உறைந்து கிடக்கும் கள்ள மெளனம்

டந்த 2013 ஜனவரி 26 ஆம் நாள். தந்தி தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து நிகழ்வில் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தொடர்பான விவாத அரங்கில் ஒரு கேள்வியை முன்வைத்தோம்.

“இலங்கையில் நடக்கும் ஈழப்பிரச்னையை முன் வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டால் அப்போது கருத்துச் சுதந்திரம் பேசுவீர்களா..?ஆப்கன் முஸ்லிம்களைப் பற்றி படம் எடுத்ததற்கு இங்குள்ள முஸ்லிம்கள் குமுறி எழுகின்றீர்கள் என்று கேட்கின்றீர்கள். விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்திரித்து படம் எடுக்கப்பட்டால் இங்குள்ள தமிழர்கள் குரல் கொடுக்க மாட்டார்களா..? அப்படிக் குரல் எழுப்பும்போது இலங்கையிலுள்ள தமிழர்களைப் பற்றி படம் எடுத்தால் இங்குள்ள தமிழர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? என்று கேட்பீர்களா?” அப்போது நாம் எழுப்பிய இந்த வினாவிற்கு நிகழ்வில் பங்கேற்ற ரமேஷ் கண்ணாவும், டெல்லி கணேஷும் பதிலளிக்காமல் போக்குக் காட்டினார்கள்.

விவாதத்திற்காக நாம் எழுப்பிய வினா இப்போது ‘மெட்ராஸ் கஃபே’ என்ற பெயரில் ஹிந்தி திரைப்படமாக வெளிவந்துள்ளது. சுஜித் சர்க்கார் இயக்கத்தில் ஜான் ஆப்ரஹாம் நடித்த இத் திரைப்படம் ஈழத்தைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என படம் பிடித்துக் காட்டியுள்ளது ‘மெட்ராஸ் கஃபே’. தம்பி பிரபாகரன் அண்ணன் பாஸ்கரன் பாத்திரமாக வருகிறார். எல்.டி.டி.இ இயக்கம் எல்.டி.எஃப் என மாற்றப்பட்டிருக்கின்றது.

விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் கருத்துச் சுதந்திரம் முழங்கிய கருத்துப் போராளிகள் அனைவரும் சொல்லிவைத்தார்போல ‘மெட்ராஸ் கஃபே’ படத்தைத் தமிழகத்தில் திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர். விஸ்வரூபம் இடத்தில் இன்று மெட்ராஸ் கஃபே. அமெரிக்காவிற்குப் பதில் இந்தியா. ஆப்கானிஸ்தானிற்குப் பதில் ஈழம்.  அல்கொய்தாவிற்குப் பதில் விடுதலைப் புலிகள். ஆனால் அதே கருணாநதிதான் இப்போதும்! அதே இராமதாசுதான் இப்போதும்! அதே பாரதிராஜா, அதே ரமேஷ் கண்ணா, அதே செல்வமணி, அதே திரைக் கலைஞர்கள்தான், அதே நடுநிலை தவறாத ஊடகங்கள்தான். அனைவரும் கருத்துச் சுதந்திரம் குறித்து ஓலமிட்டவர்கள் இப்போது ஒப்பாரி வைக்கின்றார்கள். அல்லது கள்ள மெளனம் சாதிக்கின்றார்கள்.

விஸ்வரூபத்தை முன்வைத்து எழுப்பப்பட்ட அத்தனை கேள்விகளும் ‘மெட்ராஸ் கஃபே’க்கு கச்சிதமாகப் பொருந்திப்போகின்றன. அப்போது ஆம்! என்று சொன்னவர்கள் இப்போது “இல்லை” எனக் கூசாமல் பேசுகின்றனர். ‘அதுவந்து அது…அதுக்கும் இதுக்கும் மெல்லிய வித்தியாசம் இருக்கு; அது அப்படி இது இப்படி இல்ல; அது வேற இது வேற இது வரலாற்றைத் திரிக்கும் செயல்’ என்று ஏதேதோ உளறுகிறார்கள். உடைந்த பானை ஒன்றுதான். அன்று மருமகள் கையிலிருந்து தவறியதால் அது பொன்குடம். இன்று போட்டுடைத்தது மாமியாரல்லவா.. அதனால் அது மண்குடம் அவ்வளவுதான்.

‘ஒரு திரைப்படத்தை சென்சார் அனுமதித்த பிறகு அதைத் தடை செய்யக் கோருவது எவ்வகையில் நியாயம். அப்போ சென்சாருக்கு என்ன வேலை?’ என்று கேள்வி எழுப்பியவர்கள் இப்போது சுய நினைவோடுதான் உள்ளார்களா..? ஆம் என்றால் சென்சார் அனுமதித்த மெட்ராஸ் கஃபே யைத் தடைசெய்யச் சொல்வது ஏன்?

