தீவிரவாதத் தொழில்!

நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும்போது இஃதென்ன தலைப்பு புதுசாக இருக்கே? என்றோ அல்லது ‘தீவிரவாதம் என்பது நமக்குப் பழகிபோன தினசரி செய்திதானே?’ என்றோ கடந்து விடுவோருக்கு இந்தப் பதிவு சற்று அதிர்ச்சி அளித்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல!

நீங்கள் 1970-80 KIDS எனில் சற்று வரலாற்றைத் திருப்பிப் பாருங்க; அட! பள்ளி வரலாற்றுப் பாடத்தைச் சொல்கிறேன் சார்.

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களை இருகூறாகப் பிரித்துப் படித்திருப்பீர்கள். மிதவாதிகள் – காந்தி, ஜின்னா, கோகலே, ஆசாத் போன்றோர். இன்னொரு பிரிவு தீவிரவாதிகள்! (சந்தேகம் வந்தால் சென்னை மூர்மார்க்கட், வால்டாக்ஸ் ரோடு பின்புறமோ புதுப்பேட்டையிலோ பழைய புத்தகக் கடையில் மேற்படி வரலாற்றுப் பாடப் புத்தகங்களை வாங்கிப் படித்து, சரி பார்த்துக் கொள்க.)

அஹிம்சா வழியில் இந்திய தேசிய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை மிதவாதிகள் என்றும் ஆயுத போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களை விரட்டும் என்று நம்பிய நேதாஜி, பகத்சிங், போன்றோர் தீவிரவாதிகள் என்றும் சொல்லப்பட்டனர்.

அதன்பிறகு சுதந்திர இந்தியாவில் மிதவாதிகள் எல்லாம் அரசியல் கட்சித் தலைவர்களாகி விட்டதால் தீவிரவாதிகள் இல்லாது போயினர். உயிருடன் இருந்த ஒரே தீவிரவாதியான நேதாஜியும் தலைமறைவாகி விட்டதால் தீவிரவாதிகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டது! இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பிரிவினை (அவர்கள் பாஷையில் சுதந்திரம் 2.0) கோரிய போடோ தீவிரவாதிகள், பஞ்சாப் தீவிரவாதிகள், காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றி மட்டுமே மாமாங்கத்திற்கு ஓரிரு செய்திகள் வந்து கொண்டிருந்தன.

எல்லையில் நடக்கும் இதெல்லாம் ஒரு செய்தியா என்று நாமும் பழக்கப்பட்டுபோய் தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு, ஆண்டியார் பாடுகிறார் மாதிரி தீவிரவாத செய்திகளையும் கடந்து சுமூகமாகவே வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

என்னடா வாழ்க்கை இது? ஒரு பரபரப்பும் இல்லை என்று பல ஊடகச்செய்தி ஆசிரியர்கள் சோர்வுற்று பத்திரிக்கைத் தொழிலையே விட்டுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில்தான் மகராசன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ‘ஆபத்பாந்தவனாக’ ஆட்சிக்கு வந்தார்.

அப்போது ஆப்கானிஸ்தானில் ரஷ்யப் படைகளின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருந்த தாலிபான்களைத் தூசுதட்டலாம் என்று முடிவெடுத்து சவூதியிலிருந்து தாலிபான்களுக்கு உதவ வந்த பின்லேடனையும் சேர்த்துக்கொண்டு மீண்டும் தீவிரவாதச் செய்திகளைக் கொடுத்து ஊடக ஆசிரியர்களுக்குப் புது ரத்தம் பாய்ச்சினார். சாதா தீவிரவாதி என்று சொன்னால் எவன் காசு கொடுத்து வாங்கி வாசிப்பான்? எனவே ‘இஸ்லாமிய தீவிரவாதிகள்’ என்ற புதுவகை தீவிரவாதிகளைப் பிரபலப்படுத்தினார்.

அன்றிலிருந்து முஸ்லிம்களுக்குப் பிடித்தது சனியன். பிரியாணியைச் சாப்பிட்டுவிட்டு ‘அக்கடா’ என இருந்தவர்களை “இஸ்லாமியத் தீவிரவாதிகள்” என்று வாய் வலிக்க சொல்லி மகிழ்ந்தனர்.

இதை வாசித்தீர்களா? :   சாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே...

இந்திய ஊடகங்களில் கோலோச்சிய சங்பரிவார சிந்தனை கொண்டவர்களும் தம் பங்குக்கு இந்தியாவிலும் சில தீவிரவாதத் தாக்குதல்களில் முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தி வேட்டையாடினர். காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது அவ்வப்போது பிடிபட்ட இந்தியன் முஜாஹிதீன், ஜெய்ஷே முகமத், லஷ்கரே தோய்பா போன்ற பொறுப்பான தீவிரவாதிகள் எங்கு குண்டு வெடித்தாலும் பொறுப்பு(?) ஏற்றுக் கொண்டனர். பாஜக ஆட்சிக்கு வந்ததும் பொறுப்பான தீவிரவாதிகள் ஓய்ந்து போயினர், ‘தாடி வைத்தவன் எல்லாம் காதலில் தோல்வியுற்றவன்’ என்றே ஒருகாலத்தில் அறிந்திருந்தோம். தீவிரவாதம் சர்வதேசப்புகழ் பெற்ற பிறகு சாம்பிராணி புகையடிக்கும் பாய்கூட இஸ்லாமியத் தீவிரவாதியோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்திய ஊடகங்களைத் கையில்/காலடியில் வைத்திருந்தோர் சொல்லி மகிழ்ந்து இன்பம் கண்டனர்.

