இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 2

Share this:

சுமார் 850 வருடங்கள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியையும் அங்குள்ள முஸ்லிம்களையும் கருவறுத்த ஐரோப்பியரின் கர்வம் அடுத்து இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சியையும் துடைத்தெறியத் தூண்டியது. அதற்காக பரங்கியர் பெற்றெடுத்ததே கிழக்கிந்தியக் கம்பெனி. இக்கம்பெனியின் ஒரே நோக்கம் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டுவது தான்.

இவ்வாறு கூறும் பொழுது, “வெறும் வியாபாரத்திற்காக ஒரு நாட்டிற்குள் வருபவர்களுக்கு அந்நாட்டையே கைப்பற்றும் மறைமுகத் திட்டம் இருக்குமா?” எனச் சிலருக்கு ஆச்சரியம் தோன்றலாம். ஆனால் ஏகாதிபத்தியக் காலனித்துவச் சிந்தனை கொண்ட ஐரோப்பியர்களையும் அமெரிக்கர்களையும் பொறுத்தவரையில் அது தான் உண்மை. தங்களின் சுகமான ஆடம்பர வாழ்விற்காக முன்னேறும், ஏழை நாடுகளைத் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரத் தங்களின் எதிரிகளாக வரையறுத்துக் கொண்டவர்களை வீழ்த்துவதற்கு எப்படிப்பட்டக் கீழ்த்தரமான வழிமுறைகளையும் அவர்கள் மேற்கொள்வர். ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வியாபாரத்திற்காக வந்தக் காலகட்டத்திலும் சரி, காலனித்துவம் ஒழிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தையக் காலகட்டத்திலும் சரி, ஒரு நாட்டினைக் கைவசப்படுத்த வேண்டும் எனில், ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் முதலில் எடுக்கும் முயற்சி தங்கள் நாட்டு நிறுவனங்களை அந்நாட்டினுள் வியாபாரத்திற்காக ஊடுருவ விடுவதாகும்.

கிழக்கிந்திய கம்பெனி எனும் ஐரோப்பிய அரசு ஸ்பான்சர் செய்த காலனித்துவக் கம்பெனியிடமிருந்து இந்தியாவை மீட்க நடத்தப்பட்ட எண்ணற்ற உயிர்களைப் பலிகொண்ட இந்திய சுதந்திர வரலாற்றை நடுநிலையோடு சிந்தித்தால், அதில் முஸ்லிம்கள், குறிப்பாக உலமாக்களின் தன்னிகரற்ற தியாகங்களை குறிப்பிடாமல் அந்த வரலாறு முழுமை பெறாது. இதை மறைப்பது, மறுப்பது இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கே மிகப்பெரும் இழுக்காகும்.

இந்திய சுதந்திரப் போராட்டங்களில் முஸ்லிம்கள் சிந்திய இரத்தத்தின் அளவு மற்றவர்கள் வியர்வை கூட சிந்தியிருக்கமாட்டார்கள் என்பது தான் வரலாற்று உண்மை. வரலாற்றின் பக்கங்களுக்குள் சற்று ஆழமாகச் கால்பதிப்போம்.

வாஸ்கோடகாமா

கி.பி 1492ல் ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி வீழ்த்தப்படுகிறது.

வாஸ்கோடகாமா கி.பி 1498 மே, 17ல் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார். வியாபாரத்தின் பெயரைக் கூரி இந்திய மண்ணில் கால்பதித்த மிகக் குறிய காலத்திலேயே கி.பி 1510ல் போர்ச்சுகீசியர்கள் கோவாநகரைக் கைப்பற்றுகிறார்கள்.

வாஸ்கோடகாமா வந்தது முதல் கோழிக்கோடு சாமுத்ரி அரசனுக்கும் பரங்கியருக்கும் இடைவிடாத போர் நடை பெற்று வந்தது. மலபார் பிராந்திய பரங்கியர் படைத்தலைவர் மார்டின் டி-ஸோஸா, 25 போர்கப்பல்களுடன் வடக்கிலிருந்த கோலத்ரி மன்னனின் ஆதரவோடு கோழிக்கோடு கடற்கரையை வந்தடைந்தார்.

