ஓர் உண்மைச் செய்தியும் ஒரு பெண் கருவின் இறுதி மூச்சும்

Share this:

இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிக்கப்படுவதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் சிசு கொலைக்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2001ம் ஆண்டு பாலின விகிதாச்சாரப்படி 1 முதல் 6வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஆயிரம் சிறுவர்களுக்கு 927 சிறுமிகள் மட்டுமே இருந்தனர். இப்போது வெளியாகியுள்ள 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஆயிரம் சிறுவர்களுக்கு 914 சிறுமிகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை பொருத்தவரை ஆண், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 100:105. ஆனால் இந்தியாவில் இது 100:90 ஆக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் 1.2 கோடி பெண் சிசுக்கள் கருவில் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் 2ஆயிரம் பெண் சிசுக்கள் சட்டத்துக்கு புறம்பாக கருவில் அழிக்கப்படுவதாக ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக புள்ளிவிபரம்: மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய தலைநகரங்களான நகர்ப்புறங்களில் 48 சதவீத மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3 கோடியே 71 லட்சத்து89 ஆயிரத்து 229. பெண்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 49 ஆயிரத்து 729 என்ற  அளவில் குறைவாகவே உள்ளனர்.

ஐ.நா.சபை எச்சரிக்கை: சமுதாயத்தில் சமமாக இருக்க வேண்டிய பெண் இனம் குறைந்தால் பல கட்ட சீரழிவுகளை வருங்கால சமுதாயம் சந்திக்க வேண்டியிருக்கும். அதிகரித்து வரும் பெண் கருக்கொலை, நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவானால், குழந்தைகளும், பெண்களும் வன்புணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள். ஒரு பெண்ணை பலர் மனைவியாக பங்கிட்டு கொள்ளும் நிலையும் உருவாகும் என்று ஐ.நா.சபை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு சமூக நலத்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தை பொறுத்தவரை பெண் சிசு கொலையை ஒழிக்கவும், பெற்றோர்களால் நிராகரிக்கப்படும் பெண் குழந்தைகளை மீட்கவும் 1992ம் ஆண்டு ‘தொட்டில் குழந்தை திட்டம்‘ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன. கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகள் இருந்தனர். 2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை 946 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

ஆண்கள் எண்ணிக்கை 2030ல் 20% அதிகரிக்கும்

சில தனியார் மருத்துவமனைகளில், கள்ளத்தொடர்பு உள்பட முறைகேடாக உருவாகும் கருவை ‘‘செலக்டிவ் அபார்ஷன்‘ மூலம் அழிக்கின்றனர்.  பெண் சிசு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தபட்டவர்களுக்கு குறைந்தபட்சமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் கிடைக்க சட்டத்தில் இடமுள்ளது.
மேலும் அந்த மருத்துவமனை மற்றும் ஆய்வுகூடங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு, அபராதத் தொகையுடன் கூடிய தண்டனையும் கிடைக்கும்.

பெண் சிசு கொலையை தடுக்க அரசு பல நடவடிக்கை எடுத்தாலும் இதுபோன்ற கொடுஞ்செயல்களுக்கு சிலர் ஆதரவளிப்பதால் பெண் சிசு கொலைகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் 2030ம் ஆண்டில் இந்தியாவில் பெண்களை விட 20 சதவீத ஆண்கள் அதிகமாக இருப்பார்கள் என்று லண்டனில் சர்வதேச சுகாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான யு.சி.எல்.நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

நன்றி : தினகரன்

oOo

ஒரு சிசுவின் டைரி!

  1. 15Jun: இன்று கருப்பையுடன் இணைந்தேன்.

  2. 17Jun: ம்ம்.. திசுவாக மாறினேன் இன்று!

  3. 30Jun: “நீங்க அப்பாவாகப் போறீங்க!” தாய் சொன்னாள், என் தந்தையிடம். இருவரின் மகிழ்ச்சியை உணர்ந்தேன்.

  4. 15Jul: என் அம்மாவின் உணவெல்லாம் என் உணவானது; மகிழ்ந்தேன்!

  5. 15Sep: ஆஹா… என்னுடைய இதயத் துடிப்பை இன்று நானே உணர்ந்தேனே!

  6. 14Oct: எனக்கும் குட்டிக் குட்டியாக கைகள், கால்கள், தலை மற்றும் வயிறு!

  7. 13Nov: இன்று என்னை அல்ட்ரா ஸ்கேன் செய்து பார்த்தார்கள்.  வாவ்… நானொரு பெண்ணாம்!

  8. 14Nov: ஓ… நான் செத்துப் போனேன்! என்னுடைய பெற்றோரே என்னை…

  9. ஏன்? நான்… பெண் என்பதாலா?

  10. தாய் எனும் பெண்ணை; மனைவி எனும் பெண்ணை – அவ்வளவு ஏன்? காதலி எனும் பெண்ணைக் கனிவுடன் நேசிப்பவர்கள்… மகள் எனும் பெண்ணை மட்டும் கருவிலும் நேசிப்பதில்லையே? ஏன்?


செய்தித் தகவலும் ஆங்கில மடலின் தமிழாக்கமும் : அபூஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.