தொ(ல்)லைக் காட்சி … !

Share this:

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!


முஸ்லிம் சமுதாயக் குடும்பத்தலைவிகள், குடும்பத் தலைவர்கள், பெரியார்கள், இளம்பெண்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள், அறிஞர் பெருமக்கள் மற்றும் தலைவர்களின் மேலான சிந்தனைக்கு,


அல்லாஹ்வின் அருளும் அமைதியும் நம் சமுதாயத்தின் மீது என்றென்றும் நிலவட்டுமாக!


குர்ஆன் வழங்கப்பட்ட நம்மையே மனிதர்களில் சிறந்த சமுதாயமாக அல்லாஹ் சிறப்பித்துள்ளான் (அல்குர்ஆன் 003:011). இந்தச்சிறந்த சமுதாயம் மறுமையில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிக்களன் அல்லது தேர்வுக்கூடம்தான் இவ்வுலகம் என்பதே இஸ்லாமிய நம்பிக்கை; கொள்கை!


படைத்தவனின் தேர்வில் வென்று, மறுமையில் நிரந்தர வெற்றி(யெனும் சுவர்க்கம்) பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமினின் அவாவாகும். ஆனால் இத்தேர்வில் வெற்றிபெற முடியாதபடி மனிதனை வழிகெடுத்து, தோல்வியுறச் செய்து, நரகில் வீழ்த்துவதற்கான சூழ்ச்சிமிகு முயற்சிகளை எல்லா வழிகளிலும் ஷைத்தான் எப்போதும் செய்து கொண்டேயிருப்பான் . அவனது மாய வலையில் சிக்கிவிட்டால், இறைநினைவிலிருந்தும் இறையச்சத்திலிருந்தும் மனிதன் தடம் புரண்டு, தோல்வியை நோக்கிச் செல்வான்.


மனிதனை வழி கெடுத்துத் தோல்வியுறச் செய்யும் ஷைத்தானின் நவீன மாயவலைகளுள் ஒன்றுதான் டி.வி. கேபிள் கனெக்சன் எனும் செயற்கைக்கோள் தொடர்பு!


டெலிவிஷன் என்ற தொலைக்காட்சி தமிழகத்தில் அறிமுகமான புதிதில் – ‘வீட்டுக்கு ஒரு டி.வி’ என்ற முன்னேற்றம்(?) ஏற்படுவதற்கு முன்னர் – பணக்காரர்களின் பெருமையை உணர்த்தும் சின்னமாக டி.வி. திகழ்ந்த – முன்னாள் கறுப்புவெள்ளை டி.வி காலகட்டத்தில் – ஒரேயொரு அரசாங்கச் சானல் தூர்தர்ஷன் என்ற பெயரில் வந்தபோது, அதை தின இதழ்களும் வார இதழ்களும் (தினத்தந்தி, ராணி) டெலிவிஷனை “டெலிவிஷம்” என்றும் “தொல்லைக்காட்சி” என்றும் வர்ணித்திருந்தன.


செயற்கைக்கோள் தொடர்புவழி தனியார் சானல்களின் படையெடுப்பு என்று மொய்க்கும் இந்தக் காலத்தை என்னவென்று சொல்ல?


இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காட்சிகளின் மாட்சி(?)தான் என்ன?

விளக்கத்திற்காகச் சில:

  • மறைக்கப்பட வேண்டிய பெண்களின் அங்கங்கள் அகலமான குளோசப்பில்!

  • நேரடி உடலுறவைத்தவிர அனைத்தையும் காட்டும் அருவருப்பான அங்க -அசைவுகளுடன் கூடிய ஆபாசப்பாடல்கள், நடனங்கள்!

  • வன்முறை, கொலை, கொள்ளை, முதலிரவு, கற்பழிப்பு போன்றவற்றை விலாவாரியாகக் காட்டும் சினிமாக்கள்!

  • அரைகுறை உடையுடன் அங்கங்களைக் குலுக்கும் பெண்களைக் காட்டும் விளம்பரங்கள்!

  • தொலைக்காட்சிப் பெட்டிகளோடு பெண்களைக் கட்டிப் போட்டிருக்கும் கண்ணீர் சீரியல்கள்!

இவைதாம் பெரும்பான்மை நேரத்தைத் தொலைக்காட்சியில் ஆக்கிரமித்துள்ளன. சுருங்கக் கூறுவதெனில் தந்தை, மகள், தாய், மகன், மாமியார், மருமகன், பேரன், பேத்தி என ஒன்றாக வசிக்கும் ஒரு குடும்பத்தின் கூடத்தில், எல்லாரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடியாத – பார்க்கக் கூடாத சினிமா நடனங்களும் தொடர்களும் விளம்பரங்களும்தாம் தற்போது தொலைக்காட்சியில் வருபவை.


