சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 56

Share this:

56. நூருத்தீனின் டமாஸ்கஸ் வெற்றி

மாஸ்கஸ் கோட்டையின் மேலிருந்து இறங்கியது ஒரு கயிற்றேணி. ஓடிச்சென்று அதைப் பற்றி, கிடுகிடுவென்று மேலே ஏறினார் ஒரு வீரர். அவரைத் தொடர்ந்து மேலும் சிலர் ஏறிக் கொத்தளத்தில் குதித்தனர். கோட்டையின் உச்சியில் பதாகை ஒன்றை விரித்துப் பறக்க விட்டது அந்தப் படையணி. ஒற்றைக் குரலில் உச்ச ஒலியில் முழங்கினார்கள் – ‘யா மன்ஸூர்!’

உற்சாகம் பீரிடக் கோட்டைக் கதவுக்கு ஓடினார் மற்றொருவர். அதைத் திறந்து மூடும் இயந்திர விசையைக் கோடரியால் அடித்துச் சிதைத்தார். வாய் பிளந்தது கோட்டை வாயில். திமுதிமுவென்று உள்ளே அணிவகுத்தது படை. வெற்றி வீரராக டமாஸ்கஸிற்குள் அடியெடுத்து வைத்தார் நூருத்தீன். அவரது வீர வரலாற்றின் முக்கியமான அத்தியாயம் அன்று பதிவானது.

oOo

சிரியாவின் வடக்கே பரங்கியர்களின் அபாயத்தைத் தடுத்து அதை நீக்கிய பின், நூருத்தீனின் ஒருமுகப்பட்ட இலக்கு டமாஸ்கஸ். அவருடைய தந்தை இமாதுத்தீன் ஸெங்கிக்குக் கைநழுவிய டமாஸ்கஸ். அலெப்போவின் ஆட்சியாளர்களுக்கு எட்டாக் கனியாகவே ஆட்டம் காட்டிய டமாஸ்கஸ்.

மன்னர்கள் தங்களது ஆட்சி எல்லையை விரிவாக்குவதும் பலவீனமான அரசர்களின் மீது படை எடுப்பதும் வரலாற்றில் வியப்புக்கு உரிய விஷயம் இல்லை என்றாலும் சிரியாவில், குறிப்பாகச் சிலுவைப்போர் பின்னணியில் பார்த்தோமேயானால் அலெப்போவுக்கும் அதன் சுல்தான்களுக்கும் டமாஸ்கஸின் மீதிருந்த மோகம் வேறு நிறம். சிரியாவின் தெற்கே ஜெருசலத்திற்கு அண்மையில் அமைந்திருந்த டமாஸ்கஸின் மீது தீரா வேட்கையில் இருந்தார்கள் இலத்தீன் கிறிஸ்தவர்கள். அதை அடிபணிய வைக்க, கைப்பற்றத் தொடர் முயற்சியில் இருந்தது ஜெருசலத்தில் வீற்றிருந்த கிறிஸ்தவ ராஜாங்கம். டமாஸ்கஸின் ஆட்சி சிலுவைப்படையை எதிர்த்து நின்றது என்றாலும், அவர்களைத் தாக்கிப் போரிட்டது என்றாலும் தன் ஆட்சியாளரின் வலிமைக்கு ஏற்ப, அவரது சுயலாப அரசியல் கணக்குகளுக்கு இணங்க அது ஜெருசலத்தைத் தழுவிக்கொள்வதும் கூட்டணியை முறித்துக்கொள்வதுமாகக் கதை தொடர்ந்து வந்தது.

இந்நிலையில், சிலுவைப்படையினருக்கு எதிரான ஜிஹாது, ஜெருசலத்தீன் மீட்டெடுப்பு என்று எந்த சுல்தான் களமிறங்குவதாக இருந்தாலும், புவியியல் ரீதியாகவும் சரி, கூட்டணி என்ற வகையிலும் சரி, டமாஸ்கஸை ஒதுக்கி வைத்துவிட்டு முன்னேறவும் முடியாது; டமாஸ்கஸ் சந்தர்ப்பவாத அரசியலை நிகழ்த்தும்போது முதுகில் குத்துப்பட்டு வீழும் அபாயத்திலிருந்து தப்பிக்கவும் இயலாது என்பதே யதார்த்தமாக இருந்தது. பரங்கியர்களுக்கு எதிரான ஜிஹாதுக்கு, சிதறுண்டு கிடக்கும் முஸ்லிம் அரசுகளை ஒன்றிணைத்து முன்னேறினால் அன்றி வெற்றி அசாத்தியம் என்ற சூழ்நிலை. அந்த ஜிஹாதில் வலிமை மிக்க டமாஸ்கஸும் அங்கம் வகிக்க வேண்டியது வெகு முக்கியம் எனும்போது, சுய இராஜ்ய நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு நடைபெறும் அதன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி இடுவதே முதல் வேலை என்று முடிவெடுத்தார் நூருத்தீன். அதைத் தாம் கைப்பற்றி, சிரியாவின் ராஜாங்கத்தை ஒன்றிணைத்தால் அன்றி ஜெருசலம் மீட்பு என்பது வெறும் கனவாகவே முடியும் என்பது நூருத்தீனின் தெளிவான கணக்கு. அதற்கு அவர் விதித்துக்கொண்ட சூத்திரம்தான் வரலாற்று ஆசிரியர்கள் வியந்து போற்றும் அம்சம்.

