சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -9

Share this:

ஃபாத்திமீக்களின் முன்னுரை

ஹாரா பாலைவனத்தின் வடக்கு எல்லையில் சிஜில்மாஸா என்றொரு நகரம்; இன்றைய மொராக்கோ நாட்டிலுள்ள அந்நகரைப் பெரும் படை ஒன்று வந்தடைந்தது.

படையின் தலைவன் அபூ அப்தில்லாஹ் அந்நகரின் ஆளுநர் அல்-யாசாவுக்கு ஒரு கடிதம் எழுதினான். வாசகங்கள் வெள்ளைச் சாயம் பூசப்பட்ட அமைதித் தூது போல் இருந்தாலும் அதனுள்ளே ஒளிந்திருந்த பசப்பு அல்-யாசாவுக்குப் புரிந்தது. கடிதத்தைக் கிழித்தெறிந்து, வந்தவர்களைக் கொன்று, ‘வா சண்டைக்கு’ என்று களத்திற்கு வந்தார் அல்-யாசா.

உக்கிரமான போர் நடைபெற்றது. அபூ அப்தில்லாஹ்வின் படை, அல்-யாசாவை வென்றது. நகருக்குள் நுழைந்த அபூ அப்தில்லாஹ் முதலில் ஓடியது சிறைச்சாலைக்கு. அங்குச் சென்று, சிறை வைக்கப்பட்டிருந்த உபைதுல்லாஹ்வையும் அவனுடைய மகன் அபுல் காஸிமையும் விடுவித்தான். இருவரையும் புரவியில் அமர வைத்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிய, பெருங் களிப்புடன் “இதோ நம் தலைவர், இதோ நம் தலைவர்” என்று முழங்கியபடி, அவர்களைப் பின் தொடர்ந்து அழைத்து வந்து சிஜில்மாஸா நகரின் அரியணையில் அமர வைத்தான்.

முதலில் அபூ அப்தில்லாஹ் சத்தியப்பிரமாணம் அளித்தான். அவனை அடுத்து ஒட்டுமொத்தப் படையும் மக்களும் அளித்தனர். அரசனாகப் பதவியேற்றான் உபைதுல்லாஹ். அவன் பதவியேற்றது ஒரு நகரின் அரசனாக மட்டுமல்ல. ஃபாத்திமி வம்சம் என்று அழைக்கப்பட்ட உபைதி வம்சத்தின் முதல் கலீஃபாவாக! கலீஃபாவாக மட்டுமல்ல; அந்த மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இமாம் மஹ்தியாக!

oOo

அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் மைந்தர் ஹுஸைனின் பேரர் முஹம்மது அல்-பாகிர். அவருடைய மைந்தரான ஜஅஃபர் அஸ்-ஸாதிக்கை ஷீஆக்கள் தங்களுடைய ஆறாவது இமாமாகக் கருதுகின்றனர். ஜஅஃபர் அஸ்-ஸாதிக் மரணமடைந்ததும் ஷீஆக்கள் இரண்டு முக்கிய அணியாகப் பிரிந்தனர். இரு பிரிவுகளுமே தங்களை ஜஅஃபர் அஸ்-ஸாதிக்கைச் சார்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் முக்கியமான ஒரு விஷயத்தில் தலையை முட்டிக்கொண்டு வேறுபட்டனர். ஜஅஃபர் அஸ்-ஸாதிக் அவர்களின் மகன் மூஸா அல்-காஸிம்தாம் அடுத்த இமாம் என்று அவருக்கு இமாமத்தை வழங்கியது ஒரு பிரிவு. இவர்கள் ‘இத்னா ஆஷாரீ’ (பன்னிரெண்டு இமாம்கள்) பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர். இரண்டாம் பிரிவோ அதை மறுத்தது. ஜஅஃபர் அஸ்-ஸாதிக்கின் மற்றொரு மகனான இஸ்மாயில்தாம் இமாம் என்றது. இவர்கள் இஸ்மாயிலீ பிரிவு ஷீஆக்களாக உருவானார்கள். இஸ்மாயிலின் வழித்தோன்றல்தாம் இமாம் மஹ்தியாக அவதரிக்கப் போகின்றார் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு, அசைக்க முடியாத நம்பிக்கை.

