தோழர்கள் – 30 – துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ – الطفيل بن عمرو الدوسي

Share this:

துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ

الطفيل بن عمرو الدوسي

அரேபியாவில் தவ்ஸ் என்றொரு கோத்திரம். அக்கோத்திரத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் தம் மக்களையெல்லாம் மாய்ந்து மாய்ந்து இஸ்லாத்திற்கு அழைத்துக் கொண்டிருந்தார். அவரின் தந்தை, மனைவி தவிர வேறு யாரும் பெரிதாய் அவர் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. “ஹும்! நல்லாத்தானே இருந்தார். மக்காவுக்குச் சென்று வந்ததிலிருந்து இவருக்கு ஏதோ ஆகிவிட்டது போலிருக்கிறது” என்று உதாசீனப்படுத்திவிட்டு தத்தம் வேலைவெட்டி, வழிபாடு என்று இருந்துவிட்டனர்.

சொல்லிப் பார்த்தார்; விவரித்துப் பார்த்தார்; இறைவசனம் சொல்லி எச்சரித்துப் பார்த்தார்; யாரும் கேட்பதாய் இல்லை. ஆனால் ஓர் இளைஞர் இருந்தார். அவர் படு சூட்டிகை, கெட்டி. சட்டென்று பிடித்துக் கொண்டார் அந்தச் செய்தியை. “இது எனக்குப் புரிகிறது. உன்னதம் இது. நான் ஏற்றுக் கொள்கிறேன்” அவ்வளவுதான். வேறு யாரும் வரவில்லை.

 

வெறுத்துப் போனது அவருக்கு. ஒருகட்டத்தில் மிகவும் நொந்து மனமுடைந்துபோன அந்த மனிதர், அந்த இளைஞரையும் அழைத்துக் கொண்டு “வா போகலாம்” என்று நபியவர்களைச் சந்திக்க மக்காவுக்குக் கிளம்பிவிட்டார். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து விபரமெல்லாம் கூறினார். தம் மக்களின்மேல் பெரும் கோபம் இருந்தது அவருக்கு.

“இந்த இளைஞர் யார்?” விசாரித்தார்கள் நபியவர்கள்.

“என் கோத்திரம்தான். புத்திசாலிப் பையன். உடனே ஏற்றுக் கொண்டார்”

“உன் பெயர் என்ன?” என்று அந்த இளைஞனிடம் கேட்டார்கள்.

“அப்துல் ஷம்ஸ்” சூரியனின் அடிமை என்று பொருள்படும் பெயர்.

“அது வேண்டாம். இன்றிலிருந்து உன் பெயர் அப்துர் ரஹ்மான்” அருளாளனின் அடிமை என்று பெயர் மாற்றப்பட்டது.

“என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அல்லாஹ்வின் தூதரே! நான் இன்றிலிருந்து அப்துர் ரஹ்மான்”

அந்த மனிதர் நபியவர்களிடம் தொடர்ந்தார்: “அல்லாஹ்வின் தூதரே! தங்களது சத்தியத் தூதுச் செய்தியை மறுத்துவிட்ட என் குல மக்களைத் தாங்கள் சபிக்கவேண்டும்”.

அமைதியாக கை, கால், முகம் கழுவி ஒளுச் செய்து கொண்டார்கள் நபியவர்கள்.

“அவ்வளவுதானா நம் மக்கள்” என்று பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் அப்துர் ரஹ்மான். பிற்காலத்தில் அபூஹுரைரா என்ற பெயரில் மிகவும் பிரபல்யமடையப் போகும் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு.

oOo

உக்காள்! மக்காவின் அருகே அமைந்திருந்த சந்தை. ஆண்டுதோறும் கூடும். புனித மாதங்கள் என்று கருதப்பெற்ற துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களில் இந்தச் சந்தையில் அரேபியாவிலுள்ள அனைத்துக் குலம், கோத்திரத்து மக்கள் வந்து குழுமுவார்கள். வியாபாரம், பண்டமாற்று, அது-இது என்று சுறுசுறுப்பாய் இருக்கும். பின்னர் அந்த மக்கள் அப்படியே மக்காவிற்குச் சென்று அஞ்ஞானக் காலத்துக் கடமைகளை கஅபாவில் நட்டுவைத்துள்ள சிலைகளுக்குச் செய்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்புவார்கள். அப்பொழுது அவர்களுக்கு அதுதான் ஹஜ்ஜுக் கடமை. நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் துவங்கி வைத்த ஹஜ்ஜுக் கடமை, நாளாவட்டத்தில் உருமாறி, விக்கிரக ஆராதனையாக மாறிவிட்டிருந்த கொடுமை அது.

உக்காள் போன்றே மஜன்னா, துல்மஜாஸ் என்ற சந்தைகளும் இருந்தன. உக்காள், மக்கா-தாயிஃப் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே அமைந்திருந்தது. மஜன்னா, துல்மஜாஸ் இரண்டும் அரஃபாவுக்கு அருகே அமைந்திருந்தன. இவற்றில் உக்காள் மட்டும் மிகவும் பிரசித்தம்.