என்ன சூத்திரம்? அதில் என்ன விசித்திரம்?

‘டமாஸ்கஸைக் கைப்பற்றும் முயற்சியில் எந்நிலையிலும் முஸ்லிம்களின் உதிரம் உதிரக்கூடாது. மக்களின் இதயங்களையும் உள்ளங்களையும் வெல்வதன் மூலம் மட்டுமே அது நம் வசமாக வேண்டும்’

அதை அடிப்படை விதியாக்கி, அதிலிருந்து விலகாமல் ஐந்து ஆண்டுகள் மன உறுதியுடனும் பொறுமையுடனும் நுணுக்கமான அரசியல் தந்திரங்களை மட்டுமே பின்பற்றி, தாம் நினைத்ததை சாதித்தார் நூருத்தீன்.

அவரது இலட்சியத்துக்கு ஏற்ப, முயினுத்தீன் உனூருக்குப் பிறகு டமாஸ்கஸின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அபூ ஸயீத் அபாக் என்ற வாலிபரும் பலவீனமான மனப்போக்குக் கொண்டவராகவும் திறனற்றவராகவும் முஸ்லிம் குடிமக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாதவராகவும் அமைந்திருந்தார். முஸ்லிம்களுக்கு எதிரான இலத்தீன் கிறிஸ்தவர்கள் மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட வேண்டியதிருக்க, அவருக்கு ஏற்பட்ட கவலையோ விருட்சமாக வளர ஆரம்பித்த நூருத்தீன். அவரது அச்சம் நூருத்தீன் தம் எதிரிகளை வென்று சூடிய வெற்றிகள். எனவே அபாக், தமக்கான தற்காப்பும் பாதுகாவலும் ஜெருசலம்தான் என்று முடிவெடுத்தார். அவர்களுடன் இணைந்தார். இந்த முடிவில் பெரும் அதிருப்தி அடைந்த டமாஸ்கஸின் குடிமக்களுக்கு வெறுப்பையும் ஆத்திரத்தையும் மேலும் அதிகரிக்கும் வகையில் வந்து சேர்ந்தது இலத்தீன் கிறிஸ்தவர்களின் அத்துமீறல்.

ஜெருசலம் – டமாஸ்கஸுக்கு இடையில் உள்ளது ஹவ்ரான் பிரதேசம். ஹி. 544 / கி.பி. 1150ஆம் ஆண்டு இலத்தீன் கிறிஸ்தவர்கள் அங்கு ஊடுருவினார்கள். கெட்ட ஆட்டம் போட்டார்கள். பயிர்களையும் தானியங்களையும் நாசமாக்குவது, கொள்ளையடிப்பது, முஸ்லிம்களைக் கொல்வது, அடிமைப்படுத்தி இழுத்துச் செல்வது என்று நீண்டது அவர்களது அக்கிரமம். தகவல் நூருத்தீனுக்கும் சென்றது; டமாஸ்கஸுக்கும் சென்றது. அபாக் அலட்டிக்கொள்ளாமல் அலட்சியப்படுத்த, பரங்கியர்மீது தாக்குதல் தொடுக்க முடிவெடுத்ததோ நூருத்தீன். அவரது தலைமையில் அலெப்போவிலிருந்து படை புறப்பட்டு டமாஸ்கஸைச் சுற்றியிருந்த பழத்தோட்டங்களை அடைந்து முகாமிட்டது.

அங்கிருந்த மக்களின் உள்ளங்களை வெல்லும் பணி துவங்கியது. அதன் முதல் படியாக, மக்களைத் தொந்தரவுக்கும் தொல்லைக்கும் ஆளாக்கக்கூடாது; மாறாக அவர்களுக்குத் தம்மிடம் நம்பிக்கை ஏற்பட வேண்டும், அச்சம் நீங்கி அன்பு பெருக வேண்டும் என்று விரும்பினார் நூருத்தீன், அலெப்போ படையினரை அம்மக்கள் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதிவிடக் கூடாது என்பதில் வெகு கவனமாக இருந்தார். புகழுக்குரிய மன்னர் அங்கு வந்து அமர்ந்திருப்பது எத்தகு படோடபத்தையும் ஏற்படுத்திவிடாமல் மக்களின் யதார்த்த வாழ்வு பாதிப்படையாமல் அவரது நடவடிக்கைகள் தன்மையுடனும் மென்மையுடனும் அமைந்தன. விவசாயிகள் கண்டதோ அவரது வாஞ்சை முகம். அவர்கள் மனத்தில் நூருத்தீனும் அவருடைய படையினரும் இட்டதோ, ‘இவர்கள் நம் சகோதரப் படையினர், முஸ்லிம்களைக் காக்க வந்தவர்கள்’ என்ற நம்பிக்கை விதை.

