பொது பல சேனா (Timeline)

Share this:

*************** பொது பல சேனா ***************

“தமிழீழ தேசியம்” என்ற விடுதலை புலிகளின் கோரிக்கை எவ்வாறு ஒரு இரத்தக் களரிக்கு வழிவகுத்ததோ அதே போன்று, “சிங்கள தேசியம்” என்ற பெயரில் மற்றொரு இரத்தக் களரிக்கான அடித்தளத்தைச் சிங்கள அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் போட்டுவரும் பொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பு ஜூன் 2012 ல் உருவானது.

“ஜதிக ஹெல உருமய” என்ற புத்த பிட்சுகளின் அமைப்பில் செயல்பட்டு கொண்டிருந்த, கலகொட அத்தே ஞானசர தேரர் மற்றும் கிரம விமலஜோதி ஆகிய இரு பயங்கரவாத பிட்சுகள் தம் விருப்பங்களுக்கு ஏற்ப ஜதிக ஹெல உருமய செயல்படாததைச் சுட்டிக்காட்டி அதிலிருந்து பிரிந்து பொது பல சேனா என்ற புதிய அமைப்பை உருவாக்கினர். “புத்த தத்துவங்களைக் காப்பது” என்ற நோக்கத்தை முதலில் கூறினாலும் பின்னர் இலங்கையைச் “சிங்கள புத்த தேசமாக” மாற்றுவதையே தம் பிரதான நோக்கமாக அறிவித்து கொண்டனர்.

2011 மே மாதம் 15 ஆம் தேதியே கிரம விமலஜோதியின் தலைமையில் புத்த கலாச்சார மையத்தை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே திறந்து வைத்திருந்தார். உண்மையில் பொது பல சேனாவின் ஆரம்ப வித்து இதிலிருந்துதான் தூவப்பட்டது. தற்போது பொது பல சேனாவின் தலைமையகமும் இந்தப் புத்த கலாச்சார மையத்திலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மந்திராவில்தான் இயங்குகிறது.

இந்த அமைப்பின் தீவிர ஃபாசிஸ பேச்சாளராக வலம் வரும் ஞானசார தேரர் மீது 7 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முக்கியமானதொரு வழக்கு, குடித்துவிட்டு அமித வேகத்தில் வாகனம் ஓட்டியதான ஒரு வழக்கு. “நாம் அடுத்த கேள்விக்குப் போவோமா?” என்று கரன் தாப்பரின் கழுத்தை இறுக்கும் கேள்விக்குத் தண்ணீர் குடித்து மிடறு விழுங்கி படாத பாடு பட்ட ஒருவரின் வீடியோ காட்சி இந்தியாவில் எல்லோருக்கும் மிகப் பரிச்சயம். அத்தகையதொரு காட்சி இவர் விசயத்திலும் உண்டு. அதே “நாம் அடுத்த கேள்விக்குப் போவோமா?” என்ற பதிலுடன்! கீழே கண்டு களியுங்கள்:

{youtube}PzLW1nG0XdU{/youtube}

சுமார் ஒரு ஆண்டு மட்டுமே ஆகியுள்ள பொது பல சேனாவின் வளர்ச்சிப் பாதை எந்த அளவுக்கு அபாயகரமானதாக அமைந்துள்ளதோ அந்த அளவுக்கே வேகமானதும்கூட. நார்வே, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் பொருளாதார உதவியும் பொது பல சேனாவுக்கு உண்டு எனக்கூறப்படும் நிலையில், அரச ஒத்துழைப்பும் சேர்ந்து கொண்டால் ஒரு ஃபாசிஸ அமைப்பு எவ்வளவு வேகத்தில் மக்களிடையே ஊடுருவ முடியும் என்பதற்குப் பொது பல சேனா நல்லதொரு உதாரணம்.

பொது பல சேனா கடந்து வந்த பாதை:

28 ஜூலை 2012: பண்டாரநாயகா சர்வதேச நினைவு அரங்கில முதல் தேசிய மாநாடு. இம்மாநாட்டில், “அரசு ஆரோக்கிய மையங்களில் செய்யப்படும் குடும்பக் கட்டுபாடு சிகிட்சையினை நீக்குதல், நாட்டில் நிலுவையிலுள்ள பல்வேறு இனங்களுக்கான பல சட்டங்களை நீக்கி ஒரே சட்டம் கொண்டுவரல், பல்கலை கழங்கங்களில் புத்த வகுப்புகளில் பங்குபெற்றோருக்கு முன்னுரிமை வழங்கல், அரசு பாடசாலைகளில் புத்த பிட்சுகளை வரலாறு மற்றும் பிற பாடங்களுக்கு ஆசிரியர்களாக நியமித்தல், இனப் பிரச்சனைகளுக்கு இன/மத ரீதியாக தீர்வு காணக்கூடாது” ஆகிய ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றினர்.

