தோழியர் – 15 உம்மு தஹ்தா ( ام الدحداح)

Share this:

ருவர் – இரு நிகழ்வுகள் என்று மிகச் சுருக்கமாய்ப் பதிவாகியுள்ள அழுத்தமான ஒரு வரலாறு இது. நிகழ்வுகள்தாம் சுருக்கமே தவிர நமக்குக் தேவையான கருத்துகள் ஏராளம். படித்துப் பயன்பெற ஒரு வாய்ப்பு.

மதீனாவுக்கு இஸ்லாம் பற்றிய செய்தி பரவி, முதல் அகபா உடன்படிக்கையைத் தொடர்ந்து முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவுக்கு வந்து சேர்ந்தார் அல்லவா?

அவர் அங்கு இஸ்லாமியப் பிரச்சாரம் புரிந்து, முஸ்லிம்களுக்குக் குர்ஆன் கற்றுத்தரத் துவங்கிய ஆரம்பத் தருணங்களிலேயே இஸ்லாத்தினுள் நுழைந்த தம்பதியர் உம்மு தஹ்தா அவர் கணவர் தாபித் இப்னு தஹ்தா. கணவன், மனைவி இருவரும் தங்களின் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு குடும்ப சமேதராய் இஸ்லாத்தை ஏற்றனர்.

அதன் பிறகு, இரண்டாம் அகபா உடன்படிக்கை, மக்காவில் இதர கொடுமைகள் எல்லாம் நிகழ்வுற்று இறுதியில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்தார்கள். அங்கு மளமளவென்று புத்துணர்ச்சியுடன் இஸ்லாம் விரிவடைய, மதீனத்துத் தோழர்களான அன்ஸார்களிடம் போட்டியொன்று துவங்கியது. ‘மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நம் சகோதரர்கள் நம்மைவிட இஸ்லாத்தை அதிகம் அறிந்துள்ளார்கள். அப்பொழுதே நல்லறம் புரிய வாய்ப்பு அமைந்து, நன்மைகளில் நம்மைவிட வெகு அதிகம் முந்தியிருக்கிறார்கள். எப்படியும் அவர்களை எட்டிப்பிடித்துவிட வேண்டும். முடிந்தால் இன்னும் கொஞ்சம் ‘தம்’ பிடித்து அவர்களை விஞ்சிவிட வேண்டும்’ என்ற போட்டி. எனவே இஸ்லாத்தைக் கற்க, கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் அவர்கள் நபியவர்களை அண்மினார்கள்.

கற்பது என்றதும் குர்ஆனை ஓதுவது, மனனம் செய்வது, நபிமொழிகளை ஒப்பிப்பது என்ற வகுப்பறை அடிப்படையில் அவர்களது பாடத்திட்டம் அமைந்துவிடவில்லை. வாழ்ந்தார்கள். குர்ஆனையும் நபிமொழியையும் ஒவ்வொரு எழுத்தாக எடுத்து சிந்தையிலும் செயலிலும் விதைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். தோழர்கள் வரலாற்றில் சிலரது வாழ்க்கை உதாரணங்களை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதைப்போல் இந்தத் தம்பதியர் வாழ்வும் வலுவான ஒரு சான்றாய் வரலாற்றில் பதிந்து போனது.

குர்ஆனின் 57ஆவது சூரா அல்-ஹதீத். அதில் பதினோராவது வசனம், “அல்லாஹ்வுக்கு அழகான கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான், மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.” இதை வாசித்த உம்மு தஹ்தாவின் கணவர் தாபித் ரலியல்லாஹு அன்ஹுவுக்குக் கேள்வியொன்று எழுந்தது. நபியவர்களிடம் சென்று விளக்கம் கேட்டார். “அல்லாஹ்வின் தூதரே! இறைவனுக்கோ யாருடைய தேவையும் இல்லை. பின் அவன் ஏன் கடன் கேட்கிறான்?”

“அதற்குப் பகரமாய் உம்மைச் சொர்க்கத்தில் அனுமதிக்க” என்று பதிலளித்தார்கள் நபியவர்கள். கண்ணியமான நற்கூலி சொர்க்கம்.

“நான் அல்லாஹ்வுக்குக் கடன் அளித்தால் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் சொர்க்கம் என்று அவன் உத்தரவாதம் அளிக்கிறானா?” என்று ஆச்சரியமுடன் மீண்டும் கேட்டார் தாபித்.

“ஆம் அபூ தஹ்தா” என்றார்கள் நபியவர்கள்.

உடனே தாபித், “அல்லாஹ்வின் தூதரே! தங்களது கையை நீட்டுங்கள்“ என்றார்.

நபியவர்கள் கையை நீட்ட, அதன்மேல் தம் கையை வைத்து, “என்னிடம் இரண்டு பழத் தோட்டங்கள் உள்ளன. அவற்றைத் தவிர வேறு ஏதும் சொத்து இல்லை. அனைத்தையும் அல்லாஹ்வுக்கு அளிக்கிறேன்.”

“அவற்றுள் ஒன்றை அல்லாஹ்வுக்கு அளித்துவிட்டு மற்றொன்றை உன் குடும்பத்தினருக்காக வைத்துக் கொள்” என்று அறிவுறுத்தினார்கள் நபியவர்கள்.

“தாங்களே சாட்சி. இரண்டில் சிறப்பான ஒரு தோட்டத்தை அல்லாஹ்வுக்காக அளிக்கிறேன். அதில் 600 பேரீச்ச மரங்கள் உள்ளன.”

