காவி பயங்கரவாதமும், இரட்டை அளவுகோலும் – அ. மார்க்ஸ்

Share this:

‘காவி பயங்கரவாதம்’ என்ற வார்த்தை நமது நாடாளுமன்றத்தைச் சில நாட்களாக அசைத்துப் பார்க்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் படித்தபோது, எனது ஞாபகங்கள் பின்னோக்கிச் சென்றன.

2008 ஜனவரி 25-ம் தேதி, அன்று காலை வழக்கம்போல நாளிதழ்களை விரித்தபோது, ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நாள் இரவு 9 மணி அளவில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட செய்திதான் அது! புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓர் ஆட்டோவிலும் வெடிகுண்டு வெடித்திருந்தது. உயிர்ச் சேதம் ஏதும் இல்லை. ஆனாலும் வகுப்பு முரண் உள்ள ஓர் ஊரில் இப்படியான ஒரு சம்பவம் கவலையை அளித்தது. முந்தைய ஆண்டில் அங்கே இப்படியான மோதலில் ஆறு கொலைகள் நடந்திருந்தன. வெடிகுண்டு சம்பவத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, தென்காசி சென்றிருந்த உண்மை அறியும் குழு ஒன்றில் பங்குபெற்றிருந்ததால், அங்கு உள்ள சூழலை நான் அறிவேன்.

எல்லோரையும்போல் எனக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மேல்தான் சந்தேகம் வந்தது. அவர்களுக்குப் பிரச்னை இருந்தது உண்மைதான்… ஆனால், ‘அதற்காக இப்படிச் செய்யலாமா?’ என நினைத்தேன். ஊடகங்களும், முஸ்லிம் பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி எழுதித் தள்ளின. ஆனாலும் எனக்குள் ஒரு சந்தேகம். அங்கு உள்ள முஸ்லிம்கள் ரொம்பவும் பயந்துபோய்த் தற்காப்பு நிலையில்தான் இருந்தார்கள். அவர்களா இப்படிச் செய்திருப்பார்கள்?

அடுத்த இரண்டு வாரங்களுக்குள், எனக்கு பதில் கிடைத்தது. தென் மண்டலக் காவல் துறை ஐ.ஜி-யான சஞ்சீவ் குமார் மற்றும் டி.ஐ.ஜி-யான கண்ணப்பன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து வெடிகுண்டு வைத்தது இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவவாதிகள்தான் என்பதை வெளிப்படுத்தினர். அது மட்டும் அல்ல, இரு சமூகங்களுக்குள் மோதலை உருவாக்கும் நோக்குடன், முஸ்லிம்கள் மீது பழி போடும் எண்ணத்துடன் இது செய்யப்பட்டது என்பதையும் விளக்கினர். அதில் 14 பைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. முன்னதாக பாபநாசம் காடுகளில் வெடித்துச் சோதனையும் செய்திருந்தனர். ரவி பாண்டியன், குமார், நாராயண தர்மா உள்ளிட்ட காவிக் கொடி ஏந்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதத்தைச் செய்து முடித்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகள். அப்போது கொல்லப்பட்டது தேசத் தந்தை என மக்களால் வணங்கப்பட்ட காந்தியடிகள். அவர் செய்த குற்றம், இந்தியாவை இந்து ராஷ்டிரமாக ஆக்குவதற்குத் தடையாக இருந்ததும், காவியும் திரிசூலமும் நம்முடைய அடையாளங்களாக வைக்க விடாமல் , அசோகச் சக்கரத்தை அதில் இடம் பெறக்கூடிய சூழலை உருவாக்கியதும் தான்.