இவையன்றி, செய்திகள் என்ற பெயரில் அந்தந்தச் சானலுக்கு வேண்டிய கட்சித்தலைவன், தலைவிக்குச் சாதகமாகத் திரிக்கப்படும் அரசியல் பிரச்சாரங்கள்!

“இந்த டி. வி. சானல்கள் விஷயத்தில் மத்திய அரசு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது. தனியார் டி.வி. நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம், அவர்கள் பரப்பும் செய்திதான் உண்மை என்றாகிக் கொண்டிருக்கிறது. இப்படியே விட்டால் அவர்கள் திட்டமிட்டு என்ன செய்தியை வேண்டுமானாலும் பரப்பலாம்” என்று அகில இந்திய கேபிள் ஆப்பரேட்டர்களின் கூட்டமைப்புத் தலைவரான ரூப் ஷர்மா (ஜூனியர் விகடன் 02.07.2003 பக்கம் 31) கூறுமளவுக்குச் சென்றுவிட்ட கடைவிரிப்புகள்.


“தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் வன்முறையைத் தூண்டுபவையாக வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் வசனங்கள் தமிழர்களை அபாயத்திற்கே கொண்டு சேர்த்துவிடும். இரண்டாயிர வருடத்துக் கலை-இலக்கிய மரபிற்குச் சொந்தக்காரர்களாகிய நாம் இப்போது நம் கலைகளின் வழியாக வன்முறைக்குத் திரும்புகிறோமோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. சினிமாவில் இப்போது பறவைகளின் ஒலிகளை விடவும் அருவிகளின், நதிகளின் சலசலப்புகளை விடவும் துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் வெள்ளித்திரை முழுதும் வெடித்துச் சிதறுகின்றன. இவை மறுபடியும் டி.வி. வழியாக நம் வீட்டுக்குள்ளும் வந்து விடுகின்றன. வெள்ளித்திரையில், தொலைக்காட்சியில் வன்முறையை பார்க்கும் நம் பிஞ்சுகளின் எதிர்காலம் குறித்து எனக்கு பயம் ஏற்படுகிறது. சினிமாவிற்கு எழுதுபவர்களின் எழுத்தில் இருக்கும் வன்முறை, காட்சிக்கு மாறுகிறது; காட்சிக்கு மாறுகிற வன்முறை உங்கள் மனசுக்கு மாறுகிறது” என ஒரு திரைப்பட இயக்குநரே (டைரக்டர் லெனின், தினத்தந்தி, 2 டிசம்பர் 2003) அச்சமுறும் சூழ்நிலை!


அறிவியல் முன்னேற்றத்திற்கும் நவீன கண்டுபிடிப்புகளுக்கும் இஸ்லாம் எதிரானதில்லை. ஆனால், அவற்றைத் தீமைக்குப் பயன்படுத்தாமல் மனிதனின் மாண்பு வளர்வதற்கும் மனிதகுல மேம்பாட்டிற்கும் சமுதாய வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பும் வலியுறுத்தலும் ஆகும். அந்த அடிப்படையிலேயே கேபிள் இணைப்புவழி வரும் தனியார் சானல்களையும் ‘இஸ்லாமிய வரம்புக்குட்பட்டுப் பயன்படுத்த வேண்டும்’ என்ற கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டியது கட்டாயமாகும்.


சான்றாக, டி.வி.யில் இஸ்லாமிய நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம்; மார்க்க அறிவை வளர்த்துக் கொள்கிறோம். புனித கஅபாவில் ஹஜ்ஜுக் காலங்களிலும் நோன்புக் காலங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பில் காண்கிறோம். அல்லாஹ்வின் படைப்பாற்றலையும் அவனது மகத்துவத்தையும் புலப்படுத்தும் காட்சிகளான மலை, கடல், காடு, பறவை, மீன், விலங்கு, பாம்பு போன்ற அரிய – நாம் நேரில் சென்று காண முடியாத – காட்சிகளையும் தொலைக்காட்சி காட்டுகிறது! இயற்கைச் சீற்றங்களையும் பேரழிவுகளையும் (குஜராத் பூகம்பம்) அநியாயக்கார நாடுகள் அக்கிரமமாக ஆக்கிரமிக்கும் கொடுமைகளையும் (நாசகார அமெரிக்கா ஆப்கானையும் இராக்கையும் அழித்தது) தொலைக்காட்சி வழியாகக் கண்டு இன்னலுக்கு உள்ளானோருக்காக இரங்குகிறோம்; உதவுகிறோம்; துஆச் செய்கிறோம்.