4 அக்டோபர் 2012: பங்களாதேஷில் நடக்கும் புத்தர்களுக்கு எதிரான கலவரங்களைக் கண்டித்து கொழும்பிலுள்ள பங்களாதேஷ் ஹை கமிசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தின்போது பங்களாதேஷ் ஹை கமிசன்மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

14 அக்டோபர் 2012: The Name of Lord Jesus என்ற பெயரில் அழைக்கப்படும் evangelical கிறிஸ்தவ குழுவைச் சேர்ந்த மத போதகரான தினேஷ் மற்றும் அக்குழுவைச் சேர்ந்தவர்களின் படகேட்டாரா, ஹொமகமா மற்றும் பிலியண்டலாவிலுள்ள வீடுகளின் மீது கல்வீசி தாக்குதல் தொடுக்கப்பட்டது. சிங்கள புத்த மதத்தவர்களை மதம் மாற்றுவதாக அவர்கள்மீது குற்றம்சாட்டி இத்தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலின்போது மதபோதகர் தினேஷ் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இக்கடத்தல் மற்றும் வீடுகள்மீது தாக்குதல் தொடர்பாக மதபோதகரின் குடும்பத்தவர் கொடுத்த புகாரின்பேரில் 7 பேர் கடத்தல் மற்றும் கொள்ளையடித்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்கக்கோரி பிலியண்டலா காவல்நிலையம் முன்னிலையில் பொது பல சேனா போராட்டம் நடத்தியது. அவர்கள் விடுவிக்கப்பட்டனர்!

25 அக்டோபர் 2012: புத்த மடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் முஸ்லிம்கள் காலித்தனம் செய்வதாககூறி படுல்லாவில் முஸ்லிம்களுக்கு எதிராக பேரணி நடந்தது. இப்பேரணியின்போது முஸ்லிம்களின் சொத்துகள்மீது தாக்குதல் நடந்தது.

29 நவம்பர் 2012: கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரி தொல்பொருள் ஆய்வுத்துறை முன்னிலையில் போராட்டம் நடத்தப்பட்டது.

7 ஜனவரி 2013: முஸ்லிம் மாணவர்களுக்குச் சாதகமாக தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன எனக்கூறி கொழும்பு சட்டக் கல்லூரி முன்னிலையில் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தின்போது கல்லூரி கல்வீசி தாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முந்தைய தேர்வு முடிவு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதால், கல்லூரில் மாணவர் சேர்க்கை ஒரு வாரகாலம் தாமதமானது. ஆனால் விசாரணையில் அவ்வாறு ஏதும் முஸ்லிம் மாணவர்களுக்குச் சாதகமாக தேர்வு முடிவில் குளறுபடிகள் செய்யப்படவில்லை என கண்டறியப்பட்டது.

21 ஜனவரி 2013: பேருவலாவிலுள்ள சின்னாமோன் பே ஹோட்டலில் “புத்தா பார்” என்ற பெயரில் தனி பகுதி செயல்படுவதாககூறி அதன்மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது. உணவகத்தின் இரு மேனேஜர்களைக் காவல்துறை கைது செய்தது.

27 ஜனவரி 2013: அதிபர் ராஜபக்சே மற்றும் அமைச்சர்கள் பொது பலசேனாவுடன் கொழும்பிலுள்ள “கோவில் மரத்தில்”(இலங்கை அதிபர்களின் வீட்டிற்கு Temple Tree என்று பெயர்) நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சந்திப்பிற்குப் பின்னர், இலங்கையிலுள்ள பிற மதச்சமுதாய மக்களுடனான சச்சரவுகளைப் பொது பல சேனாவும் பிற புத்த பிட்சுகளும் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். ஆனால் இந்த அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமிருந்ததும் பொது பல சேனா மற்றும் அதன் ஆரவாளர்களின் மொழி சிங்களம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

12 பிப்ரவரி 2013: இலங்கை எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பொது பல சேனாவுடன் சந்திப்பு நடத்தியது.

17 பிப்ரவரி 2013: கொழும்பிலுள்ள மஹரகாமாவில் சுமார் 1300 புத்த பிட்சுகள் கலந்துகொண்ட பொது கூட்டமொன்றை நடத்தியது. இதில் சுமார் 15000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியில் பேசிய பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார, “இந்த அரசு சிங்கள புத்த பிட்சுகளால் அமைக்கப்பட்டது; சிங்கள புத்த அரசாகவே தொடரும். இது சிங்கள நாடு; சிங்கள அரசு! ஜனநாயகம் மற்றும் பன்முக கொள்கைகள் சிங்கள வளர்ச்சியைச் சாகடிக்கின்றன.” என்று கூறினார். மேலும், “முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு எதிரான அறிவிக்கப்படாத பொதுத்துறைசாரா காவல்படையாக பொது பல சேனா செயல்படும். இதுபோன்ற ஜனநாயகவாதிகள் சிங்கள வளர்ச்சியினை அழிக்கின்றனர்” என்று கூட்டத்தினரிடையே பகிரங்கமாக அறிவித்தார்.

இக்கூட்டத்தின் முடிவில் “மஹரகாமா தீர்மானங்கள்” என்ற பெயரில் 10 தீர்மானங்களைப் பொது பல சேனா அறிவித்தது. அதில், “உணவு பொருட்களுக்கு ஹலால் முத்திரை போடுவதைத் தடை செய்தல், அரபு நாடுகளுக்கு இலங்கை பெண்களை வேலைக்கு அனுப்புவதைத் தடை செய்தல், சிங்கள இன வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள குடும்ப கட்டுப்பாடு பொருட்களுக்குத் தடை விதித்தல், பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு மத்திய கிழக்கிலிருந்து வரும் பணத்தைத் தடுத்தல்” முதலான கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், “மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஹலால் தடை கொண்டு வரவேண்டும்” என அரசுக்குக் கெடு விதித்த பொது பல சேனா, “அதற்குள் தடையிடவில்லையேல் சட்டத்தை நாங்கள் கையிலெடுக்க வேண்டியிருக்கும்” என மிரட்டல் விடுத்தது. மேலும் “ஏப்ரல் துவக்கத்தில் கடைகளில் ஹலால் உணவு பொருட்களே இருக்கக்கூடாது” எனவும் எச்சரித்தது.

