நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 3)

இந்திய வரலாற்றுத் திரிப்பின் தந்தை மெக்காலே!
Share this:

ப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறு தான் அளவுகோல்.

கடந்த காலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத எந்தச் சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்.

‘முதலாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடந்தது?’ என்று கோடிட்ட இடத்தை நிரப்புகிற கேள்வியாக வரலாற்றை நினைவு வைத்திருக்கிறோம். அதுதான் தவறு. ‘ஏன் அந்தப் போர் நடந்தது? அதனால் நிகழ்ந்த பாதிப்புகள் என்னென்ன?’ என்பன போன்ற கேள்விகள் மூலம்தான் வரலாற்றை அணுக வேண்டும். கடந்த காலத்தின் துணை கொண்டு நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ளவும் வருங்காலத்தைக் கணிக்கவும் பயன்படுகிற சமூக விஞ்ஞானமாக வரலாற்றை பார்ப்பதே சரியான அணுகுமுறை.

ஆனந்த விகடன் 29-11-06 இதழில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.

இந்தியாவின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் பலரின் குறிப்புகளில் அல்பிருனி, இப்னுபதூதா, ஃபாஹியான், யுவான் சுவாங் போன்றோரின் வரலாற்றுப் பயணக் குறிப்புகள் பிரசித்திப் பெற்றவை. குறிப்பாக அல்பிருனி கி.பி. 1017-ல் இந்தியா வந்து, சுமார் 13 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்து, சம்ஸ்கிருதம் கற்று, பல இந்தியத் தத்துவ அறிஞர்களைச் சந்தித்து, அப்போதைய இந்தியக் கலாச்சாரம், ஆன்மீகம், இலக்கியம் மற்றும் கணிதம் பற்றி மிக விளக்கமாகத் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.

ஆங்கிலேய ஆதிக்கத்தின்போது பல ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களும் இந்திய வரலாற்றைப் பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை நடுநிலையற்று ஒருதலைச் சார்பானதாகவும் ஆதிக்க சக்திகளின் அரசியல் கொள்கைகளுக்குச் சாதகமானதாகவுமே புனையப் பட்டிருந்தன.

‘பிரித்தாளும் சூழ்ச்சி என்பது வெள்ளையரின் அரசியல் கொள்கை. எனவே இந்திய வரலாற்றைக் காலப்பாகுபாடு செய்யும்போது ‘இந்து இந்தியா’ ‘முஸ்லிம் இந்தியா’ ‘பிரிட்டிஷ் இந்தியா’ எனப் பகுத்தனர். எனவே இந்து இந்தியா படையெடுப்பால் முஸ்லிம் இந்தியாவாக்கப்பட்டது என்பதும் வெள்ளையராட்சியில் இது நவீன வளர்ச்சியைப் பெற்றது என்பதும் இதன் மூலம் பொருளாகிறது.’ – பேராசிரியர் அ. மார்க்ஸ்

ஸ்டூவர்ட் மில் என்கிற ஆங்கிலேய வரலாற்றாசிரியர் ‘ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா’ என்கிற தமது வரலாற்று நூலில், இந்தியாவை ‘இந்து இந்தியா’, ‘முஸ்லிம் இந்தியா’ என்று வகைப்படுத்தினார். இந்தியாவில் இன்று இந்துத்துவ சக்திகள் தூபமிட்டு வளர்த்து வரும் இந்து, முஸ்லிம் சமுதாயங்களுக்கிடையிலான பகை நெருப்பின் பொறி இங்குதான் பற்ற வைக்கப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தொடக்கக் காலத்தில் எவ்வித கருத்து வேற்றுமைகளும் இல்லாமல் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். குறிப்பாக 1857 ல் நடந்த மாப்பிள்ளைக் கலகம் என அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம் மன்னர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. முஸ்லிம் மன்னர்களிடம் இந்துக்கள் அமைச்சர்களாகவும் இந்து மன்னர்களிடம் முஸ்லிம்கள் படைத்தலைவர்களாகவும் இருந்திருக்கின்றனர். வெள்ளையர்களின் வருகைக்கு முன்னர் இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருந்த பிணைப்பினை இது உறுதி செய்கிறது. இவ்விரு தரப்பினருக்குமிடையில் நிலவிய இத்தகைய நேசத்தையே வெள்ளையரின் ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ பிரித்து வைத்தது.

சில ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களின் வரலாற்றுக் குறிப்புகள் உள்நோக்கம் கொண்டவையாகவும் நம்பகத் தன்மையற்றவையாகவும் இருந்தன. எடுத்துக்காட்டாக, தங்களின் ஆதிக்கத்திற்குப் பெரும் சவாலாக விளங்கிய காரணத்திற்காக, சாதி மத பேதமின்றி, தனது குடிமக்களின் பெருத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த திப்பு சுல்தானின் பெருமையைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கில் சில ஆங்கிலேய நூலாசிரியர்கள் வரலாற்றுத் திரிபுவாதத்தைக் கையாண்டனர்.