ஆண்டுதோறும் திருவிழா, சந்தை என்று நம் ஊர்ப்புறங்களில் கூடும்போது ஏதாவது போட்டி நடத்துகிறார்கள் இல்லையா, அதைப்போல் அந்தக் காலத்தில் அந்தச் சந்தையில் கவிதைப் போட்டி நடைபெறும். இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்குமுன் அரேபிய மக்களின் வாழ்க்கையில் கவிதை பெரும்பங்கு வகித்துக் கொண்டிருந்தது. கதை சொல்ல; வரலாறு விவரிக்க; காதல், வீரம், மூதாதையர் பெருமை, பெருந்தன்மை சொல்ல; மகிழ, தூற்ற, இகழ என்று எதெற்கெடுத்தாலும் கவிதை. அதுவும் அதன் வார்த்தைகளும் அமைப்புகளும் ஏனோதானோ என்றெல்லாம் கிடையாது. சிறந்து விளங்கக்கூடியவை. இந்தச் சந்தையில் கவிதை போட்டா போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொதுமக்கள் மத்தியில் கவிஞர்கள் தங்களது கவிதைகளை வாசித்துக் காட்ட, அதில் வெற்றிபெறும் கவிதைக்குப் பெரும் அந்தஸ்து  கிடைக்கும். என்ன அது? அந்தக் கவிதையை எழுதி கஅபாவின் சுவரில் கட்டித் தொங்கவிடுவார்கள். கோடி ரூபாய் பரிசு என்பதைவிட உயர்ந்த பெருமிதம், அங்கீகாரம் அது அவர்களுக்கு. இத்தகு கவிதைகளுக்கு அல்முஅல்லகாத் – “தொங்கும் கவிதைகள்” என்று பெயர்.

ஆண்டுதோறும் இந்தச் சந்தைகளுக்கு ஆயிரக்கணக்கில் வந்து குழுமும் மக்களை அணுகித் தம் பிரச்சாரத்தைத் தொடர ஆரம்பித்திருந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இறைவசனம் இறங்கிய ஆரம்பத் தருணங்களில் நபியவர்களின் சொந்த பந்தங்களுக்கும் கோத்திரத்தினருக்கும் இஸ்லாமிய அழைப்பையும் இறை எச்சரிக்கையையும் சொல்லும்படி மட்டுமே அமைந்திருந்தன இறை கட்டளைகள். ஏற்ற சிலரைத் தவிர மீதமிருந்த பலர் கச்சைகட்டி எதிர்ப்பைக் காட்டி, சகட்டுமேனிக்கு அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். சொந்தங்களுக்கான பிரச்சாரத்தில் பெரும் முன்னேற்றம் இல்லாமல் போனது நபியவர்களுக்கு.

நபியவர்களுக்குப் பெரும் ஆதரவாய் இருந்துவந்த அவர்களின் அருமை மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹா இறந்ததைத் தொடர்ந்து, குரைஷிகளின் துஷ்டத்தனத்திலிருந்து நபியவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துவந்த பெரிய தந்தை அபூதாலிபும் மறைந்துவிட, பெரும் சிக்கலான சூழ்நிலை உருவாகிப் போனது அவர்களுக்கு. இந்நிலையில், அனைவருக்கும் அழைப்பு விடுக்க இறைக் கட்டளை வந்ததும், தம் பிரச்சாரத்திற்கு நபியவர்கள் தேர்ந்தெடுத்தவை பல்வேறு பகுதிகளிலிருந்து பெருவாரியான மக்கள் வந்து கூடும் இந்தச் சந்தைகள்.

கூட்டம் கூட்டமாய்த் தத்தம் கோத்திங்களாகக் குழுமியிருப்பவர்களை அணுகி, ஏகத்துவ அழைப்பை எடுத்து வைப்பார்கள் நபியவர்கள்; குர்ஆன் வசனங்களை ஓதிக் காண்பிப்பார்கள்; அவர்களுக்கு மத்தியில் உரையாடல் நிகழும்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு குரைஷிகள் அமைதியாக இருந்துவிடுவார்களா என்ன? தங்களது பங்கிற்குத் தங்கள் ஆட்களுடன் அதே சந்தையில் அதே மக்களிடம் எதிர் பிரச்சாரம் புரிய ஆரம்பித்தனர் அவர்கள். “பொய் சொல்கிறார்; ஜோசியம் சொல்கிறார்; மந்திரவாதி; அவர் உரைப்பதெல்லாம் இறைவசனங்கள் அல்ல கவிதை” இப்படிப் பலதரப்பட்ட அவதூறுகள்.

நபியவர்களின் பிரச்சாரத்திற்கு முக்கிய எதிரி ஒருவன் இருந்தான்; அபூலஹப்! இவன் வேறு யாருமல்லன்; நபியவர்களின் சொந்த பெரியப்பா. நபியவர்கள் ஒரு கூட்டத்திடம் தம் பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்டு நகரும்வரை பின்னாலேயே சற்று தூரத்தில் காத்திருப்பான். பின்னர் கூட்டத்தினரிடம்  வந்து, “அந்த மனிதர் உங்களது முக்கிய தெய்வங்களான அல்-லாத், அல்-உஸ்ஸாவை நிராகரிக்கச் சொல்கிறார்; அவருடைய முட்டாள்தனமான செயல்களைப் பின்பற்ற உங்களை அழைக்கிறார்; அவர் பேச்சைக் கேட்காதீர்கள்”.

அந்த எதிர்ப் பிரச்சாரத்திற்கு பலன் இருக்கவே செய்தது. மக்கள் குழம்பினார்கள். ஆனால் குழுவாக, கோத்திரமாக இல்லாவிட்டாலும் இடையிடையே தனிப்பட்ட சிலர் செவி சாய்த்தனர்; இணங்கினர். ஆக, சந்தைகளிலும் பெரிதாய் ஏதும் முன்னேற்றம் ஏற்படவில்லை – பின்னர் யத்ரிபிலிருந்து வந்த குழுவினரை நபியவர்கள் சந்தித்து அகபா உடன்படிக்கை ஏற்படும்வரை.

