ஆரோக்கிய நோன்பு

Share this:

அருள்மறை அருளப்பட்ட புனித ரமளான் மாதம், நமது உடலியல் தேவைகளுக்கு ஒரு சுயசோதனைப் பருவமாகும். பதினொரு மாதங்கள் பகற்பொழுதில் உணவு உண்ண அனுமதித்த இறைவன், இந்த ஒரு மாதத்தில் மட்டும் பகற்பொழுதில் உண்ணாமல், பருகாமல், உடல் இச்சைகளுக்கு இடம் கொடாமல் இருக்கச் சொல்கிறான். அவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருக்கும் நாம் சூரியன் மறைந்தபின் ‘தடை நீங்கியது’ என்று ஒரே மூச்சில் உணவுகளை கபளீகரம் செய்ய முனையாமல் ஆரோக்கியமான முறையில் உடல்நலம் கேடாகாத வகையில் எளிய செய்முறைகள் மூலம் ரமளானை ஆரோக்கியமாகக் களிக்கலாம்.

நாள்முழுவதும் படைத்தவன் இட்ட கட்டளையை மதித்து உண்ணல், பருகல் போன்ற உடலியல் தேவைகளில் இருந்து விலகி இருந்த நாம் சரியான முறையில் நோன்பை முடித்துக் கொள்ளாவிட்டால், நோன்பு மூலம் நாம் கற்க வேண்டிய பயிற்சியைப் பெறவில்லை என்றே பொருளாகும்.

சரியான முறையில் ஸஹர்-நோன்பு துறப்பு உணவுப் பழக்கம் இல்லாவிட்டால் என்னவாகும்?

  1. செரியாமை: நாள்முழுவதும் உணவு இல்லாமல் இருக்கும் இரைப்பை திடீரென்று பல்வகையான உணவுப் பொருட்கள் திணிக்கப்பட்டால் திணறித்தானே போகும்? அளவான, சத்து நிறைந்த உணவே நோன்பு துறக்க மிக உகந்ததாகும்.

  2. மலச்சிக்கல்: சரியான அளவில் நார்ச்சத்து இல்லாத பொறித்த தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் அதிக அளவில் உட்கொள்வதால் மலச்சிக்கல் வரும்.

  3. சோம்பல்: திடீரென்று உட்கொள்ளப்படும் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் நாள்முழுவதும் இருந்த பட்டினியால் குறைந்த குருதி அழுத்தத்துடன் இணைந்து சோம்பல் உணர்வைத் தூண்டும்.

  4. தலைவலி: சரியான முறையில் உறக்கச் சுழற்சியை வகுத்துக் கொள்ளாவிட்டால் தலைவலி வருவதைத் தவிர்க்க இயலாது.

  5. தசைப்பிடிப்பு: சரியான அளவில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் உள்ள உணவை நோன்பு துறக்கப் பயனபடுத்தாவிட்டல் தசைப்பிடிப்பு ஏற்படும்.

  6. உறக்கமின்மை: ஒவ்வொருவர் உடலுக்கும் தக்கவாறு தேவையான உறக்கத்தை நல்லமுறையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். (இரவு வணக்கங்கள், அருள்மறை ஓதுதல், அன்றாடப் பணி இவற்றுக்கு நேரம் திட்டமிடுதலைப் போலவே)

நம் உடலில் எழுபது விழுக்காடு நீராலானதாகும். நாள் முழுவதும் பசித்து தாகித்து இருந்த நாம் நோன்பு துறக்க நம் அருமைத் தலைவர் அண்ணலார் (ஸல்) அவர்கள் காட்டியபடி, சிறு பேரீத்தம் பழங்கள், சிறிதளவு நீர் இவற்றால் நோன்பு துறத்தல் சிறப்பானதாகும். கூடுதல் உணவு தேவைப்படுவோர் நோன்புக் கஞ்சி போன்ற திரவு உணவு உட்கொள்ளலாம்.

ஸஹர் நேரத்தின்போது பால் பொருள்கள் (தயிர், மோர்) அதிகம் சேர்த்துக் கொள்வதால் செரித்தல் மிக மெதுவாக நடைபெறும். இதனால் நாள் முழுவதும் உணவின்மையால் உண்டாகும் களைப்பின் விளைவைக் குறைக்கலாம்.

நம் சமுதாயத்தில் காணப்படும் மிகக் கெட்ட பழக்கத்தையும் இங்குச் சுட்டிக் காட்டியாக வேண்டும். புகை பிடித்தல் உடலுக்குத் தீது என்று நாம் அறிவோம். நோன்பின்போது இதனை விட்டு விலகி இருக்கும் சகோதரர்கள் நோன்பைத் துறந்தவுடன் உடனடியாக பள்ளிக்குச் சென்று மக்ரிபு தொழுகிறார்களோ இல்லையோ, புகைபிடித்தலில் ஈடுபடுகிறார்கள். இது மிகவும் கவலைக்குரியது ஏனெனில், நோன்பிருந்தபோது தளர்ந்திருக்கும் சுவாசத் திசுக்கள் புகை பிடித்தலால் நிக்கோட்டினால் தாக்கப்படும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆரோக்கியமான வழியில் நோன்பு மேற்கொண்டு மனநலத்தில் மட்டுமின்றி உடல்நலத்திலும் சிறந்தவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக.

– ஆக்கம் : அபூஷைமா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.