தி காந்தி மர்டர்

Share this:

து, காந்தியின் நினைவு நாளன்று இந்து மகா சபையின் தலைவர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் காவிகளின் கூட்டமொன்று காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்துக் கொண்டாடியது குறித்து மிகைப்படுத்தி எழுதப்பட்ட தலைப்பு அல்ல (பாப்ரி மஸ்ஜித் இடிபட்ட நாளை வெற்றிநாளாகக் கொண்டாடிவரும் கூட்டத்திடம் வேறென்ன நாம் எதிர்பார்க்க முடியும்?). இது காந்தியின் 71ஆவது நினைவுநாளையொட்டி, அந்நாளில் இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் திரையிடப்பட்ட ‘தி காந்தி மர்டர்’ (The Gandhi Murder) என்ற திரைப்பட விமர்சனம்.

The Gandhi Murder

இந்தப்படம் துவக்கத்திலிருந்து இந்தியாவில் எதிர்ப்பை எதிர்கொண்டே வந்திருக்கிறது. படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதால் துபையில் கொஞ்சமும், பெரும்பாலான பகுதியை இலங்கையிலும் படம் பிடித்துள்ளார்கள். பின்னர் திரைப்படத் தணிக்கை குழு ஒரு 13 மாதங்களுக்கு இழுத்தடித்துள்ளது. படம் வெளியிடப் போவதையொட்டி தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்குக் கொலைமிரட்டல் அனுப்பத் துவங்கியதில் தயாரிப்பாளர் இருமுறை வீடுமாற்ற வேண்டியது நிகழ்ந்திருக்கிறது. தொடர்ந்து தடைகளையே எதிர்கொண்ட திரைப்படக் குழுவினர் இந்தியாவில் திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்ற முடிவெடுத்ததில் காந்தியின் இந்தியாவில், காந்தியின் நினைவு நாளன்று, காந்தியின் படம் வெளியாகவில்லை. வாழ்க ஊடகச் சுதந்திரம்.

இவ்வாறு இந்தியாவில் எதிர்கொள்ளப்பட்ட தடைகளுக்கு மத்தியில் ஆட்சி செய்யும் அரசின் மறைமுக அழுத்தம் என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும். காந்தி ஒன்றுபட்ட இந்தியா என்ற கொள்கை கொண்டவர். அதனால் சமயப்பிரிவினை காரணமாக நாட்டின் பிரிவினை என்பதை அவர் ஏற்றுக் கொள்ளாது அவர் இசுலாமியருக்கு ஆதரவுக் குரல் கொடுத்ததில் தீவிர இந்துத்துவா கூட்டம் கொதிப்படைந்தது. மேலும் அவர் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கச்சொல்லி இந்திய அரசை வற்புறுத்தியதிலும் ஆத்திரம். அந்த நிதியில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்த இந்து சமய அகதிகளுக்கு வாழ்வளிக்க ஏற்பாடு செய்திருக்கலாமே என்ற ஆதங்கம் வேறு. இத்தனை ஆண்டுகள் கடந்தும் கசப்பு மாறாது காந்தி பொம்மையைச் சுட்டு எரித்து எக்காளமிடும் கூட்டமல்லவா? காந்தியைக் கொன்ற கோட்சேக்கு கோயிலில் சிலை வைக்கும் கூட்டமல்லவா? இந்தியா என்றால் இந்துக்களின் நாடு என்ற கொள்கை கொண்ட அவர்கள்தான் காந்தியைக் கொலைசெய்தார்கள் என்பது வரலாறாக இருக்க, இந்துத்துவ ஆதரவில் இயங்கும் மத்திய அரசிடம் படம் வெளியிடத் தடைகள் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

