திமுக ஆதரவு முஸ்லிம்களுக்கு!

டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த முஸ்லிம் சகோதரர்களின் கனிவான கவனத்திற்கு ஒரு கோரிக்கை:

இது தங்களைக் குற்றம் சாட்டும் பதிவல்ல; முழுமையாகப் படிக்கவும்.

நடந்து முடிந்த தேர்தலில் ‘பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது, அதனால் திமுக,காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டுப் போடுங்கள்; மற்றவர்களுக்குப் போட்டால் ஓட்டுப் பிரிந்து விடும்’ எனப் பிரச்சாரம் செய்தீர்கள்.

தங்கள் பிரச்சாரத்தின் தாக்கத்தால் முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஓட்டுகளைப் பெற்று, திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வென்றது. ஆனால் மத்தியில் ஆட்சி அமைத்தது என்னவோ பாஜக. அதுவும் பெரும்பான்மை பலத்துடன்.

பாஜக வெற்றி பெற்றவுடன் முழு வீச்சில் வட மாநிலங்களில் முஸ்லிம்களின் மேல் தாக்குதல் தொடங்கி விட்டது.

டெல்லியைத் தொட்டு நிற்கும் ஹரியானா மாநிலத்தின் குர்கான் (குருகிராம்) எனும் ஊரைச் சேர்ந்த முகம்மது பர்கத் ஆலம் என்னும் 25 வயது இளைஞர், தனது மாலைத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பும் வழியில் சங் பரிவார மத வெறியர்களால் ‘ஜெய் ஶ்ரீ ராம்’ என்று முழங்கச் சொல்லித் தாக்கப்பட்டுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் இதுதான் பாஜகவை எதிர்த்துக் குரல் கொடுக்க சரியான தருணம்.

நீங்கள் தூய உள்ளத்துடன், தொலை நோக்குடன் ‘பாஜக வந்துவிடக் கூடாது’ எனப் பிரச்சாரம் செய்தீர்கள்.

நமது கோரிக்கை என்னவெனில், “சங் பரிவார மத வெறியர்களால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அண்மைய தாக்குதல்களைக் கண்டித்துக் குரல் கொடுக்க வேண்டும்” என நீங்கள் திமுகவை வலியுறுத்த வேண்டும்.

ஸ்டாலின் பேச வேண்டும்.
கனிமொழி பேச வேண்டும்.
தயாநிதி மாறன் பேச வேண்டும்.

தயாநிதி மாறன் வெல்ல வேண்டும் என்பதற்காக தஹ்லான் பாகவியை B டீம் எனவும், துரோகி எனவும் பிரச்சாரம் செய்தீர்கள், அவர் சார்ந்த எஸ்டிபிஐ கட்சியின் பிரதிநிதிகள் சங் பரிவார வெறியர்களால் தாக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, சட்ட உதவி செய்வதாகக் கூறி இருக்கிறார்கள். முஸ்லிம்களின் மொத்த வாக்குகளையும் அள்ளிக்கொண்ட திமுக, எஸ்டிபிஐ கட்சியை முந்திக் கொண்டிருக்க வேண்டும். போகட்டும். முதல் எதிர்ப்பாக.ஒரு கண்டன அறிக்கையை திமுக விடலாமே!

பாஜக எம்பியான கௌத்தம் காம்பீர், சங் பரிவார மத வெறியர்களின் தாக்குதல்களைக் கண்டித்துப் பேசி இருக்கிறார், அது பாஜகவையே சங்கடப்படுத்தி இருக்கிறது.

இது போன்ற கண்டனங்கள் தொடரும்போது, அது ஒரு விவாதமாகும்; ஒரு நெருக்கடியை உண்டாக்கும், அதன் மூலம் ஒரே ஒரு முஸ்லிம் பாதுகாப்புப் பெற்றாலே மகிழ்ச்சி!.

நீங்கள் திமுகவிற்குக் கொடுக்கும் அழுத்தத்தால் சங் பரிவார மத வெறியர்களின் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும். அதற்காகத்தான் நீங்கள் திமுகவிற்குப் பிரச்சாரம் செய்தீர்கள். இப்போது இதற்காக பிரச்சாரம் செய்யுங்கள்.

இதை வாசித்தீர்களா? :   நீரின்றி அமையாது உலகு ...

செய்வீர்களா?,
திமுக ஆதரவு அன்பர்களே! செய்வீர்களா?

எதிர்பார்ப்புடன்.
-ஹமீது ஃபைஸல்