திப்புசுல்தான் இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் கொடுமைப் படுத்தினார் என உலவும் கதைகளுக்கு முக்கிய மூலவேர் ஆங்கிலேய நூலாசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் (W. Kirkpatrick, M. Wilks) போன்றவர்கள் எழுதிய நூல்களே. இவ்விருவரின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றது என Brittlebank, Hasan Chetty, Habib, Saletare மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேற்கண்ட இரு நூலாசிரியர்களுமே அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர்களிடம் பணி புரிந்தவர்கள். மேலும் திப்புவுக்கு எதிரானப் போர்களில் பங்கு கொண்டு, அப்போர்களில் ஆங்கிலேயப்படை அடைந்த தோல்வியை நேரில் கண்டவர்கள். இன, மத பேதமின்றி இந்துக்கள், முஸ்லிம்கள் என எல்லாத்தரப்பினரிடமும் செல்வாக்குப் பெற்றவராக இருந்த திப்புவின் பெருமையைக் குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வரலாற்றுக் குறிப்புகள் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் இவர்கள் கட்டுக்கதைகளை எழுதி வைத்திருந்தனர்.

ஆங்கிலேயர் காலத்தில் மெக்காலே என்பவரால் வடிவமைக்கப் பட்ட கல்வித் திட்டத்தில் இந்த ஆங்கிலேய நூலாசிரியர்களின் குறிப்புகள்தான் ‘இந்திய வரலாறு‘ என்ற பெயரில் மாணவர்களுக்கு போதிக்கப் பட்டது. எந்த வித சார்பு நிலையோ பாரபட்சமோ இன்றி நடுநிலையாகவும் யதார்த்தமாகவும் பதியப் பட்டிருந்த அல்பிருனி போன்றோரின் வரலாற்றுக் களஞ்சியங்கள் மறக்கடிக்கப் பட்டன.

மெக்காலேவின் கல்வி முறை அமுல் படுத்தப்படுமுன் இந்தியாவில் இரண்டு விதமான கல்விக்கூடங்கள் இயங்கி வந்தன. அவை, சமஸ்கிருத பாடங்களை பயிற்றுவிக்கும் குருகுலங்கள், மற்றும் அரபி மொழிக் கல்வி போதிக்கும் மதரஸாக்கள். இவ்விரு வகை கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கும் அரசாங்க உதவித் தொகை வழங்கப் பட்டு வந்தது. இக்கல்வி முறையைத்தான் மெக்காலே மாற்றி அமைக்க விரும்பினார். இது தொடர்பாக அவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 2 பிப்ரவரி 1835-ல் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்;

இந்திய மாணாக்கர்களுக்கு எந்த மொழியில் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் நம்மிடம் இருக்கையில், எந்த ஒரு பாடத்திலும் நமது ஆங்கில மொழியுடன் ஒப்பிடும் அருகதையுள்ள புத்தகங்கள் எதுவுமே இல்லாத மொழிகளில் நாம் பாடம் நடத்துவதா?

ஐரோப்பிய அறிவியல் பாடங்களை நம்மால் போதிக்க முடியும் எனும் போது அவற்றிற்கெல்லாம் நேர்மாறான முறைகளைக் கொண்ட பாடங்களை நாம் போதிப்பதா?

பொதுப்பணத்தில் நடத்தப்படும் கல்விக்கூடங்களில் ஆழமான தத்துவ இயலையும் உண்மை வரலாறுகளையும் போதிப்பதற்கு நாம் ஆதரவு காட்டுவதா?

அல்லது நம் இங்கிலாத்தில் குதிரைக்கு லாடம் அடிப்பவர்களுடன் கூட ஒப்பிட முடியாத மருத்துவ சித்தாந்தங்களையா?

அல்லது ஆங்கிலேயப் பள்ளிச் சிறுமிகளுக்கு சிரிப்பு வரவழைக்கும் வானவியல் சாஸ்திரங்களையா?

அல்லது முப்பது அடி உயர மன்னர்களையும் அவர்களின் முப்பதாயிரம் ஆண்டு கால அரசாட்சிகளையும் பற்றிய வரலாறுகளையா?

அல்லது தேனாலும் வெண்ணெயாலும் ஆன கடல்களைப் பற்றிய புவியியலையா?

மெக்காலே மேற்குறிப்பிட்ட ‘பாடங்கள்’ எந்த மொழியில் இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை!