இப்பேரணியினை டாக்குமெண்டரி படம் எடுத்து கொண்டிருந்த BBC News செய்தியாளர்களுக்கு எதிராக பேரணியிலிருந்து கலைந்து சென்றவர்கள் தாக்குதல் தொடுத்தனர். நவமணி என்ற முஸ்லிம் பத்திரிக்கை செய்தியாளரும் தாக்கப்பட்டதோடு அவர் சிறைபிடிக்கப்பட்டார். காவல்துறை ஒத்துழைப்புடன் நடந்த இந்த இரு சம்பவத்தில், சுமார் 5 மணி நேரங்களுக்கு பின்னர் செய்தியாளர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் கேமரா உடைக்கப்பட்டதோடு கடுமையாக தாக்கப்பட்டிருந்தனர்.

இம்மாத இறுதியில், உணவு பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கி கொண்டிருந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, “ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை அரசுக்குக் கையளிக்கத் தயாராக இருப்பதாக” அறிவித்தது. ஆனால் இதனைப் பொது பல சேனா ஏற்க மறுத்தது. இலங்கையில் ஹலால் சான்றிதழ் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென தீர்மானமாக கூறியதோடு, “இலங்கை ஜம்மியத்துல் உலமா ஊழல்மயமானது; திருட்டுத்தனமானது; ஆணவப்போக்குடையது; அண்டர்வேல்ட் கொள்ளையர்கள்” என கடுமையாக குற்றம்சாட்டியது.

பொது பல சேனாவின் எதிர்ப்பினைத் தொடர்ந்து ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஜம்மியத்துல் உலமா வைத்த கோரிக்கையை அரசு நிராகரித்தது.

இம்மாதத்திலேயே பொது பல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி, இலங்கையில் புர்காவுக்குத் தடை விதிக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தார். மேலும், அபாயாவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

பிப்ரவரி இறுதியில் பொது பல சேனா, இலங்கை லெப்டினண்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூர்யா, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் நாட்டில் செயல்படுவதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் பேச்சு நடத்தியது.

1 மார்ச் 2013: காவல்துறை உயரதிகாரியான ஐ ஜி பி என்.கே.இல்லங்ககூனைச் சந்தித்து முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் செயல்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தியது. இதே நாளில் கொழும்பு முனிசிபல் கவுன்ஸில்(CMC) நடத்தும் டெமடகோடாவிலுள்ள இறைச்சி சோதனை கூடத்தின்மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது. கர்ப்பமான மாடுகள் மற்றும் கன்றுகுட்டிகள் அங்கு அறுக்கப்படுவதாக குற்றம்சாட்டியது. ஆனால், இலங்கையில் கன்றுகுட்டி அறுவைக்கு ஏற்கெனவே தடையுள்ள நிலையில் அரசு முனிசிபல் கண்காணிப்பில் நடக்கும் அச்சோதனை கூடத்தில் அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

9 மார்ச் 2013: இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரரான பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சே தலைமையில், பொது பல சேனாவின் கலாச்சாரம் மற்றும் பயிற்சி மையமான “மெத் சேவனா” கல்லே மாவட்டத்திலுள்ள பிலனாவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

11 மார்ச் 2013: ஜம்மியத்துல் உலமா, சிலோன் வணிக சேம்பர்(Ceylon chamber of commerce) மற்றும் புத்தமத தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில், “இலங்கை உள்நாட்டு உணவு பொருட்களுக்கு ஹலால் முத்திரை வழங்குவதை ஜம்மியத்துல் உலமா நிறுத்திக்கொள்ளும். அதே சமயம், முஸ்லிம் நாடுகளுக்கு உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்ய ஹலால் முத்திரை கட்டாயம் என்பதால் ஏற்றுமதி செய்யும் உணவு பொருட்களுக்கு மட்டும் ஜம்மியத்துல் உலமா ஹலால் முத்திரை வழங்கும்” என ஒப்பந்தம் போடப்பட்டது.

12 மார்ச் 2013: முந்தைய நாள் முடிவினை ஏற்க மறுத்த பொது பல சேனா, “ஹலால் முத்திரை வழங்குவதை முற்றிலும் தடை செய்தே ஆகவேண்டும்” எனக்கூறியது. மேலும், முந்தைய நாள் சமாதான பேச்சுவார்த்தையில் அத்தைய ஒப்பந்தத்துக்குச் சம்மதம் கூறியவர்களின்மீது கடுமையாக தாக்குதல் தொடுத்தது. “மதங்களுக்கு இடையில் புனிதமற்ற கூட்டினை உருவாக்க முனைவதோடு, எங்களின் படித்த பிட்சுகளையும் அழிக்க முயற்சிக்கிறார்” என அமைச்சர் மிலிண்டா மொரகோடாமீது பொது பல சேனா சாடியது. சமாதான பேச்சு வார்த்தையில் கலந்துகொண்ட புத்தமத தலைவர்களைப் “போலி புத்தத் தலைவர்களான அவர்கள் முஸ்லிம் தீவிரவாதத்துக்கும் கிறிஸ்தவ அடிப்படைவாதத்துக்கும் எதிராக ஒருபோதும் நிலைகொண்டதில்லை” என குற்றம்சாட்டியது. மேலும், CCC சேர்மனான சுசந்தா ரத்னாயகே “புத்தா பார்” பகுதியினைக் கொண்டியங்கும் உணவகம் நடத்தி வருவதாகவும் குற்றம்சுமத்தியது.