அதற்கேற்ப நூருத்தீன் வந்து சேர்ந்த சில நாள்களில், வறண்டு போயிருந்த அப்பகுதிகளில், ஒரு வார காலம் வானம் பொத்துக்கொண்டு கொட்டியது. நீண்ட காலமாய் அங்கு நிலவிவந்த வறட்சி நீங்கி நிலமெல்லாம் ஈரம். செடி கொடிகள் புத்துயிர் பெற்றுக் காற்றில் ஆடின. நல்லோன் அவர் பொருட்டு நம் எல்லார்க்கும் பெய்தது மழை என்று மகிழ்ந்து விட்டார்கள் மக்கள்! இறைவனின் கருணைக்கு அவரது நீதியும் நேர்மையுமே காரணம் என்று குதூகலித்தார்கள். ஆயினும் அதற்கெல்லாம் தாம் ஒரு காரணம் என்பதை மறுத்துவிட்டு, வந்த வேலையில் கவனமுடன், டமாஸ்கஸின் அதிபருக்கும் அரசவையினருக்கும் நூருத்தீன் மடல் அனுப்பினார். அதன் சாரம்சம்:

‘நான் இங்கு முகாமிட்டிருப்பது உங்கள் மீது போர் தொடுக்கவோ, முற்றுகை இடவோ அல்ல. முஸ்லிம்களின் புகார் என்னை அடைந்தது. அவர்கள் பொருட்டு இங்கு வந்திருக்கிறேன். பரங்கியர்கள் இங்கு விவசாயிகளின் உடைமைகளைக் கொள்ளையடிக்கின்றனர்; பிள்ளைகளிடமிருந்து அவர்களைப் பிரித்து, குடும்பங்களைச் சிதைக்கின்றனர். அவர்களைக் காத்து உதவி புரிவார் யாரும் இல்லை. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக – முஸ்லிம்களுக்கு ஆதரவளித்து உதவி, பரங்கியர்களை எதிர்த்து ஜிஹாது புரிய அல்லாஹ் எனக்கு வலிமையை அளித்துள்ளான். போதுமான இராணுவ பலத்தையும் ஆற்றலையும் எனக்கு அருளியிருக்கின்றான். ஆகவே, முஸ்லிம்களைப் புறக்கணிப்பதும் அவர்களின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பேற்கத் தவறுவதும் எனக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.

உங்களது வலிமை குன்றியிருப்பதையும் உங்களால் உங்களது மாகாணங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத உங்களது இயலாமையையும் நான் நன்கு அறிவேன். கடமையை நிறைவேற்ற இயலாத உங்களது அலட்சியப் போக்கு எனக்கு எதிராகச் சண்டையிட பரங்கியர்களை உதவிக்கு அழைத்திருக்கிறது. அதனால் நீங்கள் உங்கள் ஏழை, எளிய குடிமக்களுக்கு உரிமையான பணத்தைப் பரங்கியர்களுக்கு அள்ளித் தந்து விடுகின்றீர்கள். மக்களைக் கொள்ளையடித்து அவர்களது உரிமையை மறுக்கின்றீர்கள். உங்கள் குடிமக்களுக்குப் பெரும் குற்றம் இழைக்கின்றீர்கள். இது அல்லாஹ்வுக்கும் முஸ்லிம்களுக்கும் உவப்பளிக்காத விஷயமாகும்.

அனைத்துச் சாக்குப்போக்குகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஆயிரம் குதிரை வீரர்களை எனது உதவிக்கு அனுப்பி வைப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. அவ்வீரர்களுக்குத் தலைமையாகத் தளபதி ஒருவரும் தேவை. அவரது துணிவு நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும். பரங்கியர்களிடமிருந்து அஸ்கலான் துறைமுகத்தையும் இதர இடங்களையும் நாம் மீட்க வேண்டும்’

நூருத்தீன் சாமர்த்தியமாக வடிவமைத்த கடிதம் அது. டமாஸ்கஸின் ஆட்சியாளர் கையாலாகதவராக ஆகிவிட்டபின் அம்மக்களைக் காக்கத் தம்மால் முடியும், தம்மால்தான் முடியும் என்பதை அழுத்தமாக அதில் குறிப்பிட்டிருந்தார். அதில் மிகையில்லை. உண்மை இருந்தது; நேர்மை இருந்தது. டமாஸ்கஸ் மக்களின் மீது கலப்படமற்ற மெய்யான அன்பு அவரது உள்ளத்தில் குடிகொண்டிருந்தது.

அம்மடலுக்கு டமாஸ்கஸின் ஆட்சித் தரப்பு அளித்த பதில் மூர்க்கம்.

