பள்ளிவாசல்களில் நூலகம் அமைப்போம்!

Share this:

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சில நாட்களுக்கு முன்னால் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும் ஒன்று.

திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நேரத்திலிருந்து, சில மணி நேரங்கள் வழக்கம் போல தாமதமாகத் தான் திருமண நிகழ்ச்சி துவங்கும் என்று தெளிவாகத் தெரிந்தது.

சரி, அதுவரை அருகில் இருக்கும் பள்ளிவாசலுக்குச் சென்று ஏதேனும் வாசிக்கலாமே என்றெண்ணி பள்ளியினுள் நுழைந்தேன். ஏதாவது நூல்கள் இருக்கிறதா என்று பள்ளிக்குள் சுற்றி வர ஆரம்பித்தேன்.

அல்லாஹ் அக்பர்! அங்கு இருந்தவை சவூதியிலிருந்து எப்போதோ இலவசமாக வழங்கப்பட்ட குர்ஆன்கள், இன்னும் சில இந்தியாவில் அச்சான குர்ஆன்களும் (மிகவும் சிதிலமடைந்த நிலையில்), தன்னை எவரும் தொட்டுப் பல வருடங்கள் ஆகின்றன என்பதை தன் மீதிருந்த ஒட்டடையாலும், அழுக்குகளாலும் சொல்லிக் கொண்டிருந்தன.

“மனித உள்ளங்களில் படிந்துள்ள அழுக்கு எண்ணங்களை நீக்க வந்த உலகப் பொதுமறை மீது இத்தனை தூசியா?” என்று எண்ணும் போது மனம் வலித்தது. இனி, எந்த பள்ளிவாசலுக்குச் சென்றாலும் வாசிப்பதோடு நில்லாமல், அங்கிருக்கும் குர்ஆன்களை எடுத்து அதன்மீது தூசு இருப்பின் துடைத்து விட்டு வர வேண்டும் என்று உறுதி பூண வைத்தது.

அதோடு முடிந்து விட்டதா? இல்லை!

முழு மஸ்ஜிதையும் சுற்றி முடிந்தாகி விட்டது. ஆனால், ஒரேயொரு இஸ்லாமிய நூலைக் கூட அங்கு காண முடியவில்லை. அன்றைக்கு இஸ்லாமிய பல்கலைக் கழகங்களாய் திகழ்ந்த பள்ளிவாசலின் நிலை இது. இத்தனைக்கும், இஸ்லாமியர்கள் பெருவாரியாகவும் செல்வச் சீமான்களாகவும் வாழும் ஊர் அது.

இதே மஸ்ஜிதுகள் அன்று – நபியவர்களின் காலத்தில் அறிவின் கேந்திரங்களாகத் திகழ்ந்தன. இன்னும் “வாசிப்பே சுவாசிப்பு!” என்ற மூல மந்திரத்தை திருமறையின் முதல் வசனம் சொல்லித் தர, அதை தன் முதுகுக்குப் பின் வீசி மறந்தவர்களாக நம் இன்றைய சமுதாயம்!

இஸ்லாமிய நூல்கள் மனித மனங்களில் எத்தகைய மனமாற்றத்தை, கல்வி ஞானத்தை வழங்கும் என்பது எதிரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதன் அருமை நமக்குத் தெரியவில்லை

இஸ்லாமிய உம்மாவின் இடைக் கால வரலாறு நமக்கு சொல்லித் தருகிற பாடம் என்ன தெரியுமா? இஸ்லாத்தை அடியோடு வேரறுக்கப் புறப்பட்ட கூட்டத்தினர் அள்ளிச் சென்றதென்னவோ அறிவுக் கருவூலங்களான இஸ்லாமியப் புத்தகங்களைத் தான். எதிரிகளில் சிலர் அவற்றை எடுத்துச் சென்று அழித்தனர். சில ஆற்றைக் கடக்க பாலங்களாக்கினார்கள். “இவைகளை விட்டு வைத்தால், இந்தச் சமூகம் மீண்டும் விழிப்புணர்வு பெற்று எழுந்து விடும்!” என்ற எண்ணம் பயத்தை உண்டாக்க, உடனடியாக அவற்றைத் தீயிட்டு கொளுத்தினர் சிலர்.

அதாவது, இஸ்லாமிய நூல்கள் மனித மனங்களில் எத்தகைய மனமாற்றத்தை, கல்வி ஞானத்தை வழங்கும் என்பது எதிரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதன் அருமை நமக்குத் தெரியவில்லை.