எனவே, அறிவியல் முன்னேற்றத்தின் வரவான தொலைக்காட்சிகளையோ தனியார் சானல்களையோ இஸ்லாம் முற்றிலுமாக எதிர்க்கவில்லை என்பதைத் தெளிவாக்குவதோடு, நன்மையைவிட தீமைதான் ஒளிபரப்பப் படும் காட்சிகளில் மிக அதிகமாக உள்ளது என்ற மறுக்க முடியாத உண்மையையும் அழுத்தமாக எல்லாருக்கும் எடுத்துரைப்பது நமது கடமையாகும்.


அறிவியல் முன்னேற்றங்களை நன்மையானவற்றிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்த்தவே இச்சிந்தனை!

 

“இஸ்லாமிய மார்க்கத்தில் வலுக்கட்டாயமில்லை; நேர்வழியை விட்டு வழிகேடு பிரிந்து விட்டது” என்னும் குர்ஆன் கூற்றுப்படி வழிகெடுக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டிய காரணங்கள் – நடைமுறைச் சான்றுகளோடு் டி.வி மோகத்தால் ஏற்படும் தீமைகளுள் சில:


பெண்களின் தொழுகை, குர்ஆன் ஓதுதல் போன்ற வணக்க-வழிபாடுகள் குறைந்து விட்டன. மக்ரிபு தொழுது முடித்து இஷா வரை தொழுகை விரிப்பில் அமர்ந்து குர்ஆன் மற்றும் துஆக்கள் ஓதுதல் போன்ற வணக்கம் நம் பெண்களிடம் முன்னர் ‘வீட்டுவழக்கமாக’ இருந்தது. தொலைக்காட்சித் தொடர் நேரத்தில் குறுக்கிடும் தொழுகைகள் அவசரத் தொழுகைகளாக முடிகின்ற அவலநிலை அல்லது ‘அப்புறம் தொழுது கொள்ளலாம்’ எனத் தொழுகையைவிடத் தொடருக்கு முன்னுரிமை தருகின்ற அல ட்சியநிலை இப்போது வாடிக்கையாகி விட்டது!

 

தொலைக்காட்சியால் மாணவர்களின் படிப்புப் பாழாவதை எந்தப் பெற்றோரும் மறுப்பதில்லை. படிக்க வேண்டிய நேரத்தில்தான் – இரவு 7 முதல் 10 மணிவரை – மாணவர்கள் சீரியல்களை அதிகம் பார்த்துப் படிப்பைப் பாழாக்குகின்றனர்! கிரிக்கெட் விளையாட்டு ஒளிபரப்பானால் உலகையே மறந்து விடுகின்றனர்!

 

குடும்பத்தில் உறவினர்களின் வருகையும் நலன் விசாரணையும் அறவே குறைந்து போன அவலநிலை தொலைக்காட்சித் தொடர்களால் ஏற்பட்டுள்ளது. எல்லா வீடுகளிலும் ஒரே நேரத்தில் டி.வி. சீரியல்களைப் பார்ப்பதால் உறவினர்களது வருகை குறைந்துள்ளது! அப்படியே உறவினர்கள் வந்தாலும் வீட்டாரும் வந்தவரும் சேர்ந்தே அமர்ந்து சீரியல்களைப் பார்ப்பதில் பொழுதைக் கழித்து விட்டு, வந்த நோக்கத்தையே மறந்து போகும் வேடிக்கை, வாடிக்கையாக உள்ளது. சீரியலில் ஆர்வமில்லாத விருந்தாளியாக இருந்து விட்டால் அவர் கவனிக்கப் படுவதேயில்லை!

 

குழந்தைகளுக்குத் தம் உறவினர்களின் பெயர்களும் முறைகளும் தெரிகிறதோ இல்லையோ, டி.வி. தொடரில் வரும் நடிகர்- நடிகைகளின் பெயர்களும் அவர்களின் உறவுகளும் மனப்பாடமாகத் தெரியுமளவிற்கு டி.வி.யின் தீமையான தாக்கம் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ளது! ஒருதொடரில் ஓர் உறவில் (கணவன்-மனைவியாக) வரும் நடிகர்-நடிகை மற்றொரு தொடரில் வேறோர் உறவில் (அண்ணன்-தங்கையாக) வரும்போது குழந்தைகள் கேட்கும் வேண்டாத கேள்விகளால் திண்டாடும் பெற்றோர்!

 

பெண்களின் அந்தரங்கத் தேவைக்கான பொருட்களின் விளம்பரங்கள் மற்றும் ஆணுறை விளம்பரக் காட்சிகளைப் பார்க்கும் குழந்தைகள் கேட்கும் விபரீத வினாக்களுக்கு விளக்கம் கூற முடியாமல் திணறும் பெற்றோர்!

