உணவுத் திருநாளா ரமளான்?

யிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவையும் கொண்டு,  புண்ணியங்கள் பூச்சொரியும் மாதமாக புனித ரமளான்  மாதம் கணக்கிடலங்கா காருண்யமும், கருணையும், சுமந்து வந்தடைந்து விட்டது.

மனிதனின் வழக்கமான இச்சைகளை  அடக்கி முழுமனதையும் இறையச்சத்தின்பால் குவியச்செய்யும் பயிற்சி எடுப்பதே நோன்பின் தாத்பர்யம் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். மனதை அடக்கியாளும் பயிற்சியின் ஒரு அங்கம்தான் நோன்பாகும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறோம். நோன்பிற்கான சட்டங்களும் ஷரத்துக்களும், ஆகுமானவைகள், ஆகாதவைகள்  எல்லாம் நிறையப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. நல்லது.

அதுவல்ல விஷயம்.  இந்த மாதத்தின்  பெயரால் நடக்கும் நுகர்வோர்  கலாச்சாரம்  மற்றும் ஆடம்பர உணவுக் கொண்டாட்டங்கள் பற்றி சற்றுப் பேசுவோம்.

ரமளானின் ஆன்மாவை முறிக்கும், ரமளானின் புனிதங்களிலிருந்து  நம்மை விலகி நிற்கச்செய்யும் இக்கலாச்சாரத்திற்குப் பலரும் தெரிந்தோ தெரியாமலோ பங்காளிகளாகிக்  கொண்டிருக்கிறோம். முக்கியமாக புனித ரமளானை உணவுத் திருநாள் ஆக்குவதில்!

{youtube}mVlmGhp7nfE{/youtube}

மேலே: கனடா நாட்டின் MP மார்க் ஹாலண்ட், பசித்து பயிற்சியளிப்பதால் ரமளான் நோன்பை, தான் வைப்பதாக 07-06-2016 அன்று கூறிய  வீடியோ!

இம்மாதம் முழுவதும் பலரின் சமூகவலைத்தலங்களில் இதுவரை  கண்டிராத சுவைத்திராத பகட்டு வண்ணங்களில் பளபளக்கும் ஜிகினாத்தாளில் பலவித பதார்த்தங்கள் உணவுத் திருவிழாபோல் ஊர்வலம் போக வரிசையாகக் காத்திருக்கிறது. ரமழான் சிறப்பு என்ற பெயரில் கஞ்சி முதல் பிரியாணி வரை தனது இஃப்தார் மற்றும் சஹர் உணவின் “மகிமை”யை செல்ஃபீ எடுத்து விளம்பரம் செய்வதைப் பார்க்கிறோம்.

நோன்பு மாதத்தில் கணவன்மார்களின் தலையாயப் பணி  சமையலுக்குச் சாமான்கள் வாங்கிக் குவிப்பது என்றால், மனைவிமார்கள் சமையலறையை தலைகீழாய் புரட்டிப் போடும் வண்ணம் விதவிதமான உணவு வகைகளைத் தயார் செய்வது.

இம்மாதத்தில் மாறும்  முஸ்லிம்களின் போக்கை நன்கு கவனித்த வணிக நிறுவனங்களோ நோன்புக்கென்றே பிரத்யேகத் தள்ளுபடியிலும், இலவசங்களிலும் நனைத்துத் திக்குமுக்காட வைக்கிறது. தினசரி தேவைக்கு அதிகமான உணவுப் பண்டங்களை, நுகர்வோரைக் கட்டாயப்படுத்தி வாங்க வைக்கிறது.

கடைத்தெருவில் டிராலிகளில் உணவுப் பண்டங்களை நிரப்பிக் கொண்டு முஸ்லிம்கள் செல்வதைப் பார்த்தால், பிறமதத்தினருக்கு முதலில் வரும் சந்தேகம் “ரமளான் பட்டினி கிடக்கும் நோன்பு மாதம் என்றார்களே; பார்த்தால் உண்டு கொழுப்பதற்கான மாதம் போல் தெரிகிறதே?” என்பது தான்.

ஆக, நோன்பையும்  அதன் மாண்பையும் கொச்சைப் படுத்துவது பிறர் அல்ல. முஸ்லிம்களே!

