இஸ்லாமோஃபோபியா: சமரசம் இதழின் தலையங்கம்

ஐ.நா.சபையின் மனித உரிமைக் குழு, முஸ்லிம்களுக்கு எதிராக உலகம் முழுவதிலும் வளர்ந்து வருகின்ற வெறுப்பு உணர்வைக் குறித்து கவலை தெரிவித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. முஸ்லிம் விரோதம், இன வெறி, மதரீதியாகக் காட்டப்படும் வேறுபாடுகள், தேசிய அரசியலில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான பகைமை உணர்வு, ஆகிய அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வரத் தேவையான சட்டங்களை இயற்றுமாறு எல்லா நாடுகளையும் அந்தத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைக் குழுவின் இந்தத் தீர்மானம் இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரான ஐ.நா.வின் முதல் நடவடிக்கை ஆகும். மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் இஸ்லாமோஃபோபியாவுக்கு முடிவு கட்ட ஐ.நா. சபை முன்வர வேண்டும் என இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு சில காலங்களாக வலியுறுத்தி வந்தது. மனித உரிமைக்குழு நிறைவேற்றியுள்ள இந்தத் தீர்மானம் ஓ.ஐ.சி.யின் வெற்றி என்றே கூறலாம்.

ஆனால் இந்தத் தீர்மானத்தை உறுப்பு நாடுகளில் 21 நாடுகள் ஆதரித்தபோது, 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன. பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்த நாடுகளில் சில. இஸ்லாமோஃபோபியா எதேச்சையான ஒன்றல்ல. சில சக்திகள் திட்டமிட்டுச் செய்யும் சதிதான் இது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. ஐ.நா. பொதுச்சபையும் பாதுகாப்புச் சபையும் முஸ்லிம்கள் பிரச்னைகளை கவனமுடன் எடுத்துக் கொண்டதே இல்லை என்பது ஓர் உண்மையாகும். 

மத நெறிமுறைப்படி வாழ்வதைத் தடுத்தல், கலை, இலக்கியங்களின் மூலம் மதத் தத்துவங்களையும் புனித நூல்களையும் மனிதப் புனிதர்களையும் அவமரியாதை செய்தல், இஸ்லாத்தை கொடுங்கோன்மை மதமாகவும் அநாகரிகத்தின் வடிவமாகவும் மனித உரிமைகளைக் காலில் போட்டு நசுக்குகின்ற மதமாகவும் சித்தரித்தல், முஸ்லிம்களை இயற்கையிலேயே பயங்கரவாதிகளாக அறிமுகம் செய்தல், செய்தி ஊடகங்களின் வழியாக முஸ்லிம்கள் மீது வெறுப்பும் பகைமையும் உருவாக்கும் விதத்தில் பொய்களையும் கட்டுக்கதைகளையும் கொண்ட செய்திகளை ஆதாரமாகப் பரப்புதல், அடிப்படையற்ற சந்தேகங்களின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து துன்புறுத்துதல் – இவைதாம் இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகளாகச் சுட்டிக் காண்பிக்கப் படுகின்றன. பல நாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு உணர்வை வளர்ப்பதில் செய்தி ஊடகங்கள் முன்னிலை வகிக்கின்றன.

இஸ்லாமோஃபோபியா ஐரோப்பியாவை மட்டும் பீடித்துள்ள நோயன்று. ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளிலும் அது பரவியுள்ளது. இதில் முண்ணனியில் இருப்பது நம் பெருமைக்குரிய பாரதம். நாட்டில் நடைபெறுகின்ற எல்லா விதமான அக்கிரமச் செயல்களுக்கும் முஸ்லிம்கள்தான் காரணம் எனப் பழிசுமத்துகின்றனர். வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்து துன்புறுத்துகின்றனர். அவர்களுடைய வழக்குகளுக்காக வாதாட முன்வருகின்ற வழக்கறிஞர்கள் பார் கவுன்சில்களில் புறக்கணிக்கப் படுகின்றனர். கல்வியிலும் பொருளாதாரத்திலும் முஸ்லிம்கள் பின்தங்கி இருப்பதைக் குறித்துப் பேசுவது வகுப்புவாதம். நிதிநிலை அறிக்கையில் அவர்களின் முன்னேற்றத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் அது வகுப்புவாத பட்ஜெட். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இடஒதுக்கீடு கோருவது பிரிவினைவாதம். கலை, இலக்கியப் படைப்புகளில் தீய கதை மாந்தர்களாக முஸ்லிம்கள் சித்தரிக்கப் படுவது படைப்புச்சுதந்திரம்.

இதை வாசித்தீர்களா? :   துரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ் – சுப்ரமணிய சாமி குற்றச்சாட்டு

‘அது ஏன்? எப்படி?’ என யாராவது கேட்டால் அவர்கள் மதக் கண் கொண்டு மட்டுமே பார்க்கின்ற கலைக் கண் இல்லாத தீவிரவாதிகள். அமைதியுடன் வாழும் ஒரு கிராமத்தில் முஸ்லிம் அமைப்புகளோ நிறுவனங்களோ செயல்பட்டால் அந்தக் கிராமத்தை தீவிரவாதத்தின் விளைநிலமாகச் சித்தரிக்கின்ற தவறான தகவல்களை வெளியிடுவது கருத்துச் சுதந்திரம். அதை அப்படியே பிரசுரம் செய்வது மகத்தான பத்திரிக்கைச் சுதந்திரம். அடிப்பவன் அல்ல, அடி வாங்கியவன் அழுவதே தீவிரவாதம் என்ற நிலை இங்கு காணப்படுகிறது. பொது சமூகம் இதைப் புரிந்து கொள்ளவில்லையெனில், அது முஸ்லிம் சமுதாயத்தின் குற்றமல்ல. 

சமரசம் 1-15 மே 2008