இதை வாசித்தீர்களா? :   அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! அருந்ததி ராய்!!

‘ஒரு படத்தை திரையிட்டுப் பார்த்தபின்னர்தான் அது குறித்துப் பேசவேண்டும்.அதை வரவிடாமல் செய்தால் எப்படிக் கருத்துச் சொல்லமுடியும்?’ என்று குரலெழுப்பிய அறிவுஜீவிகள் இப்போது எங்கேதான் போய்விட்டார்கள்? மெட்ராஸ் கஃபே-யை ஓட்டிப்பார்த்துவிட்டுப் பேசுவோமா?

‘அண்டை மாநிலங்களில் விஸ்வரூபம் பிரச்னையில்லாமல் ஓடிக்கொண்டிருக்க தமிழகத்தில் மட்டும் அப்படி என்ன வாழுதாம்?’ என்று பேசியும், எழுதியும் வந்த ஞானவான்கள் இப்போது என்ன ஆனார்கள்? தமிழகத்தைத் தவிர மெட்ராஸ் கஃபே பிற மாநிலங்களில் ஓடிக்கொண்டுதானே இருக்கிறது…! ‘இது ஹிந்திப் படம் அது தமிழ்படம் அதனால…’ என்று உணர்ச்சிவசப்பட்டு உளறுபவர்களே.. ‘தலைவா’ என்ற திரைப்படம் பிற மாநிலங்களில் ஓடிக்கொண்டிருக்கும் போது தமிழகத்தின் திரையங்கக் கதவுகள் மூடிக் கிடந்தனவே… அய்யா.. கருத்துப் போர் மறவர்களே, எங்கே இருக்கின்றீர்கள் நீங்கள்?

‘கோடிக்கணக்கில் பணம்போட்டு விட்டு ஒரு திரைக்கலைஞன் இவ்வளவு நெருக்கடிக்கு ஆளாகும்போது நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது’ என்று கமலின் வீட்டிற்குப் படை எடுத்த தமிழ்த் திரையுலக நியாயவான்களே…விஜய் ஒரு திரைக்கலைஞன் இல்லையா? அல்லது தலைவா செலவே இல்லாமல் எடுக்கப்பட்டதா..? ‘வீட்டை விற்கப்போகிறேன். வேறு நாடு தேடிப்போவேன்’ என்று கமல் அளவுக்கு ஓவர் ஒப்பாரி இல்லை என்றாலும் விஜய் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கை கட்டி நின்று கலங்கியபோது உங்களுக்கு உரைக்கவில்லையா..?

‘படைப்புச்சுதந்திரம் ஒரு கலைஞனுக்கு வழங்கப்படவில்லை என்றால் எதை வைத்துத்தான் படம் எடுப்பது?’ இது நீங்கள் எழுப்பிய வினாதானே..! தலைவா வில் ஒற்றை வாசகத்தை நீக்கச் சொன்னபோது இந்தக் கேள்வியை மீண்டும் எழுப்பும் திராணி ஒருவருக்குக் கூடவா இல்லை..!

தனக்கு ஒரு சங்கடம் என்றதும் அழுதும், புலம்பியும், நடித்தும், துடித்தும், ஓயாது ஓடிய கமல் தலைவா விவகாரத்திலும் மெட்ராஸ் கஃபே விசயத்திலும் ஏதாவது மூச்சு விட்டாரா என்ன? உலக நாயகனே…. இப்போது நடப்பதையும் கலாச்சார பயங்கரவாதம் என்று சொல்லலாமா…?

‘யாரங்கே வாய் திறப்பது.. நாம் வாய்திறந்தால் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்று ஆகிவிடாதா.. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஏணடா உளருகின்றீர்கள். மைண்ட் யுவர் பிஸ்னஸ் தமிழ் பீப்பிள்ஸ். வரட்டுமே மெட்ராஸ் கஃபே…’ என்று சொல்லுவதற்குப் பாரதிராஜா இருக்கின்றார்தானே… எங்கேதான் அவர்?

‘ஒரு படத்தைத் தடை செய்யக் கோருவதன் மூலம் அந்தப் படத்திற்கு நீங்களே விளம்பரம் தேடித் தந்துவிடுகின்றீர்கள் இல்லையா.. நீங்கள் அமைதியாக இருந்தால் அது வந்த இடமும் போன இடமும் தெரியாமலாகிவிடும்தானே’ என வினா எழுப்பிய தொலைக்காட்சித் தொகுப்பாள சிகாமணிகளே…இப்போதுகூட ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இதே கேள்வியைக் கேட்கலாம் இல்லையா…?