கடல் கடந்து பொருளீட்டச் சென்றிருக்கும் என் இஸ்லாமிய சகோதரனே! உள்ளூர்களில் வாழும் செல்வந்தரே! தயவு கூர்ந்து உங்கள் ஊர்களின் ஒரு சில சிறந்த இஸ்லாமியப் புத்தகங்களை வாங்கி மஸ்ஜிதுகளில் வையுங்கள். பள்ளிக்குள் நுழைகின்ற எவரேனும், ஒரேயொரு செய்தியைப் படித்து அதைச் செயல்படுத்தினாலும் இறைவனிடம் ஈடு இணையில்லா நற்கூலி பெறுவீர்கள்.

உயிருக்குயிரான சத்தியத் தூதர் நபி(ஸல்) அவர்களின் காட்டிய வழிக்கு உரித்தாக்குவோம் நாம் கப்ருடைய வாழ்வை. உள்ளூரில் நம் கட்டிய அழகு கோட்டைகளும், சொகுசு வாகனங்களும், C க்கள் மதிப்பில் இருக்கிற நம் வங்கிக் கணக்குகளாலும் நம் கப்ருக்கு வளங்களை சேர்க்காது. கீழ்க்கண்ட இந்த வலுவான நபிமொழியை மனதில் நிறுத்திப் பாருங்கள்:

ஒருவன் மரணித்த பின்னால் அவனுடைய அனைத்துச் செயல்களும் அவனிடமிருந்து துண்டிக்கப்பட்டு விடும். ஆனால் அவனுக்கான மூன்று செயல்கள் இறுதி நாள் வரை தொடர்ந்து வந்து நன்மை தந்து கொண்டே இருக்கும்.

1. சதக்கத்துல் ஜாரியா (நிலையான தருமம் – அதிலிருந்து, பின் அதிலிருந்து என சங்கிலித் தொடராக பலன்கள் பெறப்படுமே அது)

2. பயன் தரும் கல்வி

3. தன் பெற்றோருக்காகத் துஆச் செய்யும் நல்ல குழந்தை.

நீங்கள் நூலகம் ஒன்று அமைப்பதற்காகச் செய்யவிருக்கும் நற்செயல் முதலிரண்டிலும் அடங்குவதைக் கவனியுங்கள். நீங்கள் வாங்கி வைக்கும் ஒவ்வொரு புத்தகமும் உங்கள் மண்ணறைக்குத் தொடர்ந்து பூத்துக் குலுங்கும் பூக்களை அனுப்பும் என்பது உறுதியாகத் தெரிந்து விட்டபின், ஏன் இன்னும் தயக்கம்?

“அப்படியே நான் வாங்கி வைத்தாலும் எனதூர் பள்ளிவாசலில் வருவோர் போவோர் எடுத்து சென்று விடுவார்களே!” என்ற ஒரு சிலர் கேட்கும் கேள்வி காதில் விழத்தான் செய்கிறது.  என்ன செய்வது? சில நேரம், சில ஊர்களில் அப்படியும் நடந்து விடலாம். இதற்கு ஒரு சிறிய யோசனை உள்ளது.

புத்தகத்தை வாங்கி பள்ளிவாசலில் வைக்கும் முன், புத்தகத்தின் உள் பகுதியில் “அன்பரே! இது வக்பு செய்யப்பட்ட நூல். இதை நீங்கள் திருடிச் சென்றால் கியாமத் நாளன்று கணக்கு தீர்க்கப்படும்!” என்று எழுதி வைத்துவிட வேண்டியது தான்.

இதற்கு மேலும் சுரணை இல்லாமல் ஒருவர் திருடிச் செல்வர் எனில், நம்மால் என்ன செய்ய முடியும்? கணக்கு தீர்ப்பவனிடம் விட்டு விட வேண்டியது தான்.

ஆனால், நாம் வைக்கும் எண்ணத்திற்கு கண்டிப்பாக கூலி உண்டு என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக் கனியாகும். நல்ல எண்ணத்தோடு, நாம் செய்யும் செயலுக்குத் தக்கக் கூலி உண்டு என்ற எதிர்பார்ப்போடு நாமும் செய்வோம், நண்பர்களை செய்யத் தூண்டுவோம். ஒரே ஊராக இருந்தால் கூட்டாக சேர்ந்து மாதம் இரண்டு மூன்று என்று சேர்த்தாலே ஒரு நூலகம் ஆகிவிடும்.

நல்ல செயல்களில், சிந்தனைகளில் கூட்டு சேர்கின்றன நல்ல நிலையை இறைவன் தருவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

– ஹஸனீ


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.