{youtube}4oQLOwxAfw0{/youtube}

13 மார்ச் 2013: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கு ஹலால் முத்திரை வழங்கும் அதிகாரம் இல்லை எனவும் கட்டாயம் ஹலால் முத்திரை தேவைப்படும் பொருட்களுக்கு ஹலால் முத்திரை வழங்குவதற்குப் புதிய வரைமுறைகள் ஏற்படுத்தப்படும் எனவும் அரசு அறிவித்தது.

16 மார்ச் 2013: “ஹலாலுக்கு எதிரான போரில் வெற்றி” என பொது பல சேனா அறிவித்தது. இனிமேல் ஹலால் குறித்து எதிர்காலத்தில் பேசப்போவதில்லை என அறிவித்த பொது பல சேனா, அடுத்த குறி புர்கா மற்றும் ஹிஜாபுக்குத் தடை விதிப்பது என அறிவித்தது.

17 மார்ச் 2013: ரத்னபுரா மாவட்டத்திலுள்ள குரகல புத்த விகாரத்தின் அருகில் அமைந்திருக்கும் 10 ஆம் நூற்றாண்டு காலத்திய மசூதியினை இடிக்கப்போவதாக கண்டியில் பேரணி நடத்தியது. அந்தப் பேரணியில், “முஸ்லிம் அடிப்படைவாதிகள் அப்பகுதியினைக் கைப்பற்றி புத்த பாரம்பரியத்தை அழித்துவிட்டனர்” என குற்றம்சாட்டிய பொது பல சேனா செயலாளர் ஞானசார தேரர், “முஸ்லிம்களின் நிர்வாகத்திலுள்ள Fashion Bug மற்றும் No Limit நிறுவனங்களின் சில்லறை வணிகக்கடைகளில் பணியாற்றும் சிங்கள தொழிலாளர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்படுகின்றனர்” என அறிவித்தார்.

24 மார்ச் 2013: கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு எதிரான பேரணி என்ற பெயரில் பனடுராவில் பேரணி நடத்தியது. இப்பேரணியில், “இலங்கை சிங்கள புத்த நாடு; அல்லாமல் பல்லின நாடோ அல்லது பல்சமய நாடோ அல்ல” என வலியுறுத்தியது. மேலும், சிங்கப்பூரில் ஹைகமிசனராக நியமிக்கப்பட்டுள்ள ஃபெரியல் அஷ்ரஃப் சிங்களத்துக்கு எதிராக செயல்படுவதால் அவரைத் திரும்ப அழைக்க வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. இப்பேரணியின்போது, அரசுக்குச் சொந்தமான மொபிடெல்(Mobitel) தொலைபேசி நிறுவனத்திடமிருந்து டவுன்லோட் செய்யப்படும் ரிங்டோனுக்கு வசூலாகும் தொகை பொது பல சேனாவின் வளர்ச்சிக்காக செலவிடப்படுவதாகவும் எனவே அந்நிறுவனத்திடமிருந்து அதிகமதிகம் ரிங்டோன் டவுன்லோட் செய்யும்படியும் கோரிக்கைவிடுத்தது. இதனைத் தொடர்ந்து மொபிடெல் வாடிக்கையாளர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பால், “உணர்ச்சிகளை வேதனைபடுத்தியதற்கு வருந்துகிறோம்” என மொபிடெல் மன்னிப்பு கேட்டது.

25 மார்ச் 2013: பொது பல சேனா மற்றும் ஜதிக ஹெல உருமய ஆகியவற்றின் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்ப்பரப்புரைகளுக்கு எதிராக தேசிய அளவில் “முஸ்லிம் உரிமைகள் அமைப்பு(Muslim Rights Organization)” போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. கிழக்கு மாகாணத்தில் பொது பல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக முழு அளவில் பந்த் நடந்தது.

28 மார்ச் 2013: கொழும்பு மாவட்டத்திலுள்ள பெபிலியாவில் Fashion Bug துணிக்கடைமீது புத்த பிட்சுகளின் தலைமையில் கடுமையான தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலின் பின்னணியில் பொது பல சேனாவே உள்ளதாக அறிக்கைகள் வெளியாகின. எனினும் இதன் பின்னணியில் தாம் இல்லை எனவும் அத்தாக்குதலைக் கண்டிப்பதாகவும் பொது பல சேனா அறிவித்தது.

31 மார்ச் 2013: பொது பல சேனா உட்பட சில பயங்கரவாத அமைப்புகளை அரசு தடை செய்யப்போவதாக அரசு அறிக்கை வெளியானது. இதற்கு எதிராக பொது பல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரர், “சிங்கள போராட்டத்துக்கு எதிரான தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு துறை அமைச்சரான வாசுதேவ நனயக்கரா அவமானகரமானவர்” என்றதோடு, “இத்தகைய அமைச்சர்களின் தலையினைச் சோதிக்க மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அங்கோடாவுக்கு அனுப்ப வேண்டும்” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அரசின் அந்த அறிக்கையினை மறுத்த நனயக்கரா, “பொது பல சேனா போன்ற தீவிரவாத குழுக்களை அரசு தடை செய்யப்போவதில்லை” எனவும் “வெறுப்பு விதைக்கும் பேச்சுகளைத் தடை செய்ய மட்டுமே அரசு ஆலோசித்து வருகிறது” என்றும் கூறினார்.

