கண்ணியம் கொடுத்த ஹிஜாப்! – ஸாரா போக்கர்

Share this:

மெரிக்காவின் நடுநாயகமாக விளங்கும் ஊரில் பிறந்த அமெரிக்கப் பெண் நான். எல்லாப் பெண்களையும் போலத்தான் நானும் அந்தப் பெரிய நகரத்த்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். இறுதியாக நான் ஃப்ளோரிடாவுக்கு, மியாமி கடற்கரையின் தெற்குப் பக்கமாகக் குடிபெயர்ந்தேன். வாழ்க்கையின் கவர்ச்சிகளைத் தேடுபவர்களுக்கான ‘சூடான இடம் அதுதான். பெரும்பாலான சராசரி மேற்கத்தியப் பெண்கள் செய்வதையே நானும் பின்பற்றினேன். அதுதானே இயற்கையுமாகும்? என் தோற்றம், கவர்ச்சி இவற்றில் கவனம் செலுத்தினேன்.

மற்றவர்களை எந்த அளவுக்கு என் பக்கம் இழுக்க முடியும் என்பதை வைத்து என் மதிப்பை அளந்தேன். பெரும் முனைப்புடன் அதற்காக நான் உழைத்தேன். தனிப்பட்ட பயிற்சியாளினியாக மாறினேன். கடற்கரையோரமாக மேல்குடி மக்கள் வாழும் பகுதியில் ஒரு வீடு வாங்கினேன். உடலை வெம்மைப்படுத்திக் கொள்வதற்காக வழக்கமாகக் கடற்கரைக்குச் செல்பவர்களில் ஒருத்தியாக மாறினேன். அந்த நேரத்தில் எது பெரும்பாலானவர்கள் வாழும் ஸ்டைலாக இருந்ததோ அதுவே எனதாகவும் இருந்தது.

 

ஆனால் பெண் என்ற கவர்ச்சியை வைத்து நான் கழித்துக் கொண்டிருந்த அந்த வாழ்க்கை எனக்கு நிம்மதியைத் தரவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். ஆண்டுகள்தான் கழிந்து கொண்டிருந்தன.

ஃபேஷனுக்கு நான் அடிமையாகிப் போயிருந்தேன். தோற்றத்தின் பிணைக் கைதியாகி விட்டிருந்தேன்.

எனது வாழ்க்கை முறைக்கும் மன நிம்மதிக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போனது. குடி, பார்ட்டிகள், தியானம், சமூக சேவை, வேறு மதங்களைத் தழுவுதல் இப்படி பல விஷயங்களில் மனதைச் செலுத்தித் தப்பிக்கப் பார்த்தேன். ஆனால் எதுவுமே என் வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த இடைவெளியை நிரப்பவில்லை. மாறாக ஒரு பள்ளத்தாக்கைப் போல அது மேலும் வளர்ந்து ஆழமாகிக் கொண்டிருந்தது. நான் செய்து வந்ததெல்லாம் நோய் நிவாரணிகள் அல்ல, தற்காலிகமாக வலியை மறக்கடிப்பவை மட்டுமே என்பதை கடைசியில் நான் புரிந்து கொண்டேன்.

செப்டம்பர் 11, 2001 ஆகிவிட்டிருந்தது. இஸ்லாத்தின் மீதான தொடர்ந்த குண்டுமாரிகளையும் விமர்சனங்களையும், இஸ்லாமிய மதிப்பீடுகள், பண்பாடு, புதிய சிலுவைப்போர் என்ற பிரகடனங்கள் இவற்றையெல்லாம் பார்க்க நேரிட்டது. அப்போதுதான் இஸ்லாம் என்ற ஒன்றை கவனிக்க ஆரம்பித்தேன். இஸ்லாம் என்றால் பெண்களை கூடாரங்களில் அடைத்து வைத்திருப்பவர்கள், மனைவிகளை அடிப்பவர்கள், தனியிடத்தில் ஒதுக்கி வைப்பவர்கள், பயங்கரவாதிகளின் உலகம் என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.

பெண் விடுதலைக்காகவும், இன்னும் இந்த உலகை சிறப்பானதாக மாற்றுவதற்கும் போராடும் ஒருத்தி என்ற முறையில் என் வழி, என்னைப் போன்றே, வித்தியாசம் பாராமல் எல்லாருக்கும் நீதியும் சீர்திருத்தமும் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் இன்னொருவரின் வழியோடு சந்தித்துக் கொண்டது. எனது புதிய வழிகாட்டியானார் அவர். அவருடைய வழிகாட்டுதல்களில் அந்த நேரத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள், வாழ்வாதார உரிமைகள் போன்றவையும் இருந்தன. எனது புதிய ஈடுபாடு அடிப்படையில் பல வகையிலும் வித்தியாசமானதாக இருந்தது. தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் நியாயம் என்றில்லாமல், நீதி, நியாயம், விடுதலை, மரியாதை போன்ற யாவும் எல்லாருக்கும் பொதுவானவை, எல்லாருக்குமே கிடைக்க வேண்டியவை என்பதை நான் புரிந்து கொண்டேன். சொந்த நலன் என்பதும் பொது நலன் என்பதும் முரண்பட்டவை அல்ல என்பதையும் தெரிந்துகொண்டேன்.