‘நமக்கிடையே வாள் தீர்ப்பெழுதும். நீர் முன்னேறி வந்து எங்களைக் கைப்பற்றுவதைத் தடுத்து, உம்மை விரட்டியடிப்பதற்குப் பரங்கியரின் உதவிப் படை வந்துகொண்டிருக்கிறது’

தமது முயற்சியில் முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப் படுவதைச் சற்றும் விரும்பாத நூருத்தீன் நிலைமையை ஆராய்ந்தார். அச்சமயம் டமாஸ்கஸைத் தாக்குவதையும் அதை எதிர்த்துப் போர் தொடுப்பதையும் தவிர்ப்பதே சரி என்று தோன்றியது. மக்களின் ஆதரவு தமக்குப் பெருகியபோதும், ஒருங்கிணைந்த ஜெருசலம்-டமாஸ்கஸ் படையை எதிர்கொண்டு போரிட நூருத்தீன் விரும்பவில்லை. டமாஸ்கஸை முற்றிலும் பலவீனப்படுத்தி, முடிந்தவரை சாத்வீகமாக வெற்றிகொள்வதையே அவர் விரும்பினார். இந்நிகழ்வுகள் டமாஸ்கஸ் குடிமக்களிடம் அபாக் மீதான வெறுப்பும் கோபமும் அதிகரிக்கவும் நூருத்தீனின் மீது மேலும் அன்பும் நெருக்கமும் பெருகவும் உதவின.

அதன் பின், ஒருவாறாக நூருத்தீனுடன் இடைக்கால அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டார் அபாக். நூருத்தீனின் மேலதிகாரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பாக்களில் கலீஃபாவுக்கு அடுத்து அவருடைய பெயர் இணைக்கப்படும் என்றும் டமாஸ்கஸின் நாணயங்களில் அவர் பெயர் பொறிக்கப்படும் என்றும் ஏற்பாடானது.

அடுத்த ஆண்டு அலெப்போ சென்ற அபாக், நூருத்தீனின் ஆட்சிக்கே தமது விசுவாசம் என்று அறிவித்தார். தாம் அவருக்கு அடிபணிந்தவர் என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்வதன் மூலம் அவர் டமாஸ்கஸை முற்றிலுமாகக் கைப்பற்றுவதைத் தவிர்த்து விடலாம் என்று அவர் மனத்தில் நப்பாசை. ஆனால், அபாக்கின் நிலையற்ற போக்கை அறிந்திருந்த நூருத்தீனுக்கு அவரது சம்பிரதாய வாக்குறுதியில் நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால் தமது விரிவான ஜிஹாது முயற்சிக்கு டமாஸ்கஸ் முக்கியம் என்ற எண்ணத்தில் இருந்து அவரது கவனம் பிசகவில்லை.

மேலும் இரண்டு ஆண்டுகள் நகர்ந்தன. சிரியாவின் வடக்கே அஃப்லிஸ் என்றொரு கோட்டை இருந்தது. அது பரங்கியர்களிடம் சிக்கியிருந்தது. நூருத்தீன் அதைக் கைப்பற்றினார். அங்கிருந்த பரங்கியர்களும் அர்மீனியர்களும் கொல்லப்பட்டனர். இந்தப் போர் நடவடிக்கைக்கு, உடன்படிக்கையில் இருந்த நிபந்தனையின்படி டமாஸ்கஸிலிருந்து அபாக்கும் தம் படையுடன் சென்று நூருத்தீனுடன் இணைய வேண்டியிருந்தது. அதன்படி அவரும் சென்றார்; அடுத்து பன்யாஸ் கோட்டையை முற்றுகை இட்டிருந்த நூருத்தீனுடன் இணைந்தார்; ஆனால்–

அச்சமயம் தெற்கே அஸ்கலான் நகரைப் பரங்கியர்கள் படை தாக்கியபடி இருந்தது. பெரும் அபாயத்தில் மூழ்கியது முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கடற்கரை நகரம். அவர்களிடமிருந்து உதவி கேட்டு நூருத்தீனுக்குத் தகவல் வந்தது. என்ன செய்யலாம், ஏது செய்யலாம் என்று சிந்திப்பதற்குள் அபாக் தம் படையினரைக் கிளப்பிக்கொண்டு டமாஸ்கஸ் திரும்பிவிட்டார்.

அங்கு பரங்கியர்களிடம் வீழ்ந்தது அஸ்கலான். நாடெங்கும் அந்தச் செய்தி பரவியது. முஸ்லிம்களுக்குப் பெரும் துக்கத்தையும் வேதனையையும் ஏற்படுத்திய நிகழ்வு அது.

சிலுவைப்படைக் கிறிஸ்தவர்களை எதிர்த்து முழு அளவிலான யுத்தத்தில் இறங்கும் முன் டமாஸ்கஸை வென்று தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராத வரை தீட்டும் திட்டங்களும் எடுக்கும் முயற்சிகளும் அலைகடல் ஓரம் கட்டும் மணல்கோட்டை ஆகிவிடும் என்பதையே அபாக்கின் செயல்பாடுகள் நிறுவின. அதைக் கைப்பற்றும் எண்ணமும் நூருத்தீன் மனத்தில் நாளுக்குநாள் வலுவடைந்தபடி இருந்தது. என்ற போதிலும், டமாஸ்கஸுடன் ஆயுதப் போர் கூடாது என்ற அவரது முடிவில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லை.