இந்த உக்காள் சந்தையில் தம் கவிதைகளைப் பாடி முன்னணி வகிப்பவர் ஒருவர் இருந்தார். இலக்கியத்திலும் கவியிலும் பிரமாதமான ஆற்றல் உள்ளவர். தவ்ஸ் கோத்திரம் என்று ஆரம்பித்தோமே, அம்மக்கள் மக்கா நகருக்குத் தெற்கே திஹாமா பகுதியில் வாழ்ந்து வந்தனர். அந்தக் கோத்திரத்தின் முக்கியப்புள்ளிதான் அவர். ஏழைகளுக்கு உதவுவது; அன்னதானம்; தம் மக்களின் நல்லது கெட்டதுக்கு முன்நிற்பது என்று அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர், செல்வாக்கு. சந்தை நேரம், புனித மாதங்கள் என்று மட்டுமல்லாமல் அவ்வப்போது மக்காவுக்கு வந்துபோவதும் அவரது வழக்கம். ஏதாவது வியாபாரம், அலுவல் என்று இருக்கும்போது கிளம்பி வந்துவிடுவார். அப்படியே கஅபாவில் உள்ள சிலைகளுக்கு வணக்கம் வழிபாடு செய்துவிட்டு வந்தால் அவருக்கு ஒரு மனதிருப்தி, மகிழ்ச்சி.

ஒருநாள், “இந்தா புள்ளே, நான் மக்காவரை போய்ட்டு வந்துடறேன்” என்று மனைவியிடம் சொல்லிவிட்டுப் பயணத்திற்கான மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார் அந்த மனிதர். அவர் கிளம்பிய அந்த நேரம் நபியவர்களின்மேல் குரைஷிகளின் பகைமை உச்சத்தில் இருந்த நேரம். நபியவர்களுக்கு எதிராகத் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் அவர்கள் மும்முரமாய் நிறைவேற்றிக் கொண்டிருந்த காலம். வெளியூரிலிருந்து மக்காவுக்கு வரும் யார் காதிலும் முஹம்மது நபியின் பேச்சோ பிரச்சாரமோ விழுந்துவிடக் கூடாது என்று படுகவனமாய் இருந்தார்கள் அந்தக் குரைஷிகள். “நாங்களும் கேட்க மாட்டோம்; மற்றவர்களையும் கேட்கவிட மாட்டோம்”.

இந்தக் காலத்தில் அரசாங்கங்கள் ஊடகங்களுக்கோ, சில கட்சிகளுக்கோ தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் என்று நடந்து கொள்கிறதே அப்படியான ஒரு காரியம். இப்படியான உஷ்ணமான சூழ்நிலையில் இருந்த மக்கா நகருக்குள் அந்த தவ்ஸ் கோத்திரத்து மனிதர் வந்து நுழைய, அவரை அப்படியே அள்ளிக் கொண்டு போனார்கள் குரைஷிகள்.

அவர் யார், அவரது கோத்திரத்தில் அவருக்குள்ள செல்வாக்கு என்னவென்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மேலும் அவர் சிறந்த கவிஞர் வேறு. ‘இந்த மனிதர் முஹம்மதின் பேச்சைக் கேட்டு மாறிவிட்டால் என்ன ஆவது? முஹம்மதுக்குக் கோத்திர பலம் சேர்ந்துவிடும். போதாதற்கு இந்த மனிதரும் தம் கவித் திறமையை முஹம்மதுடைய புது மார்க்கத்துக்குச் சாதகமாக பயன்படுத்திவிட்டால்?’ என்று அவர்களுக்கு ஏகப் பதற்றம்.

குரைஷிகளின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் இவர் மக்காவினுள் நுழைவதைப் பார்த்ததுமே பெரும் கரிசனத்துடன் ஓடோடி வந்தார்கள். “வாங்க வாங்க. நல்லா இருக்கீங்களா? ஊர்ல புள்ள குட்டிகளெல்லாம் நலமா?” என்று அன்பு ஒழுகப் பேசிப்பேசி ஒரு பெரிய வீடாகப் பார்த்து அங்கு அழைத்துச் சென்று அவரைத் தங்க வைத்தார்கள். ஏதோ, அந்த காலத்தில் அவர்களால் ஆன நட்சத்திர அந்தஸ்து விடுதி.

“எங்கள் ஊருக்கு வருகை தந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. இங்கு ஒருவர் தம்மை நபி என்று அறிவித்துக்கொண்டு எங்களின் அதிகாரத்தை அழித்து, எங்கள் சமூகத்தை உடைத்து ஒற்றுமையைச் சிதைத்து விட்டார். அதைப்போலவே உங்கள் மக்கள்மீது நீங்கள் வைத்திருக்கும் அதிகாரத்திற்கு அவர் வேட்டு வைத்துவிடுவாரோ என்று அஞ்சுகிறோம். தயவுசெய்து அவரிடம் பேசவே பேசாதீர்கள். என்ன ஆனாலும் சரி, அவர் சொல்வது எதையும் காதால் கேட்டுவிடாதீர்கள். பயங்கரமான வார்த்தை ஜாலம் அவருக்கு. மந்திரவாதிபோல் கட்டிப்போட்டு விடுகிறார். இவர் பேச்சைக் கேட்டு, தகப்பனுக்கும் மகனுக்கும் சண்டை; உடன் பிறந்த சகோதரர்களுக்கு இடையில் பகை; கணவன் மனைவிக்கு இடையில் பிரிவினை …”

மேலும் மேலும் கதைகளாய் ஆள் மாற்றி ஆள் அவரிடம் சொல்லிக் கொண்டேபோக, அந்த மனிதருக்கு மிகவும் பயம் ஏற்பட்டுவிட்டது. இறுதியில் அவரது மனதில் தீர்மானமான முடிவு.

ஒப்புக்காக என்றில்லாமல் கடுமையான தீர்மானம். ‘நபி என்று சொல்லிக் கொள்ளும் அவரை நான் நெருங்கவே போவதில்லை; பேசப்போவதில்லை; அவர் பேச்சைக் கேட்கப்போவதில்லை’

மறுநாள் காலை கஅபா ஆலயத்திற்கு வழிபாடு செய்யக் கிளம்ப வேண்டும். அதற்குமுன் கொத்தாகக் கொஞ்சம் பஞ்சு எடுத்து நன்றாகத் தம் இரு காதுகளையும் அடைத்துக் கொண்டார்.

