இந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …!

ந்திய தேசம் உலகத்தின் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளுள் ஒன்றாகும். இந்நாட்டின் சிறப்பே பல்வேறு மதங்களை, கலாச்சாரங்களைப் பின்பற்றக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய வேற்றுமையில் ஒற்றுமைதான்.

இந்தியர்கள் என்று சொல்லக்கூடிய அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்த மக்களும் இந்த நாட்டின் குடிமக்கள், அவர்கள் அனைவருக்கும் இந்த நாடு பொதுவானது. ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக இந்த நாட்டை இந்துக்களுக்கான நாடாக உருவாக்குவதில் முனைப்புக் காட்டி வருகின்றது. இந்திய வரலாற்றில் அதன் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்காற்றிய முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், இன்னபிற சமூகத்தை சார்ந்த மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் பாசிச பிஜேபி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்து சமூகத்தைச் சார்ந்த மக்களேகூட ஏற்றுக் கொள்வதில்லை.

பி.ஜே.பி அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்த நாட்டையும் மக்களையும் வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்கின்றோம் என்ற பெயரில் நாட்டை நாசமாக்கியுள்ளார்கள் என்பதே உண்மை. அதற்குக் கீழ்வரும் சம்பவங்களும் நடவடிக்கைகளும் மிக சிறந்த உதாரணங்கள்:

“மாட்டுக்கறி வைத்திருந்தார்” என்று புனைந்து, இந்த நாட்டிற்காகத் தன் மகனை இந்திய இராணுவத்திற்காக அர்ப்பணித்த, வயது முதிர்ந்த அஹ்லாக்கை அடித்துக் கொன்றதனை என்னவென்று சொல்வது? பசுவைப் பாதுகாப்பதற்காகப் பல ‘பசுக்குண்டர்கள்’ இருக்கும் இந்த ஆட்சியில் மனிதர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு தொண்டன்கூட இல்லை. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக மக்களுக்கு மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதை தவிர இந்த நாசகர ஆட்சியின் சாதனை வேறொன்றும் இல்லை.

இவர்களின் இந்த அத்துமீறல் ஆட்சியை விமர்சித்து எழுதிய, பேசியவர்களின் குரல்வளைகளை நெறித்தது இவர்கள் ஜனநாயகத்தின் குரல்வளைகளை நெறித்ததற்குச் சமம். பன்சாரே, கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் என அடுத்தடுத்து எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி.இல் அம்பேத்கர் வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டதும் இதனடிப்படையில்தான். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நாசகர வேலைகளை பி.ஜே.பி அரசு செய்து கொண்டிருக்கின்றது.

பிற மதத்தினர் மற்றும் சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் மீதும், அவர்களின் மதத்தலங்களின் மீதும் சங் பரிவாரத்தினர் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். ஆஷிஃபா என்கின்ற சிறுமியை இந்துக்களின் மதத்தலமான கோயிலுக்குள் வைத்துக் கற்பழித்து, ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கயவர்களை இந்த அரசு என்ன செய்தது? அவர்கள் தங்களை இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்வது எங்கள் சகோதரர்களை சங்கடப்படுத்துகின்றது…! அதே நேரம் உ.பி.யில் வாயு சிலிண்டர் இல்லாத காரணத்தால், தன்னால் முடிந்த பல்வேறு சிரமங்களைத் தனிமனிதனாக எதிர்கொண்டு சில குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர். கஃபீல் கான் அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதற்கு பதிலாக, அவர் முஸ்லிம் என்பதால் உ.பி அரசு அவர் மீது நடவடிக்கை எடுத்தது பாசிச அரசின் அசிங்கமான முகத்தை வெளிப்படுத்தியது.  பிற மதத்தினர், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் முன்னேற்றம் ஆகியவற்றை விரும்பாத பாசிச அரசு அதற்காகக் கீழ்த்தரமான வழிமுறையைப் பின்பற்றவும் தயங்குவதில்லை.

இதை வாசித்தீர்களா? :   2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி!

கல்வித்துறையில் காவிமயத்தை திணிப்பதற்கான அத்தனை வேலைகளையும் செய்து வருகின்றது மத்திய அரசு. குருகுலக்கல்வி முறை எனும் மேல்தட்டு மக்களுக்கு மட்டும்தான் கல்வி எனும் முறையினை திணிப்பதில் முழுமுயற்சி செய்து வருகின்றது. சமூக நீதியைத் தூக்கி எறியும் நீட் தேர்வு முறையினை அறிமுகப்படுத்தியது. மாநில அதிகாரத்தின் கீழ் இயங்கும் பள்ளிக் கல்வியினைக் கைப்பற்றி, தேசிய அளவில் ஒற்றைக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் தேசியக் கல்வி முறையினை அறிமுகப்படுத்தும் முனைப்பில் காவி பயங்கரவாதம் செயல்பட்டு வருகின்றது.