குஞ்சாலி மரைக்காயர்

கோழிக்கோடு அரசன் சாமுத்ரி செய்வதறியாது திகைத்து நின்ற போது தான், “அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்” என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தார் குஞ்சாலி மரைக்காயர். சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார் அந்த இஸ்லாமிய வீரர். இக்காலகட்டத்தில் கடற்படையைக் குறித்து எவ்வித அறிவோ திட்டங்களோ சாமுத்ரி ராஜா உட்பட பெரும்பாலான இந்திய அரசர்களுக்கு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1521ல் ஹென்றி டிமெனபெஸ் – லோப்வாஸ்-டி-சம்பாயோ ஆகியோர் அடங்கிய பரங்கிய கடற்படை, கோழிக்கோட்டு அரசன் சாமுத்ரியின் கடற்படைத்தளமான பொன்னானி மீது ஆக்ரமிப்பைத் தொடுத்தது.

இதையடுத்து அஹ்மது மரைக்காயர், அவரது தம்பி குஞசாலி மரைக்காயர், இவர்களது மாமா முஹம்மது அலி மரைக்காயர் ஆகியோர் கொச்சியிலிருந்து கோழிக்கோடு சென்று தங்கினார்கள்.

கி.பி. 1523ல் குஞ்சாலி மரைக்காயர் பரங்கியருக்கெதிராகப் போர் செய்ய 200 பெரிய கப்பல்களைத் தயாராக வைத்திருந்தார். கி.பி. 1542ல் பரங்கியருக்கும், குஞ்சாலி மரைக்காயர் படைக்கும் உக்கிரமானபோர் நடைபெற்றது. இப்போரில் குட்டி அலி பரங்கியரை கலங்கடித்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

கி.பி. 1528ல் பர்கூரில் குட்டி அலியின் படைகளும் போர்த்துக்கீசியப் படைகளும் கடுமையாக மோதிக் கொண்டன. மங்கலாபுரத்துக்கும் மவுண்ட் அலிக்கும் இடையில் நடைபெற்ற போரில் சின்னகுட்டி அலி போர்த்துக்கீசியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

முதல் வெற்றி

கி.பி. 1528ல் செத்வாய் என்னுமிடத்தில் போர்த்துக்கீசியர் பல கப்பல்கள் நிறைய இந்திய வளங்களை ஏற்றிக் கொண்டு பலத்த பாதுகாப்புடன் தங்கள் தாய் நாட்டிற்குக் கொண்டு செல்ல முயன்றபோது குஞ்சாலி மரைக்காயர் அக்கப்பல்களைத் தாக்கி, ஒரு வெள்ளையரையும் விடாமல் கொன்று குவித்து மாபெரும் முதல் வெற்றியைப் பெற்றார்.

கி.பி. 1531ல் பரங்கியரை கடற்போரில் கதிகலங்கச்செய்த அஹ்மது மரைக்காயர் வீரமரணத்தினைத் தழுவிக் கொண்டார்.

கி.பி. 1535ல் அட்மிரல் சுலைமான் பாட்ஷா, சமுத்ரியின் படையுடன் சென்று பரங்கியரை வென்று அவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றினார்.

கி.பி. 1537ல் நாநோடி குன்ஹா என்பவர், கவர்னர் பதவிக்கு வந்த போது தியோ-கோ-தே-எஸல்வேலி யாவின் தலைமையில் கோழிக்கோடு கடற்கரையை முற்றுகையிடவும் போப்பூர் நதிக்கரையில் உள்ள சாலியன் என்ற இடத்தில் கோட்டையைக் கட்டவும் முயன்றபோது குஞ்சாலி மரைக்கார் சாலியன் கோட்டையைத் தாக்கினார். இதனைத் தொடர்ந்து நாகப்பட்டின கடற்கரையிலும் போர் நடைபெற்றது. அங்கு 51 சிறப்புக் கப்பல்களில் 8000 வீரர்களுடன் குஞ்சாலி மரைக்காயர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1538ல் தூத்துக்குடி கடற்கரையில் போர்த்துக்கீசியருக்கும், குஞ்சாலி மரைக்காயருக்கும் உக்கிரமான போர்கள் நடைபெற்றன. போர்த்துக்கீசிய படையை இங்கு குஞ்சாலி மரைக்காயர் தோற்கடித்தார். இவ்வாறாக அந்நியருக்கெதிராக கற்பனைகளை மிஞ்சிய பெரும் சாதனை புரிந்த மாவீரன் குஞ்சாலி மரைக்காயர் கொழும்பில் எதிரிகளின் குண்டுக்கு இரையாகி நாட்டுக்காக தன்னுயிர் ஈத்து வீரமரணம் எய்தினார்.

இவரை அடுத்து அவரது குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். 1570ல் போப்பூர் நதிக்கரையின் சாலியன் கோட்டை போரில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் வெற்றி பெற்று, சுமார் 65 வருடங்களாக நடைபெற்று வந்த அந்நியரின் கடலாதிக்கத்தை முறியடித்தார்.