ஏப்ரல் 2013: பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான உறுப்பினர்கள் பொது பல சேனா குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அதற்கு எதிராக தோன்றியுள்ள எதிர்மறை எண்ணங்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கத்துடனும் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது.

12 ஏப்ரல் 2013: பொது பல சேனா தலைமை அலுவலகம் முன்னிலையில் அதன் செயல்பாடுகளைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்லவம் நடைபெற்றது. இதனைக் காவல்துறை உதவியுடன் பொது பல சேனா தொண்டர்கள் கலைத்தனர்.

15 ஏப்ரல் 2013: பொது பல சேனா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் கலந்துகொள்ளும் பூஜா மற்றும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் யாரும் கலந்து கொண்டவேண்டாம் என கலிபோர்னியாவில் செயல்படும் ஸ்ரீ ரத்னா விகாரை என்ற புத்த அமைப்பு  நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.

16 ஏப்ரல் 2013: இலங்கையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. பொது பல சேனா எனும் தேசியவாத குழு மத சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தொடர்பான பிரித்தானியாவின் அறிக்கை குற்றம்சுமத்தியது.

17 ஏப்ரல் 2013: “இனவாதத்தைத் தூண்டும் அல்லது மத விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எவருக்கும் எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்த தகுந்த ஆதாரங்களைச்ச் சமர்ப்பித்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்” என சவூதி அரேபியா, கத்தர், ஈரான், ஈராக், எகிப்து, மலேஷியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், துருக்கி முதலான 15 முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அதிபர் ராஜ பக்‌ஷே உறுதியளித்தார்.

29 ஏப்ரல் 2013: “பொது பல சேனாவுக்கு நிதி உள்ளிட்ட எந்த உதவியினையும் வழங்கவில்லை” என நார்வே அரசு மறுத்தது. “இலங்கை உட்பட எந்த ஒரு நாட்டிலும் இன மத பேதங்களை ஏற்படுத்தவோ அல்லது அமைதியினை சீர்குலைக்கும் விதமாகவோ எந்தப் பங்களிப்பினையும் செய்யவில்லை” என மேலும் கூறியுள்ள அதேவேளை, “நாங்கள் பொது பல சேனாவைப் பேச்சு வார்த்தைக்காகவே நோர்வே அழைத்து பேசினோம்” என்றும் “அவர்களுக்குக் கல்விக்கான உபகரணங்கள் வாங்குவதற்கான பொருளாதார உதவி செய்தோம்” எனவும் நார்வே தூதுவர் தெரிவித்தார்.

6 மே 2013: “சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்கவே பாகிஸ்தானிலிருந்து 30 ஆயிரம் கருத்தடை மருந்து ஊசிகள் மறைத்து கொண்டுவரப்பட்டுள்ளன” என பொது பல சேனா இணை பொது செயலாளர் ஆனந்த தேரர் குற்றம்சாட்டினார்.

8 மே 2013: மியான்மர் மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளுக்கு புத்த பிட்சுகளே காரணம் என குற்றம் சாட்டிய தலாய்லாமா, மதத்தின் பெயரில் நடந்துள்ள இந்த வன்முறை நினைத்து பார்க்க முடியாத வருத்தத்தைத் தருவதாகவும் புத்த மதத்தினர் இந்த வன்முறையில் இணைத்து பேசப்படுவது துரதிஷ்டவசமானது எனவும் இலங்கை மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்குத் தேரர்கள் முற்றுபுள்ளி வைக்கவேண்டுமெனவும் புத்தரின் அகிம்சை வழியினைக் கடைபிடிக்க வேண்டுமெனவும் அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது தலாய்லாமா வேண்டுகோள் விடுத்தார்.

9 மே 2013: “எல்லாச் சமூகங்களிலும் குழப்பங்களை உண்டுபண்ணக்கூடிய சிறு சிறு குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. நேர்மையில்லாத குழப்பவாதிகளான அவர்கள் அழிந்து விடுவர். இதற்காக நாம் சமாதானத்தைக் காப்பதிலிருந்து விலகி நிற்கக்கூடாது” என நிந்தவூர் மாவட்டத் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்களுக்கான மாநாட்டில் அக்கரைப்பற்று விஹாராதிபதி தேவபொட்ட தேரர் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், “முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை மிகச் சிறந்தது. ஆபாச உணர்வுகளைத் தூண்டாத மரியாதைக்குரிய ஆடை அது. எங்கள் சமூகப் பெண்களின் ஆடைகள்கூட ஆபாசத்தை உண்டு பண்ணும் விதத்தில் அமைந்துள்ளன” என கூறினார்.

10 மே 2013: 18 ஆம் தேதிக்குள் ஜெயிலானி பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்றவில்லையேல் 5000 பேரைக் கொண்ட குழுவுடன் வந்து அந்தப் பகுதியினை முற்றுகையிடுவோம் என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தது.

13 மே 2013: முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களான அல்-ஜிஹாத், அல்-கைதா, பஹாத் மற்றும் தௌஹீத் ஜமாத் போன்றவற்றைத் தடை செய்து அவற்றோடு தொடர்புடையவர்களைக் கைது செய்யவேண்டுமென கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய ஞானசார தேரர் கோரிக்கை விடுத்தார்.

15 மே 2013: தாங்கள் இலங்கை நாட்டின் உத்தியோகப்பூர்வமற்ற போலீஸார் என கூறிக்கொண்டு சட்டத்தை மதிக்காமல் சட்டத்தைத் தம் கையில் எடுத்து செயல்படும் பொது பல சேனா அமைப்பே இலங்கையில் பயங்கரவாத செயல்களில் கடந்த ஒரு ஆண்டாக செயல்பட்டு வருகிறது.

