ஓர் இலட்சியப்பெண்ணின் காலடித்தடங்கள்…

டாக்டர் மாரியா மஹ்மூத் அவர்கள்
Share this:

சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2007ஆம் ஆண்டுக்கானக் கட்டுரைப் போட்டியில் சகோதரியருள் முதல் பரிசை வென்ற ‘இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்‘ என்ற கட்டுரையை வடித்தளித்த சகோதரி சமீலா யூஸுஃப் அலீ (ஹயா ரூஹி) அவர்கள் இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி பெண்கள் அணியின் ஊடகப் பிரிவுக்காக, மலேஷிய இஸ்லாமியக் கட்சி (PAS)யின் மேல்மட்ட மத்திய சபை உறுப்பினரும் மலேஷியப் பாராளுமன்ற உறுப்பினருமான Dr. மாரியா மஹ்மூத் அவர்களை நேர் கண்டு 22 மே 2008இல் பதிவு செய்திருக்கிறார். அந்த நேர்காணலிலிருந்து …

 

இலங்கை ஜமா அதே இஸ்லாமி பெண்கள் அணியைச் சந்திப்பதற்காக தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு, தன் துணைவருடன் இலங்கை வந்திருந்த Dr மாரியா மஹ்மூத் அவர்களை மெல்லியதாகப் பனிதூவும் இளங்காலைப் பொழுதொன்றில் மாவனல்லையில் சந்தித்தோம்.

 

சகோதரி மாரியா அவர்கள் PAS எனப்படும் Islamic party of Malaysia வின் மத்திய சபை உறுப்பினர். மலேசியப்பாராளுமன்ற அங்கத்தவர். IMWU எனப்படும் சர்வதேச முஸ்லிம் பெண்கள் ஒன்றியத்தின் பிரதி பொதுச்செயலாளர். தொழிலால் ஒரு மருத்துவர். ஆறு பிள்ளைகளின் தாய்.

 

இவரது கணவர் ஒரு கண்,காது,மூக்கு அறுவைச்சிகிச்சை நிபுணர்.

மென்மையான புன்னகை.

கண்ணை உறுத்தாத வர்ணத்தில் ஹிஜாப் உடை.

ஆர்பாட்டமில்லாத அழகிய ஆங்கிலம்.

தெளிவும் தீர்க்கமும் மிக்க கருத்துகள்.

காண்போரை ஒரே வினாடிக்குள் ஈர்த்துக் கொள்ளும் ஆளுமை.

இது தான் டொக்டர் மாரியா மஹ்மூத்.

 

ஒரு மனிதனை வடிவமைப்பதில் குழந்தைப் பருவத்தின் பங்களிப்பு மகத்தானது. எவ்வாறான ஒரு குழந்தைப் பருவம் உங்களுக்குக் கிடைத்தது என்பதை அறிய ஆவலாயிருக்கிறோம்.

 

நான் ஒரு பிடிவாதமான குழந்தை (சிரிக்கிறார்). எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே என் பெற்றோர் பாஸ் கட்சியின் தீவிர அங்கத்தவர்கள். தந்தை ஓர் ஆசிரியர், எனது தாய் மிகக் கண்டிப்பானவர். நாங்கள் முழுமையான இஸ்லாமியச் சூழலில் வளர்க்கப்படோம். ன் அன்னை அந்தக் காலத்திலேயே முழுவதும் மூடிய ஹிஜாப் அணிவார். அவர் என்னை ஹிஜாப் அணியுமாறு சொல்லும் போதெல்லாம் பிடிவாதமாய் மறுப்பேன். நான் தொழுவது வழக்கம். ஏனென்றால் என் தாய் கூறுவார்அல்லாஹ்விடம் எதையாவது கேட்க வேண்டுமென்றால் தொழுது கேட்டால் தான் கிடைக்கும்” என்று. எனக்கு அதிகமான விடயங்கள் தேவைப்பட்டதனாலேயே நான் தொழுகையைத் தொடர்ந்தேன்.

 

இஸ்லாத்தை நோக்கியத் திருப்பம் எவ்வாறு நிகழ்ந்தது?

 

எனக்கு 15-16 வயதிருக்கும்போது ஒரு கோடைகால முகாமிற்கு(summer camp ) செல்லக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அதை ஏற்பாடு செய்த அமைப்பில் அன்வர் இப்ராஹீம் அவர்களும் இருந்தார்கள் என்று நினைக்கிறேன். என் வாழ்வில் மகத்தா திருப்புமுனை அதுதான்(உணர்ச்சி வசப்படுகிறார்). உண்மையான இஸ்லாம் என்றால் என்ன? நான் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்தது அங்குத்தான். தொழுகையில் ஓதும் தூய வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்ததும் அப்போதுதான். ஒவ்வொரு முறை நான் தொழும் போதும் நான் அழுகிறேன். (சில மணித்துளிகள் உடைந்து அழுகிறார்……….) இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம் (இறைவா நேரான பாதையைக் காட்டுவாயாக) என்ற வாசகத்தை என் நாக்கு உச்சரிக்கும் போதெல்லாம் அழுகையை என்னால் அடக்க முடிவதில்லை. பெண்கள் பாடசாலையில்தான் படித்தேனென்றாலும் அல்லாஹ்வின் மீது கொண்ட அச்சம் காரணமாக ஹிஜாப் அணிந்து சென்றேன்.

 

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நாங்கள் இரண்டே பேர் தான் ஹிஜாப் …(திரும்பவும் விழியில் நீர் ததும்பத்தொடங்குகிறது) மற்ற மாணவிகள் எங்களைக் கேலி செய்தார்கள்சிரித்தார்கள். நான் தைரியத்தை இழக்கவில்லை. அது மிகவும் கஷ்டமான காலம். ஆனால், நான் சந்தோசமாயிருந்தேன். பின்னர் சாதாரணதரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப்பெற்றேன்.அல்ஹம்துலில்லாஹ். எகிப்தின் கெய்ரோ பல்கலைக்கழகத்திற்கு ருத்துவம் பயிலச் செல்வதற்கான புலமைப் பரிசு அப்போதே என்னை வந்தடைந்தது.

 

பல்கலைக்கழக வாழ்வு உங்களை செதுக்கியதா அல்லது சிதைத்ததா?

 

கெய்ரோ பழமையும் புதுமையும் கலந்த ஒரு நகரம். பல்கலைக்கழகத்தில் பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். இஸ்லாத்தை பின்பற்றத் தடைகள் இருக்கவில்லை. அப்போதுதான் என் கணவர் என்னைச் சந்தித்தார். என்னைக் குறித்த அவரது விருப்பத்தைத் தெரிவித்தார். எனக்கு அப்போது வெறும் 18 வயது தான். அவருக்கு 19 வயது. அவர் மற்ற ஆண்களை விடக் கொஞ்சம் நல்லவராக எனக்குத் தெரிந்தார். என் மனதில் காதல் என்ற ஒன்றே கிடையாது. நான் சரி, ஆனால் எனது கல்வி முடியும் வரை உங்களைச் சந்திக்கவோ உங்களோடு பேசவோ முடியாதுஎன்று கூறினேன்.நாம் வீடு சென்று பெற்றோருடன் பேசுவோம்என்று அவர் அபிப்பிராயப்பட்டார். ன் தந்தை மிகவும் கண்டிப்பானவர். ஆனால் திறந்த மனதுடையவர். விடயம் கேள்விப்பட்டதும் என் பெற்றோர் நாங்கள் உடனடியாகத் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தார்கள். இஸ்லாம் மிக இலகுவானது. அல்லாஹ்வின் திருப்தியே எல்லாவற்றினதும் பின்னணி என்பதை என் தந்தை எனக்குப் புரிய வைத்தார். பல்கலைக்கழக மூன்றாவது ஆண்டில் எனது மகள் பிறந்தாள். அடுத்த ஆண்டு இன்னுமொரு மகன். வாழ்க்கை மிகவும் ஓய்வின்றிக் கழிந்தது. பல்கலைக்கழகத்தில் கல்வியை விடுத்து எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட என்னால் முடியாமல் போனது. குழந்தைகளுக்கு கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டதால் மருத்துவராக அல்லாது மருத்துவக் கல்லூரியொன்றில் 8 மணி முதல் 4 மணி வரை விரிவுரையாளராகப் பணியாற்றினேன்.

 

உங்கள் அரசியல் நுழைவு திட்டமிடப்பட்டதொன்றா அல்லது தற்செயலானதா?