‘திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பில்லை என்பதற்காக ஒரு திரைப்படத்தையே தடைசெய்வது நியாயமா?’ என்றெல்லாம் அரசியல் விமர்சனம் பேசும் நடு நிலையாளர்களே…! தலைவா திரையிட்டால் திரையரங்குகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற இல்லாத மிரட்டல் எழுந்தபோது நீங்கள் ஆழ் நிலை தியானத்தில் அமிழ்ந்து கிடந்தீர்களா என்ன?’

இதை வாசித்தீர்களா? :   ஊடகங்களில் தொடரும் தனிமனிதத் தாக்குதல்கள்

‘இந்த பாய்மார்களே இப்படித்தான்..! என்ன இவர்களைப் பற்றி படம் எடுக்கவே கூடாதாக்கும். படம் எடுத்தா ஓட விடமாட்டாங்களாமே’ என பேருந்திலும், டீக்கடைகளிலும், கூடுமிடங்களிலெல்லாம் முணுமுணுத்துத் திரிந்த என் அப்பாவி பொதுஜனங்களே…! தலைவா படம் ஏன் தடை செய்யப்பட்டது? என்னதான் நடந்தது..? எதைத்தான் நீக்கித் தொலைத்தார்கள்? அது யாருக்கெதிரான வாசகம். அப்டியெல்லாம் சொன்னா குத்தமாயிடுமா…? எந்தக் கேள்வியுமே இல்லாமல் உங்களாலும் இருக்க முடிந்ததே எப்படி என் மகா ஜனங்களே….!

ஏன் இந்த மயான அமைதி? எதனால் இந்தக் கள்ள மெளனம்? எப்படி உருவானது இப்படியொரு நிசப்தம்? ஒரேயொரு காரணம்தான். இஸ்லாம் தொடர்பான விவகாரமென்றால் எல்லாருக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரி. அன்று கமலுக்கு ஆதரவாகவா இவர்கள் பேசினார்கள்? கருத்துச் சுதந்திரத்திலா இவர்களுக்கு இவ்வளவு அக்கறை? இல்லவே இல்லை. இஸ்லாத்தை இழிவு படுத்தியும், முஸ்லிம்களை தவறாகச் சித்திரித்தும் பேசுபவர்களுக்கு வக்காலத்துப் பேசியவர்கள் கருத்துச் சுதந்திரப் போர்வையைப் போர்த்திக் கொண்டார்கள் அவ்வளவே…! தலைமை தாங்கும் நேரமிது என்று கமல் படம் எடுத்து அதற்கு ஒரு சிக்கல் என்றால் இதே கமலஹாசன் ‘நான் இந்த உலகத்தில் வாழவிரும்பல வேறு உலகம் தேடிப் போகிறேன்’ என்று கதறினாலும் அப்போதும் இதே மெளனம்தான் நிலவும். விஜய்க்கு ஏற்பட்ட அதே நிலைதான் கமலுக்கும்.

நாம் அடுத்தவனைத் தாக்கினால் அது கருத்துச் சுதந்திரம். நம்மை யாரவது தாக்கினால் அது வரலாற்றுத் திரிபு’ இது அமெரிக்க ஏகாதிபத்தியம் சொல்லித்தந்த இரட்டை நிலைச் சூத்திரம். இஸ்லாமியர்கள் குறித்த அவதூறுச் செய்தி தலைப்புச் செய்தியாக வரும். அது தவறான செய்தி என்ற உண்மைச் செய்தி பெட்டிச் செய்தியாய் எட்டாம் பக்க மூலையில் வரும். எப்போதாவது நிகழ்ந்தால் அது விபத்து. எப்போதும் இப்படியே நிகழ்ந்தால் அது சூழ்ச்சி. வன்மம். சதி. அதைத்தான் இந்தகைய மெளனங்கள் உலகிற்கு உரத்துச் சொல்கின்றன.

(வி.எஸ். முஹம்மது அமீன்)
நன்றி: சமரசம் 16-30 செப்டம்பர் 2013

தொடர்புடைய சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்கள்:

முஸ்லிம்களின் விஸ்வரூபம்

அப்பாவிகளைக் குறிவைக்கும் துப்பாக்கி!

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில்…

இஸ்லாத்தை எழுதுதலும் கருத்துச் சுதந்திரமும் – அ. மார்க்ஸ்

தோற்றுப் போனவர்களின் ஈன சுரம் (Innocence of Anti Muslims)

கிழிந்து தொங்கும் கருத்துப் போலிச் சுதந்திரம்!