சவூதிவாழ் இந்தியர்களுக்கு வேட்டு வைத்த பவுத்த தீவிரவாதம்!

ர்மா என்ற மியான்மரில் கடந்த வருடம் மீண்டும் தலைதூக்கிய பவுத்தமத வெறியர்களின் தீவிரவாதம் காரணமாக ஆயிரக் கணக்கான பர்மிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டனர். இந்தப் படுகொலைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் கூடத் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தது வெட்கக்கேடு. சூடான், மாலி போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் வன்முறை தலைதூக்கியபோது படை பரிவாரங்களுடன் கூடாரமடிக்கும் அமெரிக்கக் கூட்டுப்படைகள், மியான்மரில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலை விசயத்தில் துரும்பையும் அசைக்கவில்லை.

‘உயிர்களைக் கொல்வது பாவம்’ என்று நம்பும் ஜீவகாருண்ய பவுத்த மதத்தினர் இலங்கையைப் போல் மியான்மரிலும்  பெரும்பான்மையாக உள்ளனர் என்பது இருநாடுகளுக்குமுள்ள ஒற்றுமை. இந்தியாவுடன் நெருக்கமான உறவுகொண்ட வகையிலும் இருநாடுகளுடனும் நட்புறவு உண்டு. எனினும், பிறநாட்டு விசயங்களில் தலையிடக்கூடாது என்ற நவீன  அணிசேரா/வெளியுறவுக் கொள்கையை அஹிம்சாதேசம் இந்தியா கடைபிடிப்பதால் இந்நாடுகள் விசயத்தில் மறந்தும்  வாய் திறக்கவில்லை.
 
இந்நிலையில் பர்மிய முஸ்லிம்களின் விசும்பல் ஐரோப்பாவின் நோயாளி நாடான துருக்கியின் காதுகளை எட்டியது. அதிகாரப்பூர்வமற்ற பயணமாக மியான்மர் வந்திருந்த துருக்கி பிரதமர் தய்யிப் கலங்கிப் போனார். அவர் மனைவி எமினி எர்டகான் பாதிக்கப்பட்ட பர்மிய முஸ்லிம்களின் நிலையைக் கண்டு கண்ணீர்விட்டுக் கதறி விட்டார். எனினும் ஆறுதலைத் தவிர வேறெந்த உறுதிமொழியையும் அவர்களால் கொடுக்க முடியவில்லை.
 
இது ஒருபக்கமிருக்க, எண்ணெய் வளமிக்க சவூதி அரசு 500,000 பர்மிய முஸ்லிம்களுக்கு வேலையுடன் கூடிய  அகதிகள் குடியுரிமையை வழங்குவதாகக் கடந்த வாரம் அறிவித்தது. அண்டைநாடான பங்களாதேஷ் பர்மிய அகதிகளுக்கு உதவ மறுத்து விட்டபோது, பாலைவனத்திலிருந்து அடைக்கலக் காற்று வீசியது பாதிக்கப்பட்ட பர்மிய முஸ்லிம்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது.
 
உள்நாட்டு வேலைவாய்ப்புகளில் சவூதிகளுக்கு உரிய இடம்  இல்லாததால் எகிப்து, லிபியா போன்று எந்நேரமும் புரட்சி வெடித்து வளைகுடா புயல் சவூதியிலும் வீசக்கூடும் என்ற கலக்கம் சவூதி ஆட்சியாளார்களுக்கு இருந்து வரும் நிலையில், பர்மிய முஸ்லிம்களுக்கு அடைக்கலம் அறிவித்தது, சவூதி மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மனிதாபிமானக் கடமை என நிறைவு கொண்டனர்.
 

கடந்த வாரம் வரை அந்நியச் செலாவணி அனுப்பி இந்தியாவை வலுப்படுத்தியவர்கள் இன்று விமான டிக்கெட்டிற்காக இந்திய தூதரக வாசலில் வரிசையில் நிற்கும் அவல நிலைக்கு வந்துள்ளனர்.