முஸ்லிம்களின் குருதியைப் புனிதமாகக் கருதி நூருத்தீன் போரைத் தவிர்ப்பது டமாஸ்கஸ் குடிமக்களின் மனத்தில் அவர்மீதான அபிமானத்தை உயர்த்தியபடி இருந்தது. விளைவாக, நூருத்தீனுக்கு எதிராக அபாக் டமாஸ்கஸில் அழைப்பு விடுத்தபோது வெகு சிலரைத் தவிர வேறு யாரும் முன்வரவில்லை. படைக்கு ஆளெடுக்கும் பணியிடம் வெறிச்சோடியது.

oOo

சிறு காலத்திற்குப் பின் மீண்டும் டமாஸ்கஸுக்கு நூருத்தீன் தமது படையுடன் வந்த சேர்ந்தார். அதிபருக்கும் அதிகாரிகளுக்கும் இம்முறையும் தகவல் அனுப்பப்பட்டது.

‘முஸ்லிம்களின் நலனைத் தவிரவும் பரங்கியர்களுக்கு எதிரான போரைத் தவிரவும் அவர்கள் பிடித்து வைத்திருக்கும் நம் மக்களை மீட்பதைத் தவிரவும் எனக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. நீங்கள் உங்களது படைகளை அனுப்பி எனக்கு ஆதரவு அளித்தால், ஜிஹாதுப் போரில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவினால், நன்மை எனும் ஒற்றை நோக்கத்துடன் நமது விஷயங்களை இணக்கமாக்கிக்கொண்டால், எனது விருப்பமும் நோக்கமும் முழுமையாக நிறைவேறும்’

இம்முறையும் முடியாது என்பதுதான் பதிலாக வந்தது. பரங்கியர்கள் டமாஸ்கஸின் உதவிக்கு வர, படையைத் தயார் செய்கிறார்கள் என்ற மேலதிகத் தகவலும் வந்தது. இருதரப்பு முஸ்லிம்களும் அபாக்கின் நடவடிக்கைகளால் வெறுத்துப் போனார்கள். சுற்றுப்புற வட்டாரங்களிலிருந்து துருக்கிப் பழங்குடியினரும் இதர முஸ்லிம் போராளிகளும் நூருத்தீனுக்கு ஆதரவாக வந்து இணைந்தபடி இருக்க, அவரது படை எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தது. ஆயினும் டமாஸ்கஸுடன் போரைத் தவிர்த்தவர், பரங்கியர்களின் வருகையையும் நடமாட்டத்தையும் கண்காணிக்கத் தமது குதிரைப் படையை அனுப்பி வைத்தார்.

ஜெருசல ராஜா மூன்றாம் பால்ட்வினின் (Baldwin III) தலைமையில் டமாஸ்கஸுக்கு வந்து சேர்ந்தது பரங்கியர் படை. ஓடிச் சென்று வரவேற்றார் அபாக். அந்தப் படையினர் எண்ணிக்கை அவர் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவு. அதைக் கண்டு அவருக்குப் பெரும் ஏமாற்றம். இருந்தாலும் மனத்தைத் தேற்றிக்கொண்டு, நாமிருவரும் இணைந்து பொஸ்ரா கோட்டைக்குச் சென்று முகாமிடுவோம், அதைக் கைப்பற்றுவோம், அங்குள்ள செல்வத்தைக் கபளீகரம் செய்வோம் என்று அவர்களுடன் திட்டம் வகுத்தார். டமாஸ்கஸ் படையினருக்கோ அபாக்கின் திட்டமும் கொட்டமும் சற்றும் பிடிக்கவில்லை. அவர்களுக்கு மகா எரிச்சல்; பெரும் அதிருப்தி. போதாததற்குப் பரங்கியர்களின் சேனாதிபதிகள் டமாஸ்கஸின் கடைவீதிகளில் தம்மிஷ்டத்திற்குத் திரிந்தார்கள்; துஷ்டத்தனத்திலும் ஈடுபட்டார்கள். கொதித்துப் போனார்கள் டமாஸ்கஸ் குடிமக்கள்.

நூருத்தீன் அவசரப்படாமல், அந்தக் கூட்டணிக் கட்சிகளுடன் மோதலைத் தவிர்த்து, இவற்றை எல்லாம் கவனித்தபடி அமைதி காத்தார். தமது படையைப் பின் வாங்கச் செய்து, கிறிஸ்தவர் படை ஜெருசலம் திரும்பட்டும் என்று காத்திருந்தார்.

