சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36

Share this:

36. குருதிக் களம்

சென்ற அத்தியாயத்தில் துக்தெஜினும் இல்காஸியும் இணைந்து அலெப்போவைக் கைப்பற்றினார்கள் என்று பார்த்தோமில்லையா? அதையடுத்து அலெப்போவின் சுற்றுப் பகுதிகளைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்காஸி கொண்டுவந்தார், டமாஸ்கஸின் அதிகாரம் துக்தெஜினுக்கும் அலெப்போவும் சுற்றுப்புறமும் இல்காஸிக்கும் என்றானது. இந்த இல்காஸி அல்-அர்துகியின் முழுப்பெயர் நஜ்முத்தீன் இல்காஸி இப்னு அர்துக்.

அலெப்போவிலிருந்த மக்களுக்கும் அந்நகரின் படை வீரர்களுக்கும் இல்காஸியைப் பிடிக்காமல் போய்விட்டது. இல்காஸியும் அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. தம்முடைய மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷிடம், ‘பார்த்துப் பதவிசாக ஆட்சி நடத்து’ என்று அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு மர்தினுக்குத் திரும்பிவிட்டார். இல்காஸி அலெப்போவிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார் என்பதை அறிந்ததும் அதன் வடக்கே இருந்த அஃஸாஸ் என்ற நகரை சிலுவைப்படை முற்றுகையிட்டுக் கைப்பற்றிவிட்டது.

இல்காஸி, துக்தெஜின் இருவரும்தாம் சிலுவைப் படையினருடன் கூட்டணி அமைத்திருந்தார்களே – அவர்களுடன் சேர்ந்துகொண்டு முஸ்லிம் படையினரையும் எதிர்த்துப் போரிட்டார்களே – இப்பொழுது சிலுவைப் படை ஏன் இல்காஸியின் ஆட்சிப் பகுதியை அபகரிக்கிறது என்றெல்லாம் வியப்பு ஏற்பட்டால், அது அப்படித்தான். சமயத்திற்கு ஏற்றபடி ஒருவருக்கொருவர் கைகோர்த்துக்கொள்வார்கள்; இணைந்து போரிடுவார்கள். பிறகு அவரவருக்குத் தத்தம் பகுதி; தத்தம் செங்கோல்.

முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு அப்படி என்றால் சிலுவைப் படையைப் பொருத்தவரையோ அவர்களது இலட்சியம் அதுவும் அதற்கு மேலும். லெவண்ட் பகுதியைக் கைப்பற்ற வேண்டும்; முஸ்லிம்களின் ஆட்சியை அகற்ற வேண்டும்; சிலுவை ராஜாங்கத்தை ஏற்படுத்த வேண்டும்; இது புனிதப் போர். அப்படித்தான் அவர்கள் தங்களது செயல்களைத் தொடர்ந்தார்கள்.

அஸாஸ் பறிபோனதை அறிந்ததும் இல்காஸிக்கு எக்கச்சக்கக் கோபம். ஆனால் உடனே கிளம்பி வர முடியாதபடி அவரது படை பலம் குன்றியிருந்தது. அதனால் முதலில் அதை பலப்படுத்திவிட்டு, டமாஸ்கஸின் துக்தெஜினுக்குத் தகவல் அனுப்பினார். ஹி.512/கி.பி.1118ஆம் ஆண்டு. சிலுவைப் படையை அலெப்போவிலிருந்து நெட்டித்தள்ள இருவரும் ஒன்றிணைந்தனர். ஆனால் சிலுவைப் படை அலெப்போவின் நுழைவாயில்களைச் சுற்றிக் காவலையும் பாதுகாப்பையும் பலப்படுத்திவிட்டது. இல்காஸி-துக்தெஜின் கூட்டணி அதை உடைக்க முடியாமல் போனது.

அலெப்போவில் இருந்த முஸ்லிம்களின் நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வந்தது. அம்மக்கள் வேறு வழியின்றி இராக்கில் உள்ள அப்பாஸிய கலீஃபாவுக்கும் செல்ஜுக் சுல்தானுக்கும் உதவி கோரித் தகவல் அனுப்பினர். அங்கு அப்பாஸிய கலீஃபாவோ பலவீனமான நிலையில் இருந்தார். படை உதவி எனில் அதை செல்ஜுக் சுல்தான் முன்னெடுத்து நடத்தினால்தான் உண்டு. ஆனால், அதற்குச் சற்றுமுன் செல்ஜுக் சுல்தான் முஹம்மது இப்னு மாலிக்‌ஷா மரணமடைந்துவிட, அடுத்த சுல்தான் யார் என்று செல்ஜுக் குடும்பத்திற்குள் குழப்ப நிலை. மரணமடைந்த சுல்தான் முஹம்மதுவின் மைந்தர் மஹ்மூது, பின்னர் செல்ஜுக் சுல்தானாகப் பதவி ஏற்றார் எனினும் அச்சமயம் பக்தாத், அலெப்போவின் உதவிக்கு வர முடியவில்லை.