 

இந் நிலையில்தான் சவூதி அரேபிய அரசு உள்நாட்டு வேலைவாய்ப்புகளில் 10% சவூதிகளுக்கு இடஒதுக்கீடு (நிதாகத்) என்ற திட்டத்துடன், சட்ட விதிகளுக்குப் புறம்பாக வேலை செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திர விஸாக்களை ரத்து செய்து அறிவித்தது. அதாவது, சவூதி அரேபியரின் ஸ்பான்சரில் விஸா பெற்று வேறொரு சவூதியிடம் சுதந்திரமாக வேலை செய்யக்கூடிய ஆசாத் விஸா அங்கீகாரங்களை அதிரடியாக ரத்துச் செய்தது. இதனால், லட்சக்கணக்கில் ஏஜெண்டுகளிடம் பணம் செலுத்தி விஸா பெற்று சிறு/பெரு முதலாளிகளாகச் சொந்தத் தொழில் செய்துவந்த வெளிநாட்டவர்களுள் குறிப்பாக இந்தியர்கள் பலரின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. அவ்வாறு பணியாற்றும் இந்தியர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் கேரளத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கேரளா ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படும் சவூதியின் முடிவு குறித்து மத்திய காங்கிரஸ் அரசு உருப்படியாக பெருமளவில் எதையும் செய்யவில்லை என்றாலும் கேரளாவிலுள்ள மூன்று விமான நிலையங்களில் இதற்கான சிறப்பு கவுண்ட்டர்களை அமைத்துள்ளனர். அவ்வாறு நாடு திரும்பும் ‘மலையாளிகளின்’ மறுவாழ்வுக்கான திட்டங்களையும் தீட்டியுள்ளதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன. சவூதியிலிருந்து வேலையிழந்து நாடு திரும்புபவர்களின் விமான  கட்டணத்தை மத்திய அரசு ஏற்கும் என்று அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
 
கடந்த வாரம் வரை அந்நியச் செலாவணி அனுப்பி இந்தியாவை வலுப்படுத்தியவர்கள் இன்று விமான டிக்கெட்டிற்காக இந்திய தூதரக வாசலில் வரிசையில் நிற்கும் அவல நிலைக்கு வந்துள்ளனர். சவூதிவாழ் இந்தியர்கள் பலரின் இந்தத் திடீர் அவல நிலைக்கு யார் காரணம்? உள்நாட்டு மக்களுக்கு வேலைகளில் 10% ஒதுக்கீடு வழங்கம் சவூதி அரசின் திட்டமா? சுதந்திரமாகப் பணியாற்றி வெளிநாடுகளில் முதலாளிகளாக இருக்கலாம் என்ற ஆசையில் முறையற்ற விஸாவில் சவூதி சென்ற இந்தியர்களா? போன்ற கேள்விகள் பொதுமக்கள் மனதில் எழுகின்றன.

இதை வாசித்தீர்களா? :   குவைத் IGC-யின் ரமளான்-2013 கூடார நிகழ்ச்சிகள்!

இவர்கள் ஓரளவு காரணம் என்றாலும் சவூதியின் இந்தத் திடீர் முடிவுக்கு மறைமுகக் காரணம் மியான்மர் பவுத்த தீவிரவாதிகள் என்று கூட ஒரு கோணத்தில் சொல்லலாம். ஐந்து லட்சம் பர்மிய அகதிகளுக்கு வேலையுடன் கூடிய அடைக்கலம் காரணமாக, சவூதியில் கடை முதலாளிகளாக இருந்த இலட்சக்கணக்கான இந்தியர்கள் அடுத்த மூன்று மாதங்களில் இந்தியாவுக்கு அகதிகளைப் போல் திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று கருதினாலும் அதில் பிழையுண்டோ?

 - N. ஜமாலுத்தீன்