இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?

Share this:

டலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என மாடர்ன் கலாசாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர். ‘நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உகந்தவைதானா? தோல் மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.

‘காலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதாசர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும். இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும்.

உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.

ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கும் கொளுத்தும் கோடைக்கும் ஏற்றது. காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். ஈரத்தை நன்கு உள்வாங்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.” என்கிறார் விளக்கமாக.

இறுக்கமான ஆடைகளால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நரம்பியல் மருத்துவர் அருள் செல்வன் பேசுகையில்,

‘இறுக்கமான ஆடை அணிவது என்பது இரு பாலருக்குமே ஏற்றது அல்ல. ஆண்களைப் பொருத்தவரை, அவர்களுடைய பிறப்புறுப்பிற்குக் கொஞ்சம்கூடக் காற்று செல்ல வசதி இல்லாமல் போய்விடுகிறது.  இதனால், வியர்வை சுரந்து அதிகப்படியான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இயற்கையாகவே விதைகள் (testes) குளிர்ந்த சூழலைப் பெறுமாறு அமைந்துள்ளது. ஆனால், மிக இறுக்கமான உள்ளாடைகள் அணியும்போது, அவர்களுக்குச் சுரக்கக்கூடிய விந்துவின் திடத்தன்மை குறைவதுடன், அந்த இடத்தில் உருவாகும் அதிகப்படியான வெப்பத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறையக்கூடிய வாய்ப்புகள் கூடும். மேலும், இறுக்கமான ஆடை அணிவதையே வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஆண்மைக் குறைவு மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.  

தொடை, கால் மரத்துப்போய் வலி ஏற்பட்டு, நரம்புகளில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும்.

சட்டையில் இறுக்கமான காலர் பட்டனைப் போட்டுக்கொள்ளுதல், டை அணிதல் போன்றவற்றால் கண்ணும் மூளையும் பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி தலைவலியும் மயக்கமும் உண்டாகும். பெல்ட் அணிந்துகொண்டு அளவிற்கு அதிகமான உணவினை எடுத்துக்கொண்டால், வயிற்றுப் பகுதி இறுக்கப்பட்டு,  இரைப்பையின் செயல்திறனைப் பாதித்து, நெஞ்சு எரிச்சலையும் அசிடிட்டியையும் உண்டாக்கிச் செரிமானத்தைத் தடை செய்யும். அதோடு, இறுக்கமான சாக்ஸ் அணிவதால், நடப்பதற்கே சிரமப்பட வேண்டியிருக்கும்.  காலில் உள்ள ரத்தக் குழாய்களை அழுத்திக் கால் வீக்கத்தை உண்டுபண்ணும். அதிலும், குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் எப்போதும், தளர்வான ஆடைகளையே  அணிய வேண்டும்” என்றார் அக்கறையுடன்.

பார்த்து டிரெஸ் பண்ணுங்க!

நன்றி: விகடன்

ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

1) ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்: நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் – கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் – ஆண்களுக்கும் – பெண்களுக்கும் சமமானவையே.

2) அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.

3) அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது – உரத்த ஆடையாக இருக்க வேண்டும்

4) அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் – ஆண்கள் – பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.

5) ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் – பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

6) அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம் – கருப்பு நிறம் – போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.