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே, முதல் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட சாவர்க்கர் ஆகிய இருவரின் பரம்பரையிலும் வந்த ஹிமானி சாவர்கரின் ‘அபினவ பாரதம்’ என்கிற அமைப்பு தொடர்புடைய தொடர் பயங்கரவாதச் செயல்களில் ஒன்று, கடந்த செப்டம்பர் 2008-ல் அம்பலப்பட்டபோதுதான் ‘காவி பயங்கரவாதம்’ என்கிற சொல்லைப் பலரும் உச்சரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மலேகான் என்னும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நகர் ஒன்றில் வெடிகுண்டு வெடித்து ஆறு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சாத்வி பிரக்ஞா தாகூர், தயானந்த தேஷ்பாண்டே என்ற இரு காவி உடைதாரிகள், ஸ்ரீகாந்த் புரோஹித், ரமேஷ் உபாத்யாயா என்ற இரு ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சாத்வி பிரக்ஞா, ஏ.பி.வி.பி., விசுவ ஹிந்து பரிஷத் முதலிய அமைப்புகளில் இருந்தவர். ராணுவ அதிகாரிகள், ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைக் கொண்டுவந்தவர்கள். இவர்கள் எல்லோரும் நாசிக்கில் உள்ள போன்சாலா மிலிட்டரி ஸ்கூல் என்கிற தனியார் ராணுவப் பள்ளியுடன் தொடர்பு உடையவர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு பயங்கரவாதப் பயிற்சி அளிப்பது இந்தப் பள்ளியின் முக்கியப் பணி. இவர்கள் எல்லோரும் அபிநவ பாரதத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள். முசோலினியுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த டாக்டர் மூஞ்சே இவர்களின் ஆதர்சம். இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவது இவர்களின் லட்சியம். பல்பானி (2003), ஜல்னா (2004), புர்னா (2004) ஆகிய இடங்களில் தொழுதுகொண்டு இருந்த முஸ்லிம்கள் மீது குண்டு வீசியவர்களும் இவர்களே என்றது விசாரணைக் குழு.

ஹைதராபாத்தில் மக்கா மசூதி, ஆஜ்மீர், நாண்டிட், மர்கோவா ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்கள், விபத்துகள், குண்டு வெடிப்புகள் எல்லாவற்றுக்கும் இந்துத்துவ அமைப்புகளே பின்புலமாக இருந்துள்ளன. மலேகானில் சாத்வி பிரக்ஞாவின் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த குண்டுகள் வெடிக்கப்பட்ட இடம் ‘சிமி’ என்ற தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பு இருந்த கட்டடம் அருகில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளுடன் ஒட்டுத் தாடி, தொப்பி முதலியவையும் இருந்தன.

கிழக்கு வர்ஜீனியாவில் உள்ள ‘பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான ஆய்வு மையம்’ பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ள பட்டியலில் உள்ள ஒன்று – ஆர்.எஸ்.எஸ்!

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சர் என்கிற வகையில் சரியான நேரத்தில் செய்துள்ள பொறுப்பான எச்சரிக்கை இது. இதற்கு இந்துத்துவவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டம் முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் முயற்சி. சிதம்பரம், இந்துக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார் என்றும், துறவின் அடையாளமாகவும், இந்திய மரபாகவும் உள்ள காவி என்கிற கருத்தாக்கத்தைக் கொச்சைப் படுத்திவிட்டார் எனவும் மோடி, ராஜ்நாத் சிங் முதலான பி.ஜே.பி. தலைவர்கள் கூச்சலிடுகின்றனர். உண்மையிலேயே காவி மீது இந்த மரியாதை இருக்குமேயானால் காவி உடை அணிந்து இன்று கம்பி எண்ணிக் கொண்டு இருப்பவர்களைத்தான் கண்டித்திருக்க வேண்டும். அதைச் செய்யும் துணிவு உண்டா இவர்களுக்கு? மாறாக, இந்தக் காவி உடை தரித்தவர்கள் கைது செய்யப்பட்டபோது வெளிப்படையாக ஆதரித்தவர்கள் அல்லவா இவர்கள்!

‘மென்மை இந்துத்துவா’ என்னும் பெயரை சம்பாதித்துள்ள காங்கிரஸ், இதிலும் பின்வாங்குகிறது. வன்முறை என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் கண்டிக்க வேண்டியதுதான். முஸ்லிம் செய்தால் மட்டும் தவறு, இந்து செய்தால் சரி என்ற இரட்டை அளவுகோல் நாட்டுக்கு ஆபத்தானது!

– அ.மார்க்ஸ்

நன்றி: ஜூனியர் விகடன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.