தோழர்கள் – 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-3)

Share this:

ம் அசட்டையாலும் சோம்பலாலும் நிகழ்ந்துவிட்ட மாபெரும் தவறை, குற்றத்தை எவ்விதப் பொய்ப் பூச்சும் இன்றி அப்படியே ஒப்புக்கொண்டார் கஅப். அதைக் கேட்டுக்கொண்ட நபியவர்கள் “இவர் மெய்யுரைத்தார்” என்றார்கள். பின்னர் கஅபை நோக்கி “சரி! எழுந்து செல்லுங்கள். உங்களின் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்” என்று கூறிவிட்டார்கள்.

உள்ளொன்று வைத்துப் புறத்தில் பொய் உரைத்தவர்களின் வார்த்தைகள் அப்படியே ஏற்கப்பட்டன. அவர்கள் அகத்தில் புதைந்திருந்த வஞ்சகம் இறைவன் பொறுப்பு என்று விடப்பட்டது. பகிரங்கமாய் மெய் உரைத்தவர் தமக்கு அல்லாஹ்வின் மன்னிப்பில் நம்பிக்கை உள்ளதைத் தெரிவித்ததால் அவரது தீர்ப்பை அந்த இறைவனே வழங்கட்டும் என்பதும் பகிரங்கமாய் அறிவிக்கப்பட்டது.

உடனே எழுந்து சென்றார் கஅப்.

பனூ ஸலமா குலத்தைச் சேர்ந்த சிலர் கஅபைப் பின்தொடர்ந்து ஓடி வந்தார்கள். அவரை இடைமறித்தார்கள். தங்களது குலத்தைச் சேர்ந்த அவர்மீது அவர்களுக்கு ஏக அக்கறை, கரிசனம். “இதற்கு முன்னால் நீங்கள் எந்தப் பாவத்தையும் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. போரில் கலந்து கொள்ளாத மற்றவர்கள் சொன்ன அதே பொய்க் காரணத்தை நபியவர்களிடம் நீங்களும் சொல்லியிருக்கலாம். அதற்குக்கூட உங்களால் இயலாமல் போய்விட்டதே! அப்படிச் சொல்லியிருந்தால் நீங்கள் செய்த பாவத்திற்கு அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேட்டிருப்பார்கள். அந்த இறைஞ்சுதலே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே!” என்று அங்கலாய்த்தார்கள்.

இவ்விதமாகத் தொடர்ந்து அறிவுரை, பேச்சு. அதுவும் கொஞ்சநஞ்சமல்ல. ‘அல்லாஹ்வின் தூதரிடம் திரும்பிச் சென்று இதற்கு முன் நான் சொன்னது பொய் என்று கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு வேறு ஏதாவது பொய்க் காரணத்தைச் சொல்லிவிடலாமா’ என்றுகூட நினைக்க ஆரம்பித்துவிட்டார் கஅப். ஆயினும் அவரது புத்தி சுதாரித்தது.

அவர்களை நோக்கி விசாரித்தார். “என்னைப்போல் வேறு யாருக்கேனும் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதா?”

“ஆம்! மேலும் இரண்டு பேர் உங்களைப் போன்றே உண்மையான காரணத்தை நபியவர்களிடம் கூறியுள்ளார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டதுதான் அப்போது அவர்கள் இருவருக்கும் பதிலாகச் சொல்லப்பட்டது” என்று பதில் அளித்தார்கள்.

“யார் அந்த இருவர்?” என்று கஅப் உடனே கேட்டார்.

“முராரா இப்னு ரபீஉ அல் அம்ரீ, ஹிலால் இப்னு உமய்யா அல் வாக்கிஃபீ.”

அவர்கள் குறிப்பிட்ட அந்த இருவரும் நபியவர்களின் தோழர்கள். பத்ருப் போரில் கலந்துகொண்ட வீரர்கள். ‘பத்ருப் போராளிகள்’ எனும் தனிச் சிறப்புக்கு உரியவர்கள். அத்தகைய அந்த இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களைக் கேட்டதும் கஅபுக்குச் சிறு ஆறுதல் ஏற்பட்டது. ‘ம்ஹும். நான் போகிறேன் வீட்டிற்கு’ என்பதுபோல் தம் இல்லத்திற்குத் திரும்பிவிட்டார்.

