
கடந்த 11-08-2013 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியான தினமணி நாளிதழை வாசிக்க நேரிட்டது.
அதில் “ஒன்பது முறை உருவான டில்லி நகரம்!” என்ற தலைப்பில் வெளியான சிறிய வரலாற்று துணுக்கிலும் காழ்ப்புணர்வு கொப்புளித்ததைக் கண்டு வியந்தேன். முக்கியமான அந்த துணுக்கை நஞ்சுடன் எழுதியவர் யார் என்று பார்த்தேன். ஆஹா… பொருத்தமான பெயர் தான்.
முஸ்லிம் மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடும் இடத்தில் எல்லாம் “அவன்” என்ற பதமும், முஸ்லிம் அல்லாத ஒருவரின் பெயரைக் குறிப்பிடுகையில் “அவர்” என்ற பதமும் புன்னகைக்க வைத்தது. அடடே! என்னவொரு நேர் கொண்ட பார்வை!
தினமணி நாளிதழ் செய்தியாளர்களின் நடுநிலை(?) ஏற்கனவே ஊரறிந்த விஷயம் தான் என்றாலும், ஒரு சிறு துணுக்கில் கூட தனது குரோதத்தை வெளிப்படுத்தும் பாங்கு வியக்க வைத்தது.
ஏதேனும் ஒரு சிறிய சம்பவத்தில் கைகலப்பில் ஈடுபட்டிருந்தவர் முஸ்லிம் என்றால் அவன் – இவன் என்று எழுதுவதும், பெரும் மதக்கலவரம் – குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி பலரைக் கொன்று போட்டவர் முஸ்லிம் அல்லாதவர் என்றாலும் அவர் – இவர் போட்டு எழுதுவதும் தினமணிக்குப் புதிதல்ல…
“ஓராண்டில் 6 கொலைகள்” என்று அப்பாவி இந்து மக்களுக்கு மதவெறியூட்டும்படியான தலைப்பை வைத்ததும், பின்னாளில் அக்கொலைகள் கள்ளக் காதல், கந்து வட்டி, முன் விரோதம், கொடுக்கல் வாங்கல் ஆகியவைகளால் நிகழ்ந்தவை என்று நிருபணமாகி தினமணியின் நிமிர்ந்த நன்னடை தலைகுனிந்து நாறியதையும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான இந்துக்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்களே! [ஆடிட்டர் ரமேஷ் கொலையும் அல்லறை சில்லறை ரவுடிகளும் என்ற சத்தியமார்க்கம்.காம் தளப் பதிவைக் காண்க]
இன்றைய காலகட்டத்தில் மரியாதை நிமித்தமாக அரசியல் தலைவர்களைக் குறிப்பிடும் அவர் / அவர்கள் போன்ற பன்மை விகுதிகள் எல்லாம் பண்டைக் காலத்தில் எழுதாமல் அவன் / இவன் என்று குறிப்பிடுவார்கள்; அது மாதிரியோ இது என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய மூத்த தமிழறிஞர் ஒருவரைத் தொடர்பு கொண்டேன். அவர் கூற்றிலிருந்து சில:
ஆண்பால் படர்கை ஒருமை விகுதி’அன்’ மன்னன் அரசன் என்றெல்லாம் எழுதுவதை விடுத்து மன்னர் சிவாஜி என்று பன்மை விகுதியுடன் எழுதுவார்கள். ஆனால் முகலாய மன்னன் ‘அவன்’தான். காப்பிய நாயகன் ராமன் பெயர் கூட இப்போது இவர்களது வெறியில் “ராமர்” ஆனதால் “ராமர் கோவில்” என்றுதானே எழுதுகிறார்கள். தருமனை தருமர் என்கிறர்கள்; அல்லது தருமராஜா என்கிறார்கள். கம்பன் கம்பராகவும், திருவள்ளுவன் திருவள்ளுவராகவும் ஆகி விட்டார்கள். திருநாவுக்கரசு கூட “சர்” ஆகிவிட்டார். ஆனால் முகலாய மன்னன் மட்டும் என்றென்றும் ‘அவன்’தான். |
தினமணி ஆசிரியரே! அவ்வப்போது மாறும் ஆளும்கட்சிக்கு ஏற்றார்போன்று வாலாட்டி தலையங்கம் என்ற பெயரில் எதையாவது எழுதி உங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளுங்கள். [மின்வெட்டு : இயலாமையும் நடுநிலை இல்லாமையும் என்ற சத்தியமார்க்கம்.காம் தளப் பதிவைக் காண்க]
ஆனால், உலகத் தமிழர்கள் காதுகளில் பூவை காதில் செருகி விட்டு, நெற்றியில் நாமம் போட்டு விட்டு, “நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை” என்று தினமணி நாளிதழின் முகப்பில் நாளை விடிகாலை அச்சுப்பிரதிகள் வெளிவரும்முன் உங்களின் இரட்டை நிலைபாடுகள் மூலம் தமிழ் சமூகத்திற்கு இழைக்கும் அநீதிகள் சரியா? என்று ஒரே ஒரு நொடி யோசியுங்கள்.
உங்களின் ஒரு சில செய்தியாளர்கள் தங்களின் மதவெறியை தீர்க்கும் வடிகாலாக ஆக்கப்பூர்வமான ஊடகத்தை ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கீழ்த்தரமான யுக்திகளைப் பின்பற்றி இவர்கள் செய்யும் இத்தகைய தவறுகளின் மூலம், ஒட்டு மொத்த தினமணி நிர்வாகமும் உலகத் தமிழ் சமூகத்திற்கு முன் அம்மணமாக நிற்கிறது என்ற யதார்த்தத்தை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள்.
– அபூ ஸாலிஹா
தொடர்புடைய பதிவுகள்:
வக்கிர நாளிதழின் ஊடக விபச்சாரம்!
எகிப்த் நிகழ்வு: நசுக்கப்பட்ட ஜனநாயகம்!
ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!