 

கட்டிய கணவனே தன் மனைவியை மாற்றானுக்குக் கூட்டிக்கொடுப்பதாகவும் வெளியில் வேலைக்குச் செல்லும்போது பிற ஆண்கள் தன்னை உரசுவதாகக் கணவனிடம் புகார் கூறும் மனைவியிடம் “உரசினால் ஒன்றும் குறைந்து போய்விடாது” போன்ற ஆபாச சப்பைக்கட்டு வசனங்களும் அருவருப்பான கருத்துருவாக்கமும் கொண்ட சீரியல்கள் ஒழுக்கச் சீரழிவுகளையும் உடன்போக்குதலையும் உருவாக்குகின்றன!

 

பெண்களை அதீத தைரியமும் அசாதாரணப் பொறுமையும் எதையும் தாங்கும் இதயமும் உள்ளவர்களாக, அல்லது எப்போதும் கண்ணீரில் கரையும் கோழைகளாக, அல்லது பிறருக்கு உழைத்து ஓடாகத்தேயும் தியாகத் தீபங்களாக, அல்லது பிறரை வாழ விடாமல் கெடுக்கும் கொடிய வில்லியாக, இன்னபிற இயல்புக்கு மாற்றமான கதாபாத்திரங்களாக சீரியலில் சித்தரிப்பது; சாமி, பூதம், கோயில், குங்குமம், மாயம், மந்திரம், ஏவல்வினை, பில்லி, சூனியம், சோதிடம், ஜாதகம் என மூடநம்பிக்கைகளை வளர்க்கும் காட்சிகளைத் திரும்பத் திரும்பத் திணிப்பது போன்ற இஸ்லாத்திற்கு முரணான காட்சிகளால் இறையச்சமும் இஸ்லாமியச் சூழலும் பாழாகும் நிலை!

 

சீரியல்களில் மனம் மூழ்கிக் கிடப்பதால் காட்சி நேரத்தில் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்கூட பதிவுசெய்து வைத்துப் பார்ப்பதும் பக்கத்து வீட்டில், “அவளுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்களே, அதற்குப் பிறகு என்ன நடந்தது?” என்று தொடர்ச்சியை அக்கறையுடன் கேட்டு அறிந்து கொள்வதுமான – தமது குடும்ப உறவுகளின் விக்ஷயத்தில் கூட இல்லாத அதீத அக்கறை!

 

முடிவாக, முஸ்லிம் சமுதாயத்தில் கேள்விப்பட்டிராத தற்கொலைகள் அண்மையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழத் தொடங்கியிருப்பதற்கு அடிப்படைக் காரணமும் டி.வி. சீரியல்களால் ஏற்பட்டச் சீரழிவே என்பது உள்விசாரணைகளில் வெளிவந்த உண்மையாகும்!

 

இந்நிலை தொடர்ந்தால் நம் சமுதாயம் என்ன ஆகும்? எங்கு போய்ச் சேரும்?

 

“தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் திருத்தியமைப்பதில்லை” (அல்குர்ஆன் 013 :011).

 

சிந்திப்போம்; தவறுகளைத் திருத்திக் கொள்வோம்!

  • உங்கள் டி.வி. பெட்டிகளை உடைக்க வேண்டியதில்லை!

  • உங்கள் வீட்டு கேபிள் இணைப்பை அறுக்க வேண்டியதில்லை!

  • உங்கள் டி.வி. யின் ரிமோட் கண்ட்ரோலை நொறுக்க வேண்டியதில்லை!

  • ஆனால், அது உங்கள் கண்ட்ரோலில் இருக்கட்டும்!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தீமையான காட்சிகளைப் பார்க்காமல் தவிர்ப்பதோடு நம் குடும்பத்தாரையும் பார்க்க விடாமல் கண்ட்ரோல் செய்ய வேண்டியது நமது பொறுப்பாகும்.


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நம் அனைவரையும் எச்சரித்தார்கள்:

“நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்; உங்களுடைய பொறுப்புகள் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்…”

 

ஆம்; விசாரிக்கப்படுவோம் ! ஒரே இறைவனான அல்லாஹ்வையும் ஒருநாள் வரவிருக்கும் மறுமையையும் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவோம் என்பதை நினைவில் வைத்து, அந்நாளுக்கான ஆயத்தங்களை ச் செய்து, அல்லாஹ் அருள் புரிந்தோரின் வரிசையில் சேர்வதில் வெற்றி பெறுவோம்! ஷைத்தானின் முயற்சிகளைத் தோற்கடிப்போம்! நம் அனைவர்க்கும் வெற்றியை வழங்குவதற்கு ஏகநாயனையே வேண்டி நிற்போம்!


ஆக்கம்: அதி.அழகு


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.