oOo

அலெப்போவை நெருங்க முடியாமல் போனதும் மர்தினுக்குத் திரும்பிய இல்காஸி, தம் படையைப் பலப்படுத்த மேலும் பல வீரர்களைத் தேர்ந்தெடுத்தார். இருபதாயிரத்துக்கும் அதிகமான துருக்கியர்கள் அவரது படையில் வந்து இணைந்தனர். அச்சிலுவைப் படையை இனி ஒரு கை பார்த்துவிடுவது என்று அவருக்குள் மாளா ஆத்திரம். தாம் சிலுவைப் படையை எதிர்த்து அணிவகுக்கும் செய்தியை அப்பாஸிய கலீஃபாவுக்கும் புதிய செல்ஜுக் சுல்தான் மஹ்மூதுக்கும் தெரிவித்துவிட்டு, டமாஸ்கஸிலிருந்த துக்தெஜினுக்கும் தகவல் அனுப்பினார். தோள் இணைய வருகிறேன் என்று துக்தெஜின் பதில் அனுப்ப இருவரும் இணைந்து சிலுவைப் படையின்மீது போர் தொடுக்க நாள் குறித்தார்கள். ஹி. 513/கி.பி. 1119 என்று அது முடிவானது.

அதற்குமுன் சற்று கால அவகாசம் இருந்ததால், திரண்ட படையை வைத்துக்கொண்டு எதற்குக் காலத்தை வீணாக்க வேண்டும் என்று இல்காஸி தம் படையினருடன் சென்று முதலில் எடிஸ்ஸாவை முற்றுகையிட்டார். முதலாம் பால்ட்வின் மரணமடைந்ததைச் சென்ற அத்தியாயத்தில் வாசித்தோமில்லையா? அவரையடுத்து அவருடைய உறவினரான, எடிஸ்ஸாவின் அதிபராக இருந்த இரண்டாம் பால்ட்வின், தம் நண்பரான ஜோஸ்லினை எடிஸ்ஸாவின் அதிபராக அமர்த்திவிட்டு ஜெருஸலத்தின் ராஜாவாகப் பதவியேற்றார்.

எடிஸ்ஸாவின் புதிய அதிபரான ஜோஸ்லின் இம்முற்றுகையில் சரணடையாவிட்டாலும் தாங்கள் முன்னர் சிறை பிடித்த முஸ்லிம் கைதிகளை விடுவிக்கிறோம் என்று பேரம் பேசினர். எடிஸ்ஸாவின் பாதுகாப்பு அரணை எளிதில் தகர்த்து வெற்றிகொள்ள முடியாது என்பது இல்காஸிக்கும் தெரியும். அதனால், அதை ஏற்றுக்கொண்டு மற்றொரு நிபந்தனையும் விதித்தார் இல்காஸி. புத்திசாலித்தனமான நிபந்தனை அது.

‘நன்று! நான் முற்றுகையைத் தளர்த்துகிறேன். அலெப்போ பகுதிகளைக் கைப்பற்றியுள்ள அந்தாக்கியாவின் ரோஜருடன் நான் போரிடும்போது அவர்களிடமிருந்து உதவி கோரிக்கை வந்தால் எடிஸ்ஸா ஆட்டத்திற்கு வரக்கூடாது’. வியக்கத்தக்க வகையில் அந்த நிபந்தனையையும் ஏற்றுக்கொண்டது எடிஸ்ஸா.

இது ஒரு முக்கியமான திருப்புமுனை. அதுநாள் வரை முஸ்லிம் ஆட்சியாளர்கள் மத்தியில் திகிலை ஏற்படுத்தி, பெரும் சக்தியாகத் தோற்றமளித்திருந்த சிலுவைப் படையிடம், அவர்கள் ஒன்றிணையாமல் தடுக்க நிபந்தனை விதிக்கும் அளவிற்கு முஸ்லிம் ஆட்சியாளர்களின் கை ஓங்க ஆரம்பித்தது, சந்தேகமேயின்றிப் பெரும் திருப்பம்.

