பிப்ரவரி 14 – ஆபாசதினம்!

Share this:

வ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) ‘காதலர் தினம்’ கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும். 14 பிப்ரவரியன்று ‘காதலர் தினம்’ நாடு முழுதும் கொண்டாடப்பட்ட இலட்சணம், மறுநாள் நாளிதழ்களில் வெளியாகும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளம் தலைமுறை மிகப் பெரிய சொத்தாவர். எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை சிறந்ததாக அமைய அவர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் உயர்ந்ததாக அமைவதில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அரசுகளின் கடமையாகும். வளரும் பருவத்தில் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் பாதையே அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் தரத்தினை நிர்ணயிக்கிறது.

ஆனால், நாகரீகத்தின் உச்சியில் உள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இக்காலத்தில் பிள்ளைகளின் வாலிபப் பருவம் என்பது அவர்களின் பெற்றோரைத் தீக்கணலில் நிற்க வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின் முன்னேற்றத்தால் கண்டுபிடிக்கப்பட்டப் பல நவீன உபகரணங்கள், புதிய தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்திலும் இளம் தலைமுறையைச் சீரழிக்கும் அனைத்து அம்சங்களும் கலந்து காணப்படுகின்றன.

இவற்றில், இந்தப் பிப்ரவரி 14 ஆம் நாளைக் கொண்டாடுவதற்குச் சூட்டப்பட்ட நாமகரணமும் ஒன்று. ஆசிரியர்களைக் கவுரவிக்க ‘ஆசிரியர் தினம்’, தாய்மார்களைக் கவுரவிக்க ‘அன்னையர் தினம்’, சுற்றுப்புறச் சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்த ‘சுற்றுப்புறச் சூழல் தினம்’ என ஓராண்டில் கிட்டத்தட்டப் பாதி நாட்களுக்கு ஒவ்வொரு பெயரிட்டு நினைவு கூர்வதற்கு இடையில், காதலர்களை மகிமைப் படுத்தக் ‘காதலர் தின’மாம்!

பொதுமக்களுக்குத் தீமை விளைவிக்கக் கூடியது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் “புகை பிடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!” முத்திரையுடன் புகைப்பொருட்களை விற்கவும் தனி மனிதனுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சாபக்கேடானது என நன்றாகத் தெரிந்திருந்தும் “பார் வசதியுடன் கூடிய மது விற்பனைச் சாலைகளை” அரசே நடத்த ஏற்பாடு செய்தும் சமூக வாழ்வையே சீர்குலைக்கக்கூடிய மிகப்பெரிய உயிர்க்கொல்லி வைரஸ் தொழிற்சாலை எனத் தெரிந்திருந்தும் ‘ரெட் லைட் ஏரியா’ என்ற பெயரில் லைசன்ஸ் கொடுத்து விபச்சாரம் செய்யவும் அனுமதி வழங்குகின்ற “மக்களைப் பாதுகாக்கும்(?) அரசு”கள்.

“என் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்” என்ற எதிர்பார்ப்புடன் தன் பிள்ளைகளின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோர்கள்தாம் இவ்விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு மட்டுமின்றி, பண்பாட்டைப் பேணுகின்ற எந்தக் கலாச்சாரத்துக்கும் எவ்வகையிலும் ஒவ்வாத இந்த ஆபாச தினச் சிந்தனையில் உள்ள தீமைகளைக் குறித்த போதிய அறிவு பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பள்ளிப்பருவத்தையும் விட்டு வைக்காத இந்தக் கேடுகெட்ட கலாச்சாரச் சீரழிவில் விழுந்து விடாமல் வளரும் தலைமுறையைக் காக்க இயலும்.

