
பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருங்கே கிளம்பியுள்ளது. இதை எதிர்க்கும் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாரஷ்டிரம், கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், “பாலியல் கல்விக்கான பாடத்திட்டம் இந்திய குழந்தைகளுக்கு ஏற்றவகையில் இல்லை” என்றன. கேரளா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதோடு பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கமிட்டியையும் அமைத்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் செளஹான், மத்தியக் கல்வி அமைச்சகத்திற்கு எழுதியக் கடிதத்தில், “இந்தியக் கலாச்சாரத்தையும் அதன் உன்னதத்தையும் அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ளது; மாணாக்கர்களுக்கு பாலியல் கல்வியைப் போதிப்பதைவிட யோகா மற்றும் இந்தியக் கலாச்சாரத்தைப் போதிப்பதே அவசியம்” என்றுக் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கன்ஷியாம் திவாரி, “பள்ளி மாணாக்கர்களின் மனங்களைக் கெடுக்கத் தகுதியானவையாக பாலியல் பாடத்திட்டம் இருப்பதாகக்” கூறினார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம், “பாலியல் கல்வியை ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்று பத்திரிகையாளார்கள் கேட்டபோது, “மேற்கத்திய நாடுகளுக்கு வேண்டுமானால் பாலியல் கல்வி அவசியப்படலாம். பரந்த கலாச்சாரப் பின்னணி கொண்ட இந்தியாவிற்கு இது அவசியமில்லை. இது நமது குழந்தைகளிடம் எதிர்மறை எண்ணங்களையே தோற்றுவிக்கும்” என்றார்.
இவர்கள் மட்டுமல்லாது பாலியல் கல்வியைப் பள்ளிகளில் போதிப்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்புக்குரல் ஒலிக்கின்றது. மத அடிப்படைவாதிகள் எதிர்க்கும் பெரும்பாலான விசயங்கள் மதக்கோட்டிற்கு எதிராக இருப்பதே காரணமாகச் சொல்லப்படும். ஆனால், பாலியல் கல்வி இஸ்லாமியக் கோட்பட்டிற்கு எதிரானதன்று!
பால்வினை நோய்கள், போதைப்பழக்கம், பலாத்காரம், பணியிட/படிப்பிடச் சீண்டல்கள் ஆகியவற்றிலிருந்து விழிப்படைவதற்காகப் பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வி அவசியம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது எத்தனை சதவீதம் சாத்தியமாகும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. சில விஷயங்களில் அரசாங்கத்தின் தவறான அணுகுமுறை எதிர்மறை விளைவுகளைத்தான் தோற்றுவித்துள்ளன.
உதாரணத்திற்கு எயிட்ஸ் விழிப்புணர்வு இயக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். எயிட்ஸ் விழிப்புணர்வு இயக்கம் மக்களிடையே எயிட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோய் பரவாமல் தடுக்கும் நல்ல நோக்கத்தில் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த இயக்கம் எயிட்ஸை ஒழிப்பதற்கு இறுதியாகச் சொல்லியத் தீர்வு, அது துவங்கப்பட்ட நோக்கத்தைப் பூர்த்தி செய்ய உதவியதோ இல்லையோ, மக்களிடையே விபச்சாரம் பல்கிப்பெருக இவ்விழிப்புணர்வு இயக்கம் நன்றாகத் துணை புரிந்தது.
ஐதராபாத்தில் நடந்த செக்ஸ் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மாநாட்டில், பேராசிரியர்கள் சஞ்சய் சதுர்வேதி, விஜய் குரோவர் ஆகியோர் பேசும் பொழுது, “பாதுகாப்பற்றச் செக்ஸ் உறவுகளால், நகர மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர்; எய்ட்ஸ் நோய்க்கு ஆட்பட்டுள்ளனர் என்று ஏகப்பட்டத் தகவல்கள் வந்து விட்டன. ‘மாணவ, மாணவிகளிடமும் பாதுகாப்பற்றச் செக்ஸ் பழக்கம் ஆரம்பித்துவிட்டது’ என்பதை எங்கள் சர்வே எடுத்துக் காட்டுகிறது. இதைத் தடுக்க வேண்டியது நம் கடமை” என்று பேசியுள்ளனர்.
ஒட்டுமொத்த எயிட்ஸ் ஒழிப்பு/விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் பாலியல் எண்ணத்தைத் தூண்டும் காரணி/சூழல் களைத் தடுக்க வேண்டும் என்று எவரும் மறந்தும் சொல்லவில்லை . அவர்களின் பரிந்துரை எல்லாம், “பாதுகாப்பான உறவு தான் எயிட்ஸைத் தடுக்கும்” என்பதாகவே இருக்கிறது. ஏனென்றால் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு வாரிவழங்கும் முதலாளிகள் தான் மேற்கண்டப் பாலியல் எண்ணங்களைத் தூண்டும் காரணிகளையும் பரப்புகின்றனர். அதாவது தொட்டிலையும் ஆட்டி விட்டு, குழந்தையையும் கிள்ளிவிடுதல் அரசாங்க அனுமதியுடன் நடைபெறுகிறது.
எயிட்ஸைத் தடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட எயிட்ஸ் விழிப்பு/ஒழிப்பு இயக்கங்கள் எவ்வாறு விபச்சாரம் பெருகத் துணை புரிந்தனவோ, அது போன்றே ஆண், பெண் இணைந்து படிக்கும் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படப் போகும் பாலியல் கல்வியும் மாணவ, மாணவிகளிடையே பண்பாடற்றப் பழக்க வழக்கங்களை உருவாக்கும் விதத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவே அதிகம் வாய்ப்புள்ளது.
பாலியல் கல்வி நடைமுறையிலுள்ள மேற்கத்திய நாடுகளின் அனுபவங்களும் அவை தரும் அறிக்கைகளும் அதிர்ச்சியடைய வைக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனில் தான் இளம்பிராயக் கருக்கலைப்புகள் அதிகம் (ஆதாரம்: http://www.unicef.org.uk/youthvoice/sexeducation.asp). இங்கு பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி கடந்த முப்பது வருடங்களாக நடைமுறையில் உள்ளது என்பது கவனிக்கத் தக்கது! வரைமுறைகளற்ற உறவுகளை முன்னிலைப்படுத்தி கூட்டுக்குடும்ப அமைப்பைப் புறக்கணித்தன் விளைவு இது.
குடும்பமுறை அமைப்புகள் சிதையாமலிருக்கும் இந்தியாவில் இதற்கான வாய்ப்புகள் அறவே இல்லாமல் இருந்த நிலை எண்ணிப்பார்க்கப்பட வேண்டியதாகும். ஆனால், மேற்கத்திய மோகத்தில் தங்களைப் பலிகொடுக்கும் சில பெரிய பணக்காரக் குடும்பங்களில் இத்தகையச் சீரழிவு நிலை இருப்பதையும் மறுக்க இயலாது.
சமீபத்தில், தில்லியைச் சேர்ந்த, மருத்துவ அறிவியற் பல்கலைக்கழகக் கல்லூரி (University College of Medical Sciences) ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. தெற்கு தில்லியிலுள்ள இரண்டு கல்லூரிகள், மூன்று பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் நடத்திய சர்வேயில், “சக மாணவியுடன் உறவு வைத்துள்ளேன் ” என்று 10% மாணவர்கள் கூறியுள்ளனர். இந்த 10% மாணவர்களுள், 57% பேர், “ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு வைத்துள்ளோம்” என்றும், “அப்போது மது, போதையும் ஏற்றிக்கொள்வோம்” என்றும் மிகச் சாதாரணமாகக் கூறியுள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பில் மாணவர்கள்தான் அதிகம் பங்கேற்றனர். 13 வயதுக்குள் செக்ஸ் உறவு வைத்துக் கன்னித்தன்மையை 13% மாணவர்கள் இழந்துள்ளனர். அதுபோல, மாணவிகளில் 6% பேர் கன்னித் தன்மையை 13 வயதுக்குள் இழந்துள்ளனர். பலருடன் உறவு வைத்துள்ள மாணவர்களில் 54% பேர், “எப்போதாவது ஆணுறை பயன்படுத்துவதாகக்” கூறியுள்ளனர். 75% பேர், “ஆணுறை பயன்படுத்தியதே இல்லை” என்றனர். இவ்வாறு இந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
வயது 13 ஆவதற்கு முன்பேயே, ‘உறவு’ வைத்துள்ளனர் 25% மாணவர்கள். ஒருவருடன் மட்டுமில்லை, நான்கைந்து மாணவர்களுடன் உறவு வைத்துள்ளனர் 57% மாணவ, மாணவிகள். இவர்களில் 75% பேர், உறவின் போது ஆணுறை பயன்படுத்தியதே இல்லை. “உறவு கொள்ளும் முன் மது, போதை சாப்பிடுவது வழக்கம்” என்று சொல்கின்றனர் 30% பேர். இந்தப் பகீர் தகவல்கள் எல்லாம், ஏதோ வெளிநாட்டு சமாச்சாரங்கள் என்று நினைத்தால் தவறு; இந்தியத் தலைநகர் தில்லியில்தான் இவை அனைத்தும் நடந்தேறுகின்றன .
இந்தக்கல்வி நிறுவனங்களில் பணக்கார மாணவ, மாணவிகள்தான் படிக்கின்றனர் என்பது கவனிக்க வேண்டியதாகும். 14 வயது முதல் 19 வயது வரை உள்ள 550 மாணவ, மாணவிகளிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. கூச்சம் சிறிதுமின்றிப் பதில் அளித்த இவர்கள், “உறவு வைப்பதில் தவறு என்ன இருக்கிறது?” என்றும் கேட்டது தான் இன்னும் வேதனையான விஷயம்.
இவ்வளவு அப்பட்டமாக எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி மாணவர்கள் இருப்பதற்கான காரணம் ஏற்கெனவே அரசு அனுமதி அளித்து நடந்து வரும் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரங்களும், ஒளிவு மறைவற்ற உணர்ச்சிகளைத் தூண்டும் படியிலான சூழல்களும் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்கும் பொழுது, இனி பள்ளிகளிலேயே அதனைக் குறித்தப்பாடங்களை விளக்கிக் கொடுக்கப்படும் சூழல் வரும் பொழுது ஏற்படும் பின்விளைவுகளை/எதிர்மறை விளைவுகளை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
இதில், இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பாலியல் கல்வியின் தேவைபற்றி மாணக்கர்களிடமே கருத்துக் கேட்கிறார்கள். LKG வகுப்பு மாணவனிடம் SSLC பாடம் பற்றி கருத்துக் கேட்பது எப்படி அபத்தமோ அதுபோல்தான் தங்களுக்குப் போதிய அனுபவமும் அறிவும் இல்லாத விசயத்தில் கருத்துக் கேட்பதும் அபத்தமே! பள்ளிகளில் பாலியல் கல்வியைப் போதிப்பதை விட பெற்றோருக்குப் போதித்துப் பிள்ளைகளுக்கு உரிய வயதில் எடுத்துச் சொல்லும் பொறுப்பை அவர்களிடம் சுமத்தலாம்.
மாணாக்கர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்தியாவில் எயிட்ஸ் பரவக் காரணம் என்பது பழியை மாணாக்கர்கள் மீது போடும் பொறுப்பற்றப் பேச்சாகும்!
சமீபத்திய புள்ளி விபரங்களின்படி, இந்தியாவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிகை ஐந்தரை கோடிக்கும் அதிகம். 15-29 வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் 50% க்கும் அதிகம். இதற்கெல்லாம் காரணம் மாணவர்கள் மட்டுமா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் 1980 ஆம் ஆண்டிலிருந்தே பாலியல் கல்வி, தேசியக் கல்வித் திட்டத்தில் இருந்து வருகிறது. அதில், கரு உண்டாகாமல் தடுக்கும் பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் பால்வினை நோய்கள் பற்றி மட்டுமே போதிக்கப் பட்டன. இதன் காரணமாக இளையத் தலைமுறையினரிடம் குற்றமற்ற உடலுறவு மனப்பான்மை அதிகரித்தது.
2006 ஆம் ஆண்டு இந்தியா டுடேயின் கருத்துக்கணிப்பின்படி 8% இளைய தலைமுறையினரிடம் இத்தகைய முறையற்ற உறவு /பழக்கம் உள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தியாவின் 11 நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி , 18-30 வயதிற்குட்பட்ட பெண்களில் நால்வரில் ஒருவர் திருமணத்திற்கு முன்பு இத்தகைய முறையற்ற உறவு வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்! (இதைத் தொடர்ந்துதான் நடிகை குஷ்புவின் பேட்டி சர்ச்சைக்குள்ளானது !)
இதில் குறைந்த பட்சம் பாலியல் ஐயங்களை மகனுக்குத் தந்தையும், மகளுக்குத் தாயும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றாவது சொல்கிறார்களா என்றால் அதுவுமில்லை. மாணாக்கர்களுக்குத் தங்கள் தாய்-தந்தையை விட, ஆசிரியர்களிடமே மனம் விட்டுக் கேட்டறிந்து தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமாம்! MTV, Fashion TV க்களை குடும்பத்துடன் வெட்கமின்றி பார்த்து ரசிக்கும் இவர்கள் இதைச் சொல்லலாமா?.
குடும்ப உறவுகளைச் சீர்குலைக்கும் தொலைக்காட்சி சீரியல்களையும் ஆணும் பெண்ணும் அரை நிர்வாண உடைகளுடன் கட்டிப்புரளும் சினிமாக்களையும் வெட்கமின்றிக் குடும்பத்துடன் பார்க்க முடிபவர்களால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் பாலியல் ஐயங்களைத் தெளிவுபடுத்துவதில் வெட்கப்பட என்ன உள்ளது என்று தெரியவில்லை.