தபூக் போரில் கலந்து கொள்ளாத அந்த மூவரிடமும் யாரும் பேசக் கூடாதென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அவ்வளவுதான். அதுநாள்வரை, நட்பு, பேச்சு, ஒட்டு, உறவு என்று இருந்த மக்களெல்லாம் அந்த மூவர் விஷயத்தில் அப்படியே முற்றிலும் மாறிப்போய், அந்த மூவரும் தனித்து விடப்பட்டனர்.

புறக்கணிப்பு என்பது கடுமையான ஒரு தண்டனை. சக மனிதனின் அன்பும் பரிவும் பேச்சும் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் சுவாசத்திற்கு அடுத்து முக்கியமானது. பழகியவர் ஒருவர், ஒரே ஒருவர் ‘நீ ஒரு பொருட்டே இல்லை’ என்று காரணமின்றி விலகிப் போனாலே அது அவனுக்கு வலி எனும்போது, சொல்லி வைத்து ஒட்டுமொத்த சமூகமும் தனிமைப் படுத்தினால்? அந்த மூவருக்கும் அது மாபெரும் தண்டனையாய் அமைந்து போனது. அல்லாஹ்வும் அவன் தூதரும் போருக்கு அழைத்தபின், தக்கக் காரணமின்றி அதைத் தவிர்த்துக் கொள்வது என்பது விளையாட்டல்ல. வினை. பெரும் தீவினை! எனவே இறைவனின் இறுதித் தீர்ப்புக்குக் காத்திருந்த நபியவர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.

இப்புவியே மாறிவிட்டது போன்றும் தாம் உருண்டு புரண்டு வளர்ந்த தமது மண்ணே தமக்கு அன்னியமானது போன்றும் இருந்தது கஅபுக்கு. முராராவும் ஹிலாலும் செயலிழந்து போய், தம் இல்லங்களிலேயே அமர்ந்துகொள்ள, அழுது கழிய ஆரம்பித்தது அவர்களது பொழுது. கஅபோ உடல் பலம், மன வலிமை இரண்டிலும் மிக வலுவானவராய் இருந்தார். அந்தத் தெம்பு அவரை வீடடங்க விடவில்லை. வெளியே வருவார். பள்ளிவாசலுக்குச் சென்று முஸ்லிம்களுடன் ஐவேளைத் தொழுகையிலும் கலந்துகொள்வார். கடை வீதிகளில் உலா வருவார். ஆனால் எவரும் அவரிடம், ‘என்ன?’ ‘ஏது?’ என்று ஒரு வார்த்தை கிடையாது. இறைத்தூதரின் வார்த்தைக்கு அப்பட்டமாய்க் கட்டுப்பட்டிருந்தது அச்சமூகம்.

நபியவர்களிடம் செல்வார் கஅப். தொழுகையை முடித்துவிட்டு அவர்கள் அமர்ந்திருக்கும்போது ஸலாம் பகருவார். பதில் ஸலாம் உரைக்க நபியவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று தமக்குத் தாமே கேட்டுக் கொள்வார். பிறகு, நபியவர்களின் அருகில் அவர்கள் கவனிக்கக்கூடிய வகையில் அதிகப்படியான தொழுகைகளை நிறைவேற்ற ஆரம்பிப்பார் கஅப். அப்போது தம்மை நபியவர்கள் பார்க்கிறார்களா என்று அவரது கண்கள் ஓரமாய் ரகசியமாகக் கவனிக்கும். நபியவர்களோ கஅப் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவரைக் கவனிப்பார்கள். தொழுகையை முடித்துவிட்டு அவர்கள் பக்கம் கஅப் திரும்பினால் அவரிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.

நாள்கள் நகர்ந்து கொண்டிருக்க விவகாரம் நீண்டு கொண்டே சென்றது. வேறு வழிதெரியாமல் கஅபும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே மதீனாவைச் சுற்றிச் சுற்றி வந்தார். அப்போது அவருக்கிருந்த கவலையெல்லாம், ‘இதே நிலையில் நான் இறந்துவிட்டால் நபியவர்கள் எனக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தாமல் இருந்துவிடுவார்களே! அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து, மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க நேரிட்டால், அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலேபோய், நான் இறந்தால் எனக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமே’ என்பதுதான். அந்த எண்ணம் மேலும் அவரை வாட்டி எடுத்தது.

ஒருநாள் அபூகத்தாதா ரலியல்லாஹு அன்ஹுவின் தோட்டத்திற்குச் சென்றார் கஅப். அவர் கஅபுக்கு ஒன்றுவிட்ட சகோதரர். அந்த உறவைத் தாண்டி, அபூகத்தாதா கஅபுக்கு மிகவும் பிரியமானவரும்கூட. அவருடைய தோட்டத்தின் சுவர் மீது ஏறி நின்று அபூகத்தாதாவுக்கு ஸலாம் கூறினார்.

ஆனால் பதில் வரவில்லை. உடனே, “அபூ கத்தாதா! அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்று தாங்கள் அறிவீர்களில்லையா?“ என்று கேட்டார். அதற்கு அவரிடமிருந்து மெளனமே பதிலாக வந்தது.

பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து அதைப் போன்றே கேட்டார். அப்போதும் அவர் மெளனமாயிருந்தார். மூன்றாம் முறையாக மீண்டும் அவரிடம் கஅப் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்க, அப்போது அபூகத்தாதா, “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று மட்டும் பதிலளித்தார். அதைக்கேட்டு கஅபின் கண்களில் அடக்கமுடியாத நீர். துக்கம் பொங்கியெழ அங்கிருந்து வெளியேறினார்.

இறுக்கமான நாள்கள் நீடித்துக் கொண்டிருந்தன. ஒருநாள் மதீனாவின் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார் கஅப். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்தார் ஷாம் நாட்டு விவசாயி ஒருவர். “கஅப் இப்னு மாலிக் என்று ஒருவர் இருக்கிறாரே, அவரை நான் சந்திக்க வேண்டும். எனக்கு யார் அவரை அடையாளம் காட்டுவீர்கள்?“ என்று கஅபைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். மக்கள் கஅபை நோக்கி அவரிடம் சைகை செய்தனர். உடனே அவர் கஅபிடம் வந்து, கடிதமொன்றைத் தந்தார். ஃகஸ்ஸான் நாட்டு அரசன் கஅபுக்கு எழுதியிருந்தான். அழகிய பட்டுத் துணியில் கடிதம் எழுதப்பட்டிருந்தது.

‘நிற்க! உங்கள் தோழர் முஹம்மது உங்களைப் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து உங்கள் உரிமைகள் வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்துவிடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம்.’

படித்து முடித்ததும், ‘இதுவும் அல்லாஹ்வின் சோதனையே’ என்று சொல்லிக் கொண்டார் கஅப். ‘தன்னுடன் நான் இணைந்து விடுவேன் என்று இறை நிராகரிப்பாளன் ஒருவன் நினைக்குமளவிற்கு எனது நிலை தரம் தாழ்ந்து விட்டதே’ என்று மாய்ந்து மறுகியது அவரது மனது. அடுத்து அவர் செய்தது நமக்குப் பாடங்கள் பல உரைக்கும் செய்கை. கடிதத்தை எடுத்துவந்து அடுப்பு நெருப்பிலிட, பொசுங்கிச் சாம்பலானது கடிதம்.

முஸ்லிம்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி என்பது இஸ்லாமிய விரோதிகளின் வித்தை. கஅப் செய்தது என்ன? கடிதத்தைக் கிழிக்கவில்லை. நிதானமாக யோசிப்போம் என்று எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. உடனே எரித்துச் சாம்பாலாக்கி ஊதிவிட்டு, தம் சோகத்தைத் தொடரச் சென்றுவிட்டார்.  அந்தப் பழைய வித்தை இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதில் சோகம், அதை அறிந்திருந்தும் அதற்கு விலைபோகும் முஸ்லிம்களின் அவலம். ஆயிரமென்ன, நமக்குள் பூசல்கள், பிரச்சினைகள் இலட்சமே இருந்துவிட்டுப் போகட்டுமே, உண்மையான எதிரி யார் என்பதை உணர்வதில் எதற்குத் தடுமாற்றம்? சாத்தானியக் கிசுகிசுப்புக்களுக்கு ஏன் செவி தாழ்த்த வேண்டும்? வளரவிட வேண்டும்? கஅப் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு அமைந்திருந்ததைப் போன்று புடம் போட்ட மனநிலை நமக்குள் வளரவேண்டும்.