சிரியாவில் ஹும்ஸ்-ஹமா நகர்களின் நடுவே ஸலாமிய்யா என்றோர் ஊர். ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அங்கு வாழ்ந்து வந்த முஹம்மது ஹபீப் தன்னை இஸ்மாயிலின் வழித்தோன்றல் என்று அறிவித்துக்கொண்டான். இமாம் ஜஅஃபர் அஸ்-ஸாதிக் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கையும் நல் அபிமானத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்து, அதற்கேற்பக் காரியங்களில் இறங்கினான் அவன். ‘இதோ இமாம் மஹ்தி வரப்போகிறார், அவர் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவின் வழித்தோன்றலாக இஸ்மாயில் சந்ததியினரின் வரிசையில்தான் அவதரிக்கப் போகிறார்’, என்று மக்கள் மத்தியில் அவன் சாதுர்யமாகப் பரப்புரை புரிந்து புரிந்து, மக்கள் மனத்தில் அக் கருத்து ஆழமாகப் பதிய ஆரம்பித்தது. அப்படியே நம்ப ஆரம்பித்தார்கள் அவர்கள்.

முஹம்மது ஹபீபுக்கு ருஸ்தம் இப்னு ஹஸன் என்றொரு நெருக்கமான தோழன் இருந்தான். அவனை, ‘யெமன் நாட்டுக்குச் சென்று. அங்குள்ள மக்களை இமாம் மஹ்தியின் வருகைக்குத் தயார்ப்படுத்து’ என்று அனுப்பி வைத்தான் ஹபீப். ருஸ்தமும் உடனே அங்குச் சென்று, அந்தப் பிரச்சாரத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினான். அச்சமயம் முஹம்மது ஹபீபிடம் வந்து சேர்ந்தான் அபூ அப்தில்லாஹ். தீவிரமான ஷீஆக் கொள்கை, கண்மூடித்தனமாய் அலவீக்களின் மீது ஆதரவு என்று திகழ்ந்த அபூ அப்தில்லாஹ்வை முஹம்மது ஹபீபுக்கு வெகுவாகப் பிடித்துவிட்டது.

“என்னுடைய மகன் உபைதுல்லாஹ்தான் இமாம் மஹ்தி. நீ ஒரு காரியம் செய். ருஸ்தமிடம் சென்று பிரச்சாரக் கலையைப் பயின்று வா. அதன் பிறகு மக்களைத் தயார்படுத்து” என்று அவனை ருஸ்தமிடம் அனுப்பி வைத்தான் ஹபீப். அபூ அப்தில்லாஹ் ருஸ்தமிடம் வந்தான்; பிரச்சாரக் கலையைப் பயின்றான்; தேறினான்; ஹஜ் காலம் வந்ததும், ஹஜ்ஜை முடித்துவிட்டு வருகிறேன் என்று மக்காவுக்குச் சென்றான். சென்ற இடத்தில், ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியான குதாமாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்திருந்த செல்வந்த முக்கியஸ்தர்களுடன் அபூ அப்தில்லாஹ்வுக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. அவன் கற்றிருந்த பிரச்சார யுக்தியின் முதல் பிரயோகம் சிறப்பாகச் செயல்பட்டு, அவர்களுடன் அவனுக்கு நட்பாகி அது வெகு நெருக்கமானது.

ஹஜ் காலம் முடிவடைந்ததும், ஹிஜ்ரீ 288ஆம் ஆண்டு, குதாமாவின் அந்தச் செல்வந்தர்களுடன் அபூ அப்தில்லாஹ்வும் குதாமாவுக்குச் சென்று விட்டான். வந்திறங்கிய வேகத்தில் அம் மக்களிடம் இமாம் மஹ்தியின் வருகையைப் பற்றிய பிரச்சாரத்தை அவன் தீவிரமாகச் செயல்படுத்தியதில், பெரும் பலன் உருவானது. நம்பிக் கட்டுண்டனர் மக்கள். அவனுக்கு வீடெல்லாம் கட்டித்தந்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். அதற்குச் சகாயம் புரிவதுபோல், ‘இதோ இந்த குதாமா நகரில்தான் இமாம் மஹ்தி தோன்றப் போகிறார்’ என்று அறிவித்தான் அபூ அப்தில்லாஹ்.

அக்காலத்தில் ஆப்பரிக்காவின் வடக்குப் பகுதியை அஃக்லபித் என்ற அரசர் குலம் ஆண்டு கொண்டிருந்தது. பாக்தாதிலிருந்த அப்பாஸிய கலீஃபாவை ஏற்றுக்கொண்டு சுயாட்சி புரிந்த அரபு ஸன்னி முஸ்லிம்கள் அவர்கள். துனீஷியா, அல்ஜீரியாவின் கிழக்குப் பகுதியெல்லாம் அவர்களுடைய அரசாட்சியின் கீழ் இருந்தது. அரசர் இப்ராஹீம் இப்னு அஹ்மது இப்னு அஃக்லப் என்பவருக்கு அபூ அப்தில்லாஹ்வின் நடவடிக்கைகள் தெரிய வந்தன. ‘ஆஹா! இது அரசியலையும் மீறி, இஸ்லாமிய மார்க்கத்திற்கே கேடு விளைவிக்கும் பெருங் குழப்பமாயிற்றே’ என்று எச்சரிக்கை அடைந்த அவர், ‘உன் சில்மிஷத்தை உடனே நிறுத்து. இல்லையெனில் கடுமையாகத் தண்டிக்கப்படுவாய்’ என்று அபூ அப்தில்லாஹ்வுக்குச் செய்தி அனுப்பினார் இப்ராஹீம் அஃக்லப்.

