வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 4

மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்டக் கடுமையான சடங்குகளால், ஒரே நேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட நாயர் பெண்களால், சொந்தத் தந்தையின் பெயர் அறியாச் சமுதாயமாக நாயர் சமுதாயம் மாறியது. இதனை வரலாற்றாசிரியர் புக்கன்னான் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“விசித்திரமான இச்சடங்குகளின் பலனாக ஒரு நாயருக்குக்கூட அவரின் சொந்தத் தந்தை யார் என்பது தெரியாமல் இருந்தது. எல்லோரும் அவரவரின் சகோதரி மகன்களை வாரிசுகளாகக் கருதி வந்தனர்” – கேரளம், பிரான்சிஸ் புக்கன்னான், பக்கம் 69-70.

குடும்பக் கட்டமைப்பினைச் சின்னாபின்னமாக்கும் மற்றொரு கேவலமான பழக்கமும் நாயர் சமூகத்தில் நடைமுறையில் இருந்தது. அது, உடன்பிறந்த இரு சகோதரர்கள் (அண்ணன், தம்பி) ஒரே பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளும் சடங்காகும்.

வரலாற்றாசிரியர் இளம்குளம் குஞ்சன்பிள்ளை இச்சடங்கைக் குறித்துக் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்:

“அண்ணன் திருமணம் முடிப்பான். அவனின் தம்பிகள், அதாவது அவனின் உடன்பிறந்த சகோதரர்கள் அண்ணனின் மனைவியோடு சேர்ந்து குடும்பம் நடத்துவர். தம்பிகள் வேறு திருமணம் செய்து கொண்டாலும் அண்ணன் மனைவியுடன் குடும்பம் நடத்துவது தொடர்ந்து நடக்கலாம். தாயின் சகோதரி (பெரியம்மா/சித்தி) மகன்களான ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் இவ்வுரிமை உண்டு. ஆனால், தந்தையின் சகோதரருடைய (பெரியப்பா/சித்தப்பா) மகன்களுக்கு இந்த உரிமை இல்லை. அவ்வாறான தந்தையின் சகோதரரின் மகன்கள், தன் (பெரியப்பா/சித்தப்பா மகன்களான) சகோதரனின் மனைவியுடன் குடும்பம் நடத்துவது, பாதி விபச்சாரத்திற்கு ஒப்பாகக் கருதப்பட்டிருந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இரு சகோதரர்களுக்கு ஒரு மனைவி என்பது தண்டனைக்குரியக் குற்றமாக சட்டமாகி விட்டாலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட, தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுக்கும்போது, ‘அண்ணன்-தம்பிகள் இணைந்து நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என தாய்-தந்தயர் ஆவலுடன் எதிர்பார்த்தனர்” – கேரள வரலாற்றில் இருண்ட ஏடுகள், பக்கம் 154.

ஆக மொத்தத்தில் நாயர் பெண்களுக்குச் சொந்த ஜாதியிலோ உயர்ந்த ஜாதியிலோ உள்ள எந்த ஓர் ஆணுடனும் எத்தருணத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. அவர்களுக்கு இருந்த ஒரே தடை, தாழ்ந்த ஜாதியிலுள்ள ஆண்களுடன் மட்டும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதாக இருந்தது. அவ்வாறு தாழ்ந்த ஜாதியிலுள்ள ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பது வெளியானால் அந்தப் பெண்களை ஜாதியை விட்டு விலக்கி, அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.

இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில்கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

இதை வாசித்தீர்களா? :   நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 2)

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார்.

திப்புவின் வெட்க உணர்வையும் பெண்களை அவர் நடத்திய விதத்தையும் அவரது பழக்க வழக்கத்தையும் குறித்து பி.கே. பாலகிருஷ்ணன் வியந்து போற்றுகிறார்:

“மகாராஷ்டிரா போர் வேளையில் அவர்களின் கூடாரத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட அரச குமாரிகளைத் திப்புவின் முன்னிலையில் கொண்டு வந்த வேளையில், அந்த அபூர்வ அழகிகளின் அழகில் மயங்கி விடாமல் அந்த அழகிகளுக்கு ஆபரணங்களும் உயர்ந்த உடைகளும் பரிசுகளாக வழங்கி, போரை நிறுத்துவதற்கு அவர்களின் கணவர்களை வேண்டிக் கொள்ள வேன்டும் என்ற கோரிக்கையுடன் அவர்களைப் பாதுகாப்பாக திரும்ப அனுப்பிய குணம் வியப்பில் ஆழ்த்துகிறது! – திப்பு சுல்தான், பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம் 120.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளைவிடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்”

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

– இன்ஷா அல்லாஹ் தொடரும்…

பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி -3