இந்திய முஸ்லிம்கள் டுடே

Share this:

ந்தியா டுடே, மார்ச் 19 இதழில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் வலிமை என்ன என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்திய மக்கள் தொகையில் 14 சதவிகிதம் அதாவது கிட்டத்தட்ட 20 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுள் 46 தொகுதிகளில் முஸ்லிம்கள் 30%க்கும் அதிகமாக உள்ளனர். 110 தொகுதிகளில் முஸ்லிம்களது வாக்கு, வெற்றி-தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

சுதந்திரம் பெற்ற இந்த 68 வருடங்களில் ஒருமுறை மட்டுமே முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை இரண்டிலக்க சதவிகிதத்தினை (10%) எட்டியுள்ளது (1980).

தற்போதைய முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை 30 மட்டுமே (6%). கிட்டத்தட்ட 20 மாநிலங்களிலிலிருந்து ஒரு முஸ்லிம் எம்.பி.கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. முஸ்லிம்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாக காட்டிக்கொள்ளும் தேசிய, மாநில கட்சிகள் அவர்களை வெறும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்துகின்றன என்பதற்கு இந்த எண்ணிக்கை சிறந்த உதாரணம்.

அசாமில் 31% முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் 14 எம்.பி.க்களில் 2 பேர் தான் முஸ்லிம்கள். உபியில் 19% முஸ்லிம்களுக்கு 7 எம்.பி.க்களே உள்ளனர். கர்நாடகாவில் 13% முஸ்லிம்களுக்கு ஒரு எம்.பி.கூட இல்லை.

அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நேரத்தில் மட்டுமே முஸ்லிம்களது நினைவு வருவது வாடிக்கை. ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களது ஓட்டைப் பெறுவதற்கு அவை பகீரத முயற்சிகளை மேற்கொள்கின்றன. முஸ்லிம்கள் எப்போதும் காங்கிரஸுக்கே சாதகமாக இருந்துள்ளனர். 2009இல் 36% முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். தற்போது ‘மோடி அலை’ என்ற பூச்சாண்டியினைப் பயன்படுத்தி முஸ்லிம்களது ஓட்டுக்களை கவர பி.ஜே.பி. நினைக்கின்றது.

மோடியினுடைய கூட்டங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொள்வதுபோலப் படம் காட்டுவது, வாடகை முஸ்லிம்களுடன் மோடி கை குலுக்குவது, கட்டிப்பிடிப்பது, பா.ஜ.க.வில் முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்துள்ளதாக செய்தி வெளியிடுவது என்று கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்து வருவது நாடறிந்தது. போலவே, இவை போன்ற செய்திகளை தயாரிப்பதற்கும் அவற்றை விளம்பரங்களாக வெளியிடுவதற்கும் 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதும் நாடறிந்த ஒன்றாகும்.

உ.பி.யில் முஸ்லிம்கள் பெரும்பாலும் சமாஜ்வாடிக்கே வாக்களித்து வந்துள்ளனர். தற்போது முசாஃபர் நகர் கலவரத்தை வைத்து ஆதாயம் தேட காங்கிரஸும் மாயாவதியும் முயன்று வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முஸ்லிம்கள் வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருகின்றார். தமிழகத்தில் சொற்ப இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது யார்? என்பதில் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் அறிக்கைப் போர் நடைபெற்று வருவது தமிழகம் அறிந்ததே. இப்படி நாடு முழுவதும், தேர்தல் வந்துவிட்டால் முஸ்லிம்களது கால்களைப் பிடிக்கும் அரசியல் கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு காலை வாரிவிட்டு விடுகின்றனர். முஸ்லிம்களும் கையில் கருப்பு மையினை இட்டுக் கொண்டு, தங்கள் வாழ்வின் கருப்புப் பக்கங்களை அதிகரித்துக் கொள்கின்றனர்.

உ.பி, குஜராத், மேற்கு வங்கம், பிஹார், அசாம் என்று எந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் முஸ்லிம்களின் வாழ்வு நிலை மிகவும் பின் தங்கியே உள்ளது. அடிப்படை சுகாதார வசதிகளான உறைவிடம், கழிவறை வசதிகள்கூட இல்லாத நிலையில்தான் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்களது உள்ளங்களில் இருந்து இன்னும் பாபரி மஸ்ஜித், கோத்ரா, அசாம், முசாஃபர்நகர் என்று படுகாயம்பட்ட பல்வேறு வடுக்கள் மறையாமல் உள்ளன. இன்றும் முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலேயே வழ்ந்து வருகின்றனர். எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் முஸ்லிம்கள் பலிகடாக்கள் ஆக்கப்படுவது தொடர்கதையாகி வருகின்றது. இது இந்தியா டுடேவின் கருத்துக் கணிப்பிலும் வெளியாகியுள்ளது.

முஸ்லிம்கள் உள்நாட்டில் உழைத்து முன்னேறினால்கூட அந்தப் பணம் வெளிநாடுகளில் இருந்து வந்ததோ என்கிற பார்வை மற்றவர்களிடத்தில் உள்ளது. இன்னொரு புறம் அவர்கள் இந்தியாவிற்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற்றதைக் கொண்டாடியதற்கு தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது சமீபத்திய உதாரணம். சச்சார் கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் ஒருபுறம் தேச துரோகிகள், இன்னொரு புறம் சமாதானப்படுத்தப்பட்டவர்கள் என்ற இரட்டை சுமையினை முஸ்லிம்கள் சுமக்கின்றனர்.