 

PAS இரண்டு தளங்களில் செயற்படுகிறது:

1 தஃவா

2அரசியல்

பாஸின் முஸ்லிமா பிரிவுக்கு (Muslimah wing) என்னாலான பங்களிப்பைச் செய்வதற்காகத்தான் கட்சிக்குள் நுழைந்தேன். தலைமைத்துவத்தில் நான் இருக்கவுமில்லை. அரசியல் பற்றி எதுவுமே அறிந்திருக்கவுமில்லை. அதைப் பற்றிய ஆர்வம் கூடக்கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான் நிறைய நிர்வாகப் பயிற்சிகளைப் பெற்றிருந்ததும் நிறுவன ரீதியான திறன்களோடிருந்ததும் முஸ்லிமா பெண்களின் திறன் விருத்தி பயிற்றுவிப்பாளராக இருந்ததும் பின்னாளில் அரசியலுக்கு கட்சி மேல்மட்டம் என்னை உந்துவதற்கு வாய்ப்பளித்திருக்கலாம். எது எப்படியாயினும் தலைமைத்துவம் ஒரு பணியைக் கட்டளையிட்டால் எம்மால் அதைச் செய்ய முடியாது என்று மறுக்க முடியாது. இப்படித் தான் என் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.

 

உங்கள் அரசியல் நகர்வை உங்கள் துணைவர் எப்படி எடுத்துக்கொண்டார்?

 

ன் கடைசிக் குழந்தையும் பாடசாலை சென்ற பின்னரே அரசியலுக்குள் நான் காலடி வைத்தேன். தொழிலையும் ராஜிநாமா செய்து விட்டு முழு நேர இஸ்லாமியப் பணியில் என்னை இணைத்துக் கொண்டேன். ன் கணவரின் உற்ற தோழி நான்தான். அவருக்கு என்னைத் தவிர வேறு நெருங்கிய நண்பர்கள் கிடையாது. அவர் முழுமையாக என்னில் தங்கியிருந்தார். அவர் வீட்டை முற்றாகச் சார்ந்த ஓர் ஆளுமை. கணவரின் அனைத்து வேலைகளையும் நானே என் கைப்படக் கவனிப்பேன். அவரது குடும்ப வியாபாரத்திலும் நான் முழுமையாகக் கைகொடுத்து வந்தேன். நான் ஜமாஆவில் இணைவதற்கும் அவரது ஆதரவு இருந்தது. எனினும் எல்லாவற்றிக்கும் நான் இல்லாத குறை அவரை மிகவும் பாதித்தது. சொகுசுகளை இழக்க வேண்டியும் சில விடயங்களிற்கு இயைந்து போக வேண்டிய நிர்பந்தமும் அவருக்கு ஏற்பட்டது. எனினும் கடந்த இரு வருடங்களாக மிகவும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்கிறார், அல்ஹம்து லில்லாஹ்!

 

இலங்கைக்கு வந்திருப்பது இது தான் முதல் முறையா?

 

ஆம்

 

இலங்கையைப்பற்றி உங்களுடைய உள்ளம் என்ன சொல்கிறது?

 

இலங்கையின் காலநிலை மலேசியாவுடையது போலவே இருக்கிறது. மழை அதிகமாகப் பொழிகிறது. பழங்களின் வகைகளைப் பார்க்கும்போது பிரமித்துப்போய் விடுகிறேன். வாழைப்பழத்தில் மட்டுமே எத்தனை வகை? மாவனல்லை மிக அழகான இடம்; எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

 

இலங்கைப்பெண்களைப் பற்றிய உங்களது கருத்து என்ன?

 

உண்மையில் எனக்கு அதிகமான இலங்கைப் பெண்களைச் சந்திக்கக் கிடைக்கவில்லை. இலங்கை ஜமாஅதே இஸ்லாமி பெண்கள் அணியைச் சார்ந்த சகோதரிகளையே நான் அதிகம் சந்திக்க நேர்ந்தது. வித்தியாசமான பெண்களின் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டேன். அவர்கள் அதிர்ந்து பேசாத மென்மையான இயல்பைக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒரு பெரிய குழுவினராக இருக்கிறோம். நீங்கள் ஒரு சிறிய குழுவினராக இருந்து கொண்டு செய்யும் பணிகளைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது, அல்ஹம்து லில்லாஹ்!

 

வரலாறு நெடுகிலும் பெண்கள் மென்மையானவர்களாகவும் இளகிய சுபாவம் உடையவர்களுமாகவே நோக்கப்பட்டு வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். அரசியல் என்பது அதிகாரமும் உறுதியும் தேவைப்படுகின்ற ஒரு துறை. இதை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள்?

