன்

தமிழகத்தை கலக்கிய பிரபல ரவுடியான மெட்ராஸ் பாண்டி போலீஸ் என்கவுன்டர் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டார். அதன்பின்னர் மெட்ராஸ் பாண்டி தலைமையிலான கோஷ்டிக்கு மோகன்ராம் தலைவன் ஆனார். கூலிப்படை தலைவனாக வலம் வந்தார்.

இந்தநிலையில் தான், கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கி, தோட்டாக்களுடன் சுற்றியதாக திண்டுக்கல் போலீசார் மோகன்ராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். அடுத்த சில வாரங்களில் மோகன்ராம் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.

பின்னர் போலீசிடம் சிக்காமல் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்து மோகன்ராம் காயம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.