‘தப்பித்தவறி முஹம்மது பேசுவது காதில் விழுந்துவிட்டால்?’

அதையெல்லாம் பார்த்த குரைஷிகளுக்கு நிம்மதிப் பெருமூச்சு. ‘அப்பாடா! இனிப் பிரச்சினை இல்லை. இவரிடம் முஹம்மதின் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை’.

பஞ்சும் காதுமாய் கஅபா வளாகத்திற்குள் அந்த மனிதர் நுழைந்ததுமே முதலில் அவர் கண்ணில்பட்ட காட்சி அங்கு கஅபா அருகே முஹம்மது நபி நின்று தொழுது கொண்டிருந்ததுதான். ‘இவர்தான் குரைஷிகள் குறிப்பிட்ட மனிதர் போலும்’.

அந்தத் தொழுகையும் அதன் அசைவுகளும் வழிபாடும் மிகவும் வித்தியாசமாய், அவர் இதுவரை அறியாத ஒன்றாய் இருந்தது அவருக்கு. என்ன செய்கிறார் இந்த மனிதர்? என்று நபியவர்களைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். கவனிக்க கவனிக்க நபியவர்களின் தொழுகை காந்தமாய் கவர்ந்து இழுக்க ஆரம்பித்தது. தம்மையறியாமலேயே முன்நோக்கி நகர ஆரம்பித்தார் அந்த மனிதர். யாரைக் கண்டால் ஓடிவிட வேண்டும் என்று நினைத்தாரோ அந்த இறைத் தூதரை நோக்கி நகர ஆரம்பித்தார்.

அருகே நெருங்க நெருங்க வித்தியாசமான ஒலியாய் வார்த்தைகள் கேட்க ஆரம்பித்தன. என்னதான் காதை பஞ்சு கொண்டு அடைத்துக் கொண்டாலும் காது முழுதும் செவிடாகிவிடுமா என்ன? ஓசை நிசப்தம் ஆகிவிடுமா? அவரது மனதிற்குள் கேள்விகள் எழுந்தன. ‘என்ன இது சிறுபிள்ளைத்தனமான பயம்? எப்பேர்ப்பட்ட கவிஞன் நீ? சிறந்த கவிதைக்கும் வார்த்தை ஜால வித்தைகளுக்கும் உன்னால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதா என்ன? இவர் உச்சரித்துக் கொண்டிருப்பதைக் கேட்க உனக்கு என்ன தடை? அவர் ஓதிக் கொண்டிருப்பதைக் கேள். நல்லது என்றால் எடுத்துக் கொள்; இல்லையா, அதெல்லாம் வெற்று வார்த்தைகள் என்று தோன்றுகிறதா விட்டுவிடு. தீர்ந்தது விஷயம்’.

நபியவர்களைக் கவனித்துக் கொண்டே காத்திருந்தார். தம் தொழுகை முடிந்தவுடன் வீட்டிற்குக் கிளம்பியவர்களைப் பின்தொடர்ந்தார் அவர். எதெல்லாம் நடக்கக்கூடாது என்று குரைஷிகள் விரும்பினார்களோ, அவையெல்லாம் முஹம்மது நபி ஒரு வார்த்தைகூட அந்த மனிதரிடம் பேசாத நிலையில் தாமாகவே நிகழ்ந்து கொண்டிருந்தன. நபியவர்களின் பின்னாலேயே அந்த மனிதரும் அவர்களது வீட்டிற்குள் நுழைந்தார்.

சுற்றி வளைக்கவில்லை; அது அந்த மக்களது இயல்பும் இல்லை. நேரடியாக விஷயத்திற்கு வந்தார். “ஓ முஹம்மது! உம்மைப் பற்றி உம் மக்கள் என்னிடம் சில விஷயங்கள் கூறினார்கள். அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். உங்களைப் பற்றி அவர்கள் கூறக் கூற அது எந்தளவு எனக்குள் பயத்தைத் தோற்றுவித்தது என்றால், இதோ பாருங்கள் பஞ்சு, நான் நன்றாக என் காதை அடைத்துக் கொண்டேன். இருந்தாலும் இறைவனின் நாட்டம், நீங்கள் ஓதியவை என் காதில் விழுந்தன. கவனத்தைக் கவரும் சுவாரஸ்யம் அவற்றில் உள்ளன. சொல்லுங்கள், என்னதான் உமது செய்தி?”

முஹம்மது பேசினால் கேட்கக் கூடாது என்று குரைஷிகள் எச்சரித்து இருக்க, இந்த மனிதரும் அப்படியே நினைத்திருக்க, இப்பொழுது தாமே வலியச் சென்று, அதுவும் அந்த நபியவர்கள் வீடு தேடிச்சென்று, ‘சொல்லுங்கள் கேட்கிறேன்’ என்று காதில் அடைத்திருந்த பஞ்சை எடுத்து கையில் சுருட்டி வைத்துக்கொண்டு, அமர்ந்திருந்தார். என்னதான் இவர் விஷயத்தில் பிரச்சாரம் நடந்தது? தொழுகை! அல்லாஹ்வை அவன் சொன்னபடி குனிந்து நிமிர்ந்து தொழுத தொழுகை. இறைவழிபாடு என்பதைத் தாண்டிய உன்னதம் அது!

சூரா இஃக்லாஸ், சூரா ஃபலக் ஆகிய, குர்ஆனின் இறுதி அத்தியாயத்திற்கு முந்தைய இரண்டு அத்தியாயங்களை மட்டும் ஓதினார்கள் நபியவர்கள். அப்படியே ஸ்தம்பித்துவிட்டார் அந்த அரபு மகாக் கவி. சத்தியமாக இவை கவிதை அல்ல. இத்தகு சிறப்பான சொல்லாட்சி மனிதனால் வடிக்க இயலாத ஒன்று.

“இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன்! இத்தகைய அற்புதமான வாசகங்களை இதற்குமுன் நான் கேட்டதே இல்லையே” என்று திகைத்துப் பேசினார். அடுத்து ஏகத்துவத்தை விவரித்தார்கள் நபியவர்கள். ‘இவ்வளவுதானா? இவ்வளவு எளிமையான உயர்ந்த உன்னதமா இஸ்லாம்? இதற்குமேல் இதை நிராகரிக்க நான் என்ன புத்தியில்லாதவனா?’

பஞ்சு, காற்றில் பஞ்சாய்ப் பறந்தது. தம் கையை நீட்டி நபியவர்களின் கைமீது வைத்து கலிமா உரைத்தார்; சத்தியமார்க்கத்தில் நுழைந்தார் அவர் –

துஃபைல் பின் ம்ரு, ரலியல்லாஹு அன்ஹு!

மக்காவிற்கு வந்த வேலையும் நோக்கமும் மாறிப்போய் அடுத்து சில நாட்கள் மக்காவிலேயே தங்கிவிட்டார் துஃபைல். இஸ்லாமியக் கல்வியும் போதனைகளும் நபியவர்களிடமிருந்து கேட்டுக்கேட்டுப் பெற்றுக்கொண்டு குர்ஆனின் பகுதிகளை மனனம் செய்து கொண்டார். பிறகு ஒருநாள்,

“அல்லாஹ்வின் தூதரே! என் குலத்தவர் என்னைப் பெரிதும் மதிக்கக்கூடியவர்கள். நான் இப்பொழுது அவர்களிடம் சென்று அவர்களையெல்லாம் இஸ்லாத்திற்கு அழைக்கப் போகிறேன். அனுமதி தாருங்கள்”.

விடைபெற்றுக் கொண்டு திஹாமாவுக்குத் திரும்பினார் துஃபைல் பின் அம்ரு.

oOo

துஃபைலின் தந்தை வயது முதிர்ந்தவர். பயணம் கிளம்பிச் சென்ற மகன் நெடுநாள் கழித்துத் திரும்பிய செய்தி அறிந்ததும் விசாரிக்க வந்தார். ‘பயணமெல்லாம் எப்படியிருந்தது, வழிபாடெல்லாம் நல்லவிதமாய் முடிந்ததா?’

அவரிடம் மிக நேரிடையாக, “தந்தையே! உங்களுக்கு ஒரு செய்தி சொல்ல வேண்டும். நான் இனி உங்கள் மதத்தில் இல்லை; நீங்கள் என்னவர் இல்லை”

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் மகனே?”

“முஹம்மது எனும் இறைத்தூதரை மக்காவில் நான் சந்தித்தேன். அவர் எடுத்துச் சொன்ன இஸ்லாம் சத்தியமார்க்கம். அதை நான் ஏற்றுக்கொண்டேன்”.

தம் மகனின் மீது, அவரது அறிவாற்றல் மீது மிகுந்த நம்பிக்கை அந்தத் தந்தைக்கு. உடனே, “மகனே, உன் மார்க்கமே என் மார்க்கம்” என்று சொல்லிவிட்டார்.

“நல்லது! நீங்கள் சென்று குளித்துவி்ட்டு, உடை மாற்றிக் கொண்டு வாருங்கள். என்ன கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன் என்று தெரிவிக்கிறேன்”.

அப்படியே செய்தார்; இஸ்லாத்தினுள் நுழைந்தார் அந்த முதியவர்.

பிறகு துஃபைலின் மனைவி வந்தார். “இங்கு வா! நான் உனக்கு ஒரு செய்தி சொல்கிறேன். இனி நான் உன்னவன் இல்லை; நீ என்னவள் இல்லை”.

“கடவுளே! என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் அப்படி?” என்றார் அவர்.

“இஸ்லாம்! நான் முஹம்மது நபியைச் சந்தித்தேன். அவர் கற்றுத்தந்த மார்கத்தை ஏற்றுக் கொண்டேன். இனி நான் ஒரு முஸ்லிம்”.

இவரும் தம் மாமனாரைப் போலவே, “உமது மதமே எனது மதம்; எனக்கு முழுச் சம்மதம்” என்று சொல்லிவிட்டார்.

“வெகு நல்லது! சென்று குளித்துவிட்டுவா. ஆனால் துல்ஷரா அடிவார நீரிலிருந்து குளிக்காதே. மலையடிவாரத்தின் தூய நீரைக் கொண்டு குளி”. துல்ஷரா தவ்ஸ் கோத்திரம் வழிபட்டு வந்த சிலை. அந்த நீரை உபயோகிக்கக் கூடாது என்றார் துஃபைல்.

“ஏன்? துல்ஷரா ஏதும் தீங்கிழைக்கும் என்று பயப்படுகிறீர்களா?”

“தீங்கா? துல்ஷராவா? நன்றாகத் தெரிந்துகொள். அது ஒன்றும் செய்ய இயலாதது என்று நான் உறுதியளிக்கிறேன். நான் சொல்வதைக் கேள். மக்களின் கண்பார்வை படாத தூரத்திற்குச் சென்று தூய நீரில் குளித்துவிட்டுவா”.

அதன்படி அவர் குளித்துவிட்டு வந்ததும், இஸ்லாத்தைப் பற்றிச் சொன்னார்; குர்ஆன் வசனங்களை ஓதிக் காண்பித்தார். முழு மனதுடன் இஸ்லாத்தினுள் நுழைந்தார் துஃபைலின் மனைவி.

அடுத்து, தம் தவ்ஸ் குலத்து மக்களையெல்லாம் இஸ்லாத்திற்கு அழைக்க ஆரம்பித்தார் துஃபைல் பின் அம்ரு. ஆனால் யாரும் அவர் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. செல்வாக்கு, பேர், புகழ் என்று அவர் குலத்தில் அவர் ஒரு முக்கியஸ்தராய் இருந்தும் இவ்விஷயத்தில் மட்டும் அம்மக்கள், “ஹும்! நல்லாத்தானே இருந்தார். மக்காவுக்குச் சென்று வந்ததிலிருந்து இவருக்கு ஏதோ ஆகிவிட்டது” என்று உதாசீனப்படுத்திவிட்டு தத்தம் வேலைவெட்டி, வழிபாடு என்று இருந்துவிட்டனர்.

சொல்லிப் பார்த்தார்; விவரித்துப் பார்த்தார்; இறை வசனம் சொல்லி எச்சரித்துப் பார்த்தார்; யாரும் கேட்பதாய் இல்லை. ஆனால் இளைஞர் அபூஹுரைரா சட்டென இச்செய்தியைப் பற்றிக் கொண்டார்.

தம் மக்களிடம் மாற்றம் ஏற்படாத நிலையில் ஒருநாள் அபூஹுரைராவுடன் நபியவர்களைச் சந்திக்க மக்காவுக்குக் கிளம்பிவிட்டார் துஃபைல். சந்தித்து விபரம் கூறத் தொடங்கினார். தம் மக்களின்மேல் பெரும் கோபம் இருந்தது அவருக்கு.

“என்ன ஆயிற்று?” என்று விசாரித்தார்கள் நபியவர்கள்.

“அவர்களது இதயங்களில் திரை விழுந்து உண்மையைக் காணவிடாமல் தடுக்கிறது; நம்பிக்கைக் கொள்ளவில்லை அவர்கள். பாவமும் குற்றமும் தவ்ஸ் மக்களை மிகைத்துவிட்டது” குமுறினார் துஃபைல்.

“அல்லாஹ்வின் தூதரே! தங்களது தூதுச் செய்தியை மறுத்துவிட்ட என் குல மக்களைத் தாங்கள் சபிக்கவேண்டும்”.

அமைதியாகக் கை. கால், முகம் கழுவி ஒளு செய்து கொண்டார்கள் நபியவர்கள். பார்த்துக் கொண்டிருந்தார் அபூஹுரைரா. “நபியவர்கள் நம் மக்களுக்கு எதிராய்ப் பிரார்த்தனை புரியப்போகிறார்கள்; தொலைந்தார்கள் அவர்கள்” என்று பயம் ஏற்பட்டுப் போனது அவருக்கு.

நபியவர்கள் பிரார்த்தித்தார்கள், “யா அல்லாஹ்! தவ்ஸ் மக்களை நேர்வழியில் செலுத்துவாயாக! தவ்ஸ் மக்களை நேர்வழியில் செலுத்துவாயாக! தவ்ஸ் மக்களை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை எம்மிடம் கொண்டு வருவாயாக” (புகாரி பாகம் 5, அத்தியாயம் 64, எண் 4392).

அவ்வளவுதான். அவ்வளவேதான். சாபமோ, கோபமோ எதுவுமே இல்லை.

“உம் மக்களிடம் திரும்பிச் செல்லுங்கள். அவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். மென்மையாய் அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இஸ்லாத்திற்கு அவர்களை அழைத்துக் கொண்டே இருங்கள்”. என்று துஃபைலிடம் நபியவர்கள் அறிவுறுத்த, அபூஹுரைராவுடன் தமது ஊருக்குத் திரும்பினார் துஃபைல் பின் அம்ரு.

oOo

அதற்குப்பின் வேகமாய் நகர ஆரம்பித்தது வரலாறு. நபியவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து, பத்ரு, உஹது, அகழி யுத்தங்கள் என்று மதீனாவில் ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இங்கு தவ்ஸ் மக்களிடம் பொறுமையாய்ப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருந்தார் துஃபைல். மெதுமெதுவே மாற்றம் நிகழ ஆரம்பித்தது. கோத்திரத்தினர் அனைவரும் என்றில்லாவிட்டாலும் எண்பது குடும்பங்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். இஸ்லாம் அவர்களது மனதில் நன்றாக ஊன்றியிருந்தது. இறுதியில் ஒருநாள் அவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தடைந்தார் துஃபைல். அவர்களையும் துஃபைலையும் கண்டு மிகவும் மன மகிழ்வு ஏற்பட்டது நபியவர்களுக்கு. ஃகைபர் யுத்தம் முடிவுற்றபோது, அதில் கைப்பற்றப்பட்ட செல்வங்களிலிருந்து அந்த தவ்ஸ் குடும்பங்களுக்கும் பங்கு அளித்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! இனிவரும் போர்களில் தங்களது படைப்பிரிவின் வலப்புற அணியாக எங்களை நியமித்துக் கொள்ளுங்கள். நாங்களும் இஸ்லாத்திற்காக உடல், உயிர் என்று சேவை புரிவோம். எங்களது முயற்சிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்”.

செல்வம், செல்வாக்கு, வசதி என்று இருந்தவர், அனைத்தையும் உதறிவிட்டு இவ்வுலக சௌகரியங்களை எல்லாம் எளிதாய் மறந்துவிட்டு, உடலும் உயிரும் அர்ப்பணம் என்று வந்து நின்றுவிட்டார். மக்கா படையெடுப்பின்போது முஸ்லிம்களின் அணியில் துஃபைலும் ஒருவர். மக்கா நகரை வெற்றி கொண்டு, பின்னர் கஅபாவில் உள்ள சிலைகளை எல்லாம் நபியவர்கள் நீக்கியவுடன், துஃபைலுக்கு அந்த எண்ணம் தோன்றியது. ‘துல்கஃப்பைனை அழிக்க வேண்டும்’
தவ்ஸ் மக்களின் முக்கிய சிலை, துல் கஃபைன். அந்த சிலைக்கு “இரண்டு கை சாமி” என்ற பெயர் இருந்ததாகவும் மற்றொரு குறிப்பு தெரிவிக்கிறது. அதற்கு நிகழும் வழிபாட்டை நிறுத்த வேண்டும், அந்தச் சிலையை அகற்ற வேண்டும் என்று  நபியவர்களிடம் தெரிவிக்க, அனுமதியளித்தார்கள் அவர்கள். கிளம்பினார் துஃபைல் பின் அம்ரு.