 

இந்தக்கருத்தை நான் ஏற்க மாட்டேன். பெண்கள் எப்போதும் மென்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. இஸ்லாத்தைப் பிழையாக விளங்கியதால் வந்த விளைவு இது. வாழ்க்கையை நோக்கினால் ஒருபெண்ணுக்கு மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய கட்டங்கள் போலவே கடுமையா நடந்து கொள்ள வேண்டிய தருணங்களும் வருகின்றன. முக்கியமாக அந்திய ஆண்களுடன் மென்மையாக நடந்து கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை. வயதானவர்களிடமும் குழந்தைகளிடமும் மிக மென்மையாகப் பழக வேண்டும். ஆனால் சில இடங்களில் நாம் உறுதியுடனும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருப்பது அவசியம். எனது மென்மையை நான் என் கணவருக்காக ஒதுக்கியுள்ளேன். அவருடன் நான் இருக்கும் போது மிக மென்மையான பெண். ஆனால் நான் ஒரு சபையில் இருக்கும் போது உறுதியாக இருந்து என் கருத்துகளை தைரியமாக வெளியிடுவேன்.

 

எல்லாப் பெண்களும் பொருளாதார ரீதியான சுதந்திரம் பெற்றிருக்க வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

 

ஆம், நிச்சயமாக. இஸ்லாத்தில் பெண்ணின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு ஆணைச் சார்ந்தது என்பது உண்மைதான். எனினும் இன்றைய உலகில் அவ்வாறு நடப்பதில்லை என்பதும் அதை விட உண்மை. எல்லாப் பெண்களும் வெளியில் போய் வேலை செய்ய வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் அவளுக்கானப் பொருளாதார வாழ்வாதாரம் வேண்டும். தன்னுடைய சொந்தக் கால்களில் சுயமாக நிற்கக்கூடிய துணிவு அவசியம். உங்களின் கணவர் உங்களை விட்டுப் பிரிவது அல்லாஹ்வின் நாட்டமாக் இருக்கலாம்; அல்லது அவரது மனம் மாறலாம். எதிர்காலத்தைப் பற்றி ஒன்றும் எம்மால் கூறமுடியாது. அப்படிப் பட்ட இக்கட்டான கட்டங்களில் யாரையும் சார்ந்து நில்லாது குடும்பத்தைக் கொண்டு செல்லக் கூடியப் பொருளாதார பலமும் மனோ வலிமையும் பெண்ணுக்குத் தேவை. வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தே வியாபாரத்தில் ஈடுபடலாம். நாம் அனைவரும் நமது உரிமைகள் யாவை என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கானவை; உங்கள் துணைவரிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கும் அவருக்கும் சொந்தமானவை. உரிமைகள் பொறுப்புகளோடு சார்ந்தவை என்பதையும் நாம் மறக்கக்கூடாது. பொருளாதாரச் சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு அத்தியாவசியம் என நான் நினைக்கிறேன்.

 

காலம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற ஒரு யுகத்தில் நாம் இருக்கிறோம். அதிகமான பெண்கள் மன அழுத்தம் (stress )பற்றி முறையிடுகிறார்கள். ர் அன்பான மனைவியாக, அணைக்கின்ற தாயாக, உடல் நலம் பேணும் மருத்துவராக, பாரளுமன்ற அங்கத்தவராக நீங்கள் பல பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நிர்வகிக்கும் ஒரு பெண்மணி. உங்கள் வாழ்க்கையில் மனஅழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

 

முதலில் உங்கள் மனதில் உள்ளதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க தயங்கக்கூடாது. மனதுக்குள் குமையும் எண்ணங்களை உள்ளுக்குள் அடக்கி வைப்பதால் இரத்த அழுத்தம் எகிறுகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது. மனதுள் நினைப்பதை அப்படியே தெரிவித்து விடுங்கள். நான் என் வாழ்வில் முதலில் அதைத்தான் செய்கிறேன். திட்டமிட்டு ஒழுங்கு படுத்தல், முன்னுரிமைப் படுத்தல் இவை இரண்டின் அடிப்படையிலும் என் பணிகளை மேற்கொள்கிறேன், அல்ஹம்துலில்லாஹ!

 

இஸ்லாமிய ஆட்சியை நோக்கிய பயணத்தில் ( Mass media) தொடர்பூடகங்களின் பங்களிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

 

மிக முக்கியமானது. மீடியா ஒரு சக்தி. நாம் இதனை கவனமாகவும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் வினைத்திறனுடனும் கையாள வேண்டும். பொது உரை அல்லது ஒரு நேர்காணலை வழங்கும் நாம் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து நடக்க வேண்டும். மீடியாவின் நவீனப் போக்குகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ளவதும் நமக்கென தனி மீடியாக்களை உருவாக்குவதும் நாம் செய்ய வேண்டிய பணிகளாகும்.

