ஹஜ்-2010 இணையவழி முன்பதிவுகள் இன்று முதல் துவக்கம்!

கத்தர் நாட்டிலிருந்து ஹஜ் செல்ல விரும்புவோர், தங்களது பயணத்திற்கானத் தயாரிப்புக்களை இந்த ஆண்டுமுதல் ஆன்லைன் மூலம் எளிமையாக முன்பதிவுகள் செய்வதற்கான ஏற்பாட்டினை கத்தர் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.


ஹஜ் யாத்திரைக்கான அமைச்சகம் (Ministry of Endowments and Islamic Affairs for the Hajj pilgrimage) இந்த ஏற்பாட்டினை மேற்பார்வை இடுகிறது. ஹஜ்-2010 பயணத்திற்காக விண்ணப்பிக்க விரும்புவோர், அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் www.hajj.gov.qa தங்கள் விபரங்களை அளித்து, முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வருட ஹஜ் பயணத்தின்போது, பயணிகளின் இருப்பிடத்தை, அவர்கள் கடந்து செல்லும் வழிகளையும் உடனக்குடன் கண்டறியத் தக்க  மைக்ரோ சிப் அடையாள அட்டைகள் ஹஜ் பயணிகளுக்கு இம்முறை வழங்கப்பட உள்ளன. இந்த சிப் கார்டு இல்லாத பயணிகள், சவூதியின் எல்லைப் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கத்தர் நாட்டு அமைச்சகத்தில் ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான பணிகளின் தற்காலிக இயக்குனராகப் பொறுப்பேற்றிருக்கும் அலி பின் முபாரக் அல்-ஃபைஹாமீ அவர்கள், கத்தர் நியூஸ் ஏஜென்ஸி(QNA)க்கு  நேற்று பேட்டியளித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் தேதி (08-09-2010) இந்த முன்பதிவுகள் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் நடைமுறையில் இருந்துவந்த, ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களிடம் நேரிடையாகச் சென்று முன்பதிவு செய்து கொள்ளும் சிரமம் இவ்வருடம் (1431 ஹிஜ்ரி)முதல் இருக்காது. ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பதாரர்களே முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பற்றிய பட்டியல் முதலில் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்தே விண்ணப்பதாரர்கள், தாங்கள் விரும்பும் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.  இது பயணிகளின் சிரமத்தைப் பெருமளவில் குறைக்கும். இதுநாள்வரை, அமைச்சகமே ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களை நியமித்திருந்தது. இந்த ஏற்பாட்டு முறைகள் தற்போது முற்றிலுமாக மாற்றியமைக்கப் பட்டுள்ளன என்றார் அலி பின் முபாரக் அல் ஃபைஹாமீ.

விண்ணப்பதாருக்கான கவனிக்க வேண்டிய சில விதிமுறைகள்:

  • ஹஜ் செல்ல விரும்பும் விண்ணப்பதாரர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கத்தரில் வசித்திருப்பவராகவும்

  • கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹஜ் கடமையை நிறைவேற்றாதவராகவும் இருக்க வேண்டும்.

  • ஹஜ் பயணத்திற்காக சவூதி நாட்டிற்குள் நுழைய, கத்தர் நாட்டின் குடியிருப்பு அனுமதி (residency permit) பெற்றவராகவும், தம் பொறுப்பாளர்(sponsor) அல்லது பணியாற்றும் நிறுவனத்திடமிருந்து அட்டிமுறிப்புச் சான்றிதழ் (no-objection certificate) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • ஹஜ்ஜுக்காக ஓர் ஆணுடன் பெண் சேர்ந்து பயணிக்க விரும்பினால் இருவருக்கிடையேயான  புனித உறவுமுறைக்கான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதை வாசித்தீர்களா? :   சிறுபான்மையினர் சந்திக்கும் சவால்கள்