அமைதியான நாட்டுக்குள் பிரச்சனைகளை ஏற்படுத்தி நாட்டு மக்களின் ஐக்கியத்தைத் துண்டாட நினைக்கும் பொது பல சேனா பிரிவினைவாத இயக்கத்தை அரசு தடை செய்வதோடு அந்த இயக்கத்தின் அமைப்பாளர்கள் தொடர்பில் அரசு விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என இலங்கை தௌஹீத் ஜமாத் தலைவர் ரியாழ் வேண்டுகோள் விடுத்தார்.

16 மே 2013: விடுதலைப் புலிகளின் சிறந்த புலம்பெயர் தரப்பினருடன் நார்வேயில் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக ஞான சார தேரர் தெரிவித்தார்.

16 மே 2013: இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் அதன் அச்சு பதிப்பு ஒன்றில் வெளியிட்ட கட்டுரை தொடர்பாக விளக்கம் கோரும் முகமாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளால் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.

17 மே 2013: இலங்கை பல்லினங்களுக்குச் சொந்தமான நாடல்ல. சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான அம்மக்களின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்ட நாடாகும். எனவே, இங்கு வாழும் அனைவரும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு, வெளிப்படுத்தாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதற்கான எமது போராட்டம் ஆரம்பமாகும் என ஞானசார தேரர் ஊடக சந்திப்பில் எச்சரிக்கை விடுத்தார்.

21 மே 2013: மாகாண சபை முறைமைக்கான 13 ஆவது சட்டதிருத்தத்தை ஒழிக்கவேண்டும். வடக்கு மாகாணத் தேர்தல் தேவையில்லை. அதனை நடத்துவதற்கு பொது பல சேனா ஒரு போதும் அனுமதிக்காது. முதலில் அங்கு பெரும்பான்மை இனத்தவர்களாகிய சிங்கள மக்களைப் பதிவு செய்து குடியமர்த்தவேண்டும் என ஞான சேர தேரர் பத்திரிகை சந்திப்பில் எச்சரிக்கை விடுத்தார்.

22 மே 2013: இந்த நாட்டின் ஆதி குடிகளான வேடர்களையும் நாகர்களையும் காட்டுக்குள் அனுப்பிவிட்டு ஒரு இனத்தவருக்கு மட்டும் முழு நாட்டையும் உரிமை கோருபவர்கள் தத்தம் மூதாதையர்களா வட இந்தியாவிலிருந்து வந்த சிங்கள ஆண்கள் வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவிலிருந்து வந்த சிங்கள பெண்கள் தென் இந்தியாவுக்கும் இந்தியாவிலிருந்து வந்த பௌத்தம் இந்தியாவுக்கும் செல்ல வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கொழும்பில் நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

22 மே 2013: பொது பல சேனா தலைமையத்தின் முன்னணியில் பௌத்த தேரர்கள் நடத்திய அமைதி ஆர்ப்பாட்டத்தின்மீது பொது பல சேனா தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்த புத்த பிட்சு ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

26 மே 2013: குறைந்த பாதுகாப்புடன் இயங்கிவரும் புத்த சாசன அமைச்சகம், அதிக உற்சாகத்துடன் செயல்படுவதற்குத் தற்போதைய பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்‌ஷேவின் தலைமையின் கீழ் கொண்டுவரப்படவேண்டுமென ஞானசார தேரர் ஊடகச் சந்திப்பில் கோரிக்கை வைத்தார்.

27 மே 2013: இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதைத் தடை செய்வது தொடர்பாக சட்டம் இயற்றுவது நடைமுறை சாத்தியம் அற்றது. அப்படி செய்தால், மாட்டிறைச்சியைச் சாப்பிடுவோருக்குப் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சர் ஜான் செனவிரட்ன தெரிவித்தார்.

29 மே 2013: இந்திரத்ன தேரர் தீக்குளித்து, நாட்டுக்கும் பௌத்த கோட்பாட்டுக்கும் இழுக்கினையே ஏற்படுத்தியுள்ளார். எல்லா பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தாலும் விலங்குகளை அறுப்பதை நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நிறுவன தலைவரும் அதன் முன்னாள் தலைவரும் தொல்பொருளியலாளருமான மேதானந்த தேரர் குறிப்பிட்டார்.

29 மே 2013: வடக்கில் தேர்தலை நடத்தி நாட்டுக்குத் தீங்கிழைத்தால் அதற்கு எதிராக தீக்குளிப்பதற்கு இந்திர ரத்ன தேரர் போன்ற ஆயிரக்கணக்கான தேரர்கள் தயாராகவிருப்பதாக பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