The Gandhi Murder – Well planned

காந்தியின் கொலை ஒரு சூழ்ச்சித் திட்டம் (கான்ஸ்பிரேசி தியரி) என்பதுதான் தி காந்தி மர்டர் படத்தின் மையக்கருத்து. இந்தப்படம் ‘சோலார் எக்லிப்ஸ்: டெப்த் ஆஃப் டார்க்னஸ்’ (Solar Eclipse: Depth of Darkness – original title) என்று அதற்கு முதலில் அளிக்கப்பட்ட தலைப்புடனும் வெளியாகியுள்ளது. காந்தியின் கொலையின் பின்னணி குறித்து உறுதி செய்யப்பட்ட உண்மைத் தகவல்களில் அடிப்படையில் உருவான படம் என்பதுதான் இப்படம் குறித்த செய்திக் குறிப்பு. ஆகஸ்ட் 15, 1947 இந்தியா விடுதலை அடைந்த அன்று நேருவின் பாராளுமன்ற உரையுடன் படம் துவங்கி, மறு ஆண்டு ஜனவரி 30, 1948 அன்று காந்தி கொலைசெய்யப்பட்ட நிகழ்வையும், அந்நாளுக்குப் பிறகு நடந்தவற்றை ஓரிரு காட்சிகளிலும் விவரித்து முடிந்து விடுகிறது.

உறுதி செய்யப்பட்ட உண்மை என்று கூறப்படும் காரணம்தான் படத்தின் சிறப்பான கோணம். அது எந்த அளவு உறுதிப்படுத்தப்பட்டது என்பது ஏற்றுக்கொள்பவர் மனநிலையைப் பொருத்து கருத்து வேறுபாடுகள் கொண்டதாகவே இருக்கும். படத்தின் கதையின்படி, காந்தியை இந்துத்துவ தீவிரவாதிகள் கொலைசெய்யப்போகிறார்கள் என்பது காவல்துறைக்கு முன்னரே தெரியும். பின்னர் ஜனவரி 20, 1948 அன்று பிர்லா மந்திரில் காந்தியின் வழிபாட்டுக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டபொழுது அது உறுதியானது. பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானிடம் சென்றுவிட்ட பஞ்சாப் பகுதியில் இருந்து அகதியாய் இந்தியாவில் குடியேறிய மதன்லால் பாத்வா என்ற இந்து தீவிரவாதி, வெடிகுண்டு விவகாரத்தில் தொடர்புடையவராக டெல்லி காவல்துறையால் கைதும் செய்யப்படுகிறார்.

இவர் மூலமும் காந்தியைக் கொலைசெய்யக் குறிவைக்கும் இவரது கூட்டாளிகள் கோட்சே போன்றவர் குறித்தும் காவல்துறை அறிந்துவிடுகிறது. இவர்கள் மகாராஷ்டிராவில் உள்ளவர் என்பதால் பம்பாய் காவல்துறைக்கும் குற்றவாளிகள் குறித்த செய்திகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எளிதில் முடக்கப்பட்டு காந்தியின் உயிரைக் காப்பாற்றியிருக்கக்கூடிய செயலைக் காவல்துறையினர் வேண்டுமென்றே செய்யாமல் விட்டார்கள் என்பது திரைக்கதை. காந்தி கொலை வழக்கின் சிறப்பு நீதிபதி ஆத்மசரண் அகர்வால் அவர்கள், “துப்பு துலக்கியதில் கிடைத்த தகவல்களை காவல்துறை தக்கவாறு பயன்படுத்தியிருந்தால் காந்தியின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும்” என்று கூறிய புகழ்மிக்க கருத்துரையின் அடியொட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி இந்தியாவின் உயிர்நாடி என்று கருதப்பட்டிருந்தால் அவர் கொலை செய்யப்படுவதைத் தடுக்க முயலாத காரணம் என்ன?

இங்குதான் திரைக்கதையின் ஏரணம் வியப்பளிக்கிறது. இந்தியாவின் மீது கொண்ட பற்றால் காந்தியை வெறுத்த இந்துத்துவ தீவிரவாதிகள் போலவே(!!), இந்தியாவின் நன்மையைக் கருதிய காந்தியின் ஆதரவாளர்களும்(??) அவர் மரணம் அடைவது நாட்டு மக்களிடம் ஒற்றுமையை உருவாக்கும் என்று நம்பினார்கள். வெறித்தனமான சமயச் சண்டையால் பழிக்குப்பழி என மக்களிடம் பிரிவினை உருவானதில், விடுதலை பெற்ற இந்தியாவில் நடந்த உள்நாட்டுக் கலவரம் நாட்டை உருக்குலைக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க காந்தியின் மரணம் உதவும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு என்கிறது திரைக்கதை. ஆக, நாட்டுப்பற்று கொண்ட ஒருவரது இறப்பே, நாட்டுப்பற்றின் காரணமாக மற்றவர்கள் கொண்ட எதிர்பார்ப்பாக இருந்திருக்கிறது.

