சவூதி தலைநகரில் டாக்டர் ஜாகிர் நாயக் நிகழ்ச்சி!

மும்பை மற்றும் சென்னை அமைதி மாநாடுகளைத் தொடர்ந்து பிரபல மதங்களின் ஒப்பாய்வுப் பேச்சாளர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சவூதி அரேபியத் தலைநகர் ரியாதில் மன்னர் ஃபஹத் கலாச்சார மைய அரங்கில் நாளை (06/03/2008) மாலை 8 மணி முதல் 11 மணி வரை ஆங்கிலத்தில் Kingdom of Peace எனும் தலைப்பில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.

டாக்டர் ஜாகிர் நாயக், கடந்த பல வருடங்களாக அழைப்புப் பணிக்காக மும்பையில் இருந்து செயல்படும் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRF) தலைவர். இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களுக்கு ஆதாரப்பூர்வமான மறுப்பு விளக்கங்கள், இஸ்லாம் ஒன்றே மனித குலத்திற்கு இறைவனால் அருளப்பட்ட ஒரே சத்திய இறை மார்க்கம் என்பதை குர்ஆன், பைபிள் மற்றும் பகவத்கீதை, ரிக், யஜுர் வேதங்கள், பவிஷ்ய புராணம் போன்ற பல மத நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி, அவர் ஆங்காங்கே நிகழ்த்திய சொற்பொழிவுகள், பல சமய கருத்தரங்கங்கள் விவாதங்கள் மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகளை பீஸ் டிவி (Peace TV) என்ற தொலைக்காட்சி உலக அளவில் ஒளிபரப்பி இஸ்லாமிய அழைப்பு செய்து வருகிறார்.

இது போன்றே இவர் குர் ஆன் விஞ்ஞானம், குர் ஆன் பெண்ணுரிமை, குர் ஆன் இறைவனின் வார்த்தை, பிற வேதங்களில் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய குறிப்புகள், இஸ்லாமும் தீவிரவாதமும் போன்ற நூற்றுக்கணக்கான தலைப்பில் இந்தியா, கனடா, அமெரிக்கா, மற்றும் இன்னும் உலகில் பல இடங்களில் உரையாற்றிய பல்வேறு சொற்பொழிவு நிகழ்சிகள் வீடியோக்களாகவும், குறுந்தகடு (CD)களாகவும் விநியோகிக்கப்பட்டும் Peace TV மூலமும் மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

சவூதி அரேபியா, ரியாத் நகரில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சி தேசிய பாதுகாப்புப் படையினரின் (National Guard) ஜனாத்ரியா மரபு மற்றும் கலாச்சார விழாவில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் இறுதியில் வழக்கம் போல் நேரடி கேள்வி-பதில் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மத நம்பிக்கை பேதமின்றி யாவரும் நுழைவு கட்டணமின்றிக் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் பெண்களுக்குத் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ள அனைவரும் தாமும் கலந்துகொள்வதுடன் தமது நண்பர்களையும் கலந்து கொள்ளச் செய்து தமது மற்றும் தமது நண்பர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக மற்றும் தமது சந்தேகங்களுக்கும் தெளிவு பெற இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதை வாசித்தீர்களா? :   ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!