பண்டைய ரோமர்கள் கொண்டாடிய ஒரு பண்டிகையின் மாற்று உருவே ‘வாலண்டைன்” என்ற ஒருவரின் பெயரால் இன்று கொண்டாடப்படும் இந்த ஆபாச தினம்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்குக் கொண்டாடுவதற்கு இரு பண்டிகைகள் மட்டுமே உண்டு. இவையன்றி வேறு எதற்காகவும் எந்த ஒரு நாளையும் கொண்டாடுவது மார்க்கம் அனுமதிக்காத செயலே. மார்க்கம் அனுமதிக்காக ஒன்றைச் செய்பவன் அழிவை நோக்கிச் செல்கின்றான் என்பது தூதரது எச்சரிக்கையாகும்.

“பிறமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்” எனவும் “பிறமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் அவர்களாகவே மாறி விடுகின்றனர்” எனவும் அறிவுறுத்திய தூதரின் சொற்களை மனதில் இருத்துபவர்கள், இத்தகைய மார்க்கம் காட்டாத மாற்றாரின் கலாச்சாரத்திலிருந்து விலகியே இருப்பர்.

“அலீயே!, அன்னியப் பெண்ணைப் பார்க்கும் (இயல்பான) உமது முதல் பார்வை உம்முடையதாகும். (கூர்த்த) இரண்டாவது பார்வை ஷைத்தானுடையதாகும்” என அந்நியப் பெண்களைப் பார்ப்பதைக்கூட தூதர் தடை செய்திருக்கும் பொழுது, மனைவியர் அல்லாத பிற பெண்களுடன் இத்தகைய ஆபாச தினக் கொண்டாட்டங்களைப் பூங்கொத்துக் கொடுத்தும் வாழ்த்து அனுப்பியும் கொண்டாடும் இளைய தலைமுறைகள், ஷைத்தானுடன் ஒப்பந்தம் செய்து நரகத்தை நோக்கித் தமது பயணங்களை அமைத்துக் கொள்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அந்நியப் பெண்களுக்கு முன்பாக, “முஃமினான ஆண்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்” என்பது படைத்தவனின் கட்டளையாகும். இத்தகைய உயர்ந்த, தூய்மையான வாழ்க்கை முறையைக் கற்பித்துத் தரும் இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றும் முஸ்லிம்கள், அந்நியப் பெண்டிருடன் அனுமதியற்ற உறவுகளைக் கொள்ள வழிகோலும் இத்தகையக் கலாச்சாரச் சீரழிவுக் கொண்டாட்டங்களின் பக்கம் செல்லாமல் இருப்பதோடு, சமூகத்தைச் சீரழிக்கும் இத்தகைய அனுமதிகளுக்கு எதிராக போராடவும் முன்வரவேண்டும்.

“முஃமினான பெண்கள், அவர்களது தலை முந்தானைகளைக் கொண்டு மார்பை மறைத்துக் கொள்ளட்டும்”, என்றும் “அவர்கள் கண்ணியமானவர்களாக அறியும் பொருட்டு, அவர்கள் (அவசியமின்றி) வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்” என்றும் அல்லாஹ் அறிவுரை பகர்கிறான்.

“உலகில் செல்வங்களிலேயே மிக உயர்ந்த செல்வம், நல்லொழுக்கமுள்ள ஆணும் பெண்ணுமே” என இஸ்லாம் காண்கின்றது.


தொடர்புடைய கவிதை:  ஊன தினம்! (கவிதை)


இவ்வாறு ஆண்களையும் பெண்களையும் கண்ணியமான வாழ்க்கை வாழப் பணிக்கும் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாம், உலகின் அமைதியான வாழ்வுக்கும் சுபிட்சமான சமூக கட்டமைப்பிற்கும் உத்தரவாதம் வழங்கும் ஒரே மார்க்கம் எனலாம். இத்தகைய உயர்ந்த வாழ்க்கைத் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்கள், தெரிந்துக் கொண்டே இந்த ஆபாசதினத்தை அங்கீகரிக்கவும் கொண்டாடவும் அதில் இணையவும் முன்வரக் கூடாது; முன்வரமாட்டார்கள்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.