“சொர்க்கத்திலுள்ள ஏராள பேரீச்ச மரங்கள் தமது குலைகளை அபூ தஹ்தாவுக்காகத் தாழ்த்திவிட்டன. அவற்றில் முத்தும் ரத்தினமும் முழுமையாக நிறைந்துள்ளன” என்று நல்லறிவிப்பு செய்தார்கள் நபியவர்கள்.

600 மரங்கள் நிறைந்துள்ள தோப்பை அப்படியே எடுத்து தானமளிப்பது இலேசுப்பட்ட காரியமல்ல. தென்னையோ, வாழையோ 600 மரங்கள் உள்ள தோப்பை அல்லாஹ்வுக்காக தானமளிப்பதைக் கற்பனை செய்துபாருங்கள்; நவீனப்படுத்திச் சொல்வதென்றால், ஆயிரம் கார்கள் இருந்தால் அவற்றுள் 600 கார்களை தானமளிப்பதை எண்ணிப்பாருங்கள். இந்தச் செயலின் உயர்மதிப்பு புரியும். விஷயம் அது மட்டுமன்று. அவர் தானமளித்த அந்தக் குறிப்பிட்ட தோப்பில்தான் அவர் மனைவி உம்மு தஹ்தாவும் பிள்ளைகளும் வசித்துவந்தனர்.

நேரே தோப்பிற்கு வந்தார் அபூதஹ்தா. “உம்மு தஹ்தா” அழைத்தார்.

“இதோ வந்தேன்.”

“தோப்பை விட்டு வந்துவிடு. இதை உயர்ந்தவன் கண்ணியத்திற்குரியவன் அல்லாஹ்வுக்காகத் தானமளித்துவிட்டேன்.”

நம் சொத்தில் பாதியை தானமளித்துவிட்டேன், இந்தத் தோப்பும் வசிப்பிடமும் இனி நமதில்லை’ என்றால் ஒரு மனைவியின் பதில் எப்படி இருக்கும்? பிள்ளைகளின் நலன், எதிர்காலம் என்று எத்தனை கவலை, சிந்தனை புத்தியை ஆக்கிரமிக்கும்? ஆனால் உம்மு தஹ்தா?

“லாபகரமான வணிகம் புரிந்துவிட்டு வந்திருக்கிறீர் அபூ தஹ்தா” என்று வெகு எளிதாய்ச் சொல்லிவிட்டார்.

அப்பொழுது அவர்களின் பிள்ளைகள் அத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். விடுவிடுவென்று சென்று பிள்ளைகளை அழைத்தார். அவர்களது ஆடைப் பைகளிலும் கைகளிலும் பொறுக்கி வைத்திருந்த பேரீச்சங்கனிகள் இருந்தன. அனைத்தையும் வாங்கி தோட்டத்திலேயே கொட்டினார்.

“இனி இவை நமதல்ல செல்லங்களே. வாருங்கள் போவோம்.”

விளக்கம், வியாக்கியானம், சர்ச்சை, மாற்றுக் கருத்து – எதுவுமே இல்லை. தீர்ந்தது விஷயம்.

அடுத்தது உஹதுப் போர்.

முஸ்லிம்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருந்த கடுமையான நேரம். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று வதந்தி பரவி ‘எல்லாம் முடிந்தது’ என்று பல முஸ்லிம்கள் வெலவெலத்துப் போயிருந்தார்கள். தாபித் இப்னு தஹ்தா தம் மக்களை வேகமாய் நெருங்கினார்.

“அன்ஸாரித் தோழர்களே! அல்லாஹ்வின் தூதர் அப்படியே கொல்லப்பட்டிருந்தால்தான் என்ன? அல்லாஹ் என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனுக்கு மரணமில்லை. உங்களது மார்க்கத்திற்காகப் போரிடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நீங்கள் வெற்றி அடைவீர்கள்.”

மிகத் தெளிவான அந்தச் சிறு உரை, வீராவேசமான அந்தப் பேச்சு அக்குழுவிற்குப் பெரும் தெம்பையும் உணர்ச்சிப் பெருக்கையும் ஏற்படுத்தியது. பொங்கியெழுந்து எதிரிகளின் படைப்பிரிவைத் தாக்க ஆரம்பித்தார்கள். மூர்க்கமாய் நடைபெற்றது போர். இறுதியில் தாபித் இப்னு தஹ்தா உயிர்த் தியாகி ஆனார்.

இந்தச் செய்தி உம்மு தஹ்தாவை அடைந்தது. கணவனை இழப்பது ஒரு மனைவிக்கு எத்தகைய பேரிழப்பு? ஆனால் அழுகை இல்லை! ஒப்பாரி இல்லை. தம் கணவரின் தியாகத்திற்கு உரிய பரிசு என்னவாக இருக்கும் என்பதில் அவருக்கு எந்தக் கலக்கமும் இல்லை. எனவே அவரது ஆர்வமும் அக்கறையும் விசாரிப்பும் அனைத்தும் முற்றிலும் வேறாய் இருந்தன.

“அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்? அவருக்கு ஏதும் பாதிப்பு இல்லையே?”

இறுதியில் அல்லாஹ்வின் தூதரைக் கண்டதும், “தாங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் அல்லவா? அது போதும் எனக்கு. இதர துக்கம் துச்சம்” என்றார் உம்மு தஹ்தா. பொருளினும் உயிரினும் மேலானவர் நபியவர்கள் என்பது சொல்வதும் எழுதுவதும் எளிது. வாழ்ந்து காட்டுவது?

வாழ்ந்து மறைந்தார் உம்மு தஹ்தா.

ரலியல்லாஹு அன்ஹா!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

[தோழியர் முகப்புக்குச் செல்ல]


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.