தேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்!

மிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து கொள்கின்றனர்.

பிடித்தாலும் சரி; பிடிக்காவிட்டாலும் சரி! அரசியல் வியூகம் தம்மைச் சூழ்ந்துள்ளதை தமிழக முஸ்லீம்களால் மறுக்க முடியாது. ஆனால், வாழ்வின் இலக்கே இதில்தான் என்பது போன்றும், எதிர்வரும் ஏப்ரல் 6ம் தேதியோடு உலக வாழ்வு முடியப்போவதை போலவும் அதகளப்படுத்துகின்றன முஸ்லீம் அமைப்புகள்.

இறைவன் அருளிய இஸ்லாமிய அடிப்படையைப் புறந்தள்ளி, மனிதர்களின் குறைமதி மூளையில் உதித்த அத்தனைச் சிந்தனைகளும் குறைபாடு கொண்டவையாகத்தான் இருக்க முடியும். இஸ்லாத்தில் அதன் “ஏற்று கொள்ளல்” குறித்துப் பேசுவதே இக்கட்டுரையின் உள்ளடக்கம். ஆனால் ஒரு அடிப்படையை ஏற்றுக் கொள்வதற்குமுன் அதன் விதிகளை முதலில் வாசித்து உள்வாங்கிக் கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

ஜனநாயகம் என்பது ஒரு எண் விளையாட்டு.

உயர்ந்த இலட்சியங்கள், சமூகத்திற்கு செய்யும் பணிகள் இவற்றையெல்லாம் தாண்டி மக்களை தன்வசப்படுத்தும் விதம், பொருத்தமான கூட்டணியைத் தேர்வு செய்தல், பூத் கமிட்டி போன்ற அடிப்படைக் களப்பணிகள், தமது பிரச்சாரத்தை மக்கள் புரிய கூடிய விதத்தில் கொண்டு போய்ச் சேர்த்தல் போன்ற பல வியூகங்கள் அமைப்பது தேர்தலுக்கான அரசியல் விளையாட்டில் மிக முக்கியம்.

பிரபலமான எர்துருல் வரலாற்றுத் தொடரில் இடம்பெறும் ஒரு வசனம் இங்கே நினைவுக்கு வருகிறது. அதில் குண்டோக்டு, தன் தம்பி எர்துருலிடம் சொல்வார்: “வாளால் போர்களை வெல்வதை போலவே, சில தந்திரங்களால் வெல்வது அவசியம்!”

அரசியல் களத்தில் குதிக்கும் ஒரு வேட்பாளர், தான் மக்கள் நலனுக்காக உழைப்பவன் என்ற என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பரவி பதியச் செய்யும் திறன் படைத்தவர்களாக இருத்தல் மிக மிக முக்கியம்.

20 ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடுவது ஒரு விளையாட்டு வீரருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிவோம். அதே நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில பந்துகளை அடிக்காமல் தவிர்ப்பதே தன் விக்கெட்டை காப்பாற்றுவதற்கான வழிமுறை. ஏனெனில் இருபது ஓவர் கிரிக்கெட்டில் ரன்களுக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டிற்கும் அதிக முக்கியத்துவம் உண்டு.

கிரிக்கெட் பற்றி சொன்னது ஒரு உவமைதான். இதே போல் தேர்தல் அரசியலில் ஈடுபடும் ஒரு கட்சி, எல்லா தேர்தல்களிலும் ஒரே நிலைப்பாட்டை எடுக்க முடியாது. சில சமயங்களில் கூட்டணி வைத்தோ, தனியாகவோ அல்லது நிற்காமலோ கூட இருக்க நேரிடும்.

இந்த ஜனநாயகம் எனும் எண்ணிக்கை விளையாட்டில் வெற்றி பெற நினைப்போர் அது கட்டமைத்துள்ள விதிகளின் அடிப்படையில் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். “Survival of the fittest“ எனும் விதிக்கேற்ப இங்கு அறிவுக்கூர்மை மிகுந்த வலியவர்களே வெற்றி பெறுகின்றனர்.

