பயனுள்ள சமையல் குறிப்புகள்!

Share this:

1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

 

2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.

 

3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.

 

4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.

 

5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

 

6. அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது.  இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.

 

7. மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி சாதரண உப்பைச் சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.

 

8. துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.

 

9. குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.

 

10. பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.

 

11. தர்பூஸ் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும்.

 

12. கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.

 

13. மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.

 

14. வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

 

15. எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

 

16. பிரியாணி மற்றும் கலவை சாதங்களுக்கு அவசராமக பச்சடி செய்ய ஒரு பிடி மிக்ஸரை தயிரில் போட்டு கலக்கி துருவிய கேரட் சேர்த்து பறிமாறலாம்.

 

17. பனீரை ஃபிரிஜில் வைத்தால், மஞ்சள் நிறமாகிவிடும்.  ஒரு வெள்ளைத்துணியில் வினிகர் கலந்த நீரை தெளித்து அதில் பனீரை வைத்து ஃபிரிஜில் வைத்தால் நிறம் மாறாது.

 

18. “கொள்ளு”வை வேக வைத்து வடித்த தண்ணீரைக் குடித்து வந்தால் சக்தியான உடம்பும் ஒல்லியான உடம்பும் உங்களுக்கே.

 

19. பாதாம் பருப்பிற்கு பதில் வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது.  ஆனால் உடல் வலிமை பெறும்.

 

20. வேப்பம்பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சூடான சாதத்தில் பிசைந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் நுழைவுத்தேர்வு, தேர்வு ஜுரம், கல்லூரி சேர்க்கை ஜுரம், நாளை பள்ளி திறக்கிறதே என்ற ஜுரம் எல்லாம் பறந்து போகும்.


மங்கையர் மலரிலிருந்து தொகுத்தளித்தவர்: உம்மு ஷமீம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.