நபியவர்களிடம் கஅப் உண்மையை ஒப்புக்கொண்டதிலிருந்து நாற்பது இரவுகள் கழிந்திருந்தன. அன்றைய நாள் நபியவர்களின் தூதுவர் ஒருவர் வந்து கஅபைச் சந்தித்தார். “அல்லாஹ்வின் தூதர் உங்களை உங்கள் மனைவியிடமிருந்து விலகியிருக்கச் சொன்னார்” என்ற உத்தரவை அறிவித்தார். இதுநாள் வரை ஊர் புறக்கணிப்பு என்று மட்டும் இருந்ததுபோக, அன்றிலிருந்து நிலைமை மேலும் கடுமைக்கு உள்ளானது.

உடனே கஅப் கேட்ட கேள்வி, “எனில் நான் என்ன செய்ய வேண்டும். மனைவியை விவாக விலக்குச் செய்ய வேண்டுமா?”

“இல்லை. உங்கள் மனைவியிடம் தொடர்பின்றியும் தாம்பத்ய உறவு இன்றியும் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கட்டளை.” அதே அறிவிப்பு, புறக்கணிப்பில் இருந்த மற்ற இரு தோழர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

நபியவர்களின் உத்தரவை அப்படியே ஏற்றுக்கொண்ட கஅப், தம் மனைவியை நோக்கி, “நீ உன்னுடைய பெற்றோரின் இல்லத்திற்குச் சென்றுவிடு. இவ்விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பு வழங்கும்வரை அங்கேயே தங்கிக்கொள்” என்று சொல்லிவிட்டார்.

ஆனால் ஹிலால் இப்னு உமைய்யாவின் மனைவி நபியவர்களிடம் சென்றார். “அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் வயது முதிர்ந்தவர். தம் தேவைகளைக் கவனிக்க பணியாளரும் இல்லாதவர். நான் அவருக்குப் பணிவிடை புரியலாமா?” என்று கேட்டார்.

“எனில் நீ அவருக்குப் பணிவிடை மட்டும் புரியலாம். ஆனால் அவர் உன்னைத் தாம்பத்ய உறவுக்கு நெருங்கக் கூடாது” என்று சலுகை அளித்ததார்கள் நபியவர்கள்.

“அல்லாஹ்வின்மீது ஆணையாக! தாம்பத்ய உறவிலெல்லாம் அவருக்கு ஆர்வம் இல்லை. அவரது இந்தப் பிரச்சினை தொடங்கிய நாளாய் இன்றுவரை அழுவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை. அழுதழுது அவரது கண்பார்வை பறிபோய்விடுமோ என்றுகூட அஞ்சுகிறேன்” என்றார் ஹிலாலின் மனைவி.

ஹிலாலுக்கு வழங்கப்பட்ட இந்தச் சலுகையைப் பற்றிய விஷயம் கஅபின் உறவினர்களுக்கும் தெரியவர, அவர்கள் அவரிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரிடம் நீரும் உம் மனைவி உமக்குப் பணிவிடை புரிய அனுமதி கோரலாமே” என்று பரிந்துரை செய்தனர்.

“அல்லாஹ்வின் தூதரிடம் நான் இவ்விதம் அனுமதி கோரப் போவதில்லை. ஏனெனில் நான் வயதில் இளையவன். அல்லாஹ்வின் தூதர் என்ன சொல்வார்கள் என்று எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டார் கஅப்.

இவ்விதம் அடுத்து பத்து இரவுகள் கழிந்தன. ஐம்பதாம் நாள் காலை. தம் வீட்டின் மேல்தளத்தில் பஜ்ருத் தொழுகையை முடித்துவிட்டு அமர்ந்திருந்தார் கஅப். மூச்சு அடைக்குமளவு உலகம் சுருங்கி விட்டதைப் போலிருந்தது அவருக்கு. தம்மையே அவருக்கு தம்முடைய அகத்தால் அடையாளம் காணமுடியவில்லை.

