காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி (வாசகர் பார்வை)

ண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படம், கடந்த 04-12-2014 அன்று அபுதாபியில் அய்மான் மற்றும் காயிதே மில்லத் பேரவையினரால் வெளியிடப்பட்டது. முஸ்லீம் லீக் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள காயிதே மில்லத் ஆவணப்படத்தை ஆளூர் ஷா நவாஸ் இயக்கியுள்ளார்.

குத்தாலம் லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் அபுதாபி அய்மான் சங்கம், காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். இந்தியாவிலிருந்து இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அஸ்ஸலாம் கல்லூரி நிர்வாகிகளும் வாழ்த்துரை வழங்கினார்கள். காயிதே மில்லத் பற்றிய வாழ்த்துப்பாக்களை விட முஸ்லீம் லீக் துதிப்பாடல் சற்றே தூக்கலாக இருந்தது நெருடலே.

பட வெளியீட்டிற்கு முன், சிறப்புரையாற்றிய ஆளூர் ஷாநவாஸ் தன்னுடைய உரையில், இப்படம் வெளியாக தான் பட்ட கஷ்டங்களை விவரித்தார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்டோரின் வாழ்வை விளக்கும் படங்கள் உள்ளபோது காயிதே மில்லத்துக்கென்று ஆவணங்கள் ஏதும் இல்லாததே தாம் இப்படம் எடுக்க உந்து சக்தியாக இருந்தது என்றார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த இந்தியாவும் காவிக்கு சிவப்பு கம்பளம் விரித்தபோது தமிழகம் மட்டும் விதிவிலக்காக இருந்ததற்கு பெரியார் பிறந்த மண் என்பது மட்டும் மாத்திரமல்ல, காயிதே மில்லத் போன்றோர்கள் பிற சமய, அரசியல் தலைவர்களோடு நெருங்கி பழகியதோடு அவர்கள் மூலம் இஸ்லாத்தை பேச வைத்ததும் காரணம் என்றார். மண்ணடியோடு தன் அரசியல் வாழ்வை சுருக்கி கொள்ளாமல் அண்ணா, பெரியார், ராஜாஜி, ம.பொ.சி என எல்லோருடனும் அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தப்பட்ட காயிதே மில்லத்தின் வரலாறு இன்றைய முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் என்று கூறினார்.

நிறைவுரையாற்ற வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான், காயிதே மில்லத் குறித்த ஆவணப்படம் ஓரளவு நிறைவடைந்த நிலையில் அதை முழுமைப்படுத்த ஆளூர் ஷா நவாஸ் முஸ்லீம் லீக் அலுவலகத்திற்கு முதல்முறையாக வந்ததை பெருமிதத்தோடு கூறியதோடு, காயிதே மில்லத் வரலாற்றை ஆவணப்படமாக்க, ஷா நவாஸ் எவ்வாறு மஞ்சேரி தொகுதி, தூத்துக்குடி, பேட்டை என்று பல்வேறு இடங்களுக்கு தனி மனிதராக களப்பணியாற்றினார் போன்ற தகவல்களை விளக்கி பார்வையாளர்களை வியப்பிலாழ்த்தினார். மேலும் நாடாளுமன்றத்தில்  குறித்து எப்படி திமுக உறுப்பினர்களின் நேரத்தையும் பெற்று லிபர்ஹான் கமிஷன் குறித்துப் பேசியதை நினைவு கூர்ந்தார். மேலும் இந்தியப் பிரிவினைக்கு பிறகு இந்திய முஸ்லீம்களின் நிலை குறித்து ஜவஹர்லால் நேருவிடம் முறையிட்ட பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானுக்கு, காயிதே மில்லத் கொடுத்த பதிலடி குறித்து தாம் கூறியதை கேட்டு, பாஜக உறுப்பினர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்ததையும் நினைவுகூர்ந்தார்.