நம் நாட்டுப் பிரதமர் பல நாடுகளுக்கு உலா சென்று வருகின்றார். ஆனால், நம் நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்குச் செவி சாய்ப்பதில்லை. நம் நாட்டின் முதுகெலும்பாய்த் திகழும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக எந்த ஒரு நடவடிக்கையையும் முதுகெலும்பில்லா தமிழக அரசும் எடுக்கவில்லை; முதலாளித்துவ மத்திய அரசும் எடுக்கவில்லை. தலைநகரில் விவசாயிகள் அரைநிர்வாணமாய்த் தங்களது போராட்டங்களை முன்னெடுத்தும்கூட கண்டுகொள்ளாத மோடி, நடிகைகளுடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுவதோடு அவர்களுக்காகத் தனது நேரத்தை செலவழிப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றார்.

பொய்த்துப் போன விவசாயத்தால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யாமல், அவர்களிடம் பணம்  வசூலிப்பதற்குத் தனியார் நிறுவனத்தினை ஏவிவிடும் ஏவல் அரசு, விஜய் மல்லையா போன்ற நாட்டின் வருவாயை ஏப்பமிடும் பெருமுதலைகளின் கடனைத் தள்ளுபடி செய்து, பெருமுதலாளிகளின் கைக்கூலி என்பதனை உணர்த்தி வருகின்றது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எனும் பெயரில் மக்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கியது; ஜி.எஸ்.டி எனும் பெயரில் நடுத்தர மற்றும் சிறுவியாபாரிகளின் வியாபாரத்தை முடக்கியது; பல வங்கிகளில் கடன் வாங்கி கயவாளித்தனம் செய்த நீரவ் மோடி போன்றவர்களுக்கு உதவிக்கரத்தை நீட்டுகின்ற மத்தியில் ஆளும் பாழாய்ப்போன பாஜக அரசு, கல்விக்கடன் வாங்கிய மாணவர்களைப் பெரிய குற்றங்களைச் செய்த கயவர்களைப் போல் அணுகுகின்றது.

அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிப்பதற்காக அடாவடி அரசியல் செய்கின்றது. சுயேட்சை மற்றும் பிற கட்சிகளைச் சார்ந்த எம்.எல்.ஏக்களை விலை பேசுகின்றது. நேராக ஜனநாயக அரசியலை எதிர்கொள்ளத் திராணி இல்லாத கோழை பாஜக அரசு, தமிழகம் போன்ற மாநிலங்களில் தங்களது அதிகார பலத்தை பயன்படுத்தி, பயமுறுத்தி ஆட்சி செய்கின்றது.

கர்நாடக அரசைக் கைப்பற்றுவதற்காகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை முடக்கி, தமிழக மக்களின் விவசாய உற்பத்தியை நாசமாக்கியது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் வாயுத்திட்டம் என இயற்கை வளங்கள் அனைத்தையும் சூறையாடி நாட்டின் பொருளாதாரத்தைக் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது மக்களை வஞ்சிக்கும் பாஜக அரசு.

தங்களுக்குச் சாதகமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை அனைத்துத் துறைகளுக்கும் அதிகாரிகளாக நியமித்து, தங்களது அஜெண்டாக்களை நிறைவேற்றத் துடிக்கின்றது பாசிச அரசு. அதற்காகப் பிற மத, சமுக மக்களை புறந்தள்ளவும் செய்கின்றது.

இதை வாசித்தீர்களா? :   ஷைத்தானோடு தோழமை!

இந்தியாவைக் கட்டமைப்பதில் எல்லா மதத்தினருக்கும், சமூகத்தினருக்கும் மிகப்பெரும் பங்கு இருக்கின்றது. ஆனால், சிறையிலிருந்து தப்பித்து வெளிவருவதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்த இவர்களுக்கு இந்தியாவைக் கட்டமைத்ததில் என்ன பங்கு இருக்கின்றது? பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தை இன்றைக்கு ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கின்ற ஒற்றைக் குடையின்கீழ், மனுவின் அடிப்படையில், வர்ணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் இயங்க வைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றது பயங்கரவாத மோடி அரசு. இவர்களின் நடவடிக்கையையும், முன்னேற்றத்தையும் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு ஜனநாயகத்தை நேசிக்கக்கூடிய ஒவ்வொருவரின் கடமையாகும்.

மேலும், நம் நாடு இந்தியா, இது ஜனநாயகத்திற்கான உதாரணம். இந்திய நாடு இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்குமானது. இதன் பன்முகத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இந்த தேசத்தில் இடமளிக்கக்கூடாது. அது அரங்கேறி வருகின்றது, காவிக் கொள்கை அரசு நீடித்தால் அது இன்னும் நீளும். பாசிசம் வெகுவிரைவில் இந்திய தேசத்தின் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்படவேண்டும்.

{youtube}ftD3gDA-5S0{/youtube}

சையது அபுதாஹிர் M.Sc.,M.Phil.,(Ph.D)