ஒருவாறாகப் பரங்கியர் படை முதலில் பொஸ்ராவுக்குக் கிளம்பிச் சென்றது. தகவல் கிடைத்ததும் நூருத்தீன் தம் படையினருடன் அவர்களை எதிர்த்துச் சென்றார். அவர் வருகிறார் என்பதை அறிந்த பரங்கியர்கள் பாதையை மாற்றி விலகிச் சென்று பதுங்கித் தங்களைத் தற்காத்துக்கொண்டு, டமாஸ்கஸ் படையும் வரட்டும் என்று காத்திருந்தனர். அபாக் தம் படையுடன் வந்தார். கூட்டணிப் படை இணைந்தது. பொஸ்ரா சென்றது. ஆனால் அதன் ஆட்சியாளரோ இவர்களை எதிர்த்து நின்று விரட்டி அடித்தார். அத்துடன் பரங்கியர் படை ஜெருசலம் திரும்பியது.

பெரிதாக ஏதும் சாதிக்காமல் திரும்பியது மட்டுமின்றி, ‘நாங்கள் விரட்டியிருக்காவிட்டால் நூருத்தீனின் அபாயம் உங்களை விட்டு நீங்கி இருக்காது. ஆகையால் எங்களுக்கு வாக்குறுதி அளித்த கப்பத்தின் மிச்சத்தை அளிக்கவும்’ என்று பரங்கியர்கள் டமாஸ்கஸுக்குத் தகவலும் அனுப்பினர்.

டமாஸ்கஸில் இருந்த முக்கியஸ்தர்களுக்கு அபாக்கின் துரோகச் செயல்களை எல்லாம் சுட்டிக்காட்டி, கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருந்தார் நூருத்தீன். அபாக், பரங்கியர்களுடன் கொண்ட கூடா நட்பால், அராஜகக் கூட்டணியால் அவரது படையில் பல இராணுவ அதிகாரிகள் எக்கச்சக்க எரிச்சலில் இருந்தனர். அவர்களையும் நூருத்தீன் தொடர்புகொண்டார். அதிபருக்கு எதிராகக் குடிமக்களின் கோபமும் கசப்புணர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருந்தன. டமாஸ்கஸ் மக்களிடம் தமக்குத் திரண்டிருக்கும் ஆதரவையும் அபாக்கின் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியையும் ஒழுங்காகக் கட்டமைத்து, அம்மக்களின் உதவியுடன் டமாஸ்கஸைச் சரணடைய வைக்க வேண்டும் என்பது நூருத்தீனின் அடுத்தச் செயல் திட்டமானது.

கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தம் ஒன்று நிகழ வியூகம் வகுக்கப்பட்டது. அதன் அங்கமாக அவர் தேர்ந்தெடுத்த ஒரு நபர் ஸலாஹுத்தீன் அய்யூபியின் தந்தை நஜ்முத்தீன்.

oOo

இமாதுத்தீன் ஸெங்கியின் மறைவுக்குப் பிறகு, அலெப்போவில் நூருத்தீனிடம் ஸலாஹுத்தீன் அய்யூபியின் சிற்றப்பா அஸதுத்தீன் ஷிர்குஹ் தளபதியானார்; தந்தை நஜ்முத்தீன் அய்யூப் தம் குடும்பத்தினருடன் டமாஸ்கஸில் அரசுப் பதவி வகித்தார் என்று பார்த்தோம் இல்லையா? அந்த நஜ்முத்தீன் இப்பொழுது நூருத்தீனின் திட்டத்திற்கு உதவியாளர் ஆனார். டமாஸ்கஸின் குடிமக்கள், உள்ளூர் போராளிகள் மத்தியில் நூருத்தீனுக்கான ஆதரவைப் பெருக்கும் பொறுப்பும் அபாக்கைத் தனிமைப்படுத்தும் பணியும் அவருக்கு வழங்கப்பட்டன. இட்ட பணியைத் திறம்பட மேற்கொண்டார் நஜ்முத்தீன். முக்கியமான இராணுவத் தலைவர்களின் மனம் நூருத்தீனுக்கு ஆதரவாக மாறியது. அபாக்கைச் சுற்றியிருந்த பல முக்கியஸ்தர்கள் விலகினர். இறுதியில் அபாக்குடன் ஒட்டியிருந்தது அமீர்களின் சிறு குழு மட்டுமே.

‘பரங்கியர்களுடன் தொடரும் நட்பே சரி. நூருத்தீனுக்கு அஞ்சி, இணங்கி டமாஸ்கஸை விட்டுத் தராதே’ என்ற அவர்களின் தூபம் மட்டும் தொடர்ந்தவாறு இருந்தது. நூருத்தீன் அந்தக் குழுவைத் தகர்க்க முடிவெடுத்தார்.