29 மே 2013:  படகொட கமகே அசங்க அமரசிறி என்பவர் தனது மூன்று ஏக்கர் காணியையும் வீட்டையும்  பலவந்தமாக பொது பல சேனா எடுத்துகொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவின் விசாரணையில், “பொதுபல சேனா அமைப்பு உடனடியாக காலி, வங்சாவல பிரதேசத்தில் அமைந்துள்ள மெத் செவன கட்டிடத்திலிருந்து வெளியேற வேண்டும். நீதி மன்ற உத்தரவை அவமதித்தால் தண்டனைக் குரிய நீதிமன்ற விதிகள் மூலம் அவர்கள் கையாளப் படுவார்கள்” என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த மார்ச் மாதம் குறித்த இக்கட்டிடம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவினால் திறக்கப்பட்டதுடன் பொது பல சேனாவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2013: பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர், “ஜுலை மாதத்தில் வரும் எசல போயாவிற்கு முன்பாக இந்நாட்டில் இயங்கும் சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாங்கள் இந்நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர் என்ற ரீதியில் சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வோம்” என்று எச்சரித்ததோடு “இனிவரும் காலங்களில் சிங்களக் கிராமங்களுக்குள் நுழையும் அந்நிய இனத்தவர்களை அடித்துவிரட்டும் நோக்கில் பௌத்த பாதுகாப்பு குழுவொன்றை அனைத்து சிங்களக் கிராமங்களிலும் உருவாக்கப் போகிறோம்” எனவும் இனவெறியுடன் பேசினார்.

3 ஜூன் 2013: பெளத்தர்கள் ஒருபோதும் இந்நாட்டில் அடிப்படைவாதிகளாவதில்லை. எமது தேரர்களும் அடிப்படைவாதிகளல்லர். எமது சமூகமும் அடிப்படைவாதமானதல்ல என வெலிமட, பொரலந்த ஹீன்நாரங் கொல்ல ஸ்ரீ சுதர்சனாராம விகாரையில் நடந்த நிகழ்வொன்றில் அதிபர் ராஜபக்‌ஷே கூறினார்.

6 ஜூன் 2013: முஸ்லிம் மத்ரஸா நிறுவனங்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்றை உருவாக்க அரசாங்கம் முனைய வேண்டும் என்று ஞானசார தேரர் கோரிக்கை விடுத்தார். அங்குலான கிறிஸ்தவ தேவாலயம்மீது அடையாளம் தெரியாத புத்த பிட்சுகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

9 ஜூன் 2013: கண்டி மாநகர சபையினைத் தொடர்ந்து அனுராதபுர மாநகர சபை, நுவரெலியா மாநகர சபை ஆகியவற்றில் மாடுகளை அறுக்கத் தடை விதிக்கப்பட்டது. 2014 ஜனவரி முதல் மாடுகள் அறுப்பதையும் மாட்டிறைச்சி விற்பதையும் முற்றாகத் தடை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

9 ஜூன் 2013: இலங்கையில் சூறா சபையை உருவாக்க அடிப்படைவாதிகளில் தீவிரம் மிக்கவரான யூசுப் அல் கர்ளாவி கத்தரிலிருந்து நிதி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார் என ஞான சார தேரர் குற்றம்சாட்டினார்.

10 ஜூன் 2013: காத்தான்குடியில் அமைக்கும் உலமாக்குரிய தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தினை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும். இப் பல்கழைக்கழம் காத்தான்குடியில் அமைந்தால் வஹாபி, சூபி ஊடாக இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில் உருவாகும். இப் பல்கலைக்கழகத்தினால் நம் நாடு பெரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கும். எனவே இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால் இதற்காக பாரிய ஆர்ப்பாட்டத்தினையும் எதிர்ப்பையும் நாடுபூராவும் நடத்துவோம் என ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

13 ஜூன் 2013: பொது பல சேனா சமயம் சார்ந்த அமைப்பு அல்ல. இது அரசியல் அமைப்பு. தனது அரசியல் இலாபத்திற்காக சமயத்தினை துஷபிரயோகம் செய்கின்றது என சிங்கப்பூர் சர்வதேச கற்கைகள் பாடசாலையின் விரிவுரையாளர் ரொஹான் குணரதன குற்றம்சாட்டினார்.

20 ஜூன் 2013: கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொதுபல சேனை அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உட்பட 13 பேர் மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின், “பலவந்தமான கிறிஸ்தவ மதமாற்றங்களுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்” என ஞானசார தேரர் சூளுரைத்துள்ளார்.

22 ஜூன் 2103: களுத்துறையில் மக்கொனை என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பொது பல சேனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

28 ஜூன் 2013: முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மாரில் பயங்கரவாத வன்முறைகளுக்குத் தலைமை தாங்கும், பௌத்த பிக்குவான விராது மற்றும் விராதின் பயங்கரவாத அமைப்பான  பௌத்தம் 969 என்ற இயக்கத்துடன் பொதுபல சேனாவை ஒப்பிடும் கட்டுரை தாங்கிய டைம் இதழ் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டது.

18 ஜூலை 2013: “குற்றச் செயல்களில் ஈடுபடும் பௌத்த பிட்சுகளின் காவி உடைகளைக் களைய வேண்டும்” என இலங்கை பிரதமர் ஜெயரத்னா பேசியதற்கு எதிராக, “சுழலும் நாற்காலிகளில் அமர்ந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கு பௌத்த பிட்சுகள் பற்றி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கிடையாது. அரசியல்வாதிகள் தங்களது வேலைகளை உரிய முறையில் செய்தால் போதுமானது” என ரங்கிரி தம்புள்ள விகாரையின் விகாராதிபதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்தார்.

18 ஜூலை 2013: மாட்டுத்தோலை வீசியதாக கூறி ஹெம்மாதகம வாடியதென்ன கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள்மீது புத்த பிட்சுகளின் தலைமையில் குழுவொன்று தாக்குதல் நடத்தியது. இதில் நான்கு பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

19 ஜூலை 2013: 1960 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் தம்புள்ளை பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 22 கட்டிட நிர்மாணங்களை உடனடியாக அகற்ற வேண்டுமென 7 நாட்கள் கெடுவிதித்து நகர அபிவிரித்தி அதிகாரசபை அறிக்கை அனுப்பியது.