“துஃபைல் வருகிறார். நம் சாமி சிலை துல்கஃப்பைனை கொளுத்தப் போகிறாராம்”

தீயிட வருகிறார் துஃபைல் என்ற செய்தி திஹாமாவில் தீயாய்ப் பரவி, தவ்ஸ் குலத்து ஆண், பெண், பிள்ளைகள் என்று கூட்டம் திரண்டுவிட்டது. துஃபைல் துல்கஃப்பைனுக்கு தீங்கு செய்தால், அவரே நாசமாகப்போகிறார் பார் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

“துல்கஃப்பைன். நான் உன்னை வணங்குபவன் அல்ல. இதோ உனக்குத் தீயிடுகிறேன்” என்று தீயிட்டார் துஃபைல். பற்றியெரிந்தது சிலை. அத்துடன் அன்று முடிவிற்கு வந்தது உருவ வழிபாடு. துல்கஃப்பைன் சாமியால் துஃபைலுக்கு எந்தத் தீங்கையும் செய்யமுடியவில்லை. தவ்ஸ் கோத்திரத்தினர் அனைவரும் இஸ்லாத்தினுள் நுழைந்தனர்.

மக்காவின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த இரு வாரங்களில் ஹுனைன் பள்ளத்தாக்கில் பெரியதொரு படை முஸ்லிம்களுக்கு எதிரான போருக்குத் தயாரானது. ஹவாஸின் எனும் பதுஉ கோத்திரத்தினர், தகீஃப் எனும் அவர்களின் உபகோத்திரத்தினர் இணைந்துகொண்டு, ‘அழித்து ஒழிப்போம் இந்த முஸ்லிம்களை’ என்று போருக்குத் தயாராகிவிட்டிருந்தனர். மக்காவிலிருந்து பெரியதொரு படையெழுப்பி, ஹுனைன் சென்று அவர்களை எதிர்கொண்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். கடுமையான போர் நிகழ்வுற்று, இறுதியில் முஸ்லிம் படை வெற்றி கண்டது. இச்செய்திகளை ஹகீம் பின் ஹிஸாம், தாபித் பின் கைஸ், அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் ஆகியோரின் வரலாறுகளின் இடையே படித்தது நினைவிருக்கலாம்.

அப்போரில் தோற்று ஓடிய ஹவாஸின் படையினரின் பெரும்பிரிவு ஒன்று தம் தலைவன் மாலிக் இப்னு அஃவ்புடன் தாயிஃப் நகருக்கு ஓடியது. மற்றொரு பிரிவினர் அவ்தாஸ் எனும் பள்ளத்தாக்கிற்குச் சென்றுவிட்டனர். இந்த அவ்தாஸ் பள்ளத்தாக்கில் இருந்த ஹவாஸின் படையை நோக்கி உபைத் அபூஆமிர் அல்அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு தலைமையில் முஸ்லிம் வீரர்களை அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள். உபைத் அபூஆமிர், அபூமூஸா அல்அஷ்அரீயின் உறவினர். அவ்தாஸ் போரில் எதிரிப் படையினரின் சகோதரர்கள் பத்து பேரில் ஒன்பது பேரை ‘ஒத்தைக்கு ஒத்தை’ சண்டையில் கொன்றார் உபைத் அபூஆமிர். பத்தாவது சகோதரருக்கு அவகாசம் அளிக்க, அவர் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு நடந்த போரில் உபைத் அபூஆமிர் வீர மரணமடைய, பின்னர் அபூமூஸா அல் அஷ்அரீயின் தலைமையில் முஸ்லிம்படை எதிரிகளை வென்றது.

தாயிஃப் நகருக்கு மாலிக் இப்னு அஃவ்புடன் சென்ற படைக்கு அங்கிருந்த தகீஃப் கோத்திரத்தினர் அடைக்கலம் தந்து, தங்களது கோட்டைக்குள் இழுத்துக் கொண்டனர். வலுவான பாதுகாப்புடன் கட்டப்பட்டிருந்த உயர்ந்த கோட்டைகள் அவை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தலைமையில் தாயிஃப் கோட்டைக்கு அணிவகுத்தது முஸ்லிம்படை. இதை எதிர்பார்த்தும், செய்தி அறிந்தும் இருந்த எதிரிகள் தற்காப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, அனைவரும் கோட்டைக்குள் புகுந்துகொண்டு, கதவுகளை இழுத்துப் பூட்டிக்கொண்டனர். அரண்களின் மேல் தயார் நிலையில் காவல் வீரர்கள்.

நெருங்கி வந்த முஸ்லிம் படைகளின்மேல் எதிரிகளின் அம்புமழை சரசரவென பொழிய ஆரம்பித்தது. அதில் முஸ்லிம்களுக்குக் குறிப்பிடத்தக்க உயிர் சேதம். அதைச் சமாளிக்க அம்புகள் பாய இயலாத தூரத்திற்குப் பின்நோக்கி நகர்ந்து நின்று கொண்டது முஸ்லிம்களின் படை.

‘முற்றுகை இடுங்கள்’ என்று நபியவர்கள் கட்டளையிட தாயிஃப் நகர் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டது.