‘உம்முடைய பரிவாரங்கள் உம்மைத் தீர்த்துக்கட்டத் திட்டமிடுகிறார்கள்’ என்றொரு தகவலை அபாக்கின் காதிற்கு எட்டச் செய்தார். தமக்கிருந்த மனோநிலையில், பதற்றத்தில், அவசரத்தில், அத்தகவலை ஆராயும் முயற்சியில் எல்லாம் அபாக் இறங்கவில்லை. சொச்சமிருந்த அக்கூட்டாளிகளையும் கொத்தாகப் பிடித்துச் சிறையில் அடைத்தார். அத்துடன் தன்னந்தனியராக ஆனார் அபாக். முற்றுப்பெற்றது நூருத்தீனின் அத்திட்டம்.

இறுதியாக ஒரு வேலை பாக்கியிருந்தது. தடை!

டமாஸ்கஸுக்குச் செல்லும் உணவு தானியங்கள் இடைமறிக்கப்பட்டு, அவற்றுக்குத் தடை ஏற்படுத்தப்பட்டது. இரண்டே நாளில் தாறுமாறானது விலை. உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அரை தீனாருக்கு விற்ற தானிய மூட்டையின் விலை இருபத்தைந்து தீனார் ஆனது. திண்டாடியது டமாஸ்கஸ். அபாக், பரங்கியர்களுடன் கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால், அவர்களுக்கு எதிரான ஜிஹாதில் நூருத்தீனுடன் இணைந்திருந்தால், இப்படியான அவலத்திற்கெல்லாம் நாம் ஆளாக நேர்ந்திருக்குமா என்று கொதித்தெழுந்தது குடிமக்கள் கூட்டம். நூருத்தீனின் பிடி இறுதிக் கட்டத்தை அடைந்தது.

ஹி. 549 / கி.பி. 1154, ஏப்ரல் 18. டமாஸ்கஸ் நகரின் வாயிலுக்குத் தம் துருப்புகளுடன் வந்தார் நூருத்தீன். மீண்டும் ஜெருசல ராஜாவுக்கு அவசரத் தகவல் அனுப்பினார் அபாக். ஆனால் இம்முறை அதற்கு உதவும் நிலையிலும் ராஜா இல்லை; ஜெருசலத்திலிருந்து பரங்கியர் படையும் உதவிக்கு வரவில்லை.

ஏப்ரல் 25. நூருத்தீன் டமாஸ்கஸின் கிழக்குப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த கோபுரத்தில் காவலுக்கு இருந்த வெகு சில துருக்கியர்களைத் தவிர அப்பகுதியைத் தற்காக்கக் குடிமக்களோ, படை வீரர்களோ யாருமே இல்லை. இலையுதிர்ந்த மரத்தில் மிச்சம் ஒட்டியிருக்கும் ஒற்றை இலையைப் போல் தோற்றமளித்தது புரித் வம்சாவளியின் இறுதி அதிபரான அபாக்கின் ஆட்சி.

நூருத்தீனின் படை டமாஸ்கஸின் கோட்டை எதிரே அணிவகுத்து அமைதியாக நின்றிருக்க, கோட்டையின் மேலிருந்து இறங்கியது ஒரு கயிற்றேணி. ஓடிச்சென்று அதைப் பற்றிக் கிடுகிடுவென்று மேலே ஏறினார் ஒரு படை வீரர். அவரைத் தொடர்ந்து மேலும் சிலர் ஏறிக் கொத்தளத்தில் குதித்தனர். கோட்டையின் உச்சியில் பதாகை ஒன்றை விரித்துப் பறக்க விட்டது அந்தப் படையணி. ஒற்றைக் குரலில் உச்ச ஒலியில் முழங்கினார்கள் அவர்கள் – ‘யா மன்ஸூர்! ஓ, பேருதவியாளரே!’

பாப் அல்-ஷர்க் எனப்படும் கிழக்கு வாயிலை நோக்கி ஓடினார் மற்றொரு படை வீரர். அதன் பெரும் கதவுகளைத் திறந்து, மூடும் இயந்திரத்தைத் தம் கோடாடரியால் அடித்து நொறுக்கிச் சிதைத்தார். அகலப் பிளந்தது வாயில். பாப் துமா எனப்படும் தாமஸ் வாயிலும் திறந்து விடப்பட்டது. நூருத்தீனின் படை வீரர்கள் நகரினுள் அலையாக நுழைந்தனர். வீதிகளில் பரவினர். இறுதியாக, நூருத்தீன் தம் பரிவாரங்களுடன் வெற்றி வீரராக நகரினுள் பிரவேசித்தார். குடிமக்கள் யாரேனும் எதிர்க்க வேண்டுமே? மாறாக, குதூகலித்து மகிழ்ந்து வரவேற்றது டமாஸ்கஸ். பரங்கியர்களிடமிருந்து தங்களைக் காக்க வந்த மாமன்னராக நூருத்தீனைப் பார்த்துப் பூரித்தனர் அம்மக்கள்.