19 ஜூலை 2013: முன்னர் ஒருமுறை புத்த பிட்சுகளால் தாக்கப்பட்ட மஹியங்கனை நகரிலுள்ள அரஃபா ஜூம்’ஆ பள்ளிவாசல், பொது பல சேனா மஹியங்கனையில் ஒன்றுகூடல் நடத்த தீர்மானித்துள்ளதைத் தொடர்ந்து ஊவா மாகாண சபை காணி அமைச்சர் அனுர விதான கமகேயின் உத்தரவின்பேரில் மூடப்பட்டது.

24 ஜூலை 2013: பொதுபல சேனா அமைப்பானது  ஒரு அரசியல் இயக்கமோ அல்லது ஒரு பெளத்த இயக்கமோ அல்ல. அது ஒரு முற்று முழுதான தீவிரவாத அமைப்பாகும் என அரசியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார்.

25 ஜூலை 2013: முஸ்லிம் மக்களைக் குறிவைத்து தாக்குதல்களையோ போராட்டங்களையோ நடத்தப்போவதில்லை எனவும் முஸ்லிம் மக்களின் தனித்துவ அடையாளங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்குப் பொது பல சேனா எதிர்ப்பை வெளியிடவில்லை எனவும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷேவின் சமய விவகார ஆலோசகர் அப்துல் காதல் மசூர் மௌலானாவுடன் பொது பல சேனா தலைமையகத்தில் நடந்த சந்திப்பில் ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கினார்.

27 ஜூலை 2013: ஒரே நாளில் வழக்கு விசாரணைகள் நடக்கும் விதத்தில் பௌத்த பிட்சுகளுக்கென தனியானதொரு நீதிமன்றம் சங்கா நீதிமன்றம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்தார்.

30 ஜூலை 2013: பள்ளிவாசல்கள் உடைப்பு தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில், “இதுவரை இலங்கையில் 17 பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவ்வுடைப்போடு நேரடியாக சம்பந்தப்பட்ட பொது பல சேனா அமைப்பினர் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் அவர்களை முறையான கைதுக்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்படாமையே இச்சம்பவங்கள் தொடராக இடம்பெறுவதற்குக் காரணம்” எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

31 ஜூலை 2013: 13 ஆவது திருத்த சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நீக்கவேண்டும். கோரிக்கையினை ஏற்கவில்லையேல், ராஜபக்சேவின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை முன்னர் போராட்டம் நடத்துவோம் என ஞானசர தேரர் எச்சரிக்கை விடுத்தார். இக்கோரிக்கைக்கு ஆதரவு தேடி மல்வத்த பீடத்தின் மகா நாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ வித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்தபோது மேற்கண்ட எச்சரிக்கையினை விடுத்தார்.

இலங்கையில் எந்தவொரு இனமோ…மதமோ… தமக்குரியதும் தனித்துவமுமான கொள்கைகளை பொது இடங்களில் வெளிக்காட்டுவதை அனுமதிக்க முடியாது. முஸ்லிம் பெண்கள் கறுப்புத் துணியால் ஆள் அடையாளம் அற்ற வகையில் போர்த்திக்கொண்டு பொது இடங்களில் நடமாடுகின்றமை மற்ற இனங்களைப் பழிப்பது போன்று உள்ளது. இவ்வாறான செயற்பாட்டை அவர்கள் தமது வீட்டினுள்ளோ அல்லது வழிபாட்டுத் தலங்களிலோ மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமன்றி இவ்வாறு கறுப்புத் துணியால் முகம்தெரியாத அளவுக்கு போர்த்திக்கொண்டு செல்லும்போது துப்பாக்கி, குண்டுகள் மற்றும் போதைப்பொருட்கள் போன்றவை கடத்தப்படலாம். அதேபோன்று ஆண்கள் இவ்வாறு முழுஅளவில் முஸ்லிம் பெண்களை போன்று மூடிக்கொண்டு கொள்ளை, களவுமற்றும் ஆட்கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடலாம். இவ்வாறான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே இவ்வாறான விடயங்களை முஸ்லிம் இனத்திலுள்ள படித்த புத்திசாலிகள் இதனை சரியான வழியில் எடுத்துக்கூற வேண்டும்.”

– பொதுபல சேனா தலைவர் பேட்டி.

துணை நின்றவை:

http://dbsjeyaraj.com/dbsj/archives/16644

http://dbsjeyaraj.com/dbsj/archives/18215

http://www.youtube.com/watch?v=zkxGRH0IDqQ

http://www.youtube.com/watch?v=80Zkc9ktNMM

http://www.youtube.com/watch?v=9ZXX22Gop0Y

http://www.youtube.com/watch?v=VuKs_495oKw

http://en.wikipedia.org/wiki/Bodu_Bala_Sena

http://www.lankaweb.com/news/items/2013/06/19/general-secretary-of-the-bodu-bala-sena-organisation-ven-galabodaaththe-gnanasara-thera-had-admitted-drink-drive-offence-in-courts/

http://lankacnews.com/sinhala/main-news/95956/

http://kattankudi.info/

bbc.com

http://www.virakesari.lk/

tamilmirror.lk

lankamuslim.org

sonakar.com

tamilwin.com

zajilnews.lk

http://www.hrdreport.fco.gov.uk/wp-content/uploads/2011/01/2012-Human-Rights-and-Democracy.pdf


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.