வாங்க ஜிஹாதி ஆகலாம்!

குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் இஸ்லாமிய அறநெறிகளைப் போதிக்கும் கல்விக் கூடங்களுக்கு “மதரஸா” என்று பெயர். இதர கல்விக் கூடங்களைப் போன்றே மதரஸாக்களிலும் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் மேற்கண்ட இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு உலகக் கல்வி (conventional curriculum) திட்டத்தையும் போதிக்கும் மதரஸாக்களும் நடைமுறையில் உள்ளன.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை கல்வி கற்பதில் ஆண்-பெண் பேதமில்லை. கல்வி கற்பது இருபாலர் மீதும் கடமையென கல்வியை மார்க்கக் கடமையாக அறிவிக்கிறது இஸ்லாம். அரேபிய வரலாற்றில் அறியாமைக் காலம் என்றறியப்பட்ட சூழலில் அரும்பெரும் தகவல்கள் அடங்கிய அறிவுப் பெட்டகமாக ‘வஹீ’ மூலம் இறக்கப்பட்ட குர்ஆனின் ஒளியில், அரேபியர்கள் ஐரோப்பாவை ஆளுகைக்குள் கொண்டுவர முடிந்தது.

கிறிஸ்தவப் பாதிரிகளின் ஆதிக்கத்தில் இருந்த ஐரோப்பாவில் இஸ்லாம் அறிமுகமாகும் வரை, ஐரோப்பிய வரலாற்றை இருண்ட காலம் (Dark age) என்றே வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்திருந்தனர். அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மட்டுமின்றி இஸ்லாம் சென்ற இடங்களிலெல்லாம் ஒளிவிளக்காகவே திகழ்ந்துள்ளதற்கு இஸ்லாமிய அடிப்படையிலான கல்வியும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.

சமீபத்தில் மும்பை காவல்துறை அனுப்பியுள்ள குறிப்பாணையில் (memo) இஸ்லாமியப் பெண்களுக்கான அமைப்பு (GIO) நடத்தும் மதரஸாக்களில், மாணவிகளை மூளைச் சலவை செய்து ஜிஹாதிகளாக மாற்றுவதாகக் குறிப்பிட்டு அவற்றைத் தீவிரமாகக் கண்காணிக்கும்படி அறிவுறுத்தியுள்ள தகவல் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பு பல்வேறு கல்லூரிகளையும் பள்ளிக்கூடங்களையும் நடத்தி வருகிறது. மஹாராஷ்டிராவில் மூன்று இளநிலைக் கல்லூரிகளையும் 40 பள்ளிக்கூடங்களையும் நடத்தி வருகிறது. இவ்வமைப்பின் பெண்கள் பிரிவாக Girls Islamic Organization – GIO இயங்கி வருகிறது.

மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நற்பெயரைக் கெடுக்க நடைபெறும் திட்டமிட்ட சதி என ஜமாத் கருத்து தெரிவித்துள்ளது. இதற்காக மும்பை காவல்துறை மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிடில் மும்பை காவல்துறைமீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் அந்த அமைப்பின் மஹாராஷ்டிரா மாநிலச் செய்தித் தொடர்பாளர் முஹமது அஸ்லம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மும்பை காவல்துறை மேற்கண்ட குறிப்பாணை பொதுவானதல்ல என்றும் அது காவல்துறையின் தனிப்பட்ட ரகசிய நடவடிக்கைக்காக துறை சார்ந்த சுற்றறிக்கை என்றும் உளவு அமைப்புகளின் அறிக்கையின் படியே அச்சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்கள் மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்டுள்ள தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்பது ஒருபக்கமிருக்க, மும்பை காவல் துறை மற்றும் உளவு அமைப்பினரின் இஸ்லாமோஃபோபியா (இஸ்லாத்தின் மீதான அதீத அச்சம்) தெளிவுபடுத்தப்பட வேண்டியதுமாகும்.     – ஜமாலுத்தீன்

அபினவ் பாரத் என்ற பெயரில் மாணாக்கர்களுக்கும் துர்கா வாஹினி என்ற பெயரால் இளம்பெண்களுக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் துப்பில்லாத உளவுத்துறையும் காவல்துறையும் முஸ்லிம்களின் மதரஸாக்களைக் கண்காணிக்கச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கேலிக்கும் கண்டனத்துக்கும் உரியதாகும்.

இதை வாசித்தீர்களா? :   காந்தியும் பன்முக இந்திய தேசமும்

மும்பை காவல்துறை அனுப்பியுள்ள குறிப்பாணை துறைசார்ந்ததாகவே இருந்தாலும் கல்வியில் பின்தங்கியுள்ள ஒரு சமூகத்தின் செயல்பாட்டைத் தீவிரவாதக் கண்ணோட்டத்தில் அணுகியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. குர்ஆனைப் போதிப்பது ஒன்றும் ரகசிய நடவடிக்கை அல்ல. குர்ஆனும் அதற்கானதுமல்ல. 1400 ஆண்டுகளுக்கும் மேலாகப் போதிக்கப்படும் குர்ஆனை வெறும் இருபதாண்டுகளாக முஸ்லிம்கள் மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்டுள்ள தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்பது ஒருபக்கமிருக்க, மும்பை காவல் துறை மற்றும் உளவு அமைப்பினரின் இஸ்லாமோஃபோபியா (இஸ்லாத்தின் மீதான அதீத அச்சம்) தெளிவுபடுத்தப்பட வேண்டியதுமாகும்.

தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள ஜிஹாத் என்ற சொல்லாடல் பயங்கரவாதச் சிந்தனையல்ல. யஜாஹத் (يجاهد) என்ற அரபுச்சொல்லுக்கு ஆங்கிலத்தில் strive என்று பொருள். மூலச்சொல்லான ஜஹ்தா (جهد) என்பதையே ஜிஹாத் குறிப்பிடப்படுகிறது. அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளபோது அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து மெய்வருத்தி, அநீதிக்கு எதிராக நடத்தப்படும் அறப் போராட்டமே, குர்ஆன் கூறும் ‘ஜிஹாத்’.

குர்ஆன் வசனங்கள் 002.18, 003:142, 004:95, 005:35, 005:54, 008:72,74,75; 009:16,19,20,24,44,86,88; 022:78; 0029:006,069; 049:015; 060:001, 060:11 ஆகியவை அல்லாஹ்வின் பாதையில் போராடுவது குறித்து எடுத்துரைக்கிறது. ஜிஹாத் என்ற அறப்போராட்டமே வரலாற்றில் பல்வேறு வகைகளில் நடந்துள்ளது. ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டம், முதலாளிகளுக்கு எதிரான பிரெஞ்சுப் போராட்டம், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பாலஸ்தீனம், ஈராக், ஆப்கன் ஆகிய நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

ஆக, ஜிஹாத் என்பது அநீதிக்கும் அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான அறப்போராட்டமே என்ற அடிப்படை இஸ்லாமிய அறிவு மும்பை காவல்துறைக்கு இருந்திருந்தால் ரகசிய சுற்றறிக்கை/குறிப்பாணை வெளியிட்டிருக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்காது. உலக நாடுகளின் சட்டங்களும் நீதிமுறைகளும் இவற்றுக்கு எதிராகவே செயல்பட்டு, குடிமக்களைக் காப்பதாகச் சொல்வதால் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரானவர்கள் அனைவருமே ஜிஹாத் செய்ய வேண்டும்.

எனவே, வாங்க ஜிஹாத் செய்யலாம்!

– N. ஜமாலுத்தீன்