இதனிடையே அன்றைய இரவின் இறுதி மூன்றாம் பகுதியில் விண்ணிலிருந்து தீர்ப்பு வந்திருந்தது. முஹம்மது நபி (ஸல்) தம் துணைவி உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹாவின் வீட்டில் இருந்தபோது,  இறைவனின் தீர்ப்பு நபியவர்களுக்கு அருளப்பட்டது.

‘மேலும் எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப் பட்டிருந்தோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாகி விட்டிருந்ததெனில்), பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொருத்தவரை அது குறுகி அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாகி விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணை உடையோனுமாய் இருக்கிறான். இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள்.’

குர்ஆனின் 9ஆவது அத்தியாயத்தில், 117ஆவது வசனத்திலிருந்து 119ஆவது வசனமாக அவை பதிவாகிப்போயின.

நபியவர்கள் தம் மனைவியிடம், “உம்முஸலமா! கஅபின் பாவம் மன்னிக்கப் பட்டுவிட்டது” என்று மகிழ்வுடன் கூறினார்கள்.

உடனே அன்னை உம்மு ஸலமா கேட்டார்கள், “கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக்கட்டுமா?”

“நடுநிசியைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால் மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் செய்துவிடுவார்கள்” என்று அவ்வறிவிப்பைத் தாமதிக்கச் சொன்னார்கள் நபியவர்கள்.

இரவு கழிந்து ஃபஜ்ருத் தொழுகை நிறைவேறியபின், அவர்கள் மூவரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டதை நபியவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள்.

பள்ளிவாசலில் நபியவர்கள் அறிவித்த அந்தச் செய்தி, அங்கு, தம் வீட்டில் தொழுதுவிட்டு அமர்ந்திருந்த கஅபின் காதை வந்து தாக்கியது. அதுவும் எப்படி? ஒருவர் ஸலா மலையில் ஏறி உச்சக் குரலில் கத்தினார். “ஓ கஅப் பின் மாலிக்! உமக்கு நற்செய்தி!”

அவ்வளவுதான். அந்த வாசகம் கஅபுக்கு அனைத்தையும் உணர்த்தப் போதுமானதாக இருந்தது. அப்படியே சிரம் குப்புற ஸஜ்தாவில் வீழ்ந்தார் கஅப் பின் மாலிக்!

மக்களெல்லாம் அந்த மூவருக்கும் வாழ்த்துச் சொல்ல விரைந்து மதீனா வீதிகளில் ஆனந்தச் சலசலப்பு! நபியவர்கள் நற்செய்தியை அறிவித்ததுமே கஅபுக்கு வாழ்த்துச் சொல்ல விரைந்தவர்கள் இருவர். ஒருவர் குதிரையின் மீதேறி கஅபின் வீட்டிற்கு விரைய, பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த மற்றவர் கிடுகிடுவென்று மலையில் ஏறி கத்தியதுதான் குதிரையைவிட விரைவாய் கஅபை அடைந்தது.

பின்னர் அந்த மனிதர் நேரடியாய்ச் செய்தியைச் சொல்ல கஅபின் வீட்டிற்கு வந்தார். திக்குமுக்காடிய மகிழ்ச்சியில் இருந்த கஅப் தாம் அணிந்திருந்த ஆடையை அவருக்கு வெகுமதியாய் அளித்துவிட்டார். இதில் வேடிக்கை என்னவெனில் கஅபிடம் அவர் அணிந்திருந்ததைத் தவிர வேறு ஆடைகள் இல்லை. பிறகு யாரிடமோ ஆடையை இரவலாக வாங்கி அணிந்துகொண்டு நபியவர்களிடம் விரைந்தார்.

கஅப் பள்ளிவாசலினுள் நுழைய, அங்கு நபியவர்கள் தோழர்கள் சூழ அமர்ந்திருந்தார்கள். தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு விரைந்து வந்து, கஅபின் கையைக் குலுக்கி வாழ்த்துத் தெரிவிக்க, நெகிழ்ந்துபோனது கஅபின் மனம். ‘இந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வினால் தல்ஹாவைத் தம்மால் மறக்கவே முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார் கஅப்.