மெக்காலே மேலும் சொல்கிறார்;

நமது கட்டுப்பாட்டில் உள்ள நிதியை எப்படி வேண்டுமானாலும் செலவளிக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. அதைப் பயனுள்ள கல்வியைப் போதிப்பதற்கே செலவளிக்க வேண்டும். சமஸ்கிருதம், அரபியை விட ஆங்கிலம் கற்றுக் கொள்வதே மிகவும் சிறந்தது. இந்தியர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்….. நம்மிடம் உள்ள வசதிகளைக் கொண்டு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கல்வி போதிக்க நம்மால் இயலாது. அதனால் நாம் ஒரு சிறு வகுப்பினரை உருவாக்க வேண்டும். அவர்கள் நம் அரசாங்கத்திற்கும் நம் ஆட்சிக்குக் கீழ் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர்களாக இருப்பார்கள். இந்த வகுப்பினர் இந்திய ரத்தமும் நிறமும் உடையவர்கள்; அதே சமயம் ஆங்கிலேய சிந்தனை, பண்பாடு, அறிவாற்றல் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்ட அறிவியலைக் கொண்டு தங்கள் உள்ளூர் மொழிகளை நாகரீகப் படுத்துவார்கள். தாங்கள் கற்ற அறிவை பிற மக்களுக்கு முன் எடுத்து வைப்பார்கள்

மெக்காலேவின் திட்டங்களை இந்தியர்களின் ஒரு சாரார் கடுமையாக எதிர்த்தார்கள். குறிப்பாக இந்திய இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், இந்தியாவை ஆக்ரமித்து அடிமைப்படுத்தியிருக்கும் அன்னியர்களின் ஆங்கில மொழி கற்பது தேசவிரோதமானது என்பதால் ‘அதை கற்பது ஹராம்’ என்று (ஃபத்வா) அறிவித்தனர்.

ஆனால், மற்றொரு சாராரோ ஆங்கிலேயருடன் ஒத்துப் போய், மெக்காலே குறிப்பிட்ட சிறப்புச் சலுகை பெற்ற பிரிவினராக ஆனார்கள். அந்தப் பிரிவினர் யார் என்பது இன்று அனைவருக்கும் கூறாமலே புரிந்து கொள்ள முடியும்.

பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் சமஸ்கிருத கல்லூரியில் பயின்று ஹிந்து இலக்கியம், அறிவியல் ஆகியவற்றை கற்றிருந்தும் என்ன பிரயோசனம்? இக்கல்வி எங்கள் வாழ்க்கைத் தரத்தை எவ்வகையிலும் மேம்படுத்தவில்லை. எங்கள் சமூகத்தினர் எங்களைப் போன்றவர்களை கண்டுகொள்வதே இல்லை என்பதால் அவர்களிடமிருந்து நாங்கள் உதவியும் ஊக்கமும் பெற முடியும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை‘ என்று சொல்லி ஆங்கிலேயரிடம் உதவி வேண்டி விண்ணப்பித்தவர்கள் இந்தப்பிரிவினரைச் சார்ந்தவரே.

இவ்வாறு அன்று இந்தியாவை ஆக்ரமித்து ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயருக்கு இணக்கமாக செயல்பட்டு, உதவிகளைப் பெற்று, மேற்கத்தியக் கல்வியையும் பயின்ற அந்தப் பிரிவினர் தான் இன்று இந்தியாவின் அனைத்து அதிகார உயர் பதிவிகளிலும் கோலோச்சிக் கொண்டு தேசபக்திக்கும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மை வரலாறுகள் மக்கள் மத்தியில் இருந்து மறைக்கப்பட்டதன் விளைவுதான் இதெல்லாம்.

மெக்காலே-வின் திட்டப்படி மேற்கத்தியக் கல்வியை பயின்ற இப்பிரிவினர் தாம் பெற்றக் கல்வியை மெக்காலே சொன்னது போல பிற மக்களுக்கும் கற்பிக்கப் பயன்படுத்தினார்களா என்பது விவாதத்திற்குறிய விஷயம்.

ஆங்கிலேய ஆட்சிக்கு விசுவாசமாக உழைக்கக் கூடிய, ஆங்கிலம் பேசக்கூடிய குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப் பட்ட மெக்காலே-வின் கல்வித்திட்டம்தான் இன்றும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களால் எழுதப் பட்ட, புனைந்துரைகளும் திரிப்புகளும் நிரம்பிய ‘இந்திய வரலாறு’ தான் இன்றும் இந்திய மாணவர்களுக்கு போதிக்கப் படுகிறது.

ஆக்கம்: இப்னு பஷீர்

< பகுதி 2 | பகுதி 4 இன்ஷா அல்லாஹ் விரைவில்…


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.