கோட்டைக்கு உள்ளே பாதுகாவலாய் இருக்கும் படையினரைத் தாக்க, தகுந்த போர்த் தளவாடமும் யோசனையும் தேவைப்பட்டன. பீரங்கி போன்ற நவீன வசதிகள் இல்லாத காலம். கட்டை வண்டிகளில் நிறுவப்பட்ட கவண்களில் பெரும் கற்கள் முதலான ஆயுதங்களைக் கோட்டைச் சுவரிலும் அதன்மேல் நிற்கும் வீரர்கள் மீதும் கோட்டையின் உள்ளேயும் வீசித் தாக்கலாம் என்று முடிவானது. அத்தகைய ஆயுத வசதியும் திறனும் அப்பொழுது தவ்ஸ் கோத்திரத்திடம் மட்டுமே இருந்தன.

உடனே தம் குலத்தாரிடம் விரைந்தார் துஃபைல் பின் அம்ரு. நான்கு நாட்களுக்குள் தவ்ஸ் குல வீரர்கள் தங்களது ஆயுதங்களுடன் தாயிஃபிற்கு விரைந்து வந்தனர். தாக்குதல் துவங்கியது. அந்தக் கட்டை வண்டி ‘டேங்கு’களைக் கவசமாக்கிக் கொண்டு, முஸ்லிம் வீரர்களும் கோட்டையை நெருங்க முயன்றனர். ஆனால் உள்ளே பதுங்கியிருந்த எதிரிகளிடம் மற்றொரு தற்காப்பு உபாயம் இருந்தது. இரும்புத் துண்டுகளை தீயில் சுட்டுப் பொசுக்கி அவற்றை கொதிக்கும் நெருப்புத் துண்டுகளாய் கோட்டைக்கு மேலிருந்து வீச ஆரம்பித்தனர். வந்து விழுந்த அந்த இரும்பு ஆயுதங்கள் கட்டை வண்டிகளைப் பொசுக்கி அவை எரிய ஆரம்பித்தன. கூடவே இடைவிடாத அம்பு மழை. எனவே அதில் பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஏறக்குறைய இருபது நாள் நீடித்தது அந்த முற்றுகை.

பின்னர் உள்ளிருந்து தப்பித்து ஓடிவந்தனர் இருபது அடிமைகள். வந்தவர்கள் நபியவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள, அவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த செய்தி முக்கியமானது. ‘கோட்டைக்கு உள்ளே இருக்கும் எதிரிகள் ஓர் ஆண்டு காலம் முற்றுகையைச் சமாளித்துவிடக்கூடிய வசதிகளுடன் உள்ளனர். அதன்பிறகு அவர்களது கையிருப்புத் தீர்ந்தாலும் இறுதி ஆள் கொல்லப்படும்வரை போராடி மடியக் காத்திருக்கிறார்கள்’ என்ற செய்தி. தம் தோழர்களுடன் ஆலோசனை நிகழ்த்தினார்கள் நபியவர்கள்.

நவ்ஃபல் பின் முஆவியா அத்தைலீ கருத்து தெரிவித்தார்: “இவர்கள் இப்பொழுது பொந்தினுள் நுழைந்து கொண்ட நரி. தாங்கள் நரியின் பொறுமை அழித்தால் அது வெளியே வரலாம். அதை அப்படியே விட்டுவிட்டால் தங்களுக்கு அது எந்த உபத்திரவமும் தராது”. மிகச் சரியான உவமை அது என்பதைப் புரிந்து கொண்டார்கள் நபியவர்கள். தவிரவும் அடுத்து புனித மாதங்களும் நெருங்கிக் கொண்டிருந்தன. தாயிஃப் தாமே நம் வசம் வரும் என்பதை உணர்ந்துகொண்டு முற்றுகையை நீக்கிக் கொண்டு தம் படையுடன் மக்கா திரும்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

oOo

கைபர் யுத்தத்தின்போது மதீனாவுக்கு வந்த துஃபைல், குர்ஆன் கற்பது, நபியவர்களுடன் அணுகிக்கொண்டு இஸ்லாம் பயில்வது, கைபருக்குப் பின்னர் நிகழ்வுற்ற போர்களில் எல்லாம் எந்த வாய்ப்பையும் நழுவவிடாமல் நபியவர்களுடன் கலந்து கொள்வது என்று முழு அளவிலான மும்முரமான இஸ்லாமிய வாழ்க்கைக்கு மாறிப்போனார். அவரது கவியும் திறனும் குர்ஆனும் வீரமுமாய் ஆகிப்போனது.

நபியவர்களின் மறைவிற்குப் பிறகு அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கிலாஃபத் காலம். முஸைலமாவின் அட்டூழிய நேரம். என்ன செய்திருப்பார் துஃபைல்? அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்டு இறுதியில் யமாமாவில் நின்று கொண்டிருந்தார். அன்றைய போருக்குமுன் அவர் கனவொன்று கண்டார். வித்தியாசமான கனவு.

“நான் என் மகன் அம்ருவுடன் போருக்குக் கிளம்பிச் சென்றேன். அப்பொழுது கனவொன்று கண்டேன். என் தலை மழிக்கப்பட்டது. என் வாயிலிருந்து பறவையொன்று வெளிப்பட்டது. ஒரு பெண் தம் பிறப்புறுப்பினுள் என்னை செலுத்திக் கொண்டாள்”.

தாம் கண்ட அந்தக் கனவைச் சொல்லி அதற்கு அவரே விளக்கமும் அளித்தார்.

“இதை நான் எப்படி விளங்கிக் கொள்கிறேன் என்றால், என் தலை மழிக்கப்படுவது என்பது என் தலை வெட்டப்படுவதாகும்; என் வாயிலிருந்து பறவை வெளிப்படுவது என்பது என் உயிர்; அந்தப் பெண் நிலத்தைக் குறிக்கிறது, நான் அதனுள் விரைவில் அடக்கம் செய்யப்படுவேன்”

அந்த விளக்கம் பொய்க்கவில்லை. முஸைலமாவுக்கு எதிரான யமாமா யுத்தத்தில் கொல்லப்பட்டு ஷஹீதானார் துஃபைல் பின் அம்ரு.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

தோழர்கள் முகப்பு |  தோழர்கள்-28 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.