ஆனால் அதற்குள் விஷயம் கைமீறியிருந்தது. குதாமா பகுதியும் சுற்று வட்டாரக் குலங்களும் அபூ அப்தில்லாஹ்வின் பிரச்சாரத்தில் மயங்கி அவனுக்கு முற்றிலுமாகக் கட்டுப்பட ஆரம்பித்திருந்தன. அவனும் தனக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவையும் வலிமையையும் நன்கு அறிந்திருந்தான். அதனால் ஆட்சியாளரின் தூதரை அவமதித்து, இழித்துப் பழித்துப் பேசித் திருப்பி அனுப்பிவிட்டான். வெறுமே ஒன்றரை ஆண்டுக் காலப் பிரச்சாரத்தில் பெரும் செல்வாக்குப் பெற்று நாட்டின் மேற்குப் பகுதியில் அரசனாக உயர்ந்திருந்தான் அபூ அப்தில்லாஹ்.

ஒருவனின் வாய் ஜாலத்திற்கு மக்கள் அடிமையாகிவிடும் போது, அவன் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது, அவனுடைய அக்கிரமங்களையும் பொய்களையும் குற்றமாகவே கருதாத அளவிற்கு மூளை மழுங்கி விடுகிறது. சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்கும் ஆற்றலை முற்றிலும் இழந்துவிடுகிறார்கள். அபூ அப்தில்லாஹ் விஷயத்தில் மக்களுக்கு அதுதான் நிகழ்ந்தது. அப்படியான கண்மூடித்தனமான மக்களின் வெறிக்கு வரலாற்றிலும் பஞ்சமில்லை. சமகாலத்திலும் குறைவில்லை.

மக்களைக் கவர்ந்து அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றாகிவிட்டது; ஒரு பகுதியில் ஆட்சியையும் நிறுவியாகிவிட்டது என்றானதும் ‘இமாம் மஹ்தியே வாருங்கள். ஆட்சி புரியுங்கள். எங்களை வழி நடத்துங்கள்’ என்று உபைதுல்லாஹ்வுக்குத் தகவல் அனுப்பினான் அபூ அப்தில்லாஹ். இராக்கின் கூஃபா நகரில் பிறந்தவன் உபைதுல்லாஹ். சிரியாவின் உள்ள ஸலாமிய்யா நகரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தான் அவன். அபூ அப்தில்லாஹ் அனுப்பிய செய்தி அவனுக்கு வந்து சேர்ந்தது. தன் மகனை அழைத்துக்கொண்டு சிரியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பினான். “வந்துவிட்டேன் என்று சொல். இதோ வந்து விட்டேன் என்று சொல்” என்று உபைதுல்லாஹ் அனுப்பிய செய்தி அபூ அப்தில்லாஹ்வுக்கு வந்து சேர்ந்தது. அபூ அப்தில்லாஹ்வை நோட்டமிட்டுக்கொண்டே இருந்த வட ஆப்பிரிக்காவின் ஆளுநருக்கும் உளவாகக் கிடைத்தது. எப்படியும் உபைதுல்லாஹ்வைக் கைது செய்து விடவேண்டும் என்று தயாராகி விரைந்தது ஆளுநரின் படை. அத் தகவல் தெரிந்து உபைதுல்லாஹ்வை எப்படியும் காப்பாற்றி விடவேண்டும் என்று விரைந்தது அபூ அப்தில்லாஹ்வினுடைய சகோதரனின் படை.

நடைபெற்ற மோதலில் ஆளுநரின் படை வென்றது. உபைதுல்லாஹ்வையும் அவனுடைய மகனையும் மொராக்கோவின் சிஜில்மாஸ்ஸாவில் சிறையில் அடைத்தது. அபூ அப்தில்லாஹ்வின் சகோதரனை துனிஷியாவில் உள்ள ஃகைரவான் சிறையில் பூட்டியது. இத்தகவலை அறிந்ததும் பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு கிளம்பினான் அபூ அப்தில்லாஹ். முதலில் ஃகைரவானுக்குச் சென்று போரிட்டு, வென்று தன் சகோதரனை மீட்டான். மீட்டதுடன் நில்லாமல் ஃகைரவானுக்கு அவனையே ஆளுநராக நியமித்துவிட்டு சிஜில்மாஸ்ஸாவுக்குப் படையைத் திருப்பினான்.