 

இதற்குத் திரைக்கதை தரும் குறிப்பிடத்தக்க ஒரு கோணம், முற்றிலும் ஒரு யூகத்தின் அடிப்படை எனலாம். காந்தி இறந்தால் சமயச் சச்சரவால் பிரிந்து கிடக்கும் இந்திய மக்கள் ஒன்று சேர்வார்கள். அவர்கள் எதிர்கொண்ட அதிர்ச்சி காந்தி விரும்பிய சமயச் சார்பற்ற இந்தியாவின் வழி நோக்கி மக்களை ஒருங்கிணைக்கும் என்ற எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் காந்தி கொலையுறுவது தடுக்கப்படவில்லை என்பதற்கு எங்கிருந்து வலுவான அடிப்படை ஆதாரம் திரைப்படத்தின் கதைக்குக் கிடைத்தது எனத்தான் தெரியவில்லை. இதற்கு ஆணித்தரமான சான்று கொடுக்காவிட்டால் படமே சீட்டுக்கட்டில் உருவாக்கிய மாளிகை போல பொல பொலவெனச் சரிந்துவிடும்.

விடுதலைக்குப் பின்னர் இந்திய உள்நாட்டுக் கலகத்தால் பிரிந்துகிடந்து ஒருவருக்குள் ஒருவர் அடித்துக்கொண்டு இருந்த நிகழ்வானது திரைப்படத்தில் அமெரிக்க உள்நாட்டுப்போருடன் இணைத்துக் காட்டப்படுகிறது. அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றவுடன் கொள்கையால் பிரிந்திருந்த வட தென் மாநிலங்கள் சுடப்பட்டு இறந்த அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் மறைவுக்குப் பிறகு ஒருங்கிணைந்தது போல இந்தியாவும் மாறிவிடும் என்று ராணாவின் மூலம் சொல்லப்படுகிறது. இது யாருடைய எதிர்பார்ப்பு அல்லது நம்பிக்கை? இப்படி ஒரு கோணம் எப்படி உருவானது? மக்களின் போக்கினால் மனம் வருந்தும் காந்தி, ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதம் இருப்பேன் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்து அச்சுறுத்திய பொழுதெல்லாம் விட்டுக்கொடுத்து அவர் கொள்கையை ஏற்றுக்கொண்ட அக்கால மக்களின் மனப்பான்மையால் எழுந்ததா? புரியவில்லை. கொடுக்கும் கோணத்தில் ஏரணம் இருந்தாலும் சொல்லும் காரணத்தை நிரூபிக்கச் சான்றுகள் வேண்டும். இவ்வாறே இஸ்ரேலிய பிரதமர் இட்ஷாக் ராபின் கொலையுண்ட பின்னர் இஸ்ரேலிய நிலையும் என மற்றொரு எடுத்துக்காட்டாகப் போகும் போக்கில் காட்டப்படுகிறது.

திரைப்படத்தில் டெல்லி காவல்துறையைச் சேர்ந்தவர்களாக மறைந்த இந்திநடிகர் ஓம்புரியும், அவருடன் பணியாற்றும் அசோக் என்ற பாத்திரத்தில் தமிழ் நடிகர் நாசரும், அவர்கள் குழுவில் உள்ள துப்பறியும் பிரிவில் பணியாற்றும் காஷ்மீரைச் சேர்ந்த சுனில் ரைனாவாக/ராணாவாக (UH Rana) அவதார் படத்தில் நடித்த ஸ்டீபன் லேங்கும், பம்பாய் காவல்துறையைச் சேர்ந்த ஜிம்மி பட்லிவாலா என்ற அதிகாரியாக இங்கிலாந்தைச் சேர்ந்த லூக் பாஸ்குவலினோவும் நடித்துள்ளனர். இவரது ஜாம்ஷெட் டோராப் நகர்வலா/ஜிம்மி நகர்வலா (Jamshed Dorab Nagarwala/Jimmy Nagarwala) என்ற பெயர் படத்திற்காக ஜிம்மி பட்லிவாலா என மாற்றப்பட்டுள்ளது.