தமது படையின் பின்புறத்திற்குப் பரங்கியர்களின் ஆபத்து இனி இல்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு, தெற்கே அலெப்போவை நோக்கித் தம் படையைத் திருப்பினார் இல்காஸி. இப்பொழுது அவருடன் மேலும் இரு முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்களது படைகளுடன் வந்து இணைய, மேலதிக வலுவடைந்தது அவரது படை. அனைவரும் சர்மதா எனும் நிலப்பரப்பில், அலெப்போவின் சற்று தென்மேற்கே உள்ள அல்-அதாரிபை வந்தடைந்தனர். டமாஸ்கஸிலிருந்து துக்தெஜினின் படையை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

அந்தாக்கியாவின் ரோஜர் தலைமையில் திரண்டிருந்த சிலுவைப்படையில் 700 சேனாதிபதிகள்; 3000 காலாட்படையினர். மற்றும் டர்கோபோல்ஸ் என்றொரு பட்டாளம் இணைந்திருந்தது. கிரேக்க மொழியில் டர்கோபோல் என்பதன் பொருள், ‘துருக்கியர்களின் மைந்தர்கள்’ என்பதாகும். துருக்கியர்களுடன் கலப்பினத்தில் பிறந்தவர்களோ, ஸெல்ஜுக்கியர்களோ கிறிஸ்தவர்களாக்கப்பட்டு அவர்கள் டர்கோபோல்ஸ் என்று அழைக்கப்பட்டனர். வில்லாளிகளாகவும் குதிரைப் படையினராகவும் உள்ள இவர்களைக் கூலிப்படைகளாக பைஸாந்தியப் படையும் சிலுவைப் படையும் தங்களது போர்களில் சேர்த்துக்கொண்டனர். அப்படிப்பட்ட டர்கோபோல்ஸ்களை ரோஜர் தமது படையில் சேர்த்துக்கொண்டார். ஆனால் அவர்களின் எண்ணிக்கையைப் பற்றிய குறிப்பு இல்லை. இவையன்றி, ஜெருஸலம், திரிப்போலியிலிருந்து உதவிப் படைகளை வேண்டியும் அந்த ஆட்சியாளர்களுக்குத் தகவல் சென்றிருந்தது.

ரோஜரின் இந்தப் படை அலெப்போவின் வடமேற்கே டெல் அஃப்ரீன் பகுதியில் பாடி இறங்கியிருந்தது. அவர்கள் தங்கியிருந்த பள்ளத்தாக்கைச் சுற்றி மலைகள் உயர்ந்து நின்றன. அவை தங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு என்று நம்பினார் அந்தாக்கியாவின் ரோஜர். அங்குப் படையரண் ஒன்றை நிர்மானித்துத் தங்களைப் பத்திரப்படுத்திக்கொண்டு, ‘நீர் எங்களைத் தேடி வந்து சிரமப்பட வேண்டிய அவசியமில்லை; நாங்களே உம்மிடம் வருவோம்’ என்று இல்காஸிக்குத் தகவலும் அனுப்பினார். மறுநாள் முஸ்லிம்கள் எதிர்பாராத வகையில் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்பது திட்டம்.

ஆனால் சிலுவைப் படை முகாமிட்டுள்ள பகுதியைத் துல்லியமாகக் கண்டறிந்த முஸ்லிம் உளவாளிகள் அன்று மாலையே இல்காஸிக்குத் தெரிவித்துவிட்டனர். அலெப்போவின் காழீ முஸ்லிம் படையினருக்கு நடுவே வீராவேசச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். ஜிஹாதுப் போரின் அவசியத்தையும் சிலுவைப் படையினரை எதிர்க்க வேண்டிய கடமையையும் உணர்ச்சி பொங்க விவரித்த அந்த உரை முஸ்லிம் படையினருக்கு அளவற்ற ஊக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இரவோடு இரவாக சர்மதாவின் மூன்று திசைகளிலிருந்தும் இல்காஸியின் படை சுற்றி வளைத்து நெருங்கியது. அதிகாலை நேரம். பரங்கியர்களின் ஊதுகுழல் அபாய ஒலியை எழுப்ப, அதுகேட்டு அலறியெழுந்த சிலுவைப் படையினர், முஸ்லிம்களின் பெரும் படை, பதாகைகளுடன் தங்களைச் சுற்றி நெருங்கி வந்துகொண்டிருப்பதைப் பார்த்துத் திகைத்து விட்டார்கள். விழுந்தடித்து ஓடி, ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு அவர்கள் களத்திற்குப் பறக்க, மதகுரு ஒருவர் மெய்ச் சிலுவையை உயர்த்திக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தபடி ஓடினார்.