“படைக்கப்பட்ட அனைவருமே சமம்” என்பதன் அர்தத்தை முதன் முறையாக நான் புரிந்துகொண்டேன். நம்பிக்கை மட்டுமிருந்தால், இந்த உலகம் முழுவதுமே ஒன்றுதான், படைப்பினங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம் என்று தெரிந்து கொண்டேன்.

மேற்கத்திய உலகம் எப்போதுமே எதிர்மறையாகப் பேசிக்கொண்டிருக்கும் குர்ஆன் என்ற புத்தகத்தை ஒருநாள் பார்க்க நேர்ந்தது. முதலில் குர்ஆனின் நடையும் அணுகுமுறையும் எனக்குப் பிடித்திருந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புக்கும் இடையில் இருக்கும் உறவு இவை பற்றியெல்லாம் அது சொன்ன விஷயங்கள் என்னை மயக்கின. ஒரு விளக்கவுரையாளரோ அல்லது ஒரு சமயத்தலைவரோ தேவையில்லாமல் மனதோடும் ஆன்மாவோடும் உறவாடிய புத்தகமாக அது இருந்தது.

கடைசியில் உண்மையில் குர்ஆன், என்னைப் பாதித்ததை உணர்ந்தேன். எனக்கு ஆத்ம திருப்தி தரும் செயல்பாட்டின் இறுதிக்கட்டமாக, வழிபாடுகளைச் செயல்படுத்தும் ஓர் உண்மை முஸ்லிமாக அமைதியாக வாழத் தகுதியான இஸ்லாத்தில் நான் இணைந்தேன்.

ஓர் அழகிய நீண்ட அங்கியை நான் வாங்கினேன். தலைமீது போடும் துணியும் வாங்கிக் கொண்டேன். குட்டைப் பாவாடையிலும், மேற்கத்திய வியாபார உடையான பிகினியிலும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நான் அலைந்த அதே தெருக்களிலும் சுற்றுப் புறங்களிலும் இந்த உடையோடு நான் நடந்தேன்.  ஏற்கெனவே பார்த்த அதே மனிதர்கள், அதே முகங்கள், அதே கடைகள்தான். ஆனால் ஒரு வீரியம் மட்டும் முன்புபோல இல்லை. அது நான்தான். ஒரு பெண் என்ற வகையில் எனக்கு முன்பு கிடைக்காத நிம்மதி முதன்முறையாகக் கிடைத்தது. விலங்குகள் உடைபட்டு நான் இறுதியாக சுதந்திரமடைந்து விட்டதை உணர்ந்தேன். ஏற்கனவே நான் அந்த தெருக்களில் சென்றபோது, ஒரு வேட்டைக்காரன் தான் வேட்டையாட இருக்கும் அப்பாவி மிருகத்தைப் பார்ப்பது போலத்தான் என்னைப் பார்த்தார்கள். ஆனால் இப்போது ஆச்சரியமாக அவர்கள் என்னைப் பார்த்தது எனக்கு சந்தோஷமளித்தது.

திடீரென்று எனது தோள்களில் இருந்து ஒரு ‘சுமை’ எடுக்கப்பட்டுவிட்டது. எனது நேரத்தையெல்லாம் முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் செலவழித்துக் கொண்டிருக்கவில்லை. ஆம், இறுதியாக நான்
சுதந்திரம் அடைந்துவிட்டேன்.

‘மிகவும் அவமரியாதை செய்யும் இடம் என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை நான் என் இதயத்தில் ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, அதை எனக்கு இன்னும் நெருக்கமாக்குவதற்கும் சிறப்பாக்குவதற்கும் போதுமானதாக இருக்கிறது.

ஹிஜாப் (பர்தா) எனக்கு திருப்தி தருவதாக இருந்தது. நிகாப்(முகத்தை முழுமையாக மூடும் துணி) பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. ஏனெனில் அதில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது. நான் இஸ்லாத்துக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொண்ட என் முஸ்லிம் கணவரிடம், நான் ஏற்கெனவே அணிந்து கொண்டிருந்த ஹிஜாபில் இருந்தால் போதுமா, அல்லது நிகாப் அணிய வேண்டுமா என்று கேட்டேன். ஹிஜாப் அணிவது கடமை என்றும், நிகாப் அப்படிப்பட்டதன்று என்றும் அவர் கூறினார். அந்த சமயத்தில் என் ஹிஜாப் ஆடை என் முகம் தவிர, கூந்தல் முழுவதையும் மூடும் ஒரு தலைத்துணியும், கழுத்திலிருந்து பாதம் வரை மூடிய ‘அபயா’ என்று சொல்லப்பட்ட ஒரு நீண்ட கருப்பு அங்கியும் கொண்டதாக இருந்தது.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நிகாப் அணிய ஆசையாக உள்ளதாக என் கணவரிடம் சொன்னேன். அது அல்லாஹ்வுக்கு அதிகம் பிடித்தமானதாக இருக்கும். அதோடு, அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன நிம்மதியையும் அது அதிகப்படுத்தும் என்றும் அவரிடம் கூறினேன். அவர் எனது முடிவை ஆதரித்தார். ‘இஸ்தால்’ என்று சொல்லப்பட்ட ஒரு தளர்ச்சியான, தலை முதல் கால்வரை மூடும் ஒரு கருப்பு கவுனையும், என் கண்களைத் தவிர தலையையும் முகத்தையும் முழுமையாக மூடும் நிகாபையும் வாங்கிக் கொடுப்பதற்காக என்னைக் கூட்டிச் சென்றார்.