இதை வாசித்தீர்களா? :   பாவப்பட்ட NRI-ஜீவன்கள்

“மார்க்கப் பிரச்னைகளில் முஸ்லீம் லீக் தலையிடுவதில்லை” என்ற காயிதே மில்லத்தின் நிலைப்பாட்டை சிலாகித்த அதே வேளையில், “மார்க்கம் என்று ஆரம்பித்து அரசியலில் குழப்ப நிலைப்பட்டை எடுப்பதாக” சகோதர அமைப்புகளை சாடியதை தவிர்த்திருக்கலாம்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவணப்பட குறுந்தகடை அப்துர் ரஹ்மான் வெளியிட, நோபல் மெரைன் குழும இயக்குநர் சாகுல் ஹமீதும் எஸ்.டி. கூரியர்ஸ் நிறுவனர் அன்சாரியும் பெற்று கொண்டனர். பின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. படத்தின் ஆரம்பத்தில் காயிதே மில்லத் முயற்சியால் உருவாக்கப்பட்ட புதுக் கல்லூரி, திருநெல்வேலியில் உள்ள அநாதை இல்லம், கேம்பளாபாத் நகரம், அவர் பெயரில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் உள்ளவர்களிடம் அவர் புகைப்படத்தை காட்டி கேட்கும் போது யாருக்குமே காயிதே மில்லத்தை அடையாளம் தெரியவில்லை. மாறாக நாகூர் ஹனீபா, நாகூர் மீரான், அப்துர் ரஹ்மான், பெரியார் என பல்வேறு பெயர்களை கூறியது காவிமயமாகிக் கொண்டிருக்கும் கல்வியில் நம் வரலாறு ஆரம்ப நிலையில் கூட சொல்லப்படாத பரிதாப நிலையில் இருப்பதை எண்ணும் போது நெஞ்சு கனக்கிறது.

சிறு வயதிலேயே தந்தை மறைந்ததைத் தொடர்ந்து, காயிதே மில்லத் தமது தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து ஆங்கிலக் கல்வி படித்ததையும், சென்னை கிறித்துவ கல்லூரியில் படித்ததையும் விவரித்த ஆவணப்படம் பின் ஜமால் முஹம்மது தோல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததையும் அவரின் குண நலன்களால் ஈர்க்கப்பட்ட ஜமால் முஹம்மது, காயிதே மில்லத்தை தன் மருமகனாக்கி கொண்டதையும் ஆவணப்படம் அழகாக விவரிக்கிறது.

தீவிர காங்கிரஸ்காரரான ஜமால் முஹம்மது, உயர் சாதியினரால் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டதைத் தொடர்ந்து அத்துரோகத்தை சகிக்க முடியாமல் ஜமால் முஹம்மது முஸ்லீம் லீக்கில் சேர்ந்த விதத்தை காட்சிகள் ஆழமாக விளக்கின. ஜமால் முஹம்மதைத் தொடர்ந்து முஸ்லீம் லீக்கில் இணைந்த காயிதே மில்லத் சென்னை மாகாணத்தின் எதிர்கட்சி தலைவரானதும் அந்நிகழ்வு ஏற்படுத்திய வரலாற்றுத் தாக்கங்களையும் அழகாக விவரிக்கிறது ஆவணப்படம்.

அத்துடன், காயிதே மில்லத் குறித்த முக்கிய நிகழ்வுகளை காதர் மொய்தீன், செங்கம் ஜப்பார், அப்துர் ரஹ்மான், காயல் மஹபூப், அப்துல் சமது, அப்துல் லத்தீப் போன்ற முஸ்லீம் லீக் அரசியல்வாதிகளோடு மூத்த அரசியல் தலைவர்களான கருணாநிதி, அன்பழகன், செழியன், வை.கோ, கிள்ளி வளவன், திருமாவளவன், உள்ளிட்டோரை கொண்டு பேச வைத்திருப்பது படத்திற்கு மேலும் மெருகு சேர்க்கிறது.

பிரிவினையின்போது நடைபெற்ற கராச்சி கூட்டத்தில் முஸ்லீம் லீக் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தனித்தனியே பிரிக்கப்பட்டு முறையே காயிதே மில்லத்துக்கும் லியாகத் அலிகானுக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது. பிரிவினைப் பழிகளை சுமந்த முஸ்லீம் லீக், தொடர்ந்து நிலைக்குமா என்ற சூழலில் காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை தொடர்ந்து நடத்துவது என்ற தீர்க்கமான முடிவை எடுத்தார்.

இதை வாசித்தீர்களா? :   ”தீ”யில் ஒரு முரண்

சுமார் 90 நிமிடங்கள் நிறைவாக ஓடிய இந்த ஆவணப்படம், உண்மையில் இன்றைய அரசியல்வாதிகள் அனைவருக்கும் ஒரு பாடம் என்றால் மிகையல்ல.

– ஃபெரோஸ்கான்