 

உங்களைப் போன்ற வெளிநாட்டுப் பெண் ஆளுமைகளை வரவேற்று சிலாகிக்கின்ற மது அதே ஆண் சமூகம் தமது பெண்களின் ஆளுமையையும் வெளிப் பிரவேசத்தையும் வரவேற்க இன்னும் பூரணமாகத் தயாராகவில்லை. இது பற்றி….

 

இது மிகவும் நிதர்சனமான கருத்து. பாரம்பரிய பழைமைவாதச் சிந்தனையிலிருந்து ஆண்களும் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.மது சமூகத்தில் 50% ஆனவர்கள் பெண்கள். அல்லாஹ்வின் முன்னிலையில் ஆண்களும் பெண்களும் சமமானவர்கள். ஆனால் ஆண்கள் தாம் சமூகப்பணிகளில் துடிப்போடு செயற்படுவதையும் அதற்கு ஒத்துழைப்பதே மனைவியரின் கடமை என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆண்களைப் போலவே பெண்களிலும் தலைவர்கள் உண்டு. எனினும் ஆண்கள் எப்போதும் பெண்களை வழிநடாத்துபவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். பெண்களின் திறமையை ஏற்றுக்கொண்டாலும் அவர்களை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் போக்கு ஆண்களிடம் காணப்படுகிறது.

 

இந்தப் போக்கு மாற்றமுற வேண்டுமாயின் எவ்வாறான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

 

ஆண்கள் அதிலும் குறிப்பாக அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோர், பெண்களைத் தங்களுக்கு சமமாக மதிக்க வேண்டும். பெண்களுடைய விடயங்களை ஓரக்கண்கொண்டு பார்க்காது நடுநிலையுடன் அணுக வேண்டும். சிலர் நாங்கள் பெண்களைப் பயிற்றுவிக்கிறோம் என்று இன்னும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்பயிற்றுவிக்கக்கூடிய திறமையுள்ள பெண்கள் இருப்பதையே மறந்து. இலங்கையிலுள்ள எந்த இஸ்லாமிய இயக்கத்திலும் அதிஉயர்மட்ட முடிவெடுக்கும் குழுவில் பெண்கள் இல்லை. இதனை நான் ஒரு பெரும் குறையாகக் காண்கிறேன். இது நிறுவனத்தின் சமநிலையைப் பாதிப்பதாகும். ஆண்கள் தவறு செய்தால் பெண்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்கக் கூடாது.. இது ரசூலுல்லாஹ்வின் வழிமுறை. சில பெண்கள் ஆண்களை விட அழகான கருத்துடையவர்களாக, திறமையான நிர்வாகிகளாக இருக்கக் கூடும். இஸ்லாமிய இயக்கம் இதை விளங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் ஈகோ பார்ப்பது இஸ்லாமல்ல.

 

உங்களுடைய இயக்கத்திலும் இந்த நிலை காணப்படுகிறதா?

 

நான் ஒரு வட்ட மேஜையில் கலந்துரையாடலுக்காக உட்காரும்போது என்னை, கருத்து வெளியிடக் கூடிய ஒருவராகத்தான் எண்ணிக் கொள்கிறேன்;  ஒரு பெண்ணாகவல்ல. எமது அமைப்பிலும் சில வருடங்களுக்கு முன்னர் இதே நிலை காணப்பட்டது. எமது ஆண்கள் எதிர்கட்சி தலைவியுடன் ஒரே மேசையில் உட்கார்ந்து பேசுவார்கள். எமது பெண்கள் ஒரமாக வைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. அல்ஹம்து லில்லாஹ், இப்போது அந்நிலை மாறியிருக்கிறது. எமது அதியுயர் மட்ட சூறாவில் பெண்களும் அங்கத்துவம் வகிக்கிறார்கள்.

 

இறுதியாக எமது முஸ்லிம் பெண்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

 

உங்களது அறிவையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள். பொறுப்புகளை எடுக்கக்கூடிய தகுதியையும் ஆளுமையையும் உங்களில் ஏற்படுத்துங்கள். உங்கள் குடும்பத்தைப் பற்றி எல்லை மீறிக் கவலைப்பட வேண்டாம். நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் பயணிக்கும் போது, அல்லாஹ் எமது குடும்பத்தைக் கவனித்துக்கொள்வான்.

 

சகோதரி மாரியா இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாபுடன் நடத்தும் இறைநெறிப் போராட்டத்துக்குச் சிறந்த ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் பிரிய மனமின்றி நமது நாளைய நகர்வை நோக்கிய சிந்தனைகளுடன் விடைபெற்றோம்.

 

-ஷமீலா யூஸுஃப் அலி.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.