படத்தில் உண்மையில் வாழ்ந்தவர்களையும் கற்பனையில் உருவாக்கியவர்களையும் கலந்து கதை அமைக்கப்பட்டுள்ளது. ராணாவும் அவர் நண்பராக இருந்த அக்காலத்தில் புகழ்பெற்ற பம்பாய் காவல்துறை அதிகாரி ஜிம்மி நகர்வலாவும் நாட்டின் நன்மை என்ற கருத்தின் அடிப்படையில் தகவல் தெரிந்தும் காந்தியின் கொலையைத் தடுக்கும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாகவும், அவர்களைப் பின்னணியில் வேறு ஏதோ ஒரு பெரியமனிதர் ஆட்டுவித்திருக்கக்கூடும் என்று சூசகமாக இறுதிக் காட்சியில் காட்ட முனைகிறார்கள். நண்பர்களாக இருக்கும் ராணா, ஜிம்மி ஆகிய இவர்கள் இருவரும் உண்மையாக வாழ்ந்த மனிதர்கள்.

தமிழக நாசர் பாதிப் படத்திற்குப் பின் வந்தாலும் அவரது இயல்பான நடிப்புத் திறமையைக் காட்டும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. டெல்லி காவல்துறையிடம் சிக்கிக்கொண்ட மதன்லால் பாத்வாவை உண்மையைக் கக்க வைப்பதற்காக எடுக்கும் துன்புறுத்தும் முயற்சியில் மதன்லால் பாத்வா மீது எறும்புகளைக் கொட்டி கைதியைக் கடிக்க வைக்கிறார்.  ஆமாம், எறும்புகள்!!!! அதற்கு மேல் நாசர் ஒன்றும் பெரிதாக மெனக்கெடவில்லை. நாசருக்கு வாய்ப்பில்லையே என வருந்துவதில் பொருளில்லை. காந்தி படத்தில் காந்தியாக நடித்தவருக்குமே அதிக வாய்ப்பில்லை என்பது வேறுகதை. முக்கியமான பாத்திரங்களில் வெளிநாட்டவர் நடித்துள்ளதன் பொருத்தம் பற்றி ஆராய்ந்திருக்கலாம். ஏழு மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் 34 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறைந்தது காந்தி படத்தில் நடித்து காந்தியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய பென் கிங்ஸ்லியையே ஏன் காந்தியாக மீண்டும் நடிக்க வைத்திருக்கக் கூடாது என்றும் தோன்றுகிறது. குறைவான நேரம் திரையில் தோன்றும் ஜீசஸ் சான்ஸ் (Jesus Sans) காந்தியின் உருவத்திற்குப் பொருத்தமாகவும் இல்லை. அவரைப் பக்கவாட்டிலும், பேசும்பொழுது முதுகுப்பக்கம் இருந்தும் காட்டியே காட்சிகளை நகர்த்திவிட்டார்கள்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காந்தி, நேரு, சர்தார் பட்டேல், அக்காலத்தில் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக இருந்த மொரார்ஜி தேசாய் இவர்கள் மட்டுமே கொஞ்சம் வசனம் பேசும் அளவிற்கு வந்து செல்லும் அரசியல் தலைவர்கள். குற்றவாளிகளாக கோட்சே, மதன்லால் பாத்வா, விஷ்ணு மூவரும் நினைவில் நிற்கிறார்கள்.