ரோஜர் சற்றும் எதிர்பாராத திருப்பம் இது. இயன்ற அளவு தற்காப்பு வியூகம் அமைத்துவிட்டு, தமக்கு வலதுபுறம் உள்ள சேனாதிபதிகளை முஸ்லிம்களைத் தாக்கும்படி கட்டளையிட்டார். பாய்ந்த அவ்வீரர்கள் தொடக்கத்தில் முஸ்லிம் படையின் முன்னேற்றத்தை ஓரளவு தடுக்கவும் செய்தனர். ஆனால், ஏக காலத்தில் அணி திரண்டு அனைத்துத் திசைகளிலுமிருந்தும் அவர்கள் மீது பாய்ந்த முஸ்லிம் படையினரிடம் காட்டாற்று வீரியம். இடைவிடாத அம்பு மழை வெட்டுக்கிளிகளாய் வானை மூடிச் சிலுவைப் படையினர் மீது பாய்ந்தபடி இருந்தது. குதிரைப் படையும் காலாட் படையும் வீசிய வாள்களால் சிலுவைப் படையினரின் தலைகளும் அங்கங்களும் துண்டாடப்பட்டுப் பறந்தன. நிலமெங்கும் பீய்ச்சிப் பாய்ந்தது குருதி. போர் மும்முரமடைய மும்முரமடையச் சிலுவைப் படையின் இடப்புறமிருந்த டர்க்கோபோல்களின் அணி முஸ்லிம்களின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்து சிதறியது. அந்த முறிவு பரங்கியர்கள் அணியை முற்றிலுமாய் நிலைகுலைய வைத்தது. இல்காஸியின் படை வட்டமாக நெருங்க நெருங்க, அதன் சுழியில் மையமாக, வகையாகச் சிக்கினார் சிலுவைப் படையின் தலைவர் ரோஜர்.

முஸ்லிம் படை வீரர் ஒருவரின் வாள் ரோஜரின் மூக்கின் நடுவே பாய்ந்து அப்படியே மேலெழுந்து அவரது மூளையைத் துளைத்தது. மெய்ச் சிலுவையின் அடியில் ரோஜரின் சடலம் விழுந்தது. அச்சிலுவையைச் சுமந்து கொண்டிருந்த மதகுருவும் அப்போரில் கொல்லப்பட்டார். அத்துடன் பரங்கியர்களின் எதிர்ப்பு முற்றிலும் நொறுங்கித் தோற்றனர். பிழைத்த சிலர் மேற்கு நோக்கித் தப்பி ஓடினர்.

சிலுவைப் படையின் எழுபது சேனாதிபதிகள் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் போர்க் கைதிகளாகச் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களை மீட்க மூன்று இலட்சம் தீனாரை மீட்புத் தொகையாக அளிப்பதற்குச் சிலுவைப் படையினர் பின்னர் பேரம் பேசியபோது, அதைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் அனைவரையும் கொன்று முடித்தார் இல்காஸி.

முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியையும் சிலுவைப் படைக்கு அவர்கள் நினைத்துப் பார்க்காத தோல்வியையும் அளித்த இப்போர் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டது. டமாஸ்கஸ் நகரைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர், ‘இஸ்லாத்திற்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றிகளுள் இது ஒன்று’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘போர்க் களமெங்கும் துண்டாடப்பட்ட பரங்கியர்களின் குதிரைகள்; அவை ஒவ்வொன்றிலும் செருகி நிலைகுத்தியபடி ஏராளமான அம்புகள்; அதனால் அவை முள்ளம்பன்றிகளைப் போல் கிடந்தன’ என்று தாம் நேரில் கண்டதை அவர் விவரித்திருக்கிறார்.

தங்களுக்குப் பெரும் தோல்வியையும் மாபெரும் உயிரிழப்பையும் அளித்த இந்தப் போரின் களத்திற்கு அவர்கள் இலத்தீனில் Ager Sanguinis என்று பெயரிட்டுவிட்டனர். தமிழில் குருதிக் களம்! Battle of Sarmada என்பது இரண்டாம் பட்சமாகி வரலாற்று ஆசிரியர்களால் Battle of Ager Sanguinis என்றே இந்த யுத்தம் குறிப்பிடப்படுகிறது.

oOo

அம்மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அலெப்போவைச் சுற்றிப் பரங்கியர்கள் பிடித்து வைத்திருந்த இதர பகுதிகளையும் இல்காஸி மீட்டெடுத்தார். அவையாவும் முஸ்லிம்களின் கைகளுக்கு மீண்டு அலெப்போவின் இருப்பு பத்திரமானது.