நபியவர்களுக்கு கஅப் முகமன் கூற, மகிழ்வில் பொலிந்த முகத்துடன் பதிலளித்தார்கள் நபியவர்கள். “உமது தாய் உம்மைப் பிரசவித்த நாளுக்குப் பிறகு இந்நாள் உமது வாழ்வின் மிகச் சிறந்த நாள். மகிழ்வுறவும்.” நபியவர்களுக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்படும்போது அவர்களின் முகம் நிலவைப் போல் பிரகாசிக்கும். அன்று, அப்பொழுது, நபியவர்களின் முகம் அவ்விதம் பிரகாசித்தது.

“இந்த மன்னிப்பு தங்களுடையதா, அல்லது அல்லாஹ்விடமிருந்தா?” என்று நபியவர்களிடம் கேட்டார் கஅப்.

“இது அல்லாஹ்விடமிருந்து” என்று பதிலளித்தார்கள் நபியவர்கள்.

நபியவர்களின் எதிரில் அமர்ந்த கஅப், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என்னுடைய அனைத்து செல்வத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக் கொள்வதற்காக தர்மமாகத் தந்துவிடுகிறேன்” என்றார்.

அதற்கு நபியவர்கள், “உமது செல்வத்தில் ஒரு பகுதியை உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது” என்றார்கள்.

“எனில் கைபரில் எனக்குக் கிடைத்த பங்கை மட்டும் வைத்துக் கொள்கிறேன்” என்றார் கஅப்.

தொடர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உண்மையை உரைத்ததற்காக அல்லாஹ் என்னைக் காப்பாற்றிவிட்டான். ஆகவே இனி என் ஆயுள் முழுவதும் நான் உண்மையைத் தவிர வேறெதுவும் எப்பொழுதும் பேசவே மாட்டேன்” என்று வாக்குறுதி அளித்தார்.

பின்னர் இந்நிகழ்வை விவரித்துள்ள கஅப், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை இஸ்லாம் எனும் நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், தபூக் போரில் நான் கலந்து கொள்ளாதது குறித்து வினவியபோது அல்லாஹ்வின் தூதரிடம் நான் மற்றவர்களைப் போன்று பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய்யுரைத்த மற்றவர்கள் அழிந்ததைப் போன்று நானும் அழிந்து போயிருப்பேன். ஏனெனில் அவர்களைப் பற்றி மிகவும் கடுமையாக அல்லாஹ் விவரித்துள்ளான்” என்று சூரா தவ்பாவின் 95, 96ஆம் ஆயத்துகளை குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த(தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்.”

நயவஞ்சகமென்பது புத்தியைச் சாய்த்துவிடும் மாயை; பெரும் அசுத்தம். தீர்மானம் செய்துகொண்டு ஒருவர் நயவஞ்சகத்தில் வீழ்வதில்லை. அவர் அறியாமல் அவரது உள்ளத்தில் குடிகொள்ளும் நோய் அது. நிரந்தர அழிவிற்கு வழிவகுத்து விடும் அபாயம். அதிலிருந்து மீள வாய்மை அமையவேண்டும். அதற்கு உள்ளும் புறமும் இறையச்சம் வாய்க்க வேண்டும்.

“அன்று நபியவர்களிடம் நான் வாக்குறுதி அளித்தபின், அறிந்தோ வேண்டுமென்றோ நான் பொய் உரைத்ததே இல்லை. என் மிச்ச ஆயுளுக்கும் அல்லாஹ் என்னை அவ்விதமே காத்தருள வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்றாரே, அவ்விதமே நீண்ட காலம் வாழ்ந்து, தமது 77ஆவது வயதில் ஹிஜ்ரீ் 53ஆம் ஆண்டு உயிர் நீத்தார் கஅப் பின் மாலிக்.

ரலியல்லாஹு அன்ஹு!

– நூருத்தீன்

(கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك  பகுதிகள் நிறைவடைந்தன)

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.