பாகிஸ்தானில் வசித்த இந்து சமய மக்கள், கலவரங்களில் துன்பப்பட்டு அகதியாக இந்தியா திரும்புவது படத்தின் துவக்கக்காட்சியாக விரிவடைகிறது. பிர்லா மந்திரில் குண்டு வீசிய மதன்லால் பாத்வா தொடர்வண்டியில் இந்தியா வருவதாக அக்காட்சியில் காட்டப்படும்பொழுது, படம் துவங்கி பத்து நிமிடங்களுக்குப் பின்னர் தலைப்பு ஓடுகிறது. பின்னணியில் ‘மயின் நா ஹிந்து, நா முசல்மான்’

https://youtu.be/9bEH1HQT_Ao

‘நான் இந்துவுமல்ல முஸ்லிமுமல்ல என்னைச் சற்றே வாழவிடு’ என்ற பொருள் கொண்ட ஜக்ஜித் சிங்கின் பாடலை, 1992 இன் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்வுக்குப் பிறகு மிகவும் பிரபலமடைந்த கஜல் பாடலைப் பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளது சிறப்பு.

இப்படத்தை பார்க்கச் சென்ற பொழுது, பம்பாய் காவல்துறை அதிகாரி ஜிம்மி நகர்வலாவின் இளையமகனும் தனது குடும்பத்துடன் படம் பார்க்க வந்திருக்க, அவரைச் சந்திக்க நேர்ந்தது சற்றே எதிர்பார்க்காத வியக்க வைக்கும் நிகழ்ச்சி! தன் தந்தை குறித்த ஒரு படத்தை பார்க்க வந்த ஒரு மகனின் கோணம் என்னவாக இருக்கும் என்று அறிய விருப்பம் தோன்றியது. அவர், ஜிம்மி நகர்வலா குடும்பத்தினர் எவரையும் திரைப்படக் குழுவினர் தொடர்பு கொண்டு செய்தி எதையும் சேகரிக்கவில்லை என்றும்,  படத்தின் காட்சிப் போக்கிற்காக இணைக்கப்பட்டுள்ள ஜிம்மி நகர்வலாவின் காதல் காட்சிகள் கற்பனையானவை என்றும், படத்தில் காட்டப்படும் காலகட்டத்தில் அவருக்கு மணமாகி ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தனர் என்றும் கூறினார்.

அமெரிக்க செய்தி ஊடகங்கள் முதற்கொண்டு, இங்கிலாந்து, அரேபியா செய்தி ஊடகங்களில் வந்த திரைப்பட மதிப்புரை எதுவுமே படத்தைப் பாராட்டவில்லை. சதித்திட்டம் என திரைப்படம் காட்ட வருவது ஆர்வமூட்டுவதாகவும் பொருத்தமாகவும் இருந்தாலும் நம்பமுடியாததாகவும் தக்க அடிப்படைச் சான்றுகள் இல்லாததாகவும் கருதுவது அவர்கள் விமர்சனங்களில் வெளிப்பட்டுள்ளது. நம் நாடு குறித்த ஒரு படம் என்ற உணர்வுடன் படத்துடன் ஒட்டமுடியவில்லை. ரிச்சர்ட் அட்டன்பரோவின் 1982 காந்தி படத்தின் தரத்தை எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமே. காந்தி கொலையின் காரணம் என படம் கூறுவது போலவும் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் மெல்லியதாக மனதில் எழுகிறது. காந்தி கொலை செய்யப்பட்டால் பிறநாடுகள் இந்தியாவின் திறமையைக் குறைத்து மதிப்பிடுமே, இங்கிலாந்தின் ஸ்காட்லாண்ட் யார்டுக்கு அடுத்தபடியாக துப்புதுலக்குவதில் திறமை கொண்டதாகப் பேசப்படும் பம்பாய் காவல்துறைக்கு அது இழுக்கு என்று பம்பாய் காவல்துறை அதிகாரி ஜிம்மி நகர்வலா குழம்புவது போல இந்தியாவின் மதிப்பு குறித்த கருத்துக்கள் கொண்டவர்களை எளிதாக நம்ப வைக்கலாம், மற்றபடி படத்தை சலிப்பில்லாமல் ஒருமுறை பார்க்கலாம்.

நன்றி : தேமொழி – சிறகு.காம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.