இதற்கிடையே, நடந்தவை அனைத்தையும் கேள்விப்பட்டு, ஜெருசலத்தின் புதிய ராஜா இரண்டாம் பால்ட்வின் தலைமையில் ஒரு படையும் திரிப்போலியிலிருந்து ஒரு படையும் உதவிப் படைகளாக, தலைவரை இழந்த அந்தாக்கியாவை அடைந்தன. இல்காஸியை எதிர்க்க அணி திரண்டன. ஆனால், அதற்குள் இல்காஸிக்கு உதவியாக டமாஸ்கஸ் துக்தெஜினின் படை வந்து இல்காஸியுடன் இணைந்தது. அதையடுத்து நிகழ்ந்த போரில் கிறிஸ்தவர்கள் தரப்பில் அதிக உயிரிழப்பை முஸ்லிம் படைகள் ஏற்படுத்தினாலும் தெளிவான ஒரு வெற்றி கிட்டவில்லை. அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் இல்காஸி.

இந்தப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம் என்றாலும் கைதானவர்களுள் முக்கியமான ஒருவர் தொழு நோயாளியான ராபர்ட் ஃபிட்ஸ்-ஃபுல்க். ரோஜருக்கும் துக்தெஜினுக்கும் இடையே கூட்டணி ஏற்பட முன்னர் உதவிய, துக்தெஜினின் கூட்டாளியான அதே ராபர்ட். அவர் போர்க் கைதியாய் டமாஸ்கஸுக்குக் கொண்டுவரப்பட்டார். துக்தெஜினுக்கும் தமக்கும் உள்ள நட்பின் அடிப்படையில் ஏதேனும் கருணை அளிக்கப்படும் என்றுதான் அவர் நம்பினார். ஆனால் ராபர்ட் ஃபிட்ஸ்-ஃபுல்க்கின் செயலால் மிகுந்த கோபத்தில் இருந்த துக்தெஜின் தமது வாளால் ஒரே வீச்சில் அவரது தலையைக் கொய்து எறிந்ததுதான் நிகழ்ந்தது.

ஹர்ரான் போரின் தோல்விக்குப் பிறகு நிலவிய நிலைமையை விட மோசமான நிலைக்கு அந்தாக்கியா இப்பொழுது உள்ளானது. இதற்குமுன் சிலுவைப் படைத் தலைவர் எவருமே முஸ்லிம்களுடன் நிகழ்ந்த போரில் கொல்லப்பட்டதில்லை. அதனால் ரோஜரின் இழப்பு அவர்களுக்குப் பேரதிர்ச்சி. ரோஜருக்கு வாரிசு இல்லை என்பதால் அடுத்து அந்தாக்கியாவின் தலைவர் யார் என்று மற்றொரு சிக்கல் உருவானது.

முன்னர் மரணமடைந்த சிலுவைப் படைத் தலைவர் பொஹிமாண்டின் ஒன்பது வயது மகன் இரண்டாம் பொஹிமாண்டை (பொஹிமாண்ட் II) தலைவராக்குவோம் என்று தெரிவித்தார் ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வின். அச்சிறுவன் அச்சமயம் இத்தாலியில் இருந்தான். பெயரளவில் அவன் அதிபராகட்டும்; அவன் பதினைந்து வயதை எட்டும்வரை அவனது சார்பாக நானே ஆட்சியைக் கவனித்துக் கொள்கிறேன் என்று அந்தாக்கியாவைத் தம் ஆளுகைக்குள் கொண்டுவந்து முடித்தார் பால்ட்வின் II.

அவ்விதம் அப்பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டாலும் சர்மதா போரின் இழப்பைத்தான் அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. “நாம் தொடுத்திருப்பது புனிதப் போர் எனில், ஏன் இந்தச் சறுக்கல்?” என்று விவாதித்தார்கள். ‘பாவம்! அதுதான் இதற்குக் காரணம்!’ என்று முடிவெடுத்தார்கள். இத்தோல்விக்குக் காரணம் ரோஜரின் பாவம்! அவரது தீவினை; அவர் தகாமுறை அரசர்; விபச்சாரகர் என்று அவரது தலையில் அனைத்துப் பழிகளையும் தூக்கிப்போட்டுத் தங்களை சமாதானப்படுத்திக் கொண்டது சிலுவைப் படை.

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.