ஹிஜாபும் நிகாபும் பெண்களையும் பெண்ணுரிமையையும் நசுக்குவதாகவும், சமூக இணைவுக்கு தடையாக இருப்பதாகவும் சொல்லி விரைவிலேயே அரசியல்வாதிகள், வாடிகன் பாதிரிகள், விடுதலை விரும்பிகள், மனித உரிமைகள், பெண் விடுதலை இவற்றுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. சமீபத்தில் ஓர் எகிப்திய அதிகாரி, “பின் தங்கிய நிலையின் அடையாளம்” என்று ஹிஜாபையும் நிகாபையும் வர்ணித்தார்.

சில அரசாங்கங்கள் பெண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று சொல்லும் போது அதை எதிர்க்க வேண்டிய மனித உரிமைகள், பெண் விடுதலை இவற்றுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் சில அமைப்புகளும் அதைக் கண்டு கொள்வதில்லை.. ஆனால் ஹிஜாப், நிகாப் அணியும் பெண்களுடைய உரிமைகள், வேலை, கல்வி ஆகியவற்றில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கொடுக்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கப்படுவதை இந்த அமைப்புகள் கண்டு கொள்வதே இல்லை. படுமோசமான, வெளிப்படையான வஞ்சகம், கபடம் என்று நான் இதைப் பார்க்கிறேன். துனீசியா, மொராக்கோ, எகிப்து போன்ற சர்வாதிகார ஆட்சி முறைகளில் மட்டுமின்றி, ஃபி்ரான்ஸ், ஹாலந்து, பிரிட்டன் போன்ற மேற்கத்திய ஜனநாயக அரசுகளிலும் ஹிஜாப், நிகாப் அணியும் பெண்களுடைய உரிமைகள், வேலை, கல்வி ஆகியவற்றில் இன்று மறுக்கப்படுகின்றன.

நான் இன்னும் ஒரு பெண்ணியவாதிதான். ஆனால் முஸ்லிம் பெண்ணியவாதி. நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவர்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுத்து மனித குலத்துக்கு வழிகாட்டக் கூடியவர்களாக மறுபடியும் ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நல்லன எல்லாவற்றையும் செய்ய வேண்டும். தீயன விலக்க வேண்டும். எல்லாத் தீமைகளையும் விலக்க வேண்டும். கெடுதியான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நிகாப் அல்லது ஹிஜாப் அணியும் நமது உரிமைக்காகப் போராட வேண்டும். நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக. அதே சமயம், ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், இதன் அர்த்தம் என்ன, ஏன் இது நமக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது என்பனவற்றை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

நிகாப் அணியும் பெண்களில் பலர் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து மீண்டு வந்தவர்கள். அதில் சிலருக்குத் திருமணம்கூட ஆகவில்லை. இன்னும் பலருக்கும் நிகாப் அணிவதற்கு குடும்பம் அல்லது சுற்றத்தின் ஆதரவு இல்லை. இது நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தேர்வாகும். இதை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை.

உலகெங்கிலும் உள்ள எல்லா ஊடகங்களிலும், தொடர்புச் சாதனங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஸ்டைல் என்ற பெயரில் அணிவதற்கு வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாப், அதன் சிறப்புகள், அதை அணிவதால் எனக்குக் கிடைத்ததுபோல, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, சந்தோஷம் ஆகியன பற்றி பெண்கள் அறிந்து கொள்வதற்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் சொல்வேன். விடுதலையின் குறியீடாக எனக்கு நேற்றுவரை பிகினி இருந்தது. ஆனால் உண்மையில் என் ஆன்மிகத்திலிருந்தும், மரியாதைக்குரிய ஒரு மனுஷி என்பதிலிருந்தும் தான் அது என்னை விடுவித்திருந்தது.

சௌத் பீச்சில் என் பிகினியையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையும் கண்ணியமும் உள்ள ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதிலும்தான் எனக்கு அதிக மகிழ்ச்சி இருக்கிறது. அதனால்தான் நான் நிகாப் அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னைவிட்டுப் பிரிக்க முடியாத அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் செய்வேன். இன்று,பெண் விடுதலையின் புதிய குறியீடு நிகாப்தான்.

ஹிஜாப் கொடுக்கும் இஸ்லாமிய கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்முறையைத் தேர்வு செய்யும் பெண்களுக்கு நான் சொல்வது இதுதான்: நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை.

– நாகூர் ரூமி


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.