அமெரிக்காவுக்கு ஓர் இரட்டைக் கோபுரம் என்றால் இந்தியாவுக்கு மும்பை தாஜ் ஹோட்டல்; அமெரிக்காவுக்குப் பெண்டகன் என்றால் நமக்கு நாடாளுமன்றம் என்று தாக்குதல் நடத்தப்பட்டு அதைச் செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டனர்.

இப்படியாகத் தீவிரவாதம் தூசு தட்டப்பட்டு வாழ்க்கை சுமூகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் ஹேமந்த் கர்கரே என்ற Anti Indian அதிகாரி ஒருவர், ‘இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்கள் இந்துத்துவா தீவிரவாதிகளே’ என்று ஆதாரங்களுடன் போட்டு உடைத்து விட்டார்.

அதுவரை திரிசூலத்திற்கு சாணை பிடிக்க மட்டும்தான் தெரியும் என்று மக்கள் நம்பிக்கொண்டு இருந்த சங்கிகள் பலருக்கு வெடிகுண்டு தயாரிப்பது குடிசைத் தொழில் என்ற செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவந்தன.

இந்திய ராணுவத்தில் மட்டும் பயன் படுத்தப்படும் RDX வெடிமருந்தை மூட்டை மூட்டையாக சப்ளை செய்ய பாகிஸ்தானுக்குப் போக வேண்டிய அவசியமில்லை; உள்நாட்டிலேயே டோர் டெலிவரி செய்த கர்னல் புரோகித் போன்ற தேசபக்த ராணுவ அதிகாரிகள் உடனிருந்தனர் என்ற விபரங்கள் எல்லாம் சந்தி சிரித்தது.

இஸ்லாமியத் தீவிரவாதம் என்று கதை கட்டிவிட்ட கையோடு இங்கும் அங்குமாக நடந்த பல வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியவர்களில் பெரும்பாலோர் சங்பரிவாரங்கள் என்ற உண்மை சமூக தளங்களிலும் டெகல்கா, கோப்ரா போஸ்ட் போன்ற ஊடகங்களிலும் தோலுரித்துக் காட்டப்பட்ட பிறகு ஆட்சி, அதிகாரம் கைக்கு வந்துவிட்டதால் அவ்வாறு ஊடகங்களில் தோலுரிக்கப்பட்ட தீவிரவாதிகள் சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஒரு சிலருக்கு ‘க்ளீன் ச்சிட்’ கிடைத்தது சிலருக்கு எம்.பி, எம்.எல்.ஏ பதவியும் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். (இந்திய அரசியல் கட்சிகளிலேயே குற்றப்பின்னணி கொண்டவர்கள் அதிகமுள்ள கட்சி பாஜகவாம்!)

தீவிரவாதத்தில் ஈடுபட்டு கையும் களவுமாகப் பிடிபடுவோரின் பெயர் முஸ்லிமாக இருந்தால் இஸ்லாமியத் தீவிரவாதி என்றும், முஸ்லிமல்லாத பெயராக இருந்தால், “தொண்டர்”, “பிரமுகர்”, “நபர்” என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர்.

இதை வாசித்தீர்களா? :   தாடி வைப்பது எங்கள் தார்மீகக் கடமை!

சட்டத்தின் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது என்ற நிலையில் வசமாக மாட்டிக்கொண்டவர்கள் எனில், “மனநலம் சரியில்லாதவர்” என்று பூசி மெழுகினர்.

கடந்தவாரம் வரை பயங்கரவாதி என்று தேடப்பட்டு வந்தவர் பிடிபட்டு, முஸ்லிம் அல்லர் என்று தெரிந்த பிறகு “எஞ்சினியர்” தலைப்பையே மாற்றுகின்றனர்.

இப்படியாக, தீவிரவாதம் என்பதை பிடிபடுபவரின் மதஅடையாளத்தைப் பொருத்து சாதாரண தொழில் என்ற அளவில் சுருக்கி, திரித்த கயமைத் தனங்களை ஊடகச் செய்திகளை நுட்பமாகக் கவனித்து வந்தால் விளங்கும்.

சுதந்திர இந்தியாவில் தீவிரவாதத் தொழிலை முதன் முதலாக 30.1.1948இல் தொடங்கிவைத்து சேவையாற்றியவருக்கு நாடாளுமன்றத்தில் படம் திறக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

காரணம், அவருடைய பெயர் நாதுராம் கோட்சே!

பாரத் மாதாகீ ஜெய்!

– N. ஜமாலுத்தீன்