{youtube}YQ-bTLTlyao{/youtube}

மேலே: கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, முஸ்லிம்களுக்கு ரமளான் 2016 வாழ்த்து செய்தி கூறிய வீடியோ!

மற்ற மாதங்களில் செய்வதை விட, ரமளானில் உணவுத் தேவைகளைச் சுருக்கிக் கொண்டு, குறைவான உணவை உண்டு அதிகம் நல்லமல்கள் செய்து, தருமமாகவும் தானமாகவும் கொடுக்கவேண்டிய மாதமல்லவா? நீங்கள் உண்ணும்போது மூன்றில் ஒரு பகுதி உணவும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீரும், மீதமுள்ள பகுதியை (மூச்சு விடுவதற்காக) காலியாகவும் விட்டு வையுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளது பயான் செய்ய மட்டும் தானா?

இதை வாசித்தீர்களா? :   முஸ்லிம்களின் விஸ்வரூபம்

உலகம் முழுவதும் உணவை வீணாக்குதல் உச்சத்தை அடைவது – சுமார் 40 சதவீதம் – ரமளான் மாதத்தில்தான் என்பது சர்வதேச அளவிலான அதிரவைக்கும் புள்ளிவிபரம் ஆகும். ஆடம்பர,  அதிக வகைகளடங்கிய  உணவுக் கொண்டாட்டங்களும் உணவை வீணாக்குவதும் எப்பொழுதும் நேர்விகிதத்தில் தான் இருக்குமென்பது சாதாரண உண்மை. அதனால்,  உணவை வீணாக்குவதை மார்க்கம் தயவு தாட்சண்யமின்றி தடுக்கிறது. நாமும்  வெறுக்கத்தான் வேண்டும்.

பசியினால் ஒவ்வொரு பத்து நொடிகளில் ஒரு குழந்தை மரணிக்கிறது என்கிறது ஆய்வறிக்கை ஒன்று. ஒவ்வொரு இரவும் உலகில் எழுநூற்றைம்பது மில்லியன் மக்கள் பசியோடு தூங்கச் செல்கிறார்கள் என்கின்றன புள்ளிவிபரங்கள். அதாவது ஒன்பதுபேரில் ஒருவர். முன்மாதிரி முஸ்லிமாக இருக்க வேண்டிய நாமோ நோன்பின் பெயரால், குப்பைத் தொட்டிபோல் வயிற்றை நிரப்பிய பின், எஞ்சிய உணவை குப்பையில் கொட்டிவிட்டு தூங்கச் செல்கிறோம்.

{youtube}FCsou6xNiXE{/youtube}

மேலே: ரமளான் மாதத்தில் அளவு்க்கு அதிகமாக விரயம் ஆகும் உணவு பற்றிய அல்ஜஸீரா வீடியோ தொகுப்பு!

ஆக, நோன்பின் கண்ணியத்தைக் காப்பதற்காகவாவது நோன்பை உணவுத் திருவிழாவாக, உண்ணுவதற்கான மாதமாக மாற்றாமலிருப்பது சமூகத் தேவையும்கூட.

கடந்த பதினோரு மாதங்கள் வரை சமூக வலைத்தளங்களில் கட்டுண்டு கிடக்கும் நாம், இப் புனித  மாதத்திலாவது நிலைத்தகவல்களில்  சிறப்புணவுகளைப் பட்டியலிட்டு, நோன்பென்பது இன்னுமொரு உணவுத்திருவிழா என்று இஸ்லாத்தைப் பற்றிய செய்தியைப் பிறருக்கு எட்டி வைக்காமலிருப்பதை  இன்னொரு அமலாகச் செய்வோமாக! பிறருக்கு பிரசங்கம் செய்வதை விடுத்து, உணவுக் கட்டுப்பாடு பற்றிய கட்டாய விதிமுறைகளை நம் வீட்டிற்குள் கொண்டு வருவோம் என சத்தியமார்க்கம்.காம் தளத்தில் இக்கட்டுரையை வாசிக்கும் இந்த நிமிடத்தில் உறுதி பூணுவோம்.

– அப்துல் ரஷீத் (satyamargam.com)