இவருக்குப் பின் மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் தலைமைப் பொறுப்பேற்றார். 1572ல் பரங்கியர்படை மஸ்ஜிதுகளையும் கோயில்களையும் கொள்ளையிட்டு, கோழிக்கோடு, திருக்கொடி, கப்பக்காடு, பொன்னானி துறைமுகங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இவர்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் 1586ல் அந்நியர் படையை வெற்றி கொண்டார்.

1589ல் இவரது மருமகன் குவாஜிமூஸா மரைக்காயர் மற்றோரிடத்தில் பரங்கியரைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாமுத்ரி ராஜாவின் துரோகம், குஞ்சாலி மரைக்காயரின் மறைவு!

1595 -ல் நான்காம் குஞ்சாலி மரைக்காயரும் பரங்கியரை எதிர்த்து வந்தார். ஆனால் அப்போதைய கோழிக்கோடு அரசன், வாஸ்கோடகாமாவின் பேரனான பிரான்ஸிஸ்கோ-டி-காமாவுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டான். இப்பாதகனின் கீழறுப்பு வேலைகளை சற்றும் அறியாமல் மனத்தூய்மையோடு நாட்டிற்காக போராடி வந்த குஞ்சாலி மரைக்காயர் சமுத்ரி அரசனைச் சந்திக்க வந்தபோது அவரைப் பிடித்து பரங்கியரிடம் ஒப்படைத்து விட்டான். இதனால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஊண், உறக்கம் இன்றி கொடுமைப்படுத்தப்பட்டு, இறுதியில் தேசவிரோதி சாமுத்ரி ராஜாவின் கூட்டுச்சதியால் நான்காம் குஞ்சாலி மரைக்காயர் கொடுமையாகக் கொல்லப்பட்டார்.

ஹாஜி பக்கீர் முஹம்மது சேட் என்ற முஸ்லிமால் வழங்கப்பெற்ற (அப்போதைய) இரண்டு இலட்சம் ரூபாயின் மூலம் வாங்கப்பட்ட சுதேசிக்கப்பலின் மாலுமியான வ.உ.சி.க்கு வரலாற்றுப்பாடப்புத்தகத்தில் தனி இடம் ஒதுக்கிய இந்திய அரசு இருநூறுக்கும் அதிகமான சிறப்புப் போர் கப்பல்களைக் கொண்ட மாபெரும் கடற்படையை உருவாக்கி நூறு ஆண்டுகளாக அந்நியரை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த குஞ்சாலி மரைக்காயர் குடும்பத்தைப் பற்றி ஒருவரி கூட பாடப்புத்தகங்களில் இடம் பெறச் செய்யாதது நாட்டின் விடுதலைக்காக போரிட்ட வீரத்தியாகிகளை அவமதிப்பதாகாதா?

ஒரு முஸ்லிம் வாங்கிக் கொடுத்தக் கப்பலின் மாலுமியாக இருந்த வ.உ. சிதம்பரனாருக்கு வரலாற்றில், “கப்பலோட்டிய தமிழன்” பட்டம். இந்தியச் சுதந்திரப்போருக்கு முன்னோடியாக ஒரு நூற்றாண்டுகாலம் பரங்கியர்களை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட இந்தியப் போர் கப்பல்களை உருவாக்கி எதிர்த்து மடிந்த குஞ்சாலி மரைக்காயர் குடும்பத்தைக் குறித்து ஒரு வரி கூட வலாற்றில் இல்லை. இந்திய வரலாற்று ஆசிரியர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த மிகப்பெரும் அநீதியாகும் இது.

அந்நியருக்கெதிராக தெற்கு முனையில் சுமார் ஒரு நூற்றாண்டுக்காலம் நாட்டைப் பாதுகாக்க, முஸ்லிம்கள் செய்த தன்னிகரில்லா தியாகங்களின் சில துளிகள் தான் இவை.

இதேகாலகட்டத்தில் நாட்டின் வடப்புறத்தில் நாட்டிற்கும் இஸ்லாத்திற்கும் மிகப்பெரிய போராபத்துகள் எதிர் நோக்கிக் கொண்டிருந்த வேளையில், அந்நியரை விரட்டி இந்தியத் திருநாட்டைப் பாதுகாக்க தொலைநோக்கு பார்வையுடன் முஸ்லிம்கள், குறிப்பாக உலமாக்கள் செய்த தன்னலமற்ற தியாகங்கள் அளப்பரியதாகும்.

< பகுதி-1 | பகுதி-3 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.