
இஸ்லாம் பற்றிய அறிதலுக்கும், நபிகளார் பற்றிய புரிதலுக்கும் நல்ல நூல்களை வாங்க வேண்டுமென்றால், நாம் பரிந்துரைக்கும் முதல் இடம் அது சென்னை ரஹ்மத் அறக் கட்டளையாகத் தான் இருக்கும்.
நபிகளாரின் வாழ்வியலை நேர்த்தியாக தமிழ்ப்படுத்திய ஆக்கப்பணிக்கு உரியவர்கள் ரஹ்மத் அறக்கட்டளையினர். அரபி மற்றும் தமிழ் மொழி வல்லுனர்களைக் கொண்டு, நவீன தொழில் நுட்பத்தின் துணையோடு, ஆர்ப்பாட்டமே இல்லாமல் அதே நேரம் அழுத்தமான பதிவுகளை தொடர்ச்சியாக செய்து வருபவர்கள் அவர்கள்.
முஸ்லிம் புத்தகக் கடை என்றால் அது மண்ணடி தான் என்ற எழுதப்படாத விதியை உடைத்து, மயிலாப்பூருக்கு அருகில் களம் கண்டவர்கள் அவர்கள். வாகனங்கள் வந்து போக முடியாத சந்து பொந்துகளிலும், வருபவர்களை விரைவாக வெளியேற்றக் கூடிய காற்று புகாத இருட்டு அறைகளிலும் மட்டுமே பெரும்பாலும் இயங்கி வரும் இஸ்லாமிய நூல் நிலையங்களுக்கு மத்தியில், ஒரு ‘ஹிக்கின் பாதம்ஸ்’ தரத்துக்கு, இஸ்லாமிய புத்தகக் கடையை நிர்மாணித்தவர்கள் அவர்கள். இஸ்லாம் பற்றிய நூல்களை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியோடு முடக்கி விடாமல், முஸ்லிம் அல்லாத மக்கள் நிறைந்து வாழும் இடத்துக்கு நகர்த்துவதுதான் சரியான உத்தி என்பதை உணர்ந்து நடைமுறைப்படுத்தியவர்கள் அவர்கள்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை சி.ஐ.டி காலனியில் உள்ள, ரஹ்மத் புக் சென்டருக்கு அண்மையில் சென்றிருந்தேன். இஸ்லாமிய கருத்தியலைத் தாங்கிய உலகளாவிய நூல்கள், ஆங்கிலத்திலும், தமிழிலும் கொட்டிக் கிடந்தன. பன்மைச் சமூக அமைப்பில் முஸ்லிம்களின் அணுகுமுறைகள் எப்படி அமைய வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இலங்கை அறிஞர்களின் நூல்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
ரஹ்மத் பதிப்பகத்தின் புதிய வெளியீடாக வந்திருக்கும், கவிஞர் மு.மேத்தாவின் ‘நாயகம் ஒரு காவியம்’ நூல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக, பதிப்பக நிறுவனர் அண்ணன் முஸ்தபா அவர்கள் என்னிடம் கூறினார்கள். நவ கவிதையில் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் அந்த நூல், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால், பதுருப்போருடன் அந்நூல் முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு.மேத்தா அவர்கள் எழுதவில்லை என்று கேட்டேன். அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும், நல்ல தமிழ்நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால், நாளைக்கே வேலையை தொடங்கிவிடலாம் என்றும் கூறினார் ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள்.
அண்மையில் நான், மணவை முஸ்தபா உள்ளிட்ட நமது முன்னோடிகளின் பங்களிப்புகள் பற்றியும், அவர்களுக்குப் பின் அப்பணிகளைத் தொடர இளைஞர்கள் யாருமே இல்லை என்றும் வருந்தி எழுதியிருந்தேன். அந்த வருத்தம் இப்போது உண்மையாகியுள்ளது.
நாயகம் ஒரு காவியத்தை எழுதும் கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் இருக்கிறீர்களா?
(சென்னை ரஹ்மத் அறக் கட்டளையின் Facebook முகவரி: www.facebook.com/rahmathtrust)