அஸாஸியர்களாகட்டும் பரங்கியர்களாகட்டும் இமாதுத்தீன் ஸெங்கியாகட்டும் – அடிபணிந்து போகாமல் அவர்களை எல்லாம் கடுமையாக எதிர்த்துக் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தாக்குப்பிடித்து நின்ற டமாஸ்கஸ், நூருத்தீனின் மடியில் கனிந்து விழுந்தது. தன் பாதுகாப்பிற்கும் சுதந்திரத்திற்கும் அவர் அளித்த வாக்குறுதியை நம்பியது.

அதில் ஏதொன்றும் வீண் போகவில்லை. தன் வரலாற்றின் புகழ்பெற்ற காலகட்டம் ஒன்றுக்கு அந்நகரம் தயாரானது.

அடுத்த நாள் உலமாக்களையும் காழீகளையும் வர்த்தகர்களையும் வரவழைத்து உரையாற்றினார் நூருத்தீன். அவர்களுக்கு நம்பிக்கையும் உத்தரவாதமும் அளிக்கப்பட்டன. உணவுப் பொருள்கள் வண்டி வண்டியாக நகருக்குள் கொண்டுவரப்பட்டு வினியோக்கிப்பட்டன. பழ விற்பனைக்கும் காய்கறி அங்காடிக்கும் நீர் வினியோகத்திற்கும் விதிக்கப்பட்டிருந்த வரிகள் இன்றிலிருந்து ரத்து என்று அறிவிக்கப்பட்டது. தெளிவாக வரையப்பட்ட அரச ஆணை அடுத்த வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப்பின் பள்ளிவாசலின் பிரசங்க மேடையிலிருந்து மக்களுக்கு வாசிக்கப்பட்டது.

‘மக்கள் கைதட்டி மகிழ்ந்தனர். குடிமக்கள், உழவர்கள், பெண்கள், வறியவர் – அனைவரும் நூருத்தீனுக்காக இறைஞ்சினர். அவரது வெற்றிக் கொடி என்றென்றும் வீச இறைவனிடம் வேண்டினர்’ என்று அன்றைய குதூகலக் கொண்டாட்டத்தை எழுதி வைத்திருக்கிறார் அச்சமயம் அவற்றை நேரடியாகக் கண்டுகளித்த வரலாற்று ஆசிரியர் இப்னுல் ஃகலனாஸி.

மக்களிடம் மட்டுமின்றி, அதிபர் அபாக்கிடமும் வன்மை இன்றித் தாராளமாக நடந்துகொண்டார் நூருத்தீன். அவருக்கு ஹும்ஸுப் பகுதியில் நிலங்கள் ஒதுக்கி அளிக்கப்பட்டன. அதற்குரிய பிரபுத்துவம் வழங்கப்பட்டது. எவ்வித தொந்தரவுக்கும் அவர்களை உள்ளாக்காமல் அவர் அங்குத் தமது அனைத்து உடைமைகளையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அடுத்து டமாஸ்கஸைப் புணரமைக்க வேண்டியிருந்தது. நூருத்தீன் அவ்வேலையைத் துரிதப்படுத்தினார். பெரிய பள்ளிவாசலின் மேற்கே உள்ள செல்ஜுக் கோட்டை பலப்படுத்தப்பட்டது. நகரத்தின் சுவர்கள் செப்பனிடப்பட்டன. நகரம் புதுப் பொலிவடைந்தது. நூருத்தீன் ஆட்சியின் தலைமையகம் அலெப்போவிலிருந்து டமாஸ்கஸுக்கு இடம் பெயர்ந்தது. முதலாம் சிலுவை யுத்தம் தொடங்கிய காலத்திலிருந்து பிளவு பட்டிருந்த சிரியாவின் இரு பெரும் நகரங்களான அலெப்போவும் டமாஸ்கஸும் ஒற்றை முஸ்லிம் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றிணைந்தன. நூருத்தீனுக்கு அல்-மாலிக் அல்-ஆதில் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

வெகு சிறு கைகலப்புகளைத் தவிர, முஸ்லிம்கள் தங்களுக்குள் மோதி, கொன்று, இரத்தம் சிந்தாமல் நிகழ்வுற்றிருந்தது அவ்வெற்றி.

‘முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கொன்று மடிய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அவர்கள் இணைவைப்பாளர்களுடன் போராடித் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடியும். நான் அவர்களுக்கு அதற்கு ஓர் அவகாசம் வழங்குவேன்’ என்று அறிவித்திருந்தார் நூருத்தீன். அவ்வாறே, முழுக்க முழுக்க மக்களின் உள்ளங்களை வென்று அவர்களின் மனமாற்றத்தை மூலதனமாக்கி அதைச் சாதித்துக் காட்டியிருந்தார் முப்பத்தேழு வயது நிரம்பியிருந்த நூருத்தீன்.

அந்த சுல்தானிடம் தாம் தளபதியாகி, பின்னர் ஜெருசலத்தை மீட்கும் நாயகனாக உருவாகப் போவதை அறியாமல் அன்று டமாஸ்கஸில் நடைபெற்ற அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் பதினாறு வயது இளைஞர் ஸலாஹுத்தீன் அய்யூபி.

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.