ஒரு கோடைக்கால உம்ராவின் நினைவுகள்…

ளைகுடா வாழ்க்கையின் வரங்களிலொன்று, நினைத்த நேரத்தில் மக்காவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைப்பது. சவூதியின் விசா கிடைப்பதைப் பொறுத்து இரண்டொரு நாளில் கிளம்பி விடலாம். தரைமார்க்கமாக தோஹாவிலிருந்து ஆயிரத்தைந்நூறு கிலோமீட்டர் தூரம்.  தேவையான முஸ்தீபுகளுடன் காரில் சுமார் பன்னிரண்டு மணிநேரப் பயணம். சவூதியின் நீண்ட நெடுஞ்சாலைகள் ஒர் அற்புதம். தொலைநோக்குத் திட்டங்களுக்கான மிகச் சிறந்த உதாரணங்களுள் ஒன்று.

இப்படித்தான் ஒரு சுபயோக சுபதினத்தின் முன்னிரவில் இரவுச் சாப்பாட்டினூடே  மாற்றிக் கொண்டிருந்தபோது கிடைத்த சவூதி சேனலைப் பார்த்தவுடன் உடனிருந்த சக பட்சிணி “ஆஹா உம்ராவுக்குப் போய் நாட்களாகி விட்டதே” என்ற கணத்தில் முடிவானதுதான் அந்த உம்ராப் பயணம். ரமழானின் ஆரம்ப நாட்களும் அமைந்துவிட பயணம் முடிவாகி,   போய் வந்து வருடங்கள் ஓடிவிட்டாலும் அதன் ஒரு அனுபவம் இன்னும் நிலைத்திருக்கிறது. என்றும் இருக்கும். நோன்பின் வருகையும்  முஹம்மது அலியின் மரணமும் நினைவுகளைக் கிளறிவிட்டது.

கோடைகாலத்தின் துவக்கம். ஹரமை அடைந்தவுடன் உம்ராவை முடித்துவிட்டு முதல் தளத்திற்குப் போய் நீண்டநேரம் அமர்ந்திருப்பது வழக்கம். கீழ்தளத்தைப் போல நெருக்கமில்லாமல் அமைதியாக இருக்கும். அங்கிருந்து மக்காவைக் கண்டுகொண்டிருப்பது   சுகானுபவம். நடுவில் கம்பீரமாக நிற்கும் கஃபத்துல்லாஹ்வும் அதன் சுவட்டில் வெள்ளைப்புறாக்கள் தத்தித் தத்தி நடப்பதுபோன்ற தோற்றத்தில் வெள்ளைச் சீருடை அணிந்து வலம் வரும் உலகின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வெண்கடலலையாக மெதுவாக வட்டத்தில் நீங்கும்மக்கள் திரளும்.

ஹோட்டலிலிருந்து அதிகாலை இரண்டரை மணிக்கு  சஹரை முடித்துவிட்டு ஹரமுக்குள் நுழைந்தால் இரவு தராவீஹ் கழிந்து மீண்டும் ஹோட்டலுக்குப் போய்ச் சிறிது இளைப்பாறிவிட்டு அடுத்த நாள் சஹர். மீண்டும் ஹரம்.

பகல் நேரங்கள் முழுமையாகப் பள்ளியினுள் தான். பல தரப்பட்ட,  உலகின் நாலா புறங்களிலிருந்து வந்து குவியும் மக்களுடன் சங்கமம். குர்ஆன் ஓதுதல், இஸ்லாமிய வரலாற்றுப் பின்னணி அசைபோட கஃபாவைப் பார்த்துக் கொண்டிருத்தல்,   இடையிடையே அங்கேயே குட்டித் தூக்கம். இதனுடன் கோடையின்  வெக்கையைத் தணிக்க  அதீதக் குளிரோட ஒவ்வொரு தூண்களின் அடியிலும் வரிசையாக இருக்கும் ஜம்ஜம் நீரை பிளாஸ்டிக் கப்பில் பிடித்துத் தலையில் ஊற்றினால் சிலமணிநேரம் சுகம். மீண்டும் வெக்கை. மீண்டும் ஜம்ஜம்.

ஹரமில் நோன்பு திறக்கும் நேரம்  பரவசமானது. இரண்டு மணிநேரங்களுக்கு முன்னேயே முஸ்தீபுகள் தொடங்கிவிடும். நாமிருக்கும் வரிசையின் முன் அரபிகள் தம் மக்களுடன் வந்து ஒவ்வொரு ஏரியாவையும் “பிடித்துக்” கொள்வார்கள். அவரவர் ஏரியாவில் நீண்ட பேப்பர் விரிப்புகள் விரிக்கப்பட்டுத் தட்டு தட்டாக பேரீச்சம்பழங்கள், பதார்த்தங்கள், பழங்கள், பழச்சாறுகள்,  தயிர், மூன்று வகைத்தேனீர்  இத்யாதிகளை வரிசையாக அடுக்கி வைத்துவிட்டுத்  தத்தமது ஏரியாக்களில் காலிருயிக்கும் இடங்களுக்கு ஆள்பிடித்துக் கையோடு உணவருந்த அழைத்து வருவார்கள்.

இதை வாசித்தீர்களா? :   1027/1 : ஸியோனிச அரசுக்கு ஹமாஸின் ஆப்பு!

அவ்வளவு நேரம் பசியோடு கத்திருந்து, பாங்கு சொன்னதும் சுற்றியிருந்து ஒன்றாக நோன்பு திறக்கும் பலவகைப்பட்ட மனிதர்கள்.  பொக்கைவாய்ச் சிரிப்போடு  பிலிப்பைனியக் கிழவருக்கு பழச்சாறு எடுத்துக் கொடுக்கும் ஆப்பிரிக்கக் கறுப்பருக்கு தேனீர் ஊற்றிக்கொடுக்கும் சிவந்த எகிப்தியனிடம் இன்னொருவகைத் தேனீர் கேட்கும் கனேடிய வெள்ளையனின்  அடுத்து இருந்து பேரீச்சம்பழம் உண்ணும் ஐரோப்பியக் கனவானைக் கண்கள் சுருங்க கன்னங்கள் இடுக்கிப் பார்த்து சமோஸா  சாப்பிடும் சீனனோ, மலாய்க்காரனோ, நேபாளியோ…..இங்கன்றி வெறெங்காவது பார்க்க இயலுமா தெரியவில்லை.

https://blogofthebeardedone.files.wordpress.com/2015/04/ali-news.pngஇப்படியாக கழிந்து கொண்டிருந்த நாட்களில் ஒன்றில் தான் என் பக்கத்தில் ளுஹருக்கு முன்பாக வந்து இருந்தான் அந்தக் கறுப்பு இளைஞன். என் மூத்த மகனின் வயதுக்குச் சமமான வயதும்,  எனது மகனின் உருவத்திற்கும் எடைக்கும் சமமில்லாத இரண்டு மடங்கு அதிகம் உள்ள உருவமும் எடையும் கொண்ட தடித்துத் திமிறிய உதடுகளும் கன்னங்கரேலென்ற நிறமும் சுருண்டு சுருண்டு தலையின் மேற்பரப்பில் மெல்லிய ஆடைபோல பரந்துகிடந்த முடியும் கொண்டவன்.

இரண்டு முட்டிகளையும் கையால் கட்டிக்கொண்டு வெள்ளை மணிகளுள்ள தஸ்பீஹை விரல்களுக்கிடையில் உருட்டியவாறு கஃபாவையே பார்த்துக் கொன்டிருந்தான். வைத்த கண் வாங்காத தீர்க்கமான பார்வை. யதேச்சையாக நான் எப்போது திரும்பினாலும் அதே பார்வை.  அதே தீர்க்கம்,கூர்மை. சிறிய வயது பையனிடம் அந்தக் கூர்மையும் நிலைத்த பார்வையும் அதற்கு முன் காண்பது அபூர்வம். ஒரே ஒரு தடவை என்னைப் பார்த்து புன்னகைத்தானோ என்ற என் தோன்றல் உண்மையா எனத் தெரியவில்லை.

நான் கவனிப்பதை அனிச்சையாக அவன் உணர்ந்திருக்க வேண்டும். இப்பொது உண்மையாகவே என்னைப் பார்த்துச் சிறிய புன்னகை. எதுவும் பேசிக் கொள்ளவில்லை.  நான் குர்ஆன் ஓதுவதை விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கினேன்.

“இக் கஃபாவின் மீதேறி நின்று முதல் பாங்கை உரக்கச் சொன்ன என்னைப் போன்ற ஆப்பிரிக்கக் கறுப்பு அடிமையாக இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட இவ்வுலகின் மிகச்சிறந்த, மிக உயர்ந்த, பாக்கியம் பெற்ற  கறுப்பர் பிலால் ஹபஷியின் (ரலி) பெயரை எனக்கு நானே வைத்துக் கொண்டேன்”.

இப்படியான பார்வையும் புன்னகயும்  பரிமாறிக் கொண்டபோது ஒரு சிறிய நட்புவட்டத்திற்குள் நாஙகள்  வந்துவிட்டது  போன்ற ஒரு இலகுணர்வு. புன்னகையின் இடைவேளை சுருங்கிச் சுருங்கிப் பின் அது நடந்தது. ஸலாம் சொன்னான். பதில் சொல்லி மீண்டும் புன்னகைத்தேன். எங்களது சிறிய முன்னுரை உரையாடலின் விஷயம் இவ்வாறாக இருந்தது.

நான் இந்தியனா என்று கேட்டு இந்தியாவைச் சிலாகித்து அவனது கல்வியின் பகுதியாக  இந்தியா வரவேண்டும் என்று ஆசையும் திட்டமும் இருப்பதாகச் சொன்னான். இலண்டன் வாசி. நிரந்தரமாகக் கிடைக்கும் தோட்டவேலையையும், நிரந்தரமில்லாமல் கிடைக்கும் மற்ற எடுபிடி வேலைகளயும் செய்துகொண்டு சர்வகலா சாலையில் சரித்திரம். தத்துவம் மற்றும் சட்டம் பயிலும் மாணவன். தாய் தந்தையர் கிறிஸ்தவர்கள். இவனும் இவன் சகோதரியும் முஸ்லிமாக மாறியவர்கள். எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.

இதை வாசித்தீர்களா? :   புதிதாக உருவாகிறது - நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்!

ஏறத்தாழ  உன்வயதில் பிலால் என்ற ஒரு மகன் எனக்கிருக்கிறான்; மருத்துவம் படிக்கிறான் என்றேன். கூர்ந்து பார்த்து மீண்டும் பெயரைச் சொல்லுமாறு கேட்டான். பிலால் என்றேன். இன்னொரு தடவை. பார்வையைத் திருப்பாமலேயே அணிந்திருந்த அரபி உடைக்குள் கைவிட்டு அவன் எடுத்துக் காட்டிய அட்டையில் அவன் புகைப்படமும் பெயரும் இருந்தது. முதற்பெயர் பிலால்!

“உன் மகனுக்கு யார் பெயர் வைத்தார்கள்?” என்ற அவன் கேள்விக்கு ” நானும் என் மனைவியும்” என்பது என் பதில். குதூகலத்துடன்  “எனக்கு நானே இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்” என்றான்.  எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவன் கண்களில் அதே தீர்க்கமான பார்வை. “இக் கஃபாவின் மீதேறி நின்று முதல் பாங்கை உரக்கச் சொன்ன என்னைப் போன்ற ஆப்பிரிக்கக் கறுப்பு அடிமையாக இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட இவ்வுலகின் மிகச்சிறந்த, மிக உயர்ந்த, பாக்கியம் பெற்ற  கறுப்பர் பிலால் ஹபஷியின் (ரலி) பெயரை எனக்கு நானே வைத்துக் கொண்டேன்”.  கஃபத்துல்லாஹ்வப் பார்த்தவாறே பேசினான்.

“எனது சமூகத்திற்கு உதவுவதற்காகத் தான் நான் சட்டம் படிக்கிறேன். முஹம்மது அலியைப் (அல்லாஹும்மக்ஃபிர்லஹு…) போல என் இனத்திற்குப் பெருமை சேர்க்கவேண்டும். அந்த எண்ணம் இன்னும் இன்னும் என்னுள் இறுகிக் கூர்மையாக வேண்டும். அதற்குத் தான் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையேனும் இங்கு வந்து உட்கார்ந்து இதோ இந்தக் கஃபத்துல்லாஹ்வின் மேற்பரப்பைப் பார்த்துக் கொன்டிருப்பேன்.  அதன் மீதேறி அடிமையாய் இருந்த பிலால் ஹபஷி(ரலி) பாங்கு சொல்லி உன்னத நிலைஅடைந்து  உலகை வென்ற  காட்சியையை கற்பனை செய்து கொள்வேன். “

அப்புறம் பிலால் எதுவும் பேசவில்லை. மீண்டும் தீர்க்கமாக ஹரமையும் அதன் சுவட்டில் வெள்ளைச் சீருடை அணிந்து  புறாக்களைப்போல மிதந்து செல்லும் மக்கள் கூட்டத்தை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம் நீண்ட நேரமாக!

– அபூ பிலால் (SatyaMargam.com)