அங்கு ஆளுநர் அல்-யாசாவுடன் உக்கிரமான போர் நடைபெற்றது. போரில் வெற்றியடைந்த அபூ அப்தில்லாஹ் சிறைச்சாலைக்குச் சென்று உபைதுல்லாஹ்வையும் அவருடைய மகன் அபுல் காஸிமையும் விடுவித்து, இருவரையும் புரவியில் அமரவைத்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிய, பெருங் களிப்புடன் “இதோ நம் தலைவர், இதோ நம் தலைவர்” என்று முழங்கியபடி, அவர்களைப் பின் தொடர்ந்து அழைத்து வந்து அரியணையில் அமர வைத்தான். அனைவரும் சத்தியப் பிரமாணம் அளித்தார்கள். ஃபாத்திமி வம்சம் என்று அழைக்கப்படும் உபைதி வம்சம் உருவானது.

oOo

உபைதுல்லாஹ்வின் கோத்திரத்தையும் பூர்விகத்தையும் பின்புலத்தையும் வெகு நுட்பமாக ஆராய்ந்த அக்கால இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் அவனுக்கும் இமாம் ஜஅஃபர் அஸ்-ஸாதிக்கின் வம்ச மரபிற்கும் தொடர்பே இல்லை, அவன் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவின் வழித்தோன்றலே கிடையாது என்று தெளிவான விளக்கங்களுடன் எழுதி வைத்துள்ளனர். அவர்களது முடிவு மிகையில்லை, பொய்யில்லை.

உபைதுல்லாஹ்வின் உள்ளமெல்லாம் நிறைந்திருந்தது ஷீஆக் கொள்கை. மனமெல்லாம் ஆக்கிரமித்திருந்தன நபித் தோழர்களின் மீதான காழ்ப்புணர்வும் அப்பட்டமான பெரும் வெறுப்பும். எண்ணமெல்லாம் நிறைந்திருந்தது ஸன்னி முஸ்லிம்களை ஒழித்துக்கட்டும் நோக்கம். இவையன்றி அவன் மஹ்தியும் இல்லை, இமாம் மஹ்தியின் அடையாளம்கூட அவனிடம் இருந்ததில்லை என்பதே வரலாறு பகரும் உண்மை.

அவையெல்லாம் ஒருபுறமிருக்க, நமக்கு இங்கு முக்கியம் அவனால் ஆப்பிரிக்காவில் உருவான உபைதி வம்சம் எகிப்திற்குள் நுழைந்தது எப்படி, அது நிகழ்த்திய அக்கிரமங்கள், அரசியல் களேபரங்கள் என்னென்ன, நூருத்தீன் ஸன்கி, ஸலாஹுத்தீன் ஐயூபி இருவருக்கும் அவர்களை ஒழித்துக்கட்டுவது முன்னுரிமையானது ஏன் என்ற வினாக்களுக்கான தெளிவு. அதற்கான முன்னுரைதான் உபைதி வரலாற்றின் இந்த முன் நிகழ்வுச் சுருக்கம்.

அபூ அப்தில்லாஹ்வுக்கு மக்கள் மத்தியிலும் குலத்தினரிடமும் பெரும் செல்வாக்கு இருப்பதைக் கவனித்தான் உபைதுல்லாஹ். அவையெல்லாம் தன் வளர்ச்சிக்கும் செல்வாக்கிற்கும் வேகத்தடை மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட என்று கருதினான்  உபைதுல்லாஹ். அவனுடைய எண்ணவோட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டான் அபூ அப்தில்லாஹ். அப்பொழுதுதான் அவனுடைய ஞானக் கண் திறக்க ஆரம்பித்திருக்கிறது. ‘ஆஹா! தப்பு செய்து விட்டோமே’ என்று புரிந்திருக்கிறது. அபூ அப்தில்லாஹ் தனது பிழையைத் திருத்திக் கொள்ள, மக்கள் மத்தியில் உண்மையைத் தெரிவிக்க உபைதுல்லாஹ் அவகாசம் அளிக்கவில்லை. தனது முதல் குரூரத்தை அரங்கேற்றினான்.

பிரச்சாரம், போர், உழைப்பு, களைப்பு என்று அலைந்தலைந்து உபைதுல்லாஹ்வை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த அபூ அப்தில்லாஹ்வும் அவனுடைய சகோதரனும் உபைதுல்லாஹ்வால் கொல்லப்பட்டனர்.

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ் …

– நூருத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.