கோத்ரா ரயில் தீ விபத்தை அடுத்து, குஜராத்தில் திட்டமிட்டு முஸ்லிம்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்த மோடியைப் பற்றி “மாநில முதல்வராக ஒரு கொலைகார வெறிநாய்” என்று குமுதம் இதழ் அப்போது எழுதியது. இப்போதும் அந்தக் கொத்துக் கொலையைப் பற்றி மோடி வாய் திறக்க மறுப்பதைப் பாருங்கள்:

{youtube}F_I7eHoXMMA{/youtube}

இது, ‘க்ளீன் ச்சிட்’டை ‘வாங்கிவிட்ட’ ஆணவமல்லவா? ஆனால் முஸ்லிம்கள் இவை யாவற்றையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர்கள் நரேந்திர மோடியை ஆதரிக்க முடுவு செய்துவிட்டனர் என்பதுபோல் இந்தியாடுடே சித்தரிக்க முயன்றுள்ளது. குஜராத்தின் வளர்ச்சியில் முஸ்லிம்களும் பயனடைந்துள்ளதாகவும், அவர்கள் அதனை விரும்புவதாகவும் இந்தியா டுடே பசப்புகின்றது. குஜராத்தின் வளர்ச்சி என்பது உண்மையா என்ற கேள்விக்கே இன்னும் பதில் வராத நிலையில் அதில் முஸ்லிம்களும் பயனடைந்துள்ளனர் என்ற புதுக்கதையை இந்தியா டுடே புனைந்து, தன் ஊடக நேர்மையை வெளிச்சம போட்டிருக்கிறது.

அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜிதைப் பற்றிய தெளிவில்லாத ஒரு முஸ்லிம், “பாபர் மசூதிக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை; ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும்” என்று கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதன் மூலம் அவர் மோடியினை ஆதரிக்கின்றார் என்று சொல்ல வருகின்றனர். இதுபோன்ற பெய்டு ஸ்பீக்கர்களுடைய கருத்துகளை எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்த நினைக்கும் இந்தப் போக்கு இன்றைய ஊடகங்களின் பொதுப் புத்தியாக உள்ளது. இவற்றையெல்லாம் கொட்டை எழுத்துக்களில் போட்ட இந்தியா டுடேவில் விரக்தியுடன் முஸ்லிம்கள் பலர் கூறியுள்ள கருத்துக்களை ஏனோ சின்னதாக போட்டு தங்கள் மதச்சார்பின்மையினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தியா டுடேவின் கட்டுரைகளில் நிறைய முரண்பாடுகள் உள்ளதைக் காண முடிகின்றது. கட்டுரையின் துவக்கத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவர்களது உடை, அவர்களது உடைமைகள் ஆகியவை குறித்து வர்ணித்துள்ளமையும், அந்த ஆசிரியரது உரையாடலையும், உடையினையும் கோத்திருக்கும் முறையும் முஸ்லிம்களது கலாச்சார பரிமாணங்களைக் கிண்டல் செய்வது போல் உள்ளது. கோத்ரா பகுதி முஸ்லிம்கள் 2002க்குப் பிறகு கல்வியில் முன்னேறியுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் அதற்கு அரசின் பங்களிப்பு என்ன என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வு குறித்து இன்னும் தெளிவான உண்மைகள் வெளிவராத நிலையில் குஜராத்தில் உள்ள கஞ்சி முஸ்லிம்களே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைத்ததாக தீர்ப்புக் கூறியுள்ளது இந்தியா டுடே. ஒரு முஸ்லிம் பெண் தனது குழந்தையுடன் ஆப்பிள் மடிக்கணினி வைத்துள்ளதை காட்சிப்படுத்தியிருப்பதன் மூலம் முஸ்லிம்கள் இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்ற மாயையினை ஏற்படுத்த முயன்றுள்ளனர். “எங்களுக்கு மதரஸாக்கள் வேண்டாம்.பள்ளிக்கூடங்களே வேண்டும்” என்று ஒருவர் கூறியுள்ளதை ஒட்டுமொத்த கிராம மக்களின் மனநிலை என்று கூறியுள்ளதன் மூலம் முஸ்லிம்கள் தங்கள் பாரம்பரிய கல்வி முறையினை வெறுப்பதாக இந்தியா டுடே சித்தரிக்க எத்தனிக்கிறது.

பா.ஜ.க.வின் அடிச்சுவடே இல்லாத கேரளாவிலும் முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களிக்கப் போவதாக சொல்லியிருப்பதன் மூலம் இந்தியா டுடே சொல்ல வரும் செய்தி என்ன?

ஒட்டுமொத்தமாக சில குறைகள் இருந்த போதிலும் இந்தக் கட்டுரைகள் மூலம் இந்தியாவில் முஸ்லிம்களின் பலம், இரண்டாம் தர குடிமக்களாக புறக்கணிப்புக்கும், சந்தேகப் பார்வைகளுக்கும் மத்தியில் இருதலைக் கொள்ளி எறும்புகளாக வாழ்ந்து வரும் அவர்களது மனோநிலை, பின்தங்கியவர்களை விடவும் கீழ்நிலையில் வாழும் அவர்களது வாழ்க்கை நிலை,  விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்த அவர்களது பார்வை என்று முஸ்லிம்கள் குறித்த விரிவான நேர்மறைத் தகவல்கள் சிலவும் தரப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் குறித்து மற்றவர்கள் கவலைப்படுகின்றனர்; அல்லது கவலைப்படுவதாக ஆவணப்படுத்துகின்றனர். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தினரைப் பிரதிநிதித்துவபடுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் தலைவர்கள் தங்கள் இருப்பு குறித்து மட்டுமே கவலை கொண்டிருப்பதுதான் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னை.

மாறுமா இந்த இழிநிலை?

அபுல் ஹசன் R
9597739200


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.