இதை வாசித்தீர்களா? :   அகிம்சைக் கப்பல்கள்

ஆனால் தமிழக முஸ்லிம்களோ இஸ்லாத்தையும் அரசியலையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்ளாமல் இரண்டையும் கலக்கக் கூடாத / தெரியாத விகிதத்தில் கலக்கி இரண்டிலும் தோற்றுப் போகின்றனர்.

மறைந்த பழனி பாபா அவர்கள் ஒருமுறை கூறியது நினைவுக்கு வருகிறது: “ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் தாம் எண்ணிக் கொண்டிருக்கும் சமூகத்தின் சதவீதத்தைக் கூட்டினால், தமிழ் நாட்டின் நிஜ மக்கள் தொகையை விட மும்மடங்காக இருக்கும்!”

பெரும்பாலான தமிழக முஸ்லிம் இயக்கங்கள், கள யதார்த்தத்தை உணர மறுப்பதோடு இல்லாத வலிமையை இருப்பதாகக் கற்பனை செய்கின்றனர் அல்லது சமூகத்தின் வலிமையை தங்கள் வலிமையாக கருதித் தோற்றுப் போகின்றன.

கஜா, சுனாமி போன்ற பேரிடர்களில் தாங்கள் ஆற்றிய நற்பணிகள், கோவிட் பெருந்தொற்று, இரத்த தானம், ஆம்புலன்ஸ் சேவை போன்ற பொதுச் சேவைகளின் அடிப்படையில் தங்கள் செல்வாக்கைத் தவறாக கணக்கீடு செய்து கொள்கின்றன.

ஆனால் இன்றைய சமூக அமைப்பு அவ்வாறதானல்ல! தன்னைச் சுரண்டும் அரசைக் கடைசிவரை விமர்சனம் செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் வெளியாகும் இலவச அறிவிப்புகளுக்கும் ஓரிரு ஆயிரங்களுக்கும் ஓட்டை மாற்றி போடும் சமூகத்தில் வாழ்கின்றோம் என்பதே யதார்த்த நிலை.

தமிழக முஸ்லிம் இயக்கங்கள், தேர்தல் நேர அலப்பறைகளை விட்டு நீங்கி, தொலைநோக்குப் பார்வையில் முஸ்லிம்களுக்கான கல்வி நிலையங்கள், பைத்துல் மால்கள், தொழில் முனைவோர்களை உருவாக்கும் பயிற்சி மையங்கள் என மஹல்லாக்களை மையப்படுத்தி உழைத்திருந்தால் இச் சமூகத்தின் நிலை நிச்சயம் உயர்ந்திருக்கும்.

அது போல் தமிழக முஸ்லிம்களிடம் காணப்படும் அதீத உணர்ச்சி பெருக்கும், நெஞ்சு நிமிர்த்தலும் தேர்தல் அரசியலுக்கு ஒத்து வராதவை.

நிலவும் அரசியல் கள நிலவரத்தை நன்கு உள்வாங்கி, நம்மை கூட்டணிக்கு அழைக்காவிட்டால் பெரிய கட்சிகளுக்கு தான் இழப்பு என்ற நிலையை உருவாக்கும்வரை எதுவும் மாறப்போவதில்லை.

சில வேளைகளில் நமக்கான களம் தயாராகவில்லை என்றால் காத்திருத்தலும் அவசியம். மேலும் தேர்தல் மட்டுமே இலக்கல்ல, அது ஒரு பாதை மட்டுமே என்ற உண்மை நம் உள்ளத்தில் ஏற்றி கொண்டால், முஸ்லீம் அமைப்புகள் நிதானமாக சென்றாலும் எதிர்காலத்தில் நிலையாக மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம். தேர்தல் வெற்றிக்காக சக முஸ்லீம் அமைப்புகள், வேறு கூட்டணிகளில் இடம் பெற்றாலும் புரிந்துணர்வுடன் ஏற்பதும் தொலைநோக்குத் திட்டத்தை வலுவாக